அந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கிறதா?

இத்தகைய வினாக்களை எழுப்பவும் அதற்குப் பதில்தரவும் நம்மால் முடிந்தால் நாம் உண்மையான கிறிஸ்து சீடர்களாய் மாற முடியும்.

 

அன்று நகரமெல்லாம் ஒரே களபரம். எங்குமே விழாக்கோலம். பல சாலைகளிலும் வாகனங்களுக்குத் தடை. சற்றுநேரம் மவுனமாய் மனம் திறக்க ஆண்டவரின் கோவிலுக்குச் சென்றேன். அக்கோவில் நகரத்தின் நடுவில் இருந்தது. மனம் லேசானது உள்ளம் புன்னகைத்தது.

அப்போதுதான் நெஞ்சில் பொறி தட்டியது, இன்று வீட்டுக்குத் திரும்பிச் செல்ல ஆட்டோ கிடைக்காது என்று. உடனே அங்கிருந்து எழுந்தேன். ஆண்டவரே எப்படியாவது ஓர் ஆட்டோ கிடைக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் வேக வேகமாய் வெளியே வந்தேன். அப்போது கோவிலில் இருந்து வெளியே வந்த இன்னொருவர் முற்றத்தில் நிறுத்திப் போட்டிருந்த ஓர் ஆட்டோவில் ஏறி ‘ஸ்டார்ட்’ செய்வதைக் கவனித்தேன். வேகமாய்ச் சென்று என்னையும் கூட்டிச் செல்லலாமா என அவரைக் கேட்டேன். அவர் என்னிடம் எங்கே போக வேண்டும் எனக் கேட்க, நானும் இறங்க வேண்டிய இடத்தைச் சொன்னேன். அவரும் அவ்வழியேதான் போகவிருப்பதால் என்னையும் தமது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார்.

ஆட்டோ முன்னோக்கி நகர்ந்தது. மெல்ல பேச்சுக் கொடுத்தேன். ‘உங்கள் பெயர் என்ன? எங்கே போகிறீர்கள்?’ அவர் மறுமொழியாக, ‘என் பெயர் கிருஷ்ணன் குட்டி. இப்போது வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்’ என்றார்.
சற்றே வியப்புடன், ‘கிருஷ்ணன் குட்டி எங்களுடைய கோவிலில் இருப்பதைப் பார்த்தேன்’ என்றேன். அதற்கு அவர், ‘மற்றக் கடவுள்களைப் போல் அல்ல உங்கள் கடவுள்’. அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். நான் அடிக்கடி இவ்வாலயத்திற்கு வந்து ஜெபிப்பது உண்டு. அப்போதெல்லாம் மனமகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைப்பதும் உண்டு. இதுவரை என்னவெல்லாம் கேட்டிருக்கிறேனோ எல்லாவற்றையும் பெற்றிருக்கிறேன்’ என்றார். வெகு பவ்யமாக நான் மீண்டும் அவரிடம், கிருஷ்ணன்குட்டி எதாவது தியானத்திற்கு போயிருக்கிறீர்களா?’ எனக் கேட்டேன்.

அவர், “சிறிது நாட்களுக்கு முன்தான் ஒரு தியானத்திற்குச் சென்றேன். எனக்கு ரொம்ப பிடித்துப்போன தியானம். தியானம் முடிந்து கிளம்பும் போது ஒருவர் என்னிடம், ‘கிருஷ்ணன் குட்டி வசனம் ஏராளமாக வாசிக்க வேண்டும்’ எனக்கூறி அனுப்பினார். நானும் வீட்டுக்கு வந்த கையோடு எங்காவது ‘வசனம் கிடைக்குமா என விசாரித்தேன். யாரிடமும் வசனம் இல்லை’. ஒரு பிரபலமான புத்தகக்கடையிலும் சென்று ‘வசனம்’ என்ற புத்தகம் இருக்கிறதா எனக் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் எங்களிடம் ‘வசனம்’ இல்லை என்று கையை விரித்தார்கள். இனி இந்த ‘வசனம்’ எங்கே கிடைக்குமெனத் தெரியாமல் தவிக்கிறேன்” எனக் கூறி முடித்தார்.

கிருஷ்ணன் குட்டி பேசுவதை நான் ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். என் வீடு நெருங்கிக் கொண்டிருந்தது. இறங்குமிடத்தை அடைந்ததும், “இது தான் என் வீடு. கிருஷ்ணன் குட்டி கொஞ்சம் இருங்கள்” எனச் சொல்லி விட்டு நான் வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டிற்குள் சென்று, புதிய ஏற்பாட்டின் ஒரு கையடக்கப் பதிப்பைக் கொண்டு வந்து கிருஷ்ணன் குட்டியிடம் கொடுத்தேன். “நண்பா, இது தான் நீங்கள் தேடிய வசனம்” இதை விடாமல் வாசியுங்கள் எனக் கூறினேன். அவர் அதை ஆவலுடன் வாங்கி ஆட்டோவின் முன்பக்கத்திலே வைத்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கிறேன் என்றார்.

மூன்று வடிவங்கள்

இன்னொரு நாள் நான் ஒரு திருமண விருந்துக்குச் செல்வதற்காக சாலையில் ஆட்டோவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிக்கொண்டேன். ஏறியவுடன், ஆட்டோவின் முன்பக்கத்துச் சட்டத்தில் மூன்று இறைவடிவங்களைக் கண்டேன். மூன்று வடிவங்களும் ஒரே நேர்கோட்டில், ஒரே சட்டகத்தில் இருக்கும்படி வைக்கப்பட்டிருந்தது. அதுபோன்ற வடிவங்களை பல ஆட்டோக்களிலும் பேருந்துகளிலும் பார்க்க முடியும்.

ஆட்டோவை ஓட்டிய தம்பியிடம் ‘படங்கள் நன்றாக இருக்கின்றனவே. இவர்கள் யார் யார்?’ எனக் கேட்டேன். அந்தத் தம்பியும் மகிழ்ச்சியாக அவர்களின் பெயர்களைச் சொன்னான். அப்போது நான் அவனிடம், ‘தம்பி, இயேசுவை விடப் பெரியவர் இதுவரை உலகில் பிறக்கவில்லை’ என்றேன். மேலும், இயேசுவின் பிறப்பு, பாடுகள், மரணம், உயிர்ப்பு போன்ற அனைத்தையும் நான் அவனுக்கு எடுத்துரைத்தேன். அவனும் மிகுந்த பொறுமையுடன் கவனமாகக் கேட்டான். நான் இறங்குமிடம் வந்தது. அங்குள்ள ஓர் ஆலய மண்டபத்தில்தான் திருமண விருந்து. ஆட்டோவை நிறுத்தி கீழே இறங்கினேன். மறுபடியும் பார்க்கும்போது மீதியைப் பேசுவதாகச் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

விருந்து முடிந்தது. மீண்டும் வீட்டுக்குச் செல்ல ஓர் ஆட்டோவுக்காகக் காத்திருந்தேன். ஆட்டோ ஒன்று வந்தது. கைகாட்டி அதில் ஏறினேன். பார்த்தால் நான் வந்த அதே ஆட்டோ. அதே தம்பி, அதே கடவுள்கள். இதுதான் ‘தெய்வ நிச்சயம்’ என்றான் அத்தம்பி. எங்கே முடித்தோமோ அதிலிருந்து மறுபடியும் ஆரம்பித்தோம். அவன் என் பேச்சுக்குக் கவனமுடன் செவிகொடுத்தான். என் இடமும் வந்தது. அப்போது என் மனம் சொல்லியது ; உண்மைதான் ; கடவுள் ஏராளம் வாய்ப்புகள் அளிக்கிறார்…!

– கே.சி. தொமினிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *