எனக்கது நல்ல வெள்ளி

துன்பம் தோய்ந்த புனித வெள்ளிகளை இன்பம்
தோய்ந்த வெள்ளிகளாய் மாற்றும் இறையன்பின் இனிக்கும் நினைவுகள்.

என் வாழ்க்கையில் நடந்த ஓர் உள்ளார்ந்த நிகழ்ச்சியை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1982 -ல் நான் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதினேன். ஆனால் அவ்வாண்டில் நான் ஒரு கருத்து வேறுபாட்டின் காரணத்தால் என் நண்பனுடன் பிணங்கிவிட்டேன். பிணக்கம் வலுத்து பகைமையாகி அது குடும்பச்சண்டையில் முடிந்தது. இரு வீட்டாரும் பேசிக்கொள்வதை நிறுத்தி விட்டோம். ஆனால் அதெல்லாம் அன்று ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. ‘சண்டைக்குச் சண்டை; வெறுப்புக்கு வெறுப்பு’ அதற்குமேல் எதுவும் சிந்திக்கவில்லை. அவ்வாண்டு ஜூண் 15 -ம் தேதி நான் ஒரு குருவானவர் ஆவதற்காகக் குருமடத்திற்குச் சென்றேன்.

குருமட வாழ்க்கையில் காலைதோறும் நடைபெறக்கூடிய தியானம் மிகவும் முக்கியமானது. ஒருநாள் மத்தேயு 5:21-26 வரையிலான நற்செய்திப் பகுதியே தியானத்தின் கருப்பொருளாகக் கிடைத்தது. சகோதரர்களுடன் அன்புறவில் வாழவேண்டுமென்பதே கடவுளின் விருப்பம். ஆனால் நான் என் நண்பனுடன் பிணங்கியுள்ளேன். அவனுடன் பிணங்கி என்னால் எப்படி ஒரு நல்ல குருவானவராக மாறமுடியும்? இதனால் என் உள்ளத்தில் ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது.

அன்று மாலையில் நான் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். அதாவது, வரக்கூடிய கிறிஸ்துமஸ் விடுமுறையில் கண்டிப்பாக என் நண்பனுடைய வீட்டுக்குச் சென்று அவனோடு பேச வேண்டும். 1982 -ல் கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது நான் வீட்டுக்குச் சென்றேன். ஆனால் போனது போலத் திரும்பி வந்தேன். மன்னிக்கவில்லை; பேசிக்கொள்ளவும் இல்லை. என் சித்தப்பாவினுடைய கடைசி மகள் என்னிடம், ‘அண்ணா செமினாரிக்குப் போயிருக்கிறாய், இனி பிணங்கியிருப்பது சரியா?’ எனக் கேட்டாள் ஒரு கேள்வி. அவள் சொன்னது சரிதான். ஆயினும் என்னால் மன்னிக்க முடியவில்லை.

என் முடிவு முடிந்துபோனது. மீண்டும் குருமடம் புகுந்தேன். ஆனால் முன்பை விடவும் இப்போது எனக்கும் அதிகக் கலக்கம், குழப்பம்! நண்பனுடன் பகைத்துக்கொண்டு எப்படி என்னால் ஒரு நல்ல குருவானவர் ஆக முடியும்? ஆனால் நான் ஒரு நல்ல குருவானவர் ஆகத்தான் வேண்டுமே. என் உள்ளம் மீண்டும் கனத்தது.

இயேசுவிடம் கேட்டேன்

ஒருநாள் நான் இயேசுவிடமே ஆலோசனை கேட்டேன். அவர் என்னிடம் இப்படிப் பேசினார். லூக்கா 6:27 முதல் 36 வரையிலான பகுதியை வாசிக்கும்படித் தூண்டினார். அதில், “உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” (6:28) என்னும் வாக்கியம் என்னைத் தொட்டது. அன்றுமுதல் என் நண்பனுக்காக ஜெபிக்கத் தொடங்கினேன். ‘ஆண்டவரே, என் நண்பனை ஆசீர்வதியும்’ என்றேன்.

உயிர்ப்பு விடுமுறையும் வந்தது. இம்முறை கண்டிப்பாக என் நண்பனுடன் பேசுவது என்ற உறுதியான முடிவுடன் வீட்டுக்குச் சென்றேன். ஆனால் ஏதோ ஒரு இறுக்கம் எனக்குள் இறுகிக்கொண்டே இருந்தது. கடைசியாக, பாஸ்கா வியாழனைத் தேர்ந்தெடுத்தேன். அன்று அவன் வீட்டுக்கே சென்று பாஸ்கா அப்பம் சாப்பிடுவது என முடிவு செய்தேன். அப்படிப் பிணக்கம் தீருமே என எண்ணினேன். ஆனால் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் சென்று அப்பம் புசித்தேன். பால் குடித்தேன். நண்பனுடைய வீட்டுக்கு மட்டும் செல்லவில்லை.

மறுநாள் துக்க வெள்ளியாகிய புனித வெள்ளி. அந்நாள் எனக்கு ஒரு முக்கியமான நாளாக இருந்தது. நான் ஒரு பீடச் சிறுவனாக இருக்கவே இல்லை. அதனால் குருமடத்திற்குப் போகுமுன் நான் திருத்தூயகத்திற்குள் நுழைந்ததே இல்லை. ஆனால் இப்போது பங்குத்தந்தை என்னிடம், ‘திருப்பாடுகளின் வரலாற்றில் சில பகுதிகளை சகோதரர் படியுங்கள்’ என்றார். தூயகத்திற்குள் நுழைய முடியுமே என எண்ணி நான் மகிழ்ந்தேன்.

முன்கூட்டியே அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கி அப்பகுதிகளை அடையாளப்படுத்தி வாசித்துத் தயாரானேன். திருச்சடங்குகள் எல்லாம் முடிந்தன. எல்லாரும் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால் நான் மேலும் கொஞ்சம் நேரம் அங்கேயே உட்கார்ந்து தியானித்துக் கொண்டிருந்தேன். இயேசுவுக்கு நன்றி கூறியவண்ணம் கோயிலிலேயே இருந்துவிட்டேன்.

திடீரென்று என் நண்பனின் ஞாபகம். இயேசுவின் குரல் எனக்குள் வலுத்தது: ‘மன்னிக்கவும்’. இயேசுவின் சிலுவை மொழி என்னுள் ரீங்கரித்தது: “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (லூக். 23:34). நான் இயேசுவிடம் ‘ஆண்டவரே மன்னிக்க என்னைக் கற்பியும்’ என உள்ளுருகி ஜெபித்தேன். அப்போது எனக்குள் ஒரு சக்தி பிறந்தது. நான் கோவிலை விட்டுக் கிளம்பினேன். நேராக என் நண்பனுடைய வீட்டுக்குச் சென்றேன்.

போர்க்களத்தில் நான்

கோவிலை விட்டு வெளியே வந்த என் நெஞ்சம் இரண்டாகப் பிரிவதுபோல் தோன்றியது. வலப்பக்கம் சொல்லியது: “சீக்கிரமாய்ப் போய் மன்னிப்புக் கேள்”.

இடது நெஞ்சம் சொன்னது: ‘இப்போது இதற்கு என்ன தேவை? நீ ஏன் வலிய போய் மன்னிப்புக் கேட்க வேண்டும்?’

வலம்: இயேசு தவறேதும் செய்யாமலேயே மன்னிக்கவில்லையா? அப்படியென்றால் நீயும் மன்னிக்க வேண்டாமா?

இடம்: நீ போனால் உன்னை அவர் விரட்டியடிப்பார். அல்லது நீ அங்கே போய்ப் பார். நன்றாகப் படப்போகிறாய்…!

போர் என் நெஞ்சில் மூண்டு கனன்றது. நான் நண்பனுடைய வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தேன். சாலை ஓரம் இருந்தது அவ்வீடு. வீட்டின் மதிற்பக்கம் போனேன். உள்ளுக்குள் இருந்து ஒரு கனத்த குரல் கம்பீரமாய்ச் சொன்னது: ‘வாசலை மிதிக்காதே’. நான் முற்றத்தில் மிதித்தேன். உடனே நெஞ்சிலிருந்து வந்த குரல் காணாமல் போனது. அமைதி நிலவியது.

நான் அவர்களின் வாசலைத் தட்டினேன். யாரது? என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. நான் என்னைச் சொன்னேன். அவர்கள் வேகமாக வந்து கதவைத் திறந்து என்னை அவர்களின் வீட்டில் ஏற்றுக்கொண்டனர். நிறைய நேரம் பேசினோம். தேநீர் அருந்தினோம். மன்னிப்புக் கேட்கவோ சொல்லவோ இல்லை. ஆயினும் அங்கே எல்லாம் நிகழ்ந்தன. உள்ளம் அன்பினால் நிறைந்தது. ஆனந்தம் ததும்பி வழிந்தது.

இத்துணைக் காலங்களும் இனிமை மாறாமல் எனக்குள் மலர்ந்து விரிந்துள்ள துக்கவெள்ளியின் நினைவலைகளே இவை. இது, என் ஆண்டவர் கல்வாரி மலையிலிருந்து எனக்குத்தந்த பரிசு.

முதன்முதலாக நான் பலிபீடத்தை ஒட்டி நின்ற நாளில் ஆண்டவர் எனக்கு ஒரு பாடம் புகட்டினார். அதாவது, பலிபீடம் மன்னிப்பின் ஓர் உறைவிடம். பலரது வாழ்வில் மன்னிப்பின் விதைகளை விதைக்க இந்த அனுபவம் எனக்கு வழிமுதலாக இருந்துள்ளது. வெறுப்புள்ள இடங்களில் கிறிஸ்தவனின் வாழ்க்கை பகரும் செய்தி இதுவே.

-அரு. தந். ஜோர்ஜ் ஆலுக்கா சி.எஸ்.டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *