அதிசயங்களின் பின்னணி!

இந்த அனுபவ நிகழ்வை வாசிக்கும்போது,
கடைசி நேரத்திலும் அற்புதம் செய்யக்கூடிய ஆண்டவருக்காக அதற்குரிய பின்னணியை
ஏற்பாடு செய்யாமல் இருக்க முடியாது.

தன்னோடு கைதியாகப் பிடிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவந்த அந்த இளைஞனின் கழுத்தில் மாதாவின் ஒரு சுட்டிமாலை தொங்கியது. இதை ஆச்சரியமுடன் பார்த்த கிலவுது அவனிடம், ‘இது யாருடையது?’ என வினவினான். ஆனால் அந்த இளைஞனுக்கு அவ்வினா பிடிக்கவில்லை. எனவே சுட்டிமாலையைக் கிலவுதின் கைகளில் அறுத்தெறிந்தான். இந்தச் சுட்டியில் யாருடைய வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது என்பதைக்கூடப் பார்க்காமல் கிலவுது அம்மாலையை எடுத்துத் தன் கழுத்தில் அணிந்துகொண்டான்.

கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட பதினேழு வயதுக் கிலவுது சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். ஆப்பிரிக்க வம்சாவளியைச் சார்ந்த இவன் 1923 டிசம்பர் 31-ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்தான். மணமுறிவு பெற்ற தன் பெற்றோரைப் பிரிந்து பெரியம்மாவின் ஆதரவில் வாழ்ந்துவந்தான் கிலவுது. அவனுக்கு ஏட்டறிவோ எழுத்தறிவோ புகட்டப்படவில்லை. இதனால் விழுப்பம் தரக்கூடிய ஒழுக்கக் கல்வியும் கைவரவில்லை. தனது துர்நடத்தையால் சிறைச்சாலை வரைக்கும் வந்துவிட்ட கிலவுதினின் வாழ்க்கையில் இனிமையான பொழுதுகள் அரிதாகத்தான் இருந்தன.

மறத்தற்கரிய அவ்விரவு

சுட்டிமாலையைத் தனது கழுத்தில் அணிந்துகொண்ட அவ்விரவில் கிலவுதினின் முழங்கையை யாரோ பற்றுவதுபோல் இருந்தது. உடனே தன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்த்தான் கிலவுது. இதோ அங்கே மெய்சிலிர்க்க வைக்கும் ஓர் அழகான பெண்மணியின் வடிவம் தெரிவதைக் கண்டான்.

அவன் அவ்வடிவத்தைப்பற்றி பின்னொரு நாள் இப்படிச் சொன்னான்: “கடவுளால் படைக்கப்பட்டவற்றில் மிகவும் அழகானவளும் ஒளிமிகையால் துலங்குகின்றவளுமாகத் தென்பட்டாள் அப்பெண்மணி. நீ என் மகனும் நான் உன் தாயும் ஆகவேண்டுமென்று நீ விரும்பினால் உடனே ஒரு குருவானவரிடம் சென்று கடவுளைக் குறித்துக் கேட்டறிய வேண்டுமென்றும் அவ்வழகு நங்கை உரைத்தாள். பிறகு அவ்வணங்கு மறைந்து போயிற்று”.

ஒரு குருவானவரைப் பார்க்க வேண்டி அடம்பிடித்த கிலவுதிடம் தந்தை ராபர்ட் ஓ லியறி (எஸ்.வி.டி) என்பவர் நேரில் வந்தார். கிலவுதும் அவனோடிருந்த ஏனைய மூவரும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிய வேண்டுமென்று அக்குருவானவரிடம் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். இதனால் மறுநாள் முதலே அவர் அவர்களுக்குக் கிறிஸ்துவை எடுத்துரைக்கத் தொடங்கினார்.

எழுத்தறிவு பெறாத கிலவுது நற்செய்தியின் உட்கிடக்கையை உணரமுடியாமல் தவித்தான். ஆயினும் அருகிருந்த கைதிகளின் அருந்துணையால் நற்செய்தியை ஓரளவு கற்றுக் கத்தோலிக்க மறையைத் தழுவினான்.

பாவசங்கீர்த்தனம் என்ற அருளடையாளத்தை அறிந்த கிலவுது சொல்வது சிறப்பானது. “பாவசங்கீர்த்தனம் என்பது ஒரு தொலைபேசி உரையாடல் போன்றது. குருவானவர் மூலமாக நாம் கடவுளிடமும், கடவுள் அவர் வழியாக நம்மிடமும் உரையாடக்கூடிய ஒரு சந்தர்ப்பமே இவ்வருளடையாளம். அதனால் பாவசங்கீர்த்தனத்தைப்பற்றி தப்பர்த்தமோ தப்பெண்ணமோ கொள்ளக் கூடாது. பாவங்களை நாம் கடவுளிடமே நேரடியாக எடுத்துரைக்கிறோம். ஆனால் அது குருவானவரின் முன்னால்தான் செய்கிறோம்.

பாவங்களை அறிக்கையிட ஒரு குருவானவரின் முன்னால்தான் செல்கிறோம். பாவங்களை அறிக்கையிட ஒரு குருவானவரின் முன்னால் அனுதாபத்துடன் மண்டியிடும்போது, உண்மையில் நாம் சிலுவையில் அறையுண்ட இயேசுவின் முன்னாலேயே மண்டியிடுகிறோம் என்பது தெளிவு. நாம் அனுதாப உள்ளத்துடன் பாவங்களை அறிக்கையிடும்போது அவர் தமது இரத்தத்தால் நம்மைக் கழுவித் தூய்மையாக்குவார் என்பது உண்மை”. இவற்றையெல்லாம் அன்னை மரியாவே தமக்குச் சொல்லிக் கொடுத்ததாகக் கிலவுது ஒப்புக் கொள்கிறான்.

பிறகொருநாள் தேவநற்கருணையைக் குறித்து வகுப்பெடுக்க வந்த ஒரு குருவானவரிடம் கிலவுது, அன்னை மரியா தனக்கு அறிவித்த சில காரியங்களை எடுத்துரைத்தான். அப்பத்தில் நாம் நம் ஊனக்கண்களால் இயேசுவைக் காண முடியாது. ஆயினும் திருவப்பம் இயேசுவே ஆவார். இயேசு தன் தாயுடன் எப்போதும் இருப்பதைப்போல் நம்முடனும் எப்போதும் இருக்க விரும்புகின்றார்.

அவ்வன்னையோ தமது இவ்வுலக வாழ்வில் எப்போதும் இயேசுவை நேசித்தும் உபாசித்துமே பொழுதைக் கழித்தாள். ஆகவே நாமும் நமது நேரங்களை வீணான எண்ணங்களால் வீணடித்து விடாமல் இயேசுவை நேசிப்பதும் உபாசிப்பதும் நன்றிசொல்வதுமாகப் பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும்.

எழிலார்ந்த ஒரு பயணம்

சில நாட்களுக்குப் பின் கிலவுது தன்னோடு இருந்தவர்களுடன் திருமுழுக்குப் பெற்று கத்தோலிக்க மறையைத் தழுவிக் கொண்டான். 1944 ஜனவரி 16 -ஆம் நாள் அது நடந்தது. ஜனவரி 20 -ஆம் நாள் அவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். ஆனாலும் கிலவுது மனம் உடைந்து போகவில்லை. நான் அன்னை மரியாவுடன் இயேசுவை இடையறாது வழிபடப் போகிறேன் என்று ஆனந்தம் மீதூரச் சொன்ன கிலவுது, தனது உடலின் இறப்புக்கு முன் ஒரு விருந்து வைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்திருந்தான்.

விருந்து முடிந்ததும் கிலவுதும் அவனது நண்பர்களும் அந்த குருவானவருடன் இணைந்து ஜெபமாலை, சிலுவைப்பாதை போன்ற பக்திமுயற்சிகளுடன் மரணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். இறுதியில் தேவநற்கருணை அருந்துவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, சிறையின் அதிகாரி ஒருவர் வேகமாய் வந்து கிலவுதிடம், ‘உனது மரணதண்டனை இன்னும் இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்படுகிறது’ எனக் கூறினான்.

இதனால் கிலவுது ஓலமிட்டு அழுதான். “ஏன் இப்படிச் செய்தீர்கள்? என் தகப்பனார் வீட்டுக்குச் செல்ல மகிழ்ச்சியுடன் நான் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது ஏன் எனது மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிப் போட்டீர்கள்? தூய அன்னையின் திருமுகத்தை ஒருமுறை தரிசித்தவர்கள் மீண்டும் இந்த பூமியில் உயிர் தரித்திருக்க முடியுமா? தூய அன்னையுடன் இணைந்து இயேசுவை ஆராதிக்க வேண்டும் என்ற எனது பேரவா அத்துணை அதிகமாய் இருக்கிறது”.

உள்ளம் நொந்து அழுத கிலவுதினைப் பார்த்து குருவானவர் கூறியதாவது: “இனி மிஞ்சுகின்ற இரண்டு வாரங்களும் இன்னொரு பாவியின் மனமாற்றத்திற்காக ஜெபிக்கலாமே”. அவருடைய யோசனை கிலவுதுக்குச் சரியாகவே பட்டது.

ஜேம்ஸ் ஹூங் என்னும் பெயருடைய ஒரு கத்தோலிக்க வாலிபர் மரணதண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். தீய வழியில் உழன்ற இவர் கத்தோலிக்க மறையையும் அதன் குருவானவர்கள், துறவியர்கள் ஆகியோரையும் மறுதலிக்கிறார். அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதும், கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும் அவருக்கு வாடிக்கையாக இருக்கிறது.

எனவே கிலவுது தன்னுடைய இரண்டுவாரப் பிராயச் சித்தங்களை ஜேம்ஸ் ஹூங்கின் மனமாற்றத்திற்காகச் செலவிட்டான். இங்ஙனம் மீண்டும் ஒருமுறை தன்னைத் தயாரித்துக் கொண்ட கிலவுது 1944 பிப்ரவரி நான்காம் தேதி மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் மின்சார இருக்கையில் உட்கார்ந்திருந்த கிலவுது தனது அன்புக்குரிய குருவானவரிடம் “சுவாமி, நான் உங்களை தினமும் நினைவு கூர்வேன். உங்களுக்கு என்ன தேவையிருந்தாலும் என்னிடம் கேட்கத் தயங்க வேண்டாம். உங்களுக்கானதை நான் அன்னை மரியாவிடம் கேட்டுப் பெறுவேன்” என்று கூறி உயிர்விட்டான்.

ஜேம்சின் மரணநாளில்

மூன்று மாதங்களுக்குப் பிறகு மேய் 19 -ஆம் நாள் ஜேம்சினுடைய தண்டனை நாளும் வந்தது. கடவுளையும் திருச்சபையையும் மறுதலித்த அவர் யாரையும் தன்னை நெருங்க அனுமதிக்கவில்லை. கடைசியாக அவனிடம் சென்ற மருத்துவர், ஒரு கர்த்தர் கர்ப்பித்த ஜெபத்தையாவது சொல்லும்படி அவனுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது அவன் மருத்துவரின் முகத்தில் காறித் துப்பினான். மின்சார இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, இறுதியாக ஏதேனும் சொல்ல நினைக்கிறாயா எனக் கேட்டனர். அப்போது அவன் கடவுளையும் திருச்சபையையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தான்.

ஆனால், அவன் திடீரென்று கெட்ட வார்த்தைகளை விட்டுவிட்டு அவ்வறையின் ஒரு மூலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். முகத்தில் பயம் தோய்ந்திருந்தது. அவன் ஒப்பாரி வைத்து அலறினான். எனக்கொரு குருவானவரைத் தாருங்கள்…!

அனைவரும் வியந்தனர். கடவுளை அவன் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்த காரணத்தால், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கை நிருபர்களுக்குப் பின்னால் தந்தை லியறி ஒளிந்து நின்றிருந்தார். அவரிடம் அவன் பாவசங்கீர்த்தனம் செய்தான்.

‘நீ இவ்வளவு சாந்தமுடன் பாவசங்கீர்த்தனம் செய்ய உன்னால் எப்படி முடிந்தது?’ என ஓர் அதிகாரி அவனிடம் கேட்டதற்கு, இவ்வறையின் ஓரத்தில் கிலவுதும் அவனது தோளைப் பற்றிய வண்ணமாய் மாதாவும் நிற்பதைக் கண்டேன். கிலவுது என்னிடம், “நான் என் சாவையும் அதற்கு முன்னைய இன்னல்களையும் இயேசுவின் சிலுவையோடு சேர்த்து வைத்தேன். நீ உன் மரணத்திற்கு முன் மனம் மாறாவிடில் நரகத்தில் உனக்குரிய இடத்தைக் காட்டித்தர அன்னை மரியா கடவுளிடம் அனுமதி பெற்றுள்ளார். நான் நரகத்தில் பெறப்போகும் இடத்தைக் கண்டேன். அதைப் பார்த்ததும் பயந்து அலறினேன்” என்றான்.

அதற்குப் பின் ஜேம்ஸ் ஹூங் அமைதியுடன் தன்னை மரணத்திற்குக் கையளித்தான். இவ்வாறு கிலவுதினின் பரிந்துரைகளும் அவரது துன்பங்களும் ஜேம்சின் மனமாற்றத்திற்குக் காரணமாயின. அந்தக் கடைசி நிமிடத்தில் அப்படியொரு நிகழ்ச்சி நிகழ்ந்திராவிடில் ஜேம்சிடம் மனமாற்றம் நடந்திருக்காது. அத்தகைய ஒரு அற்புதம் நடைபெறுவதற்காக கிலவுது தன் வாழ்க்கையை அற்பணித்து ஜேம்சின் மனமாற்றத்திற்குக் காரணமானான். நாமும் நமது சகமனிதர்களுக்காக இப்படிப்பட்ட சூழல்களை ஏற்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆகவே நாமும் அன்னை மரியாவின் மூலம் இறைவனை மன்றாடுவோம்: “ஜென்ம பாவமில்லாமல் பிறந்த கன்னிகையே, பாவிகளின் அடைக்கலமே, இதோ நாங்கள் உம்மைச் சரணாகதியடைந்து உம்மிலே தஞ்சம் புகுகிறோம். எங்கள்மேல் இரக்கமாயிருந்து எங்களுக்காக மன்றாடியருளும். ஆமேன்.

-சோணியா நோபிள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *