நமக்குமுன் உள்ள லாசர்களைக் கண்டுபிடிக்கவும் உதவி செய்யவும் விரும்புகின்ற பணக்காரர்களாய் மாறுவதற்கான ஓர் அறைகூவல்.
சில வருடங்களுக்கு முன்னால் திடீரென ஒருநாள் எனக்கு நடப்பதற்கு முடியாமற் போயிற்று. மருத்துவப் பரிசோதனையில் பக்கவாதம் தொடர்பான ‘ஃபிரீசிங் கேட்’ என்னும் ஒரு நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் மும்பை வீதிகளைச் சுற்றிவந்த என்னை இந்நோய் ஓர் அரக்கனைப் போல் வந்து அச்சுறுத்தியது. இனிமுதல் பிறரது உதவியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என நினைத்தபோதே நான் சோர்ந்து போனேன்.
என் உறவினர்கள் யாருக்குமே இத்தகைய நோய் ஏற்பட்டதில்லை. நோய் பற்றி மேலும் அறிய விரும்பினேன். இதனால் கேரளத்திலுள்ள பிரசித்திபெற்ற மருத்துவர்களை அணுகினேன். அவர்களும் மும்பை மருத்துவர்களின் கணிப்பையே அசைபோட்டனர். நான் ஒரு நோயாளி என்ற உண்மை என்னைச் சுட்டது. இது என் ஆணவப் போக்கிற்குக் கிடைத்த சரியான பதிலடி என்பதை உணர்ந்தேன்.
வயது, வேலை, அந்தஸ்து எதையும் பொருட்படுத்தாமல் நோய்கள் தாக்கும் என்ற உண்மையை அப்போதுதான் உணர்ந்தேன். இந்நோய் கடவுளின் திருவுளம் என்பதை அறிந்து ஏற்பதற்கு நெடுநாட்கள் தேவைப்பட்டன. இதற்குச் சில வேத வசனங்கள் எனக்கு உதவின. ‘ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை” (தி.பா. 23:1). “உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும். அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல என்கிறார் ஆண்டவர்” (எரே. 29:11).
இது எப்படி நன்மையாகும்?
ஒரு வியாதி எனக்கு நன்மையாவது எங்ஙனம்? கடவுள் ஏன் இப்படிப்பட்ட ஒரு நோயினால் தண்டித்தார்? போன்ற எண்ணங்களால் என் நெஞ்சம் நிலைகுலைந்தது. நாம் அனைவருமே குயவனின் கையில் இருக்கும் களிமண்தான். களிமண் தன்னை வனைபவனிடம் ஏன் இப்படி எனக் கேட்கக் கூடுமோ?
நான் முற்காலங்களில் என் பிள்ளைகளுக்குக் கற்றுத்தந்த விசுவாசம் எங்கே? “அமைதியாய் இருங்கள்; நானே கடவுள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்னும் திருப்பாடல் வரிகள் என்னைத் தேற்றியது. இவை அனைத்தும் எனது ஆன்ம ஈடேற்றத்திற்கானவையே; உடல் நலத்திற்காக அல்ல என்னும் உண்மையை மெல்ல மெல்ல உணர்ந்தேன்.
சில நாட்களுக்கு முன் எங்கள் பங்குத் தந்தையின் மறையுரை கேட்டேன். ‘பணக்காரனும் லாசரும்’ என்ற உவமையை அடிப்படையாகக் கொண்டு அவர் பேசினார். யார் இந்த பணக்காரன்? யார் இந்த லாசர்? நாள் பூரா பட்டினி கிடப்பவனும், கடைவீதிகளில் படுப்பவனும், உடுக்கத் துணியில்லாதவனும்தான் லாசர் என்று தப்பாக நினைத்து விடாதீர்கள். பிறரது உதவியின்றி ஏதும் செய்யமுடியாத ஊனமுற்றவர்கள் லாசர்களே. பண உதவிக்காக அல்லது கடனுக்காக வங்கிகளிலும் அரசு அலுவலகங்களிலும் ஏறியிறங்கும் பாவப்பட்ட மக்களும் லாசர்களே. ஏன் சாலையைக் கடக்கக் கஷ்டப்படும் பார்வையில்லாத மனிதன்கூட லாசர்தான். நம்மைச் சுற்றிலும் இப்படி எத்தனையோ லாசர்கள் இருக்கிறார்கள்!
ஆடம்பர மாளிகையின் பட்டு மெத்தைகளில் உருள்பவன் மட்டும்தான் பணக்காரன் என்று நினைக்காதீர்கள். மனத்தளவில் சோர்ந்துபோய் இருப்பவர்களையும் உதவிக்காக அலைபவர்களையும் அபலைகளையும் அகதிகளையும் கண்டும் காணாமல் போகிறார்களே அவர்கள் எல்லாரும் பணக்காரர்கள்தான். பிறருடைய கண்ணீரைத் துடைக்கவும், பிறரது காயங்களில் ஒத்தடமிட்டு மீட்கவுமே கடவுள் பணக்காரர்களை ஓகோ என வைத்திருக்கிறார். இறுமாப்புடன் பார்க்கும் பார்வை, அலட்சியமான மறுமொழி, தேவையில் வாடுவோர் மட்டில் அசட்டை இப்படிப்பட்ட இயல்புடையோர் அனைவரும் பணக்காரர்களின் பட்டியலில் வருகிறார்கள். எனது ‘இலாசர்’ நிலைமையில் மருத்துவர்களைச் சந்திக்கவும், கோவில்களுக்குச் செல்லவும் உதவக்கூடிய ஏராளம் பணக்காரர்களைத் தந்து கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார். எனது வாழ்க்கையில் என் குடும்பத்தாரும் நண்பர்களும் பணியாட்களுமே என் ‘பணக்காரர்கள்’.
திருப்பலியின் போது நடைபெறும் விசுவாசிகளின் மன்றாட்டில் நான் எனது பணக்காரர்களை ஒப்புக்கொடுத்து அவர்களுக்காக ஜெபிக்கிறேன். தேவநற்கருணையை எனது வீட்டுக்கே கொண்டுவந்து கொடுக்கும் குருவானவர்களையும் அருட்சகோதரிகளையும் நான் நன்றியுடன் நினைவுகூர்ந்து அவர்களுக்காக ஜெபிக்கிறேன். மேலும், எல்லா மாலைப் பொழுதுகளிலும் கடவுள் என்னைப் பராமரிக்கும் கருணையை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.
நன்மையாகும் வழிகள்
ஒருவரின் துயர்தோய்ந்த உள்ளத்திற்கு மருந்து இறைவேண்டல் மட்டுமே. ஆதலால் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களும் இடையூறுகளும் ஒருவரை ஜெபவாழ்வுக்கு இட்டுச் செல்கின்றன. துன்ப துயரங்கள் நம்மை சோர்வடையச் செய்தாலும் அவற்றைக் கடவுளுக்கே விட்டு விட்டால் அவர் அவற்றை ஏற்றுக் கொண்டு நம்மை வலிமைப்படுத்துவார். நம்மால் சுமக்க முடியாத துன்பங்களைக் கடவுள் நமக்கு அனுமதிப்பதில்லை. துன்பம் வரும்போது அவற்றைத் தாங்கிக் கொள்ளும் மனத்திட்பத்தையும் அவரே அருள்கின்றார். “என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” (2கொரி. 12:9) என்ற வசனத்தால் வரும் ஆறுதல் சொல்லுந்தரமன்று. முற்காலங்களில் நான் ஜெப வாழ்க்கையில் ஆழப்படவில்லை. ஆனால் இப்போது ஜெபமே எனது பெரிய ஆயுதம்.
நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அரு. தந். மைக்கிள் இ. கெய்டலி என்னும் குருவானவர் எழுதிய “33 நாள் காலைத்துதி” என்ற நூலை வாசிக்க நேர்ந்தது. அதில் புனித லூயிஸ் தே மோன்போர்த்து என்பவர் அன்னை மரியா நம்முடைய வேண்டுதல்களைத் தேவைப்படுபவர்களுக்காகப் பகிர்ந்தளிக்கிறாள் என்னும் செய்தியைக் கூறுகிறார். நாம் நமது பெற்றோர் மற்றும் உற்றாருக்காகச் செய்யும் வேண்டுதல்களின் ஒரு பகுதியை உலகத்தில் அறியப்படாத மனிதர்களுக்காகக் காணிக்கையாக்குகிறாள்.
நமது அன்புக்குரியவர்களுக்காக நாம் செய்யும் ஜெபங்கள் இப்படித் திருடப்பட்டால் நம்மவர்களுக்கு இழப்பாகாதா என நாம் எண்ணக்கூடும். அதை எண்ணிக் கலங்க வேண்டாம். நம்மவர்களின் நன்மைக்காக அன்னை மரியாவின் உதவி எப்போதும் உண்டு.
எனது சிகிச்சையின் ஒருபகுதி யாக தென்கொரியா நாட்டை மையப்படுத்திச் செயல்படும் ஒரு அமைப்பின் இயன்முறை மருத்துவ அமர்வில் நான் கலந்து கொண்டேன். அங்குள்ள சிகிச்சையின் சிறப்பு என்னவென்றால் கடவுளை நம்பி நன்மை செய்ய வேண்டும் என்பதுதான். நாம் நம்முடைய இயலாமைகளையோ, நோய் நொடிகளைப் பற்றியோ அதிகமாகச் சிந்திக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளுக்குரிய நன்மையை மட்டும் எண்ணி நல்ல பிரதிக்கனைகளுடன் வாழ வேண்டும்.
இந்த லாசர் சொல்வதெல்லாம்…
‘நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை’ என்னும் பழமொழியை மனத்திலிருத்தி, ‘காலம் பொன் போன்றது’ என்னும் பொன்மொழிக்கேற்ப வாழுங்கள். எந்த நன்மையாகிலும் அதை இன்றே செய்யுங்கள். ஒரு நண்பரைத் தொலைபேசியில் அழைக்கவோ அல்லது ஒரு நோயாளியைச் சந்திக்கவோ உள்ளுணர்வு ஏற்பட்டால் சற்றும் காலம் தாழ்த்தாதீர்கள். நமது பேச்சோ பிரசன்னமோ எதுவாயினும் பிறருக்கு உந்துசக்தியாக இருக்கட்டும்.
நெடிய ஏழாண்டுகளுக்குப் பின் சில நண்பர்களை எதிர்பாராமல் பார்க்க முடிந்தது. அது மிகவும் மகிழ்ச்சிக்கு உரியது. நோயாளிகளைப் பார்க்கச் செல்பவர்கள் ஒருபோதும் அவர்களுடைய நோய்களைப்பற்றி அவர்களின் பக்கத்தில் இருந்து பேசக்கூடாது. இது நோயாளியின் மனத்தைப் புண்படுத்துமாகையால் இவற்றைத் தவிர்ப்பது நலம்.