நட்சத்திரங்கள் கட்டுவதெங்கே?

அபிஷேக் தொலை தூரங்களை வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருந்தான். அப்போது ஆனந்த் அண்ணன் அந்தப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தான். அபிஷேக் கலக்கமாய் இருப்பதைக் கண்ட ஆனந்த் அபிஷேகிடம் ஏன் இப்படி வாளா உட்கார்ந்திருக்கிறாய்? எனக் கேட்டான். அப்போது அபிஷேக் மனம் திறந்தான்.

நாங்கள் புதுவீடு கட்டத் தொடங்கி ஆண்டுகள் பல கடந்தன. நான் நான்காம் வகுப்பில் படிக்கும்போது தொடங்கிய வீட்டுவேலை இப்போது எட்டாம் வகுப்பான போதும் முடியவில்லையே. அப்பாவுக்கு எப்போதாவதுதான் வேலை கிடைக்கும். அம்மாவுக்கும் அப்படித்தான். பிறகு எப்படி வீடுகட்டுவதற்கான காசு சேரும்? வீட்டுக்குக் கூரை உண்டு. அவ்வளவுதான். மற்றபடி எந்த அழகும் இல்லை. இந்த வீட்டை நினைத்தால் எனக்கு வெட்கமாய் இருக்கிறது.

ஆனந்த் ஒரு நிமிடம் மௌனமாய் நின்றான். பிறகு, அபிஷேகிடம் “நீ ஜெபிப்பது இல்லையா?” எனக் கேட்டான்.
“ஆம் அண்ணா. நான் தினமும் கடவுளிடம் ஜெபிக்கிறேன்” அபிஷேகின் பதில்.

ஆனால் ஒன்று சொல்லட்டுமா? கடவுள் இயேசுவில் மனிதராக வந்தபோது ஒரு மாட்டுத் தொழுவில் தான் பிறந்தார். ஆதலால் அந்த இயேசு உன் கஷ்டங்களை அறிவார். மட்டுமல்லாமல் வீட்டின் உயரத்தில் அல்ல; வீட்டிலுள்ளவர்களின் உயரம்தான் பெரிதெனக் கடவுள் நமக்குக் கற்றுத் தருவார். அப்போது உனது கவலைகள் அனைத்தும் நீங்கும்.

ஏதோ ஒரு புதிய ஞானம் பிறந்தது போல் அபிஷேக் ஆனந்த் அண்ணனை ஏறிட்டுப் பார்த்தான். தன்னம்பிக்கையோடு அவன் ஆனந்த் அண்ணனை நோக்கிப் புன்னகைத்தான். அப்போது ஆனந்த் இவ்வருடக் கிறிஸ்துமஸ் பரிசாக ஏழை ஒருவருக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டுமென்ற பங்குத்தந்தையின் வேண்டுகோளை நினைவு கூர்ந்தான். பங்குத் தந்தையிடம் அபிஷேகின் நிலைமையை எடுத்துக் கூறி அதை அபிஷேகிற்கே வழங்குவது எனத் தீர்மானித்தான்.

அப்போது ஆனந்தை நோக்கிப் புன்னகைத்த அபிஷேகின் கண்களில் விண்மீன்கள் பூத்தன. அதுவே தான் கட்டிய நட்சத்திரங்கள் என ஆனந்த் நினைத்துக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *