தடைதாண்டிச் செல்லுங்கள்

தடைகள் இடையூறு செய்யாமல் அவற்றை உடைத்தெறிவது எப்படி?

அன்னை மரியா உலகெங்கும் அவ்வப்போது திருக்காட்சி கொடுத்து வருகிறாள். அவளுடைய திருக்காட்சிகள் போல் இயேசுநாதர் காட்சி கொடுப்பதை நாம் கேள்விப்பட்டதில்லை. இருந்தாலும், இயேசுவின் திருக்காட்சி அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகில் கிடைக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு தெய்வீகக் காட்சி கிடைக்கப்பெற்ற ஒரு சிறுவன்தான் செகதாசியா. இச்சிறுவன் ஆப்பிரிக்கக் கண்டத்தின் ருவாண்டா என்ற தேசத்தைச் சார்ந்தவன். இவனைப்பற்றிய ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு  The boy who met Jesusஎன்று பெயர். இதை எழுதியவர் ஒரு மெக்கானிக்கல் பொறியாளர், இம்மாக்குலி இலிபகைசா என்ற பெயர் உடையவர். “இயேசுவை சந்தித்த சிறுவன்: கிப்ஹோவின் செகதாசியா” என்ற பெயரில் இந்நூல் மலையாள மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செகதாசியாவின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஓர் உந்துகோல். ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த இச்சிறுவனின் பெற்றோர் ‘ஒரு நாள் கழிந்தது’ என்ற வகையில்தான் தங்கள் வாழ்க்கையைத் தள்ளி நீக்கினர். இதைச் சற்றும் காணச் சகியாத சிறுவன் செகதாசியா தனது பெற்றோருக்கு உறுதுணையாக இருக்க முடிவு செய்தான். எனவே அவன் ஊருக்கு வெளியே ஒரு செல்வந்தனின் வீட்டில் ஆடுமாடுகளை மேய்ப்பதற்காகச் சென்றான். அதனால் கிடைத்த சொற்பப் பணத்தை அவன் தனது வீட்டின் வறுமையைப் போக்குவதற்காகச் செலவிட்டான்.

கள்ளங்கபடமற்ற சிறுவன்

கள்ளத்தின் ரேகையே படராத அவன் முகத்தில் கபடின்மைக் களிநடம் புரிந்தது. எனவே இயேசு நாதர் அவனுக்குத் தோன்றி அருட்காட்சி கொடுக்கச் சித்தமானார். ஒரு நாள் வெப்பம் மிகுந்த ஒரு நண்பகல் நேரம். வேலைப் பளுவால் அசதியுற்ற அவன் சற்றே இளைப்பாற ஒரு இலையடர்ந்த மரத்தடியில் அமர்ந்திருந்தான்.

அப்போது சன்னமான ஒரு குரல் அவனை அன்புமீதூர அழைத்தது. புதுமையான ஆடவன் ஒருவரின் குரல்கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். யாரையும் காணாமல் குரல்வந்த திசைநோக்கி நகர்ந்தான். ஆம். சாட்சால் ஆண்டவர் அங்கே நின்று கொண்டிருந்தார். ஆண்டவரின் அழகு முகம் கண்ட செகதாசியா விக்கித்துப் போய் அவன் பாதகமலங்களைப் பற்றினான். இயேசு அவனை நோக்கி, “உலகிற்குச் சொல்ல என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. நீ அதை உலகிற்கு அறிவிப்பாயா?” என்று கேட்டார். அவரது வேண்டுகோளை மறுக்க செகதாசியாவால் முடியவில்லை.

இறையழைத்தலை மனதார ஏற்றுக்கொள்ளும் எவரும் கண்மூடித்தனமான கீழ்ப்படிதலுக்குத் தயாராக வேண்டும். மிகப்பெரிய ஒரு பொறுப்பை ஒப்படைக்குமுன் சின்னஞ்சிறிய காரியங்களில் கீழ்ப்படிதல் இருக்கிறதா என்பதைக் கடவுள் ஆராய்ந்து பார்ப்பார். அதில் உறுதி இருந்தால் மட்டுமே பெரிய பொறுப்புகளை அவர் ஒப்படைப்பார்.

இயேசு செகதாசியாவிடம் கூறியது என்னவென்றால்: “நான் இயேசு கிறிஸ்து. எதிர்காலத்தில் நான் தரும் சேதிகளை உலகிற்குச் சொல்ல உண்மையில் நீ உகந்தவன் என்பதை எண்பிக்கும் பொருட்டு, நீ உடனே யூபர்ட்டின் வயலில் இப்போது வேலை செய்பவர்களிடம் சென்று நான் சொல்லி அனுப்புவதைச் சொல்லிவிட்டு வா” என்றார். அது என்னவென்றால், “உலகத்தின் இறுதி அண்மித்துவிட்டது; ஆகவே இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்கொள்வதற்காக ஆன்மாக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.”

இயேசு சொல்லி அனுப்பியதை செகதாசியா வயல் வேலைக்காரர்களுக்குச் சொல்வதற்காக வேகமாகச் சென்றான். அவன் சொன்னதைக் கேட்ட பலரும் அவனைக் கிண்டல் செய்தனர். கிண்டல் செய்வதற்கு என்ன காரணமென்றால் செகதாசியா அம்மணக் கோலமாய் அங்கே சென்றான். ஆம். நடுக்கமும் கலக்கமும் ஆட்கொள்ள அவன் ஓடிய ஓட்டத்தில் ஆடை அவிழ்ந்ததைக்கூட அவன் அறியவில்லை. எனவே பூரணமான அம்மண நிலையில்தான் அவன் அவர்கள் முன்னாலே போய் நின்றான்.

இயேசுவுக்காகச் சில அவமானங்களைத் தாங்கும் திறன் பெற்றவர்களால் மட்டுமே ஒரு நல்ல போதகராகவும் இறை ஊழியராகவும் மாற முடியும். ஆதித்திருச்சபையில் வாழ்ந்திருந்த திருத்தூதர்களுக்கும் அவர்களது பரம்பரையினருக்கும் இதே மனநிலை இருந்தது என்பது தேற்றம். “இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்” (திப. 5:41).

ஒருவர் இயேசுவைக் ‘கண்மூடித்தனமாகப்’ பின்பற்ற விரும்பினால் அவர் அவரை எல்லா வகையிலும் எடுத்துப் பயன்படுத்துவார் என்பது உறுதி. அவருக்கு இருக்கும் எல்லாக் குறைகளையும் அவரே நிவர்த்தி செய்து அவரை அவர் உயர்த்தி விடுவார். செகதாசியாவின் பெற்றோர் இயேசுவை அறிந்தவர்களோ, கிறிஸ்தவ மறையைத் தழுவியவர்களோ அல்ல. பைபிள் என்ற புனித நூலை அவர்கள் கண்கொண்டு பார்த்ததுகூட இல்லை. அப்படியிருந்தும் செகதாசியாவை இயேசு தமக்கெனத் தேர்ந்து கொண்டார். தம் பணி செய்யுமாறு அவனை அவர் பணித்தார். வேதாகமம் வாசிக்க அவர் அவனுக்குக் கற்றுக்கொடுத்தார். பெரிய சொற்பொழிவு வல்லுநர்களைக் காட்டிலும் அதிகமாக அவன் இயேசுவைக் குறித்து ருவாண்டாவின் பகுதிகளில் உரையாற்றினான். அவனது சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம்மிடம் ஈர்த்தன. அவர்களில் ஆயர்களும் குருக்களும் அடக்கம்.

மொழிகளின் எல்லைகளை உடைக்க

அதற்குப்பின் செகதாசியாவை ஆண்டவர் வெளிநாடுகளுக்கு அனுப்பினார். அங்ஙனம் அவர் ‘வறூண்டி’ என்ற இடத்தில் உரையாற்றி வந்தார். அவ்விடத்தில் புழங்கிய மொழியை வசப்படுத்த முடியாமல் தவித்த செகதாசியாவுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் உதவியாய் இருந்தனர்.

எனினும் மொழிபெயர்ப்பாளர்கள் சரியாக மொழிபெயர்க்கவில்லை என்ற ஆதங்கம் செகதாசியாவுக்கு இருந்துகொண்டே இருந்தது. இதனால் அவ்வூரிலுள்ள மொழியை அறிந்துகொள்ள விரும்பிய செகதாசியா கடவுளிடம் உதவி கேட்டார். கடவுளும் அவருக்கு உதவினார். முதலில் ஒருசில வார்த்தைகள் மட்டுமே அவருக்கு வசப்பட்டன. ஆனால் ஒரு வாரத்திற்குள் அந்தப் புதிய மொழியில் பேசவும், அதனைப் புரிந்து கொள்ளவும் திறமை பெற்றார். இதிலிருந்து நற்செய்தி போதிப்பதற்கு எந்த மொழியும் ஒரு தடையே அல்ல என்பதை செகதாசியா உலகிற்கு உணர்த்தினார். ஆயினும் மனமுருகி ஜெபித்தால் மட்டுமே புதிய மொழிகள் வசப்படும் என்பதையும் செகதாசியா தமது வாழ்க்கையால் எண்பித்தார்.

கவனிக்க வேண்டியவை

இன்னொன்றையும் செகதாசியா நமக்கு உணர்த்துகிறார். அதாவது நாம் விரும்புகின்றவை அல்ல; மாறாக கடவுள் விரும்புகின்றவற்றையே நாம் போதிக்க வேண்டும். செகதாசியா போதித்து வந்த சயர் என்ற இடத்தில் பலதாரமணம் என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. ஆனால் பலதாரமணம் தவறானது என்றும், அதற்கு எதிராகப் போதிக்க வேண்டுமென்றும் இயேசு அவரிடம் சொல்லியிருந்தார். இதைக் கேட்ட மக்கள் அவரைக் கிண்டலடித்து விரட்டினர். ஆயினும் செகதாசியா அசரவில்லை. ஏனெனில் அவன் இயேசுவின் குரலாக ஒலித்தான்.

இறை ஊழியன் ஒருவன் தனது வாழ்க்கையைக் கிறிஸ்துவிடம் ஒப்படைத்து விட வேண்டும். இனி அவன் தனக்கென வாழ முடியாது. ஒரு தடவை செகதாசியா கோங்கோ என்ற தொலைதூர கிராமத்தில் ஊழியம் செய்து வந்தான். அப்போது அவனது தாய் இறந்த துக்கச் சேதியை அறிந்தான். அதற்குமுன் அவனது இரண்டு சகோதரர்கள் இறந்து போயிருந்தனர். இதனால் அவன் வீட்டிற்குப் புறப்பட்டு வந்தான். அப்போது அவனது தகப்பனார் தகர்ந்த நிலையில் படுத்த படுக்கையாகிக் கிடந்தார். இருந்தபோதும் ஓர் இரவுகூட அவனால் தன் தந்தையின் அருகே உட்காரமுடியவில்லை. ஏனெனில் அவன் செய்து முடிக்க வேண்டிய ஊழியங்கள் இன்னும் அதிகமிருந்தன.

அன்பானவர்களே, தீமை மலிந்த இவ்வுலகில் ஆண்டவர் உங்களை அழைக்கிறார். இவ்வுலகத்தின் தீமைகளை வென்று அவற்றுக்கு எதிராகப் போரிட இன்று உங்களை அவருக்குத் தேவை. அவர் உங்களை அவருக்கு உகந்த இடத்தில் பணியமர்த்தி வேலைவாங்குவார். அதற்கு நீங்கள் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. “இதோ நான்” என்று மட்டும் சொல்லுங்கள். உங்கள் ஒரே ஒரு சம்மதமே அவருக்குத் தேவை. அதற்காக நாம் ஜெபிப்போம்.

ஆண்டவரே என் இறைவா, உம்மை நான் அறிய முடிந்ததில் உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன். ஆயினும் கோடிக்கணக்கானபேர்கள் உம்மைப் பற்றிக் காதால் கூடக் கேள்விப்பட்டதில்லை என்பதை எண்ணும் போதுதான் நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன். அவர்களை முன்னிட்டு நான் செய்ய வேண்டியது என்ன என்பதை மட்டும் எனக்குச் சொல்லும். மக்கள் உம்முடைய ஒளியைக் கண்டு ஒளிபெறட்டும். அதுவே என் மனதுருகிய மன்றாட்டு. தூய மாதாவே, புனித யோசேப்பே ஆண்டவரை அறிந்து அன்பு செய்ய நீங்கள் ஜெபியுங்கள். ஆமேன்.

– கே.ஜே. மாத்யூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *