ஆர்ச்சு டீக்கனின் அறியாமை

ஐரோப்பாக் கண்டத்தின் ஒரு முக்கியமான திருத்தலம் நோக்கா. சுமார் பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் ஒவ்வோராண்டும் வந்து செல்லக்கூடிய இத்திருத்தலம் 1870 -களில் வெறும் ஒரு வறண்ட பகுதியாகவே இருந்தது. ஆனால் இச்சிறு கிராமம் மளமளவென வளர்ந்ததன் பின்னணியில் மாதாவின் திருக்காட்சியே முக்கியமாக இருந்தது.

ஆகஸ்டு மாதத்தின் ஒரு மாலைப் பொழுது. ஆர்ச்சு டீக்கனின் பணிப் பெண்ணாகிய மேரி மக்தலேன் தனது தோழியின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாள். இடிமின்னலுடன் கூடிய அடைமழை பெய்துகொண்டிருந்தது. தேவாலயத்தின் பின்னாம்புறத்தினூடே வழிநடந்த அவள் மழைத்துளிகளின் தூறல்களுக்கு நடுவே ஒரு காட்சி கண்டாள். சங்கீர்த்தி (ஆலயத்தின் கிடங்கறை)யின் பின்புறத்தில் ஒளிரும் சில உருவங்கள் தென்பட்டன. டப்ளின் நகரிலிருந்து வருவிக்கப்பட்ட புதிய திருசொரூபங்கள் என நினைத்து அவள் அவற்றைச் சட்டை செய்யாமல் கடந்து போனாள்.

பலமணி நேரங்களுக்குப் பின் அவள் அவ்வழியே திரும்பி வந்துகொண்டிருந்தாள். அப்போதும் அவ்வுருவங்கள் அங்கே ஒளி உமிழ இருந்து கொண்டிருந்தன! அவள் ஆச்சரியத்துடன் அருகே சென்று பார்த்தாள். அப்போதுதான் அவளுக்கு உண்மை உறைத்தது. அவை சொரூபங்கள் அல்ல; மாறாக, உயிருள்ள நபர்கள்…! மாதா, சூசை, யோவான், பலிபீடத்தில் ஒரு ஆட்டுக்குட்டி, அதற்குப் பின்னால் ஒரு சிலுவை! இந்த அற்புதமான நிலைக்காட்சியைக் காண கிராமத்து வாசிகள் முண்டியடித்துக் குவிந்தனர். பல மணிநேரம் நீடித்த இவ்வதிசயக் காட்சியை பல நூறு மக்கள் கண்டு களித்தனர். ஆனால் ஆர்ச்சு டீக்கனுக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிட்டவில்லை.

மேரி மக்தலேன் வீட்டுக்கு வேகமாகச் சென்று இவ்வதிசயக் காட்சியைப் பற்றி ஆர்ச்சு டீக்கனிடம் எடுத்துரைத்தாள். ஆனால் அம்மனிதர் அவளுடைய பேச்சைக் கேட்கவில்லை. அவள் மது அருந்தி உளறுவது வழக்கமாகையால், அவள் கண்டது ஒரு மாயக்காட்சி என எண்ணினார் அவர். எனவே அவர் தனது வீட்டை விட்டு வெளியே வரவோ காரியம் என்னவென்று துலக்கவோ விரும்பவில்லை. தோழியின் வீட்டில் மது அருந்தி மாயக்காட்சி கண்டிருப்பாள் என்றே அவர் கருதினார். மறுநாள் முதல் மக்கள் அவ்விடத்திற்குப் படையெடுக்கத் தொடங்கினர். பல்வேறு அற்புதங்களும் அதிசயங்களும் அங்கே நிகழ்ந்தன. அப்போதுதான் ஆர்ச்சு டீக்கனுக்குப் பொறிதட்டியது. பணிப்பெண்ணின் வார்த்தைகளைத் தட்டிக் கழித்ததைக் குறித்துக் கழிவிரக்கம் ஏற்பட்டது.

கடவுள் ஒருபோதும் நம்மிடம் நேரடியாகப் பேசுவதில்லை. நமது பெற்றோர்கள் மூலமாகவோ, வாழ்க்கைப் பங்காளர் வழியாகவோ கடவுள் நம்மிடம் பேசக்கூடும். நமது மக்கள், ஆலயப் பங்குத்தந்தை, உடன்பணியாளர் போன்ற யார் மூலமாவது அவர் பேசிக்கொண்டே தான் இருக்கிறார். ஆனால் நமக்குச் சில முன்னெண்ணங்களும் தப்புக் கணக்குகளும் இருக்கின்றன. ஆணவமும் திமிரும் நம் முகத்தை மறைக்கின்றன. எனவே கடவுளின் திட்டங்களை நம்மால் அறிய முடியாமற் போகிறது.

சிரியா மன்னனின் படைத்தலைவர் நாமான். அவனது வீட்டில் இசரேலில் இருந்து போரின்போது அடிமையாகக் கடத்தி வரப்பட்ட ஒரு சிறுமி இருந்தாள். அவளுடைய அறிவுரைப்படியே தான் நாமான் சிரியா மன்னனின் மடலுடன் இஸ்ரயேல் அரசனிடம் சென்றான். அங்கு சென்ற நாமான் இறைவாக்கினராகிய எலிசாவின் மூலம் தனது தொழுநோயிலிருந்து விடுதலை பெறுகிறான் (2 அர. 5).

வெறும் ஓர் அடிமைச் சிறுமியின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்த காரணத்தினால்தான் நாமான் தனது தொழுநோயிலிருந்து காப்பாற்றப்படுகிறான். அச்சிறுமியின் வார்த்தைகளை அவன் தட்டிக்கழித்திருந்தால் அவன் அந்நோயிலேயே செத்துப் போயிருப்பான்.

நமது வாழ்க்கைப் பங்காளியின் மூலம் கடவுள் பேசுவதை நமது காதுகள் கேட்டிருந்தால்….

ஆன்மீகத் தந்தையர்களும், ஆசாரியர்களும் பேசுவதைக் கேட்க நமது காதுகளைத் தீட்டியிருந்தால்….

பெற்றோர் மூலமாய்க் கடவுள் நமது வாழ்க்கையில் தலையிடுவார் என்னும் உண்மை உறைத்திருந்தால்….

பலரது வாழ்க்கை இப்படி நொந்து நூலாகி இருக்காது. பலரது இருண்ட வாழ்க்கை இதற்குள் ஒளிரத் தொடங்கியிருக்கும்.

சொந்த வழியில் செல்வது பாவம். ‘யாருடைய உதவியும் எனக்குத் தேவையில்லை. எப்படி நடக்க வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்’. எனப் பீத்திக்கொள்பவர்கள் வழிமுட்டி நிற்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற எண்ணங்கள் ஆணவத்தின் வெளிப்பாடுகளே ஆகும். அது அழிவுப்பாதையின் தொடக்கம் மட்டுமே. பலருக்கு நேர்ந்த அறியாமைகளில் இருந்தும் மூடமைகளில் இருந்தும் நாம் சில பாடங்களைப் படிக்க வேண்டும்.

ஜெபம்: ஆண்டவரே நீர் பிறர் மூலமாகப் பேசும்போது நான் அவற்றை உணர்ந்து கொள்ளும் அறிவையும் பணிவையும் நீர் எனக்குத் தாரும். அறிவுரைகளை ஏற்பதற்குத் தடையாக இருக்கும் பிடிவாதம், சுயாபிமானம், நானென்ற எண்ணம் போன்றவற்றை அறவே விட்டுவிட்டு உமது கருணையை நாள்தோறும் பாடிப்புகழ நீர் என் அகக்கண்களைத் திறந்துதாரும். ஆமேன்.

– ஷெவலியார் பென்னி புன்னத்தறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *