காரிருளில் காத்திருங்கள்!

கடவுள் என் விண்ணப்பங்களைப் புறக்கணித்துவிட்டார்; என் கவலைகளை அவர் மறந்துவிட்டார்; என் உள்ளத்தின் வேட்கையை அவர் தள்ளிவிட்டார் என்று நினைக்கிறீர்களா?

பியேரே – டி – றட்டெர்’ என்றொரு மனிதர் பெல்ஜியம் தேசத்தில் ஜபேக்கா என்னும் சிற்றூரில் வாழ்ந்துவந்தார். இவர் ஒரு சாதாரண விவசாயி. 1867 -ல் இவர் ஒரு கொடிய விபத்துக்குள்ளாகி தனது இடதுகாலில் பலத்த காயமுற்றார். முழங்கால் எலும்பு முறிந்து தொங்கியது. கிட்டத்தட்ட ஓர் அங்குலம் அளவுக்கு எலும்பின் இருபக்கங்களும் உடைந்து சிதறியது. காலின் இயல்பான இயக்கம் தடைபட்டது. ஆழத்தில் ஊடுருவிய முறிவிலிருந்து இரத்தம் பீறிட்டு, கட்டுத்துணியையே தொப்பலாக்கி விட்டது.

இதைக் குணப்படுத்துவது மருத்துவ உலகத்துக்கே ஒரு சவாலாகிவிட, காலை முற்றிலும் நீக்கிவிட வேண்டுமென்று மருத்துவர்கள் தீர்ப்புக்கூறினர். ஆனால் காலை எடுத்துவிட பியேரே அனுமதிக்கவில்லை. நீண்ட நெடிய எட்டாண்டுகள் அவர் இந்தக் காலுடன் மல்லாடி காலங்களைக் கடத்திக்கொண்டிருந்தார். இதற்கிடையில், பியேரேயின் இந்தத் துன்ப நிலையைக் கண்டு மனமுருகிய மனிதர்கள் ஏராளம்!

பெல்ஜியத்தின் கென்று என்னுமிடத்திற்கு அருகிலுள்ள ஒப்ஸ்டக்கர் என்ற சிற்றூரில் லூர்துமாதாவின் திருத்தலம் அமைந்துள்ளது. 1875 -ல் பியேரே அவ்விடத்திற்குத் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அவர் அங்குள்ள லூர்துமாதாவின் திருசொரூபக் கூண்டிற்கு முன் அமர்ந்து கண்ணீர் மல்க ஜெபித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவரது உடலில் சில மெய்ப்பாடுகள் ஏற்படுவதுபோல் தோன்றிற்று.

கலக்கமுற்ற அவர் எழுந்து நின்றார். இருகால்களாலும் சற்றுத்தூரம் நடந்தார். இதோ அவரது சேதமுற்ற கால் பூரண நலம் பெற்றிருக்கிறது! மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். அற்புதமான சௌக்கியம் பெற்றிருப்பதாக அவர்கள் அறிவித்தனர். ஓர் அங்குலம் அளவுக்கு உடைந்து சிதறி காணாமற்போன அவரது எலும்புகள் மீண்டும் புதிதாக முளைத்திருந்தன!

எட்டாண்டுகள் சீழ் வடிய, துர்நாற்றத்துடன் கிடந்த பியேரேவை நேரடியாகக் கண்டவர்கள் எல்லாரும் ஆச்சரியத்துடன் விழிபிதுங்கினர். பூரண நலத்துடன் வலுவான கால்களால் நடந்து செல்லும் பியேரேவைப் பார்த்து விக்கித்துப் போயினர். இவர் அவர்தானா என்றுகூட பலரும் சந்தேகப்பட்டனர். ஆனால் பியேரேவோ அன்னை மரியா தனக்குச் செய்த அற்புதத்தை அனைவருக்கும் எடுத்துச் சொல்லி கடவுளைப் போற்றினார்.

பியேரே இறந்த பிறகு மருத்துவர்கள் அவரது கால் எலும்பைப் பரிசோதித்தனர். உடைந்துபோன எலும்பு புதிதாக வளர்ந்திருப்பதை அவர்கள் உறுதிசெய்தனர். இது முற்றிலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதம். ஓர் அங்குலம் புதிய எலும்பு உண்டாகி பிரிந்த எலும்புகளை இணைத்தது 1875 ஏப்ரல் 7 ஆம் தேதி அவர் லூர்துமாதாவிடம் ஜெபித்துக் கொண்டிருந்த போதுதான் என்பதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

பியேரேவின் பின்தலைமுறையினர்

பியேரே என்ற மனிதரைப்போல் ஆண்டாண்டு காலங்கள் உடல்நலம் வேண்டிக் காத்துக்கிடந்தவர்கள் பலர். நாள் முழுவதும் வேதனையின் பானத்தை மட்டுமீறிக் குடித்துக்கொண்டே காலத்தைத் தள்ளி நீக்கும் பற்பல மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் அல்லவா? வேதனையால் அலுத்துவிட்டது, நோயாளி என்ற பட்டமும் கிடைத்துவிட்டது. இப்படி அங்கலாய்ப்பவர்களும் நம்மிடையில் இல்லையா?

கல்லியாணம்தான் முடிந்துவிட்டது. ஆனால் ஒரு புழுப்பூச்சி இல்லையே என்று நொந்து நூலாட்டம் தவிப்பவர்கள்தான் எத்தனை எத்தனை? மலடி என்ற பட்டம் வாங்கி உள்ளுக்குள் புழுங்கும் பெண்கள்தான் எத்தனைபேர்? கடன் தொல்லை, பண நெருக்கடி, வீடு ஜப்தி என உழல்பவர்களும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்களே. இனி என்ன வாழ்க்கை? எங்கே போவது…?

கோபப்படுகின்ற, சந்தேகம் கொள்ளுகின்ற, சம்பளம் தராத அதிகாரிகளுக்குக் கீழ் வேலை செய்பவர்களை நினைத்துப் பாருங்கள். மூன்று நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் அலையும் சிலரை எண்ணிப்பாருங்கள். ஜெபமே சலித்து விட்டது. கடவுள் நம்பிக்கையே புழங்கதையாகி விட்டது…! இப்படியும் நாம் சிந்திப்பதில்லையா?

மதுவுக்கு அடிமையான எத்தனையோ குடும்பங்கள் நம் கண்முன்னே தகர்ந்து தரைமட்டமாகிக் கொண்டிருக்கின்றன! எத்தனையோ தியானங்கள், உபவாசங்கள், நோன்புகள், நல்ல தீர்மானங்கள்…! இருந்தாலும் வேரோடிப்போன சில கெட்ட பழக்கங்களை விட்டுவிட முடியாத நிலைமை. ‘இனி இப்படி இல்லை’ என்ற பிரதிக்கனையின் அளவின்மை கண்டு கடவுளே சிரித்திருப்பார்.

கடவுள் என் ஜெபத்தைக் கேட்பதில்லை. அவர் என் உள்ளத்தின் அழுகையை அறிவதில்லை… என அங்கலாய்க்கிறீர்களா? அப்படியென்றால் அறியுங்கள்: நம் வேதனைகளில் நம்மைவிட அழுகிறவர் அவர்தான். அவரேதான்.

குறைச்சொல்லுக்குக் காத்திருப்பவர்

தமது ஆருயிர்த் தோழனாகிய இலாசர் நோய்வாய்ப்பட்டிருந்த போது இயேசு அவனைப் பார்க்கவோ ஆறுதல் சொல்லவோ செல்லவில்லை. அது ஏன்? போகாமலே இருக்கட்டும். தொலைவில் இருந்துகொண்டே ஏன் அவர் தமது நண்பனை நலமாக்கவில்லை? அவருக்கு அது முடியும்தானே? ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இலாசரும் அவரது சகோதரிகளும், ஏன் அந்த ஊர் மக்கள்கூட அவர் வருவார் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வரவில்லை.

சரி, நோய்வாய்ப்பட்டிருந்த போதுதான் வரவில்லை. அவனது அடக்கத் திருச்சடங்குக்காவது அவர் வருவார் என்று எதிர்பார்த்தனர். அதற்கும் வரவில்லை. ஆனால் அவர் வந்தார். எப்போது? இலாசர் இறந்து, அடக்கப்பட்டு, அவன் உடல் அழுகி நாற்றமெடுத்த பின்பு! நோயும் நோக்காடும் இல்லாத நாட்களில் அவனது வீட்டுக்கு அடிக்கடி வந்துகொண்டிருந்தவர் ஒரு தேவை வந்தபோது ஏன் காலை வாரினார் எனச் சிந்திக்கத் தோன்றவில்லையா?

தமது நண்பர் நோயுற்றுத் தவித்த நிலையில் அவனைப் பார்க்கவும் ஆறுதல் கூறவுமே இயேசு விரும்பினார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. பிறர் முணுமுணுக்கும் வரைக் காத்திருந்தார். அனைவருமே அவரைக் குறைகூறும்வரைப் பொறுத்திருந்தார். நீர் இங்கே இருந்திருந்தால்…. என மார்த்தா புலம்புவதிலிருந்து குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன அல்லவா? இருப்பினும் இயேசு ஏன் பிந்தி வந்தார்?

வேறெதற்காகவும் அல்ல; கடவுளின் மாட்சி இலாசர் வழியாக வெளிப்பட வேண்டும். அதற்காகவே அவர் பிந்தினார். நோயிலிருந்து சுகப்படுத்தினால், இறப்பிலிருந்து உயிர்ப்பிக்கும் ஓர் இறைவனை எப்படிப் புரிந்து கொள்வது? அதனால்தான் தமது நண்பனின் உடல் மண்ணில் மட்கும்வரை ஆண்டவர் காத்திருந்தார். நாட்பட்டதும், மண்ணோடு மட்கியதும், அழுகி நாற்றமெடுப்பதுமான எதுவாயினும் அதனைப் புதுப்பித்துப் புத்துயிர் அளிக்க ஆண்டவர் வல்லவர். இதை நீங்கள் நம்புகிறீர்களா?

நீங்கள் நம்ப வேண்டும். உங்கள் காயங்கள் எத்துணைப் பழகியதாயினும், அழுகி நாற்றமெடுப்பனவாயினும், சீழ்வடிந்து கோரமுடன் காணப்படுவதாயினும் அஞ்ச வேண்டாம். ஏனெனில் ஆண்டவர் என்றும் வாழ்கிறார். எல்லாரும் உங்களைக் கைவிட்டு ஒதுங்கிக் கொண்டார்களா? இனிப் பரிகாரமே இல்லை என்று கைகழுவிக் கொண்டார்களா? கவலைப் படாதீர்கள். உங்கள் ஆண்டவர் ஒதுங்கி விடவில்லை. கைகழுவி விடவும் இல்லை.

உங்கள் வாழ்க்கைத் துணைவரின் மனமாற்றத்தை முன்னிட்டு நெடுங்காலம் ஜெபித்துத் தளர்ந்தீர்களா? அஞ்சாதீர்கள். எந்த ஜெபமும் வீண்போகும் என நினைக்க வேண்டாம். ஆண்டுகள் பனிரண்டோ, முப்பத்தியெட்டோ ஆகட்டும். ஆண்டவர் வருவார், உன்னை நலமாக்க…! ஒரு குழந்தைப் பேற்றுக்காக நூறாண்டுகள் காத்திருந்தவர்களின் வரலாறும் நம்மிடம் உண்டுதானே? அப்படிப்பட்டவரின் கடவுள் நானே என்றல்லவா கடவுள் தம்மைப் பெருமையுடன் வெளிப்படுத்துகின்றார்!

எவ்வளவுதான் முயன்று பார்த்தும் விடுதலை கிடைக்கவில்லையா? இனி வாழ்வே இல்லை என்று உடைந்து போனீர்களா? முடிந்தது என்று ஒதுங்கிக் கொண்டீர்களா? போதும் என்று கல்லறைக்கும் அடக்கமானீர்களா? உங்கள் ஊழியங்கள் தொய்ந்து போயினவா? பிறரது குற்றச்சாட்டுகளால் உள்ளம் குத்துண்டு விட்டதா?

கவலைப்படாதிருங்கள். கடவுள் இதையெல்லாம் முன்கூட்டியே கண்டபிறகுதான் உங்களை அழைத்தார். தம் பணிக்கென உங்களைத் தேர்ந்தார். நீங்கள் நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பீர்கள். அநேகருடைய அகக்கண்கள் திறக்கப்படுவதற்குக் கடவுள் உங்களைக் கருவிகளாக்கத் தீர்மானித்தார் என்பதை மறக்காதீர்கள். பெல்ஜியம் நாட்டு பியேரேவை மீண்டும் ஒருகணம் நினைத்துக் கொள்ளுங்கள்.

சவால் விடும் கடவுள்

கடவுள் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப கடவுளுக்கோர் வேள்வி சமைத்துக் காத்திருக்கும் ஆபிரகாமைப் பழைய ஏற்பாட்டில் தொடக்கநூல் 15:10 முதல் வாசிக்கிறோம்.

கடவுள் சொன்னவாறு எல்லாம் செய்துமுடித்த ஆபிரகாம், பீடத்தில் பலிமிருகங்களைக் கிடத்திக் கடவுளுக்காகக் காத்திருக்கிறார். மாலை வேளையில் பறவைகள் பிணம் தின்ன வந்தபோது ஆபிரகாம் அவற்றை விரட்டிவிடுகிறார். கடவுள் இனி வரவேமாட்டார் என நினைத்து அவர் சலிப்புடன் திரும்பிச் செல்லவில்லை. ஆண்டவருக்காகக் காத்திருக்கிறார். உறக்கம் கண்களைத் தழுவியபோதும் அவர் உறங்காமல் காத்திருக்கிறார்.

அச்சுறுத்தும் இருள் வந்தபோதும் அவர் அசரவில்லை; கலங்கவில்லை. கடவுளுக்காகவே காத்திருக்கிறார். இனி எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்ற வகையில் சூரியன் இருண்டபின்னும் ஆபிரகாம் ஒரு வெளிச்சக் கீற்றை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். ஆனால் இறுதியில் கடவுள் வந்தார். புகைந்த தீச்சட்டியும் எரிந்த தீப்பந்தமும் பாக்கியிருக்க, கடவுள் வந்து ஆபிரகாமின் பலியை ஏற்றுக்கொண்டார்.

தமது வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். “ஆண்டவருக்காகக் காத்திரு. அவர்தம் வழியைப் பின்பற்று. அப்பொழுது நீ நிலத்தை உடைமையாக்கிக் கொள்ளும்படி அவர் உன்னை உயர்த்துவார்” (திபா. 37:34).

உன் கடவுளுக்கு நீ மகிமையாக மாற வேண்டும். அதற்காக நீ துன்புறவும், இறக்கவும், அடக்கப்படவும், இறுதியில் மண்ணில் மட்கி அழியவும் தயாராக இருக்க வேண்டும். குறை கூறாமலும், புலம்பாமலும் அவருக்காகக் காத்திருந்தால் அவர் வருவது உறுதி. இதுவே கடவுள் உனக்கு விடுக்கும் சவால். 1தெச. 5:16-18 வரையிலான பகுதியில் நாம் வாசிப்பதுபோல அவரைப் போற்றிப் புகழ்ந்து அவருக்காகக் காத்திருக்க வேண்டும். உன்னைப் பார்த்து அவர் பெருமைப்பட வேண்டும். “இன்னல்கள் பல உற்றபின்னும் வேதனையே உணவாக மாறியபோதும் என்னைவிட்டு நீங்காத என் அன்பன்” என அவர் சொல்ல வேண்டும்.

“நான் வெற்றிபெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றிபெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன். கேட்கச் செவியுடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்” (தி.வெ. 3:21-22).

-ஆன்சிமோள் ஜோசப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *