இயேசுவின் கை வண்ணத்தாலான ‘சிக்கன்ஃப்றை’

ஆண்டவர் எவ்வளவோ நல்லவர் என்பதைச் சுவைத்தறிந்த ஓர் இரவின் அனுபவ நினைவுகள்.

 

2010 செவிலியர் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக அலைந்து திரிந்த காலம். சவுதி நாட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிந்தேன். வேலைக்குச் சேர வேண்டும் என்ற அவசரத்தில், கடவுளிடம் கூட ஆலோசனை கேட்காமல் சவுதிக்குச் செல்ல ஆயத்தமானேன். ஆனால் என் பெற்றோர் அதற்கு அனுமதி தரவில்லை. அவர்களது எதிர்ப்பையும் மீறி சவுதிக்குச் செல்லத் தயாரானேன்.

சவுதிக்குச் செல்வதற்கு நான் காட்டிய அவசரத்தை பலரும் எதிர்த்த படியால் நானும் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினேன் எதற்கும் ஒரு குருவானவரிடம் சென்று யோசனை கேட்கலாம் என நினைத்து பங்குத் தந்தையிடம் சென்றேன். அவர் எனக்காக இறைவேண்டல் செய்தார். பிறகு என்னைப் பார்த்து, “மகனே, நீ ஒர் அறையில் தன்னந்தனியாக இருந்து அழுவதைக் கடவுள் எனக்குச் சுட்டிக்காட்டுகிறார்” என்றார். ஆனால் நான் அவருடைய ஆரூட தரிசனங்களையும் பொருட்படுத்தவில்லை.

நான் எப்போது சவுதிக்குச் செல்லத் திட்டமிட்டேனோ அப்போதிலிருந்தே என் வாழ்க்கையில் ஏராளமான சங்கடங்கள் இடையீடுகளாக வரத் தொடங்கின. தொட்டதெல்லாம் துலங்காமற்போயின. மாதங்கள் சில சென்ற பின்னும் விசா வந்தபாடில்லை. கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு தான் “விசா” கிடைத்தது. இப்படி, ஒரு வழியாக சவுதி நாட்டை அடைந்த போது தான் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னவர்களின் மோசடி புரியவந்தது. சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் “நர்சிங் விசா” எடுத்துச் சென்ற என்னை அவர்கள் பந்தைப் போல உருட்டி விளையாடினர்.

நிலையான ஒரு தங்குமிடம் எனக்குத் தரவில்லை. இன்று ஓரிடம், நாளை இன்னோரிடம் என மாறி மாறித் தங்க வைத்தனர். பல நாட்கள் வேலை இல்லை. அறையில் வெட்டியாக உட்கார்ந்திருந்தேன். என்னை வேலைக்குச் சேர்ப்பதாக வாக்களித்த மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் அப்போதுதான் நடந்து கொண்டிருந்தன. உண்மையில் நான் அதிர்ச்சியில் உறைந்தேன். சூழ்ச்சிகள் ஏமாற்றுகள், மோசடிகள் போன்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களை நேரடியாக உணரும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். கடைசியில் நானே அவர்களுக்கு சுமையாகி விட்டேன் ஒருவழியாக என்னை பையன்களின் அறையில் அவர்கள் தங்கவைத்தனர்.

ஏழு பையன்கள் அவ்வறையில் இருந்தனர். அன்று வரை நான் கேள்விப்படாத அருவருப்பான காரியங்களை அந்நாட்களில் கண்ணெதிரே கண்டேன். கேலிக் கிண்டல்கள், கும்மாளக்கூத்துகள். அழிச்சாட்டியங்கள் என அனைத்துமே அச்சிறு அறையில் அரங்கேறின. வேண்டாப் பெண்டாட்டி கைதொட்டாலும் குற்றம், கால் வைத்தாலும் குற்றம் என்னும் பழமொழி எழுத்துப் பிசகாமல் நிறைவேறுவதை என் வாழ்க்கையில் கண்டேன். ஆனாலும் நான் எல்லாவற்றையும் பொறுமையாக சகித்தேன்.

வாழ்க்கையை உந்திஉருட்ட வேண்டிய கட்டாயத்தில் நான் எல்லாம் மறந்து அவர்களோடு இருந்தேன். நான் தங்கும் அறையும், உண்ணும் உணவும் எல்லாமே அவர்களின் ஈவு. எனவே நான் அவர்களுக்கு அனுசரணையாக இருக்க வேண்டியது கட்டாயம். கடவுளிடம் வேண்டுவது ஒன்றே என் ஒரே ஆறுதல். வேலை வாங்கித் தருவதாகக் கூறியவர்கள் தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தனர். என் விஷயத்தில் அவர்கள் எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை. என் உணவுக்கான பணத்தைக்கூட அவர்கள் தரவில்லை.

அறையை விட்டு வெளியே தலை காட்டுவதற்கான ‘இக்காமா’ அட்டையைக்கூட எனக்கு அவர்கள் தரவில்லை. என் வாழ்க்கை கண்ணீரின் பாதாளத்திலே அமிழ்ந்து போனது. ஒவ்வொரு நாளும் நான் நானாக இல்லை, வேறு யாராகவோ மாறிக்கொண்டிருந்தேன். புறாக்களின் கேவுதல் போன்ற என் கூக்குரல் கடவுளின் அரியணையை முற்றுகையிட்டது. ஏராளமான ஜெபமாலைகள்; யூ-டி-யூப் வழியிலான வசன சொற்பொழிவுகள் போன்றவை எனக்கு சற்றே வருடலாக இருந்தன. ஜெபத்திலே முழுகினாலும் உள்ளம் கவலையில் கரைந்து கொண்டே இருந்தது. எவ்வளவு தான் பசித்தாலும் பையன்களின் மதுபான கேளிக்கைகள் முடியாமல் உணவு கிடைக்காது. நள்ளிரவு தாண்டினாலும் இது தான் வாடிக்கை.

ஒரு நாள் என் அறையில் உள்ளவர்கள் வெளியே ஒரு விருந்து உபசரணைக்காகச் சென்றிருந்தனர். திரும்பி வரும் போது எனக்கான உணவைக் கொண்டு வருவதாகவும் எனவே சமைக்க வேண்டாமென்றும் சொல்லிச் சென்றனர். இரவு நெடுநேரமான பின்னும் அவர்கள் வரக்காணாமையால் நான் தளர்ந்து போனேன். பசி என் உச்சந்தலையை முட்டியது. அடுக்களையில் ஏதேனும் சமைக்கலாமா என்று பார்த்தால் பயம். அன்று நான் சுண்டப்பசியோடு படுத்துவிட்டேன். உறக்கத்தின் இடையில் பசி வாட்டியதால் எழுந்துவிட்டேன்.

பசித்த ராத்திரி

என் வாழ்க்கையில் அப்படி ஒரு பசியை நான் அன்று வரை அறியவே இல்லை. ஆனால் அன்று ராத்திரியில் என் உடலின் ஒவ்வொரு செல்லும் ஒரு பிடி உணவுக்காக ஏங்கின. நான் யாரென்பதையும் இப்போது எங்கே இருக்கிறேன் என்பதையும் மறந்து அடுக்களைக்கு ஓடினேன். ஒரு மூலையில் தொங்கிக்கிடந்த நெகிழிப் பையில் கொஞ்சம் பழைய குபூஸ் இருப்பதைப் பார்த்தேன். ஆர்வத்தால் அவற்றை எடுத்து உண்டேன். ஆனால் அவை தொண்டையை விட்டு இறங்காத வண்ணம் கல்லர்கக் கடுத்திருந்தது. அவற்றுக்கு இரண்டு வாரப் பழக்கமேனும் இருக்கலாம். அதனோடு கூட்டாகச் சாப்பிட வேறேதேனும் கிடைக்குமா எனப் பார்த்தேன். அங்கே குப்பைத் தொட்டியில் இடப்பட்டிருந்த கடலைக் குழம்பு என் கண்களில் சிக்கியது. அதை அள்ளி எடுத்து அத்துடன் மேலும் இரு குபூசுகள் தின்றேன். பிறகு போய் கண்ணயர்ந்தேன்.

மறுநாள் காலையில் எழுந்த போது முந்தின நாள் இரவில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தேன். நேற்று போன்ற ஓர் அவஸ்தையை இனி ஒரு போதும் தரக்கூடாது என ஜெபித்தேன். நடந்தவற்றை மறக்க நினைத்தேன். ஆனால் அன்றும் பையன்கள் கேளிக்கை விருந்துக்காக் கிளம்பினர். இராத்திரியில் உணவுப் பொட்டலத்தோடு வருவதாக வாக்கு. ஆனால் நேற்றைய பசி எனக்கு இன்று இல்லை. இருந்தாலும் குரல்வளை அடைப்பது போல் இருந்தது. இரவில் ஜெபமாலையைக் கையிலே பிடித்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்தேன். வீட்டார் சொல்லைக் கேட்காத குற்ற உணர்வு என்னை அழுத்தியது.

நள்ளிரவில் எழுந்து பைபிளைப் புரட்டினேன். தானி 14:33-39 கிடைத்தது. சிங்கக்குகையில் கிடந்த தானியேலுக்குக் கடவுள் அபக்கூக்கு என்ற இறைவாக்கினர் மூலமாய் உணவளித்த பகுதி. எனக்குப் பாலைவனச் சோலை போல் இருந்தது. ‘ஆண்டவரே, சிங்கக்குகையில் நீர் என்னை நினைவு கூர்ந்தீர் உம்மை அன்பு செய்யும் எவரையும் நீர் ஒரு போதும் கைவிடுவதில்லை’ என்னும் வசனம் எனக்குப் பசியநிழல் போல் இனித்தது. தேவ வசனங்களைக் கட்டிப்பிடித்து அந்த நாள் கண்ணயர்ந்தேன்.

ஆண்டவரை சுவைத்தறிந்த புதிய நாள்

இரவில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். அதிகாலை 1 மணி கேளிக்கை விருந்துக்குச் சென்றவர்கள் வாசற்படியில் நிற்கிறார்கள். கதவைத் திறந்ததும் ஃப்றைடு சிக்கனின் ஒரு பொட்டலத்தை என் கையில் திணித்தனர். நேற்றைய இரவில் உணவு கொண்டுவர முடியாமைக்கு மன்னிப்பும் கேட்டனர். ஆண்டவர் தந்த உணவை கண்ணீர் மல்க உண்டேன். உண்மையில் தானியேலை நினைவுகூர்ந்ததைப் போல கடவுள் என்னையும் நினைவு கூர்ந்துள்ளார். ஆண்டவரை அவ்விரவில் நான் சுவைத்தறிந்தேன். அன்றிலிருந்து அவர்கள் எல்லாரும் என்னை அன்பு செய்யத் தொடங்கினர். நான் சவுதியில் தங்கியிருந்த நான்கைந்து மாதங்கள் அவர்கள் என்னைத் தாய் போலக் கவனித்தனர். தினந்தோறும் மாலையில் எனக்காக உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்தனர்.

அதுவரை நான் எதிர்பார்த்த வேலை எனக்கு அமையவில்லை. ஆயினும் ரீயாதில் இருந்த இந்திய வெளியுறவுத்துறை அலுவலகத்தில் கடவுச்சீட்டை உருவாக்கும் ஒரு தற்காலிக வேலை எனக்குக் கிடைத்தது. ‘இக்காமா’ (அடையாள அட்டை) இல்லாமல் வெளியே தலைகாட்டப் பயந்து அறைக்குள்ளே முடங்கிக்கிடந்த என்னை என் ஆண்டவர் காவல்துறையினரால் கூட சோதனையிட முடியாத அரசு வாகனத்தில் சஞ்சாரம் செய்ய வைத்தார். இப்படியே ஒராண்டு முடிந்தது. பிறகு ஊருக்குக் கிளம்பினேன்.

எனது வளைகுடாப் பயணத்தில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், பெற்றோரின் துணையில்லாமல் மணற்காட்டில் அலைந்த எனக்குக் கடவுளின் கரிசனையை மிகுதியாக அனுபவிக்க முடிந்தது. அங்கு செல்லும் போது நான் ஒரு சாதாரண மனிதனாகத்தான் இருந்தேன். இப்போது இந்திய நாட்டில், மத்திய அரசு நிறுவனத்தில் செவிலியராகப் பணியாற்றுகின்றேன்.

ஆண்டவரை நான் சுவைத்தறிய சவுதியின் கசப்பான அனுபவங்களைக் கடக்க வேண்டி இருந்தது. “பாழ்வெளியில் அவர் அவனைக் கண்டார். வெறுமையான, ஒலமிடும் பாலையில் அவனைக் கண்டார். அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார். கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார்” (இச. 32:10).

கண்ணின் மணியெனக் காத்துப் பராமரிக்கும் கடவுளிடம் நான் என்னையே கொடுத்தேன். இத்துணை சாலப்பரிந்த கடவுளிடம் வேறென்ன நான் கேட்க முடியும். ஆகவே நான் ஆண்டவரிடம் சொன்னதாவது: எனக்கென நானே சில திட்டங்களை வகுத்தமைக்கு மனம் வருந்துகிறேன். உமது அன்பர்கள் மூலமாய் நீர் சொன்னவற்றிற்குச் செவி கொடாமல் இருந்ததற்காக மன்னிப்புக் கோருகின்றேன். இனி ஒருபோதும் உமது விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட நீர் என்னை அனுமதிக்காதேயும்.
ஆமேன்.

– ரஞ்சு எஸ். வர்கீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *