நட்சத்திர மீன்கள்

கடலலைகள் சொல்லும் கதைகள் ஏராளம். அக்கதைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாகக் கேட்ட வண்ணம் அவர் கடற்கரை வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது சொக்காய் அணிந்த ஒரு பையன் கடற்கரையில் ஒரு விபரீத விளையாட்டை விளையாடிக்கொண்டிருப்பதை அவர் கண்டார்.

அவனுடைய தோற்றத்தில் அவன் எப்போதுமே பள்ளிக்கூடம் சென்றவனாகத் தெரியவில்லை. அந்தச் சின்னப் பையன் கரையில் கிடந்த சிலவற்றையெல்லாம் எடுத்து கடலில் ஓயாமல் எறிந்துகொண்டே இருந்தான். சீரிய இயற்கை ஆர்வலராகிய அந்த வழிப்பயணிக்கு அது பிடிக்கவில்லை. கரையில் கிடக்கும் கல்லு மல்லுகளைப் பொறுக்கிக் கடலில் வீசினால் கடலின் சுத்தம் கெட்டுப் போகுமே என ஆதங்கப்பட்ட பயணி பையனிடம் வந்து, என்ன செய்கிறாய் நீ? எனக் கேட்டார்.

ஐயா, என் கையில் இருக்கும் இந்த நட்சத்திர மீனைப் பார்க்கவில்லையா? இது தண்ணீர் கிடைக்காமல் மூச்சு முட்டுகிறது. ஒவ்வொரு திரையிலும் இப்படி நூற்றுக் கணக்கான நட்சத்திர மீன்கள் கரையில் உந்தித் தள்ளப்படுகின்றன. அப்புறம் நீர் கிடைக்காமல் அவை பிடைத்துச் சாகின்றன. நான் முடிந்தவரை அவற்றை அள்ளி எடுத்து கடலில் விட்டுக் கொண்டிருக்கிறேன்.

அதற்கு அப்பயணி அவனிடம், இந்தக் கடற்கரையில் உந்தித் தள்ளப்படும் கணக்கற்ற நட்சத்திர மீன்களையும் உன்னால் காப்பாற்ற முடியுமா என்ன? நீ காப்பாற்ற முடியாத எத்தனையோ நட்சத்திர மீன்கள் கரையிலே துடித்துச் சாகின்றன. அப்படியென்றால் ஏன் இந்த வீண் வேலையை நீ செய்ய வேண்டும்? எனக் கேட்டார்.

அப்படியல்ல; ஒரே ஓர் நட்சத்திர மீனைத்தான் என்னால் காப்பாற்ற முடிந்தாலும் சரி, அந்த ஒன்றாவது பிழைத்ததே என்ற ஆத்ம திருப்தி எனக்கு உண்டு.

ஆம் அவன் சொன்னது உண்மை. உலக ஞானத்தை விட பரலோக ஞானம் அப்பையனில் அதிகம். ஒரே ஒரு நட்சத்திர மீனுக்காவது உயிர் கொடுக்க அவனால் முடிகிறது. ஒவ்வொன்றும் உயிர்பெற்று மீளும்போது அவனது ஆவேசமும் அதிகரித்தவண்ணம் இருந்தது.

-ஜோண் தெங்கும்பள்ளில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *