பாடத் தோணலையா?

மிக அழகாகப் பாடும் திறன்பெற்ற ஒரு குயில் காட்டில் வசித்து வந்தது. ஒருதடவை ஓர் அணில் குயிலிடம் சென்று, ‘குயிலக்கா நீ ஒரு பாட்டு பாடுவாயா?’ என்று கேட்டது. அதற்குக் குயில், “கீழிரிந்து உயரும் தவளைகளின் கொண்டேன்…. கொடுத்தேன்…. சத்தம் உனக்குக் கேட்கவில்லையா? அக்குரல் என்னுடைய உற்சாகத்தைத் தளரச் செய்கிறது. அதனால் பாட முடியவில்லை” என்றது.

அப்போது அணில், “குயிலக்கா பாடாமல் இருப்பதால் அல்லவோ தவளைகளின் குறுகுறா சத்தம் கேட்க நேரிடுகிறது!” என்றது. உடனே பொறிதட்டிய குயில் சன்ன சாரீரமாய்ப் பாடத் தொடங்கியது.

நமக்கும் பல நேரங்களில் குயிலக்காளின் மனநிலைதான். நம்மைச் சுற்றிலும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அநியாய அக்கிரமங்களைக் கண்டு நாமும் சலித்துப் போகிறோம். அவை நம்மைச் செயல்பட விடாமல் தடுக்கின்றன. அன்பும் நன்றியறிதலும் இல்லாத மனிதர்களைப் பற்றி நாம் முணுமுணுக்கிறோம். செயல்படாமையும் ஒதுங்கியிருத்தலும் நம்முடைய மகிழ்ச்சியைச் சூறையாடி விடுகின்றன.

அன்பில்லாத உலகில் அன்பினுடைய பாடல்களைப் பாடுவதற்கே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். உலகத்தின் அழிவைத் தடுக்கக்கூடிய உப்பாகவும், இருள் மண்டிய உலகத்தை ஒளிர்விக்கும் ஒளியாகவும் மாறவேண்டியவர்களே நாம். நம்முடைய குடும்பங்களிலும் நாம் வாழும் சமூகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய பலவற்றையும் நாம் பார்க்கக்கூடும். ஆனால் அவற்றையே நினைத்து மனம் சோர்ந்து போக வேண்டாம். மாறாகக் கடவுளின் விருப்பம் யாது எனத் தேட வேண்டும். சோர்ந்து போய் இருந்துவிடாமல் இறைநாம மகிமைக்காக நாம் உழைக்க வேண்டும்.

யாரேனும் வேதனையில் உழன்றால் அவர்களிடம் கடவுள் கூறுவது: “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல; உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல என்கிறார் ஆண்டவர். மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்திருப்பது போல, என் வழிமுறைகளும் எண்ணங்களும் உயர்ந்திருக்கின்றன” (எசா. 55:8-9).

ஆண்டவரின் குரலைக் கேட்க நீங்கள் அவர் முன்னே போய் உட்காருங்கள். குயிலைப் போல முணுமுணுத்தால் வெளியில் உள்ள தீமைகளால் நாம் சுற்றப்படலாம். எனவே தீமையை நன்மைகளால் தடுக்க வாரீர்.

-மேரி ஜோர்ஜ் மேமடத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *