அமெரிக்காவில் உள்நாட்டுக் கலகம் மூண்டெழுந்த காலம். போர்க்களத்தில் வில்லியம் ஸ்கோட் என்னும் படைவீரர் உறங்கிவிட்டார். விழிப்புடன் இருந்து காவல் தொழிலைச் செய்யவேண்டிய படைவீரர் உறங்கிவிட்டால் பகைவர் உள்ளே நுழைவது எளிது. ஒரு தனிநபரின் பொறுப்பற்ற தன்மையால் ஒரு தேசமே அழிந்துவிடலாம். இது ஒரு பயங்கரமான குற்றம். இதனால் இராணுவ நீதிமன்றம் போர்க்களத்தில் உறங்கிய வீரருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. எனினும், அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் அவ்வீரர் மட்டிலும் இரக்கம் கொண்டார். நேரடியாகச் சென்று ஆறுதல் கூறியதுடன், தமது தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மரணதண்டனை விதிக்கப்பட்ட அவ்வீரரை விடுவிக்கவும் செய்தார். பிறகு அவரிடம், ‘மரண தண்டனைக்கான குற்றம் எதுவும் நான் உன்னிடம் காணவில்லை. ஆயினும் நீ எனக்காக ஒன்று செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.
‘ஐயா, உமக்காக நான் என்ன செய்ய வேண்டும்?’ என வினவிய அவ்வீரரிடம், ‘நீ இந்நாட்டுக்காக இன்னும் தீவிரமாய்ப் போராட வேண்டும். அது ஒன்றே எனக்குப் போதும்’ என்றார் அதிபர் லிங்கன்.
தண்டனைக்குத் தப்பிய வில்லியம் மீண்டும் தம் அலுவலில் நுழைந்தார். சில மாதங்களுக்குப் பின் போர்க்களத்தில் சுடப்பட்டு நிலத்தில் சாய்ந்தார். தமது உயிர் பிரியுமுன் அதிபர் லிங்கனிடம் சொல்லும்படி அவர் கேட்டுக்கொண்டது இதுவே : “வில்லியம் ஸ்கோட் வாக்குத் தவறவில்லை என மட்டும் சொல்லுங்கள்”.
பாவத்தால் நாம் அனைவரும் செத்தவர்கள். ஆயினும் கருணைக் கடலாகிய கடவுள் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மீண்டும் ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்கினார். நாம் அந்த வாழ்க்கைக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோமா? நமது பிழைகளை அன்றாடம் பொறுத்துக்கொண்டு புதுப்புது வாய்ப்புகளை நமக்கருளும் கடவுளுக்கு நாம் பிரமாணிக்கமுடன் இருக்கிறோமா? ஒருவரின் ஆன்மீக வாழ்வுக்கும் பிரமாணிக்கமுடன் இருப்பதற்கும் இடையில் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.
பிரமாணிக்கம் தவறியதால்தான் சவுல் இறந்தார். கடவுளுக்கே பிரமாணிக்கமில்லாதவர்கள் மனிதர்களிடமும் பிரமாணிக்கம் தவறிநடப்பதால் அவர்களுக்குப் பெரிய மனக்குத்தல் ஒன்றும் ஏற்பட்டு விடுவதில்லை. அதுபோலவே, கடவுள் நம்மை அழைத்து வேறுபடுத்தி வைத்திருக்கும் இடங்களோடும் மனிதர்களோடும் பிரமாணிக்கமாய் இருக்காவிட்டால் கடவுளுக்கும் பிரமாணிக்கமாய் இருக்கமாட்டோம். கடவுள் தமது வாக்குறுதிகளில் எப்போதும் பிரமாணிக்கமானவர். அதையே அவர் தமது மக்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறார்.
பிரமாணிக்கம் என்பது தூய ஆவியின் கனிகளில் ஒன்று. கடவுளின் ஆவியார் ஒருவரிடம் வந்து குடிகொள்ளும் போது அவருடைய ஆளுமையில் ஏற்படும் ஒரு நற்பண்பே பிரமாணிக்கம். இறைவனின் அழைப்பு, திருச்சபை, குடும்பம், வேலை பார்க்கும் நிறுவனம் போன்ற அனைத்துடனும் பிரமாணிக்கமாய் இருக்க தவறியவர்களில் தூய ஆவியின் முழுமையை எதிர்பார்க்க முடியாது. பிரமாணிக்கம் என்னும் புண்ணியம் இல்லாதவர்கள் நம்பத் தகுந்தவர்களே அல்ல. நம்ப முடியாத ஒருவரிடம் கடவுள் எப்படி தம் அலுவலை ஒப்படைப்பார்?
பொருளாதார விவகாரங்களில் நம்பகமல்லாதவர்களும், ஒப்படைத்த காரியங்களில் உண்மையில்லாதவர்களும் தனிநபர் உறவுகளில் ஊறுவிளைவிப்பவர்களும் ஜெபவாழ்வில் வளர நினைத்தால் வெற்றிபெறப் போவதில்லை. மீறப்பட்ட உடன்படிக்கைகளின் பலிபீடங்களை மீண்டும் கட்டி எழுப்பினாலொழிய விண்ணிலிருந்து தீ இறங்கி நம் பலிகளை ஏற்கப் போவதில்லை. ஆகவே இப்போது ஜெபிப்போமா?
பிரமாணிக்கம் தவறாத இறைவா, நம்பகமின்மை என்பது வலுவின்மையின் ஒட்டுமொத்த அடையாளம் என்பதை நாங்கள் அறியுமாறு செய்தருளும். நாங்கள் உம் திருமுன்னால் செய்துகொண்ட உடன்படிக்கைகளை ஒருபோதும் மீறாதிருக்க நீர் எங்களை வலுப்படுத்தியருளும். பிரமாணிக்கமில்லாமல் நாங்கள் நடந்த நிமிடங்களைக் கண்டுணரவும், அவற்றை எண்ணி மனம்வருந்தவும் நீர் எங்களை ஆசீர்வதித்தருளும். நாங்கள் பிரமாணிக்கம் தவறியபோதும் எங்களோடு பிரமாணிக்கமாய் இருந்த கடவுளே, இனி எங்களின் இறுதி மூச்சுவரை உம்மோடு ஒன்றி வாழ நீர் உமது அருளைத் தாரும். ஆமேன்.
– ஷெவலியார் பென்னி புன்னத்தறா