ஒரு மிஷனறியின் பேன்ட்சும் ஷர்ட்டும்

குடும்ப உறவுகளில் விரிசல்களா? சமூக உறவுகளில் குழப்பமா? எனில் கண்டிப்பாக அறிய வேண்டிய சில காரியங்கள்…

அங்கே தொலைதூரத்தில் உள்ள ஒரு தீவில் மறைபணியாற்ற பாப்பரசர் ஒரு மிஷனறியை அனுப்பினார். அவரும் மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிறகு மூன்றாண்டுகள் மறைபணி ஆற்றினார். கடுமையாக உழைத்தார். ஆனால், அவ்வூரில் உள்ள யாருக்குமே மனமாற்றம் ஏற்படவில்லை. யாரும் ஞானஸ்நானம் பெற முன்வரவுமில்லை.

மிகுந்த ஏமாற்றமடைந்த அம்மிஷனறி பாப்பரசருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: ‘அன்புள்ள திருத்தந்தை அவர்களே, நான் இவ்வூரிலிருந்து திரும்பி வருகிறேன். ஏனெனில் இவ்வளவு காலம் கடுமையாக உழைத்த பிறகும் யாரொருவர் கூட கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளவில்லை’. கடிதத்தை வாசித்த திருத்தந்தை மிஷனறிக்கு மறுமொழியாக இன்னொரு கடிதம் எழுதினார்.

அதில், “அன்பு சகோதரா, நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. கடிதத்தில் தாங்கள் குறிப்பிட்டிருந்த காரியங்கள் உண்மையானவை என அறிகிறேன். ஒன்று செய்யுங்கள். உங்களுடைய ஒரு பேன்ட்சும் சட்டையும் எனக்கு அனுப்பி வையுங்கள்” என எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தை வாசித்த மிஷனறி ஆச்சரியப்பட்டார். அதில் திருத்தந்தை கேட்டுக்கொண்டவாறு ஒரு பேன்ட்சும் ஒரு சட்டையும் அவருக்கு அனுப்பி வைத்தார். பல மாதங்களுக்குப் பின் பாப்பரசர் பதில் அனுப்பினார். மிஷனறி ஆர்வத்தோடு அதைத் திறந்து படித்தார்.

“அன்பு சகோதரா தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. கூடவே நீங்கள் அனுப்பியிருந்த பேன்ட்சும் ஷர்ட்டும் எனக்குக் கிடைத்தது. அவற்றிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது. நீங்கள் இதுவரை அந்த மக்களுக்குப் போதனைதான் பண்ணினீர்கள். ஒருநாள் கூட மண்டியிட்டு ஜெபிக்கவில்லை. ஜெபித்திருந்தால் உங்கள் ஆடையின் கால்மூட்டும் கைமூட்டும் நைந்து கிழிந்திருக்கும். இவையிரண்டும் நிகழாமற்போன காரணத்தால் தாங்கள் மேலும் மூன்றாண்டு அம்மக்களோடேயே தங்கியிருங்கள்”.

இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய யாக்கோபுக்கு வேதாகம பண்டிதர்கள் ஒரு பட்டப்பெயர் வழங்கியிருந்தனர். ‘கேமல் நீல்’ (ஒட்டக மூட்டு). ஒட்டகம் அதனுடைய மூட்டுகளை ஊன்றித்தான் மணற்காட்டில் படுக்கவோ எழும்பவோ செய்யும். இப்படிப் பல காலங்கள் மூட்டுகளை ஊன்றி ஊன்றி அவை தழும்பேறியிருக்கும். யாக்கோபும் அப்படித்தான். அவர் தம் நாதராகிய இயேசுவைப் போல் பலமணி நேரங்கள் மண்டியிட்டு பிரார்த்தனை செய்து வந்தார். அதனால் அவருடைய கால் மூட்டுகளும் கைமூட்டுகளும் தழும்பேறியிருந்தன.

மத்தேயு நற்செய்தி 17 -ஆம் அதிகாரத்தின் தொடக்கத்தில் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம். “ஆறு நாட்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்”.

எதற்காக இயேசு இம்மூவரை மட்டும் தனியாகக் கூட்டிச் சென்றார்? மட்டுமல்ல, இயேசுவின் முக்கியமான நிகழ்வுகளிலெல்லாம் இம்மூவரும்தான் உடனிருக்கின்றனர். அது ஏன்? பன்னிரு சீடர்கள் அவருக்கு இருந்தும் அவர்களைத் தவிர்த்து இம்மூவரை மட்டும் அழைத்துச் செல்வதால் இவர்களுக்கு ஏதேனும் முக்கிய சிறப்பம்சங்கள் இருந்ததாகவே நாம் ஊகிக்க வேண்டும். இதில் யாக்கோபின் தியாகம் ததும்பிய ஜெபவாழ்க்கை ஆண்டவரை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும்.

இயேசுவோடு இணைபிரியாமல் நடந்தவர்களில் முதன்மையானவர் பேதுரு. பேதுரு என்றாலே பாறை என்பது பொருள். இந்தப் பாறையின் மேலேயே ஆண்டவர் தமது திருச்சபையைக் கட்டினார். சீடர்களில் மூத்தவரும் இவர்தான். எங்கே தங்குவது? எதை உண்பது போன்ற காரியங்களைத் தீர்மானித்து முடிவெடுப்பது பேதுருதான். இதற்கான திறமையும் தலைமைப் பண்பும் பேதுருவுக்கு இருந்தன.

தமது குருநாதராகிய இயேசுவைப் பற்றிப் பேசும்போது அவரது இரத்தம் கொதிக்கும். அவருக்காக இரத்தம் சிந்தவும் அவர் தயார். ஒருமுறை இயேசு கடலின் மீதே நடந்து வந்ததைப் பார்த்த பேதுரு முதலில் பயந்தாராயினும், அவர் தம் குருநாதர் என்பதை அறிந்தவுடன் கடலில் குதித்து தண்ணீரின் மீதே நடக்கவும் அவர் தயங்கவில்லை.

மூன்றாமவர் யோவான். இம்மூவரில் இளையவரும் சுறுசுறுப்பாகச் செயல்படுபவரும் இயேசுவை மனப்பூர்வமாக நேசித்தவரும் இயேசுவால் மிகப்பெரிதும் அன்புசெய்யப்பட்டவரும் இவரே.
எல்லாரும் இயேசுவைத் தனியாக விட்டுவிட்டு ஓடிப்போனபோதும் இயேசுவைப் பிலாத்துவின் மாளிகையில் வீட்டுக் கைதியாக வைத்திருந்த போதும் அவரைப் பிரியாமல் உடனிருந்தவர் இவர் ஒருவரே. இயேசுவின் உயிர் பிரியும் அந்தக் கொடூரமான கணத்திலும் இயேசுவின் அன்னையினுடைய கைப்பற்றி ஆறுதலாக அங்கே நின்றவரும் இவரே.

தம்மை அழைத்த குருநாதர் மீது இவர் காட்டிய நம்பிக்கை மரணம்வரைத் தொடர்ந்தது என்றே சொல்ல வேண்டும். ஒரு கிறிஸ்தவ சமூகத்தின் அல்லது கிறிஸ்துவை மையப்படுத்திய ஒரு குடும்பத்தின் அடையாளமே இயேசுவும் இம்மூன்று சீடர்களும். இயேசுவுக்காக இடையறாது உழைக்கக்கூடியவர்களும், அவரை மனப்பூர்வமாக நேசிப்பவர்களும், அவரிடம் கண்ணீரோடு மனம் வருந்தி ஜெபிப்பவர்களும் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இயேசுவும் அவர்களோடு இருப்பார்.

“என் மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்” (யோவா. 14:23).

இயேசுவுக்காக நமது உடல், பொருள், ஆவி அனைத்தும் அர்ப்பணித்து உழைக்கக்கூடிய ஒரு பேதுருவாக நாம் மாற வேண்டும். அவரைப் பிரியாமல் ஜெபத்திலும் தவத்திலும் சதா ஒழுகக்கூடிய யாக்கோபாக மாற வேண்டும். குடும்பத்தவரோ துறவறத்தாரோ யாராக இருந்தாலும் தங்களை அழைத்த ஆண்டவர் மீதான நம்பிக்கையை எள்ளளவும் விட்டுவிடாமல், அவரை இதயத்தில் வழிபடுகின்ற யோவானாகவும் மாற வேண்டும்.

சுருங்கக் கூறின், நமது வீடுகளில் அல்லது நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு யோவான், ஒரு பேதுரு, ஒரு யாக்கோபு நிச்சயம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட குடும்பங்களும் சமூகங்களும் எப்போதும் ஆசீர்வதிக்கப்படும். “நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்” (யோவா. 15:5-6).

நாம் வாழும் நமது சமுதாயங்கள் உறவுகளைத் தொலைத்துள்ளனவா? நம் குடும்பங்கள் சிதைந்துபோய் இருக்கின்றனவா? நமது நிறுவனங்கள் சிறப்பின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றனவா? அப்படியென்றால் அங்கே கடவுள் இல்லை. கிறிஸ்துவை மனப்பூர்வமாக அன்பு செய்பவர்களும், அவருக்காக ஓடியாடி உழைப்பவர்களும், அவரிடம் மனமுருகி வேண்டுகின்றவர்களும் இன்று அருகிப்போயினர்.

இயேசுவை ஆத்மார்த்தமாகத் தேடாமலும் அவரை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு உலகத்தவர் முன்னால் எடுத்துரைக்காமலும் இருந்தால் அவர் எப்படி நமது வாழ்க்கையில் செயல்படுவார்?

இன்னும் சொல்லப் போனால் பேதுரு, யோவான், யாக்கோபு என்னும் மும்மைத் தன்மைகள் ஒவ்வொரு நபருக்குள்ளும் இருக்க வேண்டும். பேதுருவைப்போல எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருங்கள். எப்போதும் அவரைப் பிரியாமல் அவரையே சரணாகக் கொண்டு அவரோடு இருங்கள். இடையறாது ஜெபியுங்கள். அப்படியிருந்தால் ஆண்டவர் உங்களுக்குள்ளே வந்து குடிகொள்வார். இம்மூன்று குணநலன்களும் நம்முடைய வீடுகளில் மீதூர்ந்து பொலிந்தால், “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” (லூக். 19:9) என ஐயமின்றி சொல்ல முடியும்.

-ஜினோபி ஜோஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *