கவலைப்படாமல் வாழ்வது எப்படி?

ஏக்கம், துக்கம், கலக்கம், அச்சம், ஏமாற்றம்… இன்னபிற இன்னல்களால் அவதிப்பட்டு வாழ்க்கையை ரசிக்க முடியாதவர்களுக்கு ஆறுதலான ஒரு பதில்.

வாழ்க்கையின் மகிழ்ச்சியை அப்படியே கட்டிப்போடும் ஓர் ஆன்மீக வியாதியே கவலை. இது நமது உடலின் உறுதிக்கு ஊறு விளைவிக்கும். உள்ளத்தின் வலிமையைச் சின்னாபின்னமாக்கும் கவலையின் சோகரேகைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாமல் தவிப்பது இயல்பு.

படிக்கத் திறமை உண்டு. ஆனாலும் நான் படிப்பில் தேறுவேனோ என்றொரு கவலை… அப்படியே தேறினாலும் இந்தப் படிப்பினால் ஏதாவது வேலை கிடைக்குமா என்ற கலக்கம். எனக்கு ஒரு மனைவி கிடைப்பாளா? அவள் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வாளா? அப்படியரு கவலை.

சமீபத்தில் நான் வளைகுடா நாடுகளுக்குச் சென்றிருந்தேன். அங்கே வேலை செய்யும் முக்கால்வாசி மனிதர்களும், இங்கே வேலை பறிபோய் விடுமோ என்ற ஏக்கத்தில்தான் நாட்களைத் தள்ளி நீக்குகின்றனர்.

எனக்கு ஏதேனும் தீரா வியாதிகள் வந்துவிடுமோ என நினைத்து பரிதவிப்பவர்கள் நம்மிடையே நிறையபேர் இருக்கிறார்கள். மாரடைப்பு வந்துவிடுமா? புற்றுநோய் பாதித்து விடுமா? மனநிலை பாதிப்பு ஏற்படுமா? என்ற சிந்தனைகளால் தளர்ந்து போகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தலைவலியே போதும். மூளைக்கட்டி என்று சொல்லி அஞ்சிச் சாவர்.

மக்களை நினைத்துக் கவலையில் வாடும் பெற்றோர், வயதாகிப் படுக்கையில் விழுந்து கிடப்பதை இப்போதே கண்டுத் துன்புறும் நடுவயதினர்… விபத்து நேருமோ என அஞ்சி வண்டி ஓட்டாதவர்கள்… பிறர் தங்களைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்றெண்ணிக் கலங்குபவர்கள் இத்தகையோரை நோக்கி நம் ஆண்டவர் கூறுவது இதுவே:

“ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர்வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையை விட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள். அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?” (மத். 6:25-27).

கவலைகளால் நமது பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என்று மட்டுமல்ல; அது பிரச்சனைகளை இன்னும் அதிகமாக்குகிறது. இருந்தாலும் நாம் கவலைப்படுகிறோம். இதிலிருந்து எப்படி நாம் வெளிவர முடியும்? புனித பேதுரு அப்போஸ்தலர் சொல்லும் ஒரு தீர்வு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது: “உங்கள் கவலைகளை யெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்” (1பேது. 5:7).

நம்மைக் கவலையில் ஆழ்த்தும் மனிதர்கள், சூழல்கள், நிகழ்வுகள் போன்ற எதையும் ஆண்டவரிடம் எடுத்துக்கூறி அவரை ஒப்படையுங்கள். “நானே ஆண்டவர்; எல்லா மக்களுக்கும் கடவுள் நானே. அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ?” (எரே. 32:27) என உரைக்கும் நம் இறைவனால் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை. மட்டுமல்ல, அவர் நம்முடைய விஷயத்தில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளார். அவர் மீதான நம்முடைய நம்பிக்கையும் அடைக்கலமும் எப்போது இழக்கிறோமோ அப்போதுதான் நாம் கவலையில் விழுந்து விடுகிறோம்.

ஒருதடவை நோய்வாய்ப்பட்ட தன் மகளை நினைத்துக் கதறி அழுதுகொண்டே ஜெபமாலை சொல்லிக்கொண்டிருந்தார் அவள் தகப்பன். திடீரென அவர் முன்னால் இருந்த மாதாவின் திருசொரூபம் வாய் திறந்து பின்வருமாறு பேசிற்றாம்:

“மகனே உன் மகளுக்கு இரு தகப்பனார்கள் இருப்பதை நீ மறந்து விட்டாயா? நீ அவளுக்கு உடல்ரீதியாகப் பிறப்பளித்தாய். ஆனால் அவளுடைய ஆன்மாவை உருவாக்கியவரும் அவளுக்கோர் ஆளுமையை அளித்தவரும் உனது வானகத்தந்தை அல்லவா?”

“இவர்களில் எந்தத் தந்தை அவளிடம் அதிக அன்பு வைத்துள்ளார்?”

“கண்டிப்பாக அந்த வானகத்தந்தைதான்”.

“அப்படியானால் அவர் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த வியாதியின் நாட்களை எப்படிக் கடவுளின் மகிமைக்காக மாற்றமுடியும் என சர்வ வல்லமை படைத்த கடவுள் அறிகிறார். ஆகவே, வானகத்தந்தையிடம் உன் மகளை ஒப்படைத்துவிட்டு நீ அமைதியாக இரு”. அவருடைய கவலைகள் கணநேரத்தில் மறைந்தன.

நாம் கடவுளின் மக்களென்றும் அவர் நம்மை அன்பு செய்கிறாரென்றும் தங்களுக்குள்ளேயே எடுத்துச் சொல்லி கவலைப்படுவோர் ஆறுதலடையட்டும். கவலைகளுக்கு அஞ்சிக் கலங்கும்போது மண்டியிட்டு இப்படி ஜெபியுங்கள்: “எல்லாம் வல்ல கடவுளே நீரே என் தந்தையும் என்னைப் படைத்தவருமாய் இருக்கிறீர். இதை நான் நம்புகிறேன். இந்தப் பரந்த வியனுலகைப் படைத்துப் பராமரிக்கும் உமது அதிகாரத்திற்கு உட்பட்டதே என்னைக் கவலையிலாழ்த்தும் எல்லாத் துன்பங்களும் துயரங்களும் என நான் அறிவேன். நீர் அறியாமல் எனது வாழ்க்கையில் எதுவுமே சம்பவிப்பதில்லை. நீர் அனுமதிப்பதெல்லாம் எனது வாழ்க்கையில் நன்மையாக மாறும் எனவும் நான் விசுவசிக்கிறேன். ஆகவே என்னை வாட்டி வதைக்கக்கூடிய நபர்களையும் சூழ்நிலைகளையும் நிகழ்வுகளையும் நானிதோ உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். என் உள்ளத்தைக் கவலைகளிலிருந்து மீட்டு விடுதலையாக்கியருளும். ஆமேன்.

கவலைப்படுவதற்குப் பின்னால் உள்ள மற்றொரு காரியம் ‘இன்று’களில் வாழாமற்போவதுதான்.

நாளைகளை நினைத்துக் கவலைப் படுபவர்களால் இன்றைய பொழுதுகளை ஆனந்தமாய் மாற்ற முடியாது. நாளை நாம் உயிரோடு இருப்போமா என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. நிச்சயமாக இருப்பது இந்த நிமிடம் மட்டுமே. எனது எதிர்காலம் என் கடவுளின் கையில் பாதுகாப்பாக இருக்கிறது என மனப்பூர்வமாக நம்பி இன்றைய பொழுதைக் கலகலப்பாக்குங்கள். இன்றைய பொழுதுகளை நான் நன்றாக மாற்றும்போது நாளைகளைப் பற்றிய தன்னம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.

“ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்” (மத். 6:34).
தப்பான கண்ணோட்டங்கள் நம்மைக் கவலைப்படுத்தும். பிரச்சனையின் ஆக்கப்பூர்வமான காரியங்களை விடுத்து மாறுபாடானவற்றை மட்டும் நோக்கினால் கவலைகள் அதிகரிக்கவே செய்யும்.

“எனக்கொரு வேலை உண்டு; சம்பளமும் கிடைக்கிறது” எனச் சிந்திக்காமல் எனக்குப் போய் இந்த வேலைதான் கிடைத்ததா… எனக்கு இம்மட்டு சம்பளம் பத்துமா…? என எண்ணியே கலங்கினால் என்ன செய்வது?

எனக்கும் ஒரு சொந்த வீடு இருக்கிறதே எனச் சிந்திப்பதைத் தவிர்த்து என் வீட்டில் பிற வீடுகளில் இருக்கும் வசதி வாய்ப்புகள் இல்லையே என நொந்தால் எப்படி?

உண்மையில் நமது செழிப்பு என்பது உள்ளத்தில்தான் இருக்கிறது. ஒருதடவை புனித பிரான்சீஸ் அசீசியும் சகோதரர் லியோவுமாக உஞ்சவிருத்திக்குப் (பிச்சையெடுக்க) புறப்பட்டனர். அன்று அவர்களுக்கு ஊசிப்போன சில அப்பத்துண்டுகள்தான் கிடைத்தன.

நண்பகல் நேரமானபோது அந்த அப்பத்துண்டுகளைத் தின்பதற்காக அவர்கள் ஓர் அருவியின் அருகே சிறு பாறையின்மேல் ஏறி உட்கார்ந்தனர். அப்பத்துண்டுகளில் ஒன்றை எடுத்து பிரான்சீஸ் சொன்னார்: சகோதரர் லியோ நாம் எவ்வளவு செழிப்பாக வாழ்கிறோம் பார்த்தீரா?

அதற்கு லியோ, அது எப்படி? உணங்கிய ஒருசில அப்பங்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன. இந்நிலையில் எப்படி நாம் செழித்திருக்க முடியும்? எனக் கேட்டார்.

“சகோதரா, இந்த அருவியில் ஓடும் சுத்தப் படிகம் போன்ற நன்னீரை நீர் பார்க்கவில்லையா? இதைப் பெறுவதற்கு நாம் ஏதும் கஷ்டப்பட்டோமா? கடவுள் நமக்கு இத்தண்ணீரை இலவசமாகத் தரவில்லையா? இன்னும் ஏன்? நாம் அமர்ந்திருக்கும் இந்த மேசை போன்ற கற்பாறை நாம் பணம் கொடுத்தா வாங்கிப் போட்டிருக்கிறோம்? வானகத்தந்தை நமக்கிதை இலவசமாகத் தரவில்லையா?

எத்துணை அழகான வான்வெளி நமக்கு மேல் உள்ளது. நாம் கேட்டு இன்புற நல்ல பறவைகளின் சன்னப்பாட்டு! ஆஹா நமக்குக் குறையன்றும் இல்லை. எல்லாமே கடவுள் தந்திருக்கிறார். நாம் எவ்வளவோ பெரிய செல்வந்தர்கள் சரிதானே லியோ.”

சகோதரர் லியோவின் கண்கள் திறந்தன. எந்தச் சூழ்நிலையோ எந்த நிகழ்வோ நம்மைக் கவலைப்படுத்த முடியாது. எல்லாமே நம்முடைய கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. ஆகவே நம்முடைய கண்ணோட்டங்கள் சரியாக இருக்கட்டும். அப்போது கவலைகள் நம்மை நெருங்க முடியாது.

கானான் நாட்டை ஒற்றி வருவதற்காக மோசே பன்னிரண்டு ஒற்றர்களை அனுப்பினார். கடவுள் வாக்களித்திருந்தவாறு ‘பாலும் தேனும்’ ஒழுகக்கூடிய நாடாகவே அது அவர்களுக்குத் தோன்றியது. ஆனால் அங்குள்ள மனிதர்கள் வீரசூரர்களென்றும் அவர்களின் கோட்டை மதில்கள் கடத்தற்கரிதானவை என்றும் அறிந்தபோது அவர்களுக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. கானானியர்களால் நாம் கொல்லப்படுவோமோ என்ற பீதி அவர்களைப் பிடித்து உலுக்கியது.

கானானியர்கள் ஆற்றல் வாய்ந்தவர்கள். அவர்களைக் கீழடக்கும் வலிமை நமக்கில்லை என்னும் எண்ணம் இஸ்ரயேல் குலத்தைச் சூறையாடியது. தங்களுடைய மனைவியரும் மக்களும் வாளுக்கிரையாகப் போவதை முன்கூட்டியே கண்டு கதறினர். எகிப்துக்குத் திரும்பிப் போகலாம் என்றும் ஆலோசித்தனர். அப்போது மோசே அவர்களிடம் கூறியது:

“நீங்கள் கலக்கமுற வேண்டாம், அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம். உங்களுக்கு முன்னே செல்கின்ற உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் காண எகிப்தில் எல்லாவற்றிலும் அவர் செய்தது போலவே, இப்பொழுதும் உங்களுக்காகப் போர் புரிவார்” (இச. 1:29-30).

ஆனால் அவர்கள் மோசேயின் வாக்குகளுக்குச் செவிசாய்க்கவில்லை. ஆனால் பயமுறுத்தும் சொற்களை அவர்கள் பற்றிக்கொண்டார்கள். செங்கடலைப் பிளந்து அதன் வழியாக அவர்களை நடத்திச் சென்ற ஓர் ஆண்டவர் தங்களுக்கு உண்டு என்பதை அவர்கள் மறந்து போனார்கள். எனவே சாதாரண மக்கள் சொல்லுகிற காரியங்களை நாம் பொருட்படுத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அவையெல்லாம் நமது மனவலிமையைக் குலைத்துவிடும். சாதாரணமாகப் பேசுவதெல்லாம் பெருவெள்ளம், பெருங்காற்று, பேராபத்து இன்னபிறவற்றைத் தான்!

ஆயினும், இறைவனின் ஆவியால் நிறைவுண்ட யோசுவாவும் காலேபும் ஒருசேர, “வாருங்கள்; நாம் இப்போதே சென்று ஆண்டவர் நமக்கருளும் அந்த நாட்டைக் கைப்பற்றுவோம்” என்றனர். பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது நாம் கடவுளின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும். “அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன். கலங்காதே, நான் உன் கடவுள். நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்” (எசா. 41:10).

கடவுளின் தலையீடும் பாதுகாப்பும் நம் வாழ்க்கையில் ஏற்பட வேண்டுமென்றால் நாம் அவசியம் கவனிக்க வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது. பிரச்சனைகள் வரும்போது மட்டும் கடவுளை அழைப்பதும் மற்ற நேரங்களில் அவரைச் சற்றும் நினையாதிருப்பதும் கூடாது. “ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத். 6:33).

நம்மைக் கவலையிலாழ்த்தும் எதுவாயினும் அதில் தந்தைக் கடவுள் கவனமுடன் இருக்கிறார். நாம் நம் தந்தையின் காரியங்களில் கவனம் செலுத்தினால் அவர் நம்முடைய காரியங்களில் கவனம் செலுத்துவார். “ஆகவே எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர். உங்களுக்கு இவை யாவும் தேவையென உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்” (மத். 6:31-32).

பிறவினத்தார் என்போர் கடவுளை அறியாதவர்களும், கடவுளைத் தந்தையாக, ஒரு தகப்பனாக ஏற்காதவர்களும் ஆவர். கடவுளைச் சரிவரப் புரியாதவர்களின் அடையாளமே கவலை கொள்ளுதல். ஆகையால் இறைமக்கள் எனப்படுவோர் கவலைகளை அன்றாடம் விட்டுவிட்டு வாழக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். “தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?” (உரோ. 8:32).

“எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்” (பிலி. 4: 6-7).

-பென்னி, புன்னத்தறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *