வான்வீட்டின் தூதர் புனித பெத்ரோ போத்திஸ்தா

“இந்த சங்கத்தில் இணைய உங்களில் யாரேனும் விரும்புகிறீர்களா? இதனுடைய கேப்டன் கிறிஸ்து. புனித பிரான்சீஸ் இதனுடைய தளபதி. போர் மூண்டு விட்டது. சாத்தானுக்கு எதிரான பயங்கர போர். ஒப்பற்ற மகத்துவம் சம்பளமாகத் தரப்படும்.” மிகப்பெரிய சொற்பொழிவாளராக இருந்த தந்தை பெத்ரோ போத்திஸ்தா பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மனிலாவில் நடத்திய சொற்பொழிவின் ஓரிரு வரிகள் இவை. அவருடைய நெருப்புமிழும் சொற்பொழிவினால் ஈர்க்கப்பட்ட ஏராளம் இளவட்டங்கள் பிரான்சிஸ்கன் சபையில் வந்து சேர்ந்தார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்காக அயராமல் உழைத்த இம்மிஷனறி குருவானவரை, போர்ப்பதற்றம் நிலவியிருந்த சூழலில் கவர்னர் ஜெனரல் ஜப்பான் நாட்டு தூதுவராக அனுப்பினார். அங்கு சென்ற பெத்ரோ சமாதானத்தை நிலைநாட்டியதுடன் கிறிஸ்தவ விசுவாசத்தையும் அம்மண்ணில் வேரூன்றி வளரச் செய்தார்.
1542 -ல் ஸ்பெயினில் உள்ள ஒரு செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் போத்திஸ்தா பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே பிற சிறுவர்களைக் காட்டிலும் வேறுபட்ட முறையில் வளர்ந்து வந்தார்.

விளையாட்டுகளை விட கோவிலுக்குச் செல்வதையும் பீடத்தில் ஊழியம் புரிவதையும் மேலாகக் கொண்டார். இவர் தமது மேற்படிப்பை முடித்துவிட்டு பிரான்சிஸ்கன் சபையின் அங்கமானார்.
ஜப்பானுக்குச் சென்ற இவர் கிறிஸ்துவை அங்குள்ளவர்களுக்கு எடுத்துக்கூறி கிறிஸ்தவ மறையைத் தழைத்து வளரச் செய்தார். இதனால் பலர் திருமுழுக்குப் பெற்றனர். ஆனால் நாளடைவில் கிறிஸ்தவ மிஷனறிகள் ஜப்பான் மத குருக்களின் வெறுப்புக்கு உள்ளாயினர். அவர்கள் மன்னர்களிடம் நற்பெயர் பெற்றிருந்தமையால் அவர்களின் உதவியுடன் கிறிஸ்தவ மிஷனறிமார்களைச் சிறையில் அடைத்தனர். கொடூரமாகத் தண்டிக்கவும் தலைப்பட்டனர்.

பெத்ரோ முதலான மிஷனறிமார்களின் காதுகளை அறுத்த ஜப்பான் சேனை, அவர்களை ஊர்வலமாக அழைத்துச்சென்று இழிவு படுத்தினர். இதனால் கிறிஸ்தவர்கள் அச்சத்திற்கு உள்ளாயினர். எனினும் கண்ணீர் விட்டு அழுத விசுவாசிகள் மிஷனறிமார்களின் ‘சிலுவைப்பாதையை’ வீறுடன் பின்பற்றி நடந்தனர். எனவே தங்களை இழிவு படுத்துவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம்கூட விசுவாசிகளை உறுதிப்படுத்துவதற்காக மாற்றிக் கொண்டனர்.

நாகாசாக்கி என்னுமிடத்தில் வைத்து 26 மிஷனறிகளை அவர்கள் சிலுவையில் அறைந்து, ஈட்டியால் குத்தி சித்திரவதை செய்து கொன்றனர். புகழ்கீதம் பாடிக்கொண்டே 26 பேரும் கிறிஸ்துவிடம் பயணமாகினர். கிறிஸ்துவுக்காக வீரமரணம் வரித்த போத்திஸ்தா மற்றும் ஏனையோரை 1862 -ல் திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.

ரஞ்சித் லாரன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *