அனைத்தையும் ஆட்படுத்துமாறு அடிபணிவதை வசப்படுத்துவோம்.
அதற்கான தூண்டுதலே இக்கட்டுரை.
ராக்காயி மாமிக்கு மூன்று மருமக்கள். மூத்தவள் சுமதி. பிறகு அன்னா. இளையவள் மகிழினி. மூவரும் சமர்த்துகள். நல்ல குடிப் பிறந்தவர்கள். படிப்பிலும், பணத்திலும், ஏன் நற்பண்புகளிலும் சிறந்து விளங்கியவர்கள். இருந்தாலும் ராக்காயி மாமிக்கு மகிழினியைத்தான் மிகவும் பிடிக்கும். மகிழினி என்னும்போதே பாசம் பொங்கி வழியும். ஒருநாள் பக்கத்துவீட்டுப் பிச்சையம்மாள் ராக்காயியை நோக்கி இங்ஙனம் கேட்டாள்: ஏன் ராக்காயி, உனக்கு மூன்று மருமக்கள் இருந்தும் ஏன் மகிழினியிடம் மட்டும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறாய்? அவளைப்பற்றிப் பேசும்போது உனக்கேன் ஆயிரம் நாவுகள்? இதில் அடங்கியுள்ள மருமம் என்ன?
இதைக்கேட்ட ராக்காயி குலுங்கிச் சிரித்தாள். பிறகு இப்படியாகப் பதிலளித்தாள்: எனக்கு மருமக்கள் மூன்றுபேர் உண்டுதான். மூன்றுபேருமே கெட்டிக்காரப் பெண்களும்தான். ஆனால் மகிழினி மூவரிலும் சற்று மாறுபட்டவள். மூன்றுபேரும் என்னை அம்மா என அழைத்தாலும், மகிழினி ஒருத்தியே என்னைத் தனது சொந்தத் தாயாக வரித்துக் கொண்டுள்ளாள். அவள் எதற்கும் என்னைக் கலந்தாலோசிக்காமல் இருக்கவே மாட்டாள்.
சோறு சமைத்தால் குழம்பு என்ன என்று என்னையே கேட்பாள். கூட்டுப் பொரியலில் உப்பும் காரமும் எப்படியென்று என்னைத்தான் வினவுவாள். பட்சணம் போடுவதாக இருந்தாலும் பார்த்துப் பார்த்துச் செய்வதைவிட மகிழினி என்னைக் கேட்டுக் கேட்டுத்தான் செய்வாள். ஆவி பறக்கும் குழம்பைக் கையில் எடுத்து என்னைக் காட்டி, அம்மா இது பரவாயில்லையா? என விசாரிப்பாள்.
பிச்சையம்மா, இப்போது நீ என்ன நினைக்கிறாய் என் மகிழினி மருமகளைப்பற்றி? எல்லாம் என்னைக் கேட்டுச் செய்வதற்கு அவள் ஏதேதும் அறியாத பச்சைப்பிள்ளையல்ல. போதாததற்கு அவள் மூன்றாண்டுகள் ‘ஹோம் சயன்ஸ்’ முடித்தவள். எந்த உணவையும் சுவையாகச் செய்வதில் அவள் மிகவும் கெட்டிக்காரி. இருப்பினும் நான் பக்கத்தில் இருக்கும்போது அவள் என்னிடம் கருத்துக் கேட்கிறாள். இதற்குப் பெயர்தான் அனுசரணை. அனுசரணையாக இருப்பதென்பது கடவுளின் மாபெரும் அருள்தான். என்னுடைய மகிழினிக்கு அது மிகவும் அதிகம். மூத்தவர்களிடம் அனுசரணையாக இருக்க வேண்டுமென்பது நமது முன்னோர் நமக்குக் கற்றுத்தந்த நல்ல பாடம் அல்லவா? நமது மக்கள் நமக்கு அனுசரணையாக இருக்கும்போது நம் உள்ளங்களும் குளிருமல்லவா?
அதற்காக என் மூத்த மருமக்களிடம் எனக்கு எந்தப் பிணக்கமும் கிடையாது. எனினும் எனக்கு அனுசரணையாக இருக்கும் மகிழினி மீது கொஞ்சம் அதிகப்பிரியம். அவ்வளவுதான். நம்மைத் தாலிகட்டிய புருஷன்களுக்கும் நாம் அனுசரணையாக இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புவார்கள். சரிதானே பிச்சையம்மா? பிச்சையம்மாள் தலையை மேலும் கீழும் குலுக்கி ஆம் எனச் சம்மதித்தாள். கீழ்ப்படிதலும் அனுசரணையும் உள்ளவர்களை எல்லாரும் விரும்புவர்.
அனுசரணையுள்ள ஒரு தாய்
மனுக்குலம் ஈடேற்றம் அடைவதற்காகத் தன்னையே தத்தம் செய்து அனுசரணையுள்ள ஒரு தாயாக மாறினாள் அன்னை மரியா. காலம் முழுவதும் கன்னியாகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்பது அவளது வாழ்வின் இலட்சியம். இந்த இலட்சியத்தில் பிடிப்புள்ளவளாக இருந்தபின்னும் கடவுளின் திட்டத்திற்காக அவள் தன் பிடியைத் தளர்த்திக் கொண்டாள். இறைமகனின் அன்னையாக வேண்டும் என்று கடவுள் நிச்சயித்தபோது அவள் தனது திட்டங்களை ஒட்டுமொத்தமாய் ஒதுக்கிவிட்டு கடவுளின் திட்டத்திற்கு அடிபணிந்தாள். இதுதான் அவளது அனுசரணை.
துன்பங்களின் நெடுநிரையைக் கண்முன்னே கண்டபோதும் அவள் முனகிக்கொள்ளவில்லை. “இதோ நான் ஆண்டவரின் அடிமை. உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்” (லூக். 1:38) என்று அவள் தன்னைக் கடவுளுக்கு விட்டுக் கொடுத்தாள். மரியாவின் அனுசரணை ஏவாளின் ஆணவத்திற்கு முடிவுகட்டியது. அங்ஙனம் ஏவாளின் சாபத்தை மரியா தீர்த்தாள்.
அனுசரணையுள்ள ஒரு மகன்
கடவுளின் திருவிருப்பத்திற்குச் சிலுவை மரணம்வரைக் கீழ்ப்படிந்த இறைமகனைத் தந்தையாகிய கடவுள் நமக்காக வழங்கியுள்ளார். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2: 6-9 வரையிலான பகுதியில் நாம் இப்படி வாசிக்கிறோம்: “கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.”
அனுகூலமும் சாதகமுமான ஒரு சூழ்நிலையில் ஆதாம் கடவுளுடன் முரண்டு பிடித்தான். அவனால் மனிதகுலம் முழுவதுமே தண்டனைக்கு உட்பட்டது. இத்தண்டனையைத் தரணியிலிருந்து அகற்ற இயேசு தாமே தண்டனைக்கு உட்பட்டவராக மாறினார். அதற்காக அவர் மரணம்வரை அனுசரணையுள்ள ஒரு மகனாக இம்மண்ணுக்கே இறங்கி வந்தார். அவர் நமக்காக மரணத்தை ஏற்றுக்கொண்டார். பாஸ்கு காலத்தில் நாம் சொல்லும் திரிகால ஜெபத்தில், ‘இயேசு மரணமட்டும் கீழ்ப்படிபவர் ஆனார்’ என எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் சொல்லுகிறோம். ஒரு தனிநபர் என்ற முறையில் நம்மை மீட்பதற்காக அவர் மரணமென்ற கசந்த கிண்ணத்தைக் குடித்தார் என நினைக்கும்போது நம் உள்ளங்கள் நன்றியால் நிறையவில்லையா? நன்றியோடு மட்டும் நிறுத்திவிடாமல் இயேசு காட்டிய முன்மாதிரியை நம்முடைய வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கும்போது மட்டுமே நம்மைக் குறித்தான கடவுளின் திட்டத்தை நமது வாழ்க்கையில் நாம் நிறைவேற்ற முடியும். ஏனெனில் நம் ஆண்டவர் சீடர்களின் பாதங்களைக் கழுவினார். அவ்வாறு செய்ய நம்மையும் பணித்தார்.
“நீங்கள் என்னைப் போதகர் என்றும் ஆண்டவர் என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” (யோவா. 13:13-15).
மரியாவின் முன்மாதிரியே நம்முடைய முன்மாதிரி
உலகத்து மாந்தர்களாகிய நம் அனைவருக்கும் அன்னையாக அருளப்பெற்ற மரியாவின் முன்மாதிரியை நாமும் பின்பற்றினோமென்றால் நமது வாழ்க்கையும் மகிமை பெறும். அத்திருத்தாயின் அன்பு மக்களும், ஆண்டவர் இயேசுவின் வழியே நடப்பவர்களுமாய் நாமும் மாறமுடியும். “விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” (மத். 12:50) என்று ஆண்டவர் மொழிந்துள்ளார் அல்லவா?
திருவுளம் என்னும் உணவு
இயேசு இவ்வுலகில் வாழ்ந்திருந்த போது தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே தமது பிறப்பின் நோக்கமாகக் கொண்டிருந்தார். அதற்காக அவர் தீவிரமாக முயன்றார். பசியால் வாடிய ஒருவர் சுவையான உணவுண்ணும்போது எத்தகைய இன்பத்தைப் பெறுவாரோ அதைவிட மேலான இன்பத்தை ஆண்டவர் தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும்போது பெற்றிருந்தார். “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” (யோவா. 4:34).
வானகத்தை விட்டு இம்மண்ணுக்கு இறங்கிவந்த இறைமகனின் ஒரே குறிக்கோள் தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதாகும். “என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்” (யோவா. 6:38). அதிசயங்களும் அருங்குறிகளும் நிகழ்த்திய ஆண்டவரை முடிசூட்டி அரியணையில் அமர்த்தவே அங்கிருந்த மக்கள் விரும்பினார்கள். ஆனால் இயேசுவோ அதற்கு உடன்படவில்லை.
மேலும் இயேசு உறுதிபடக் கூறினார்: “நான் செய்யும் அடையாளங்களும் அருங்குறிகளும் என்னுடையவை அல்ல; மாறாக என் தந்தையினுடையவையே அவை அனைத்தும்”. “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார்” (யோவா. 5:19). “நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்” (யோவா. 5:30).
இயேசுவின் போதனைகளைக் கேட்ட மக்கள்கூட்டம் திகைப்பும் வியப்பும் அடைகிறது. ஆனால் இயேசுவோ அப்போதனைகளின் புகழைத் தம்முடையதாக மாற்றிக்கொள்ளவில்லை. எல்லாப் புகழும் கடவுளுக்கே என விட்டுவிடுகிறார். “நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல; அது என்னை அனுப்பியவருடையது” (யோவா. 7:16). “தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர். அவரிடத்தில் பொய்ம்மை இல்லை” (யோவா. 7:18).
இங்ஙனம், இயேசுவின் மறைமுகமானதும் பகிரங்கமானதுமான வாழ்வில் அவர் செய்தவை சொன்னவை யாவும் தந்தையின் கட்டளைகளுக்கு அனுசரணையாக இருந்தன. “ஏனெனில் நானாக எதையும் பேசவில்லை. என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும் என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்” (யோவா. 12:49-50).
முற்றிலும் தந்தைக்குக் கட்டுப்பட்டு அவருடைய விருப்பத்தையே நிறைவேற்றி வாழ்ந்த இயேசு, நம்மிடமும் அங்ஙனம் செய்யுமாறு கேட்கிறார். “நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்” (யோவா. 15:10).
அதிகாரிகளுக்கு அனுசரணை
இயேசு கடவுளாக இருந்தும் அதிகாரிகளுக்கு அனுசரணையாகவும் கீழ்படிதல் உள்ளவராகவும் இருந்தார். நாட்டுத் தலைவர்களையும், கோவில் அதிகாரிகளையும் அவர் மதித்தார். யோவானிடமிருந்து பாவமன்னிப்பின் ஞானஸ்நானத்தையும் பெற்றார். இங்ஙனம் எல்லாச் சட்டங்களையும் அவர் முழுமையாக்கினார். குடிமக்களுக்கு இடறலாய் இராதவாறு அவர் வரிகொடுக்கவும் முன்வருகிறார். சீசருக்குரியதை சீசருக்கும் கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் கொடுங்கள் என அவர் போதித்தார். அதையே செய்தும் காட்டினார். நாம் எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டுமென உபதேசித்தார்.
இயேசுவின் அதிகாரம் மற்றெந்த அதிகாரத்திற்கும் மேலானதே. இருப்பினும் அவர் எல்லா அதிகாரத்திற்கும் உட்பட்டவராய் மாறினார். “தலைமை தாங்குவோர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன” (கொலோ. 1:16). கடவுளின் கட்டளைகள் அனைத்திற்கும் கட்டுப்பட்டவரும், திருச்சட்டங்களையும் இறைவாக்குகளையும் முழுமையாக்க வந்தவருமான இயேசு கூறுவதாவது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம். அவற்றை அழிப்பதற்கல்ல நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத். 5:17).
குடும்பத்தில் அனுசரணை
நம் ஆண்டவர் தமது பெற்றோருக்கு முற்றிலும் கட்டுப்பட்டவராகவும் அவர்களுக்குக் கீழ்ப்பட்டவராகவும் வாழ்ந்து வந்தார். முப்பது வயதுவரை அவர் தம் பெற்றோருக்கு அனுசரணையாக நசரேத்து என்னுமிடத்தில் வாழ்ந்தார் (லூக். 2:51). இந்த இயேசுவைப் பின்பற்றுகிற யாராயினும் பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் உள்ளவராக இருக்க வேண்டியது அவசியம்.
“பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை” (எபே. 6:1-2). பெற்றோருக்குத் தரப்படும் அறிவுரையும் இங்கே கவனிக்கத்தக்கது. “தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள்” (எபே. 6:4).
கணவன் மனைவியர்க்கிடையிலும் அனுசரணை என்பது மிகவும் அவசியமானது. அது எங்ஙனமிருக்க வேண்டுமென்று தூய ஆவி நமக்கு அறிவுறுத்துகிறார். “திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்….. திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்” (எபே. 5:22-24). மேலும் கணவன்மார்களுக்கு அவர் அறிவுறுத்துவது: திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியதுபோல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள் (எபே. 5:25). “திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்” (1பேது. 3:7).
ஆண்டானும் அடிமையும்
“அடிமைகளே, இவ்வுலகில் உள்ள உங்கள் தலைவர்களுக்கு, முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவர்க்கு அஞ்சி முழுமனத்தோடு வேலை செய்யுங்கள். அதற்குக் கைமாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்” (கொலோ. 3:22,24). “தலைவர்களே உங்கள் அடிமைகளை உங்களுக்கு இணையாகக் கருதி நேர்மையோடு நடத்துங்கள். உங்களுக்கும் விண்ணகத்தில் ஆண்டவர் ஒருவர் உண்டு என்பதை நினைவிற் கொள்ளுங்கள்” (கொலோ. 4:1).
அதிகாரிகளுக்கும் அனுசரணை
“ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள். ஏனெனில் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை. இப்பொழுதுள்ள ஆட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஏற்படுத்தினார். ஆகையால் அதிகாரத்தை எதிர்த்து நிற்போர் கடவுளின் ஏற்பாட்டையே எதிர்த்து நிற்கின்றனர். ஆகவே கடவுளின் சினத்தின் பொருட்டு மட்டும் அல்ல; மனச்சான்றின் பொருட்டும் நீங்கள் பணிந்திருத்தல் வேண்டும். இதற்காகவே நீங்கள் வரி செலுத்துகிறீர்கள். அவர்கள் தங்கள் பணியை ஆற்றும்போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள். தலைவரி செலுத்த வேண்டியோருக்குத் தலைவரியையும், சுங்கவரி செலுத்த வேண்டியோருக்குச் சுங்க வரியையும் செலுத்துங்கள். அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள்; மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்” (உரோ. 13:1-2, 5-7).
மரணம் வரைக் கீழ்ப்படிந்து அனைத்தையும் கீழ்ப்படுத்தியவரே நம் ஆண்டவர். பூமியில் மனிதனாகப் பிறந்த அவர் பாவத்தைத் தவிர மற்றனைத்திலும் நம்மைப்போல் ஆனார். நோன்புகளிலும் உபவாசங்களிலும் நாம் கவனம் செலுத்துவதைப் போலவே இயேசுவின் அனுசரணையான வாழ்வையும் நாம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அன்னை மரியாவைப்போல் நாமும் சொல்வோம்: இதோ நான் ஆண்டவருடைய அடிமை. உம்முடைய வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்.
-ஸ்டெல்லா பென்னி