மன்னவா நீ உன் ஆட்சியதிகாரங்களை எந்த அளவுக்கு விரும்புகிறாயோ அந்த அளவுக்கு நானும் கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை ஏற்க விரும்புகின்றேன். உனக்கு உனது உயிர் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு ஒருபோதும் இறவாத அரசராம் கடவுளுக்காக மரிப்பதே எனக்குப் பிடிக்கும். நீ உனது மணிமகுடத்தை நேசிப்பது போல் நான் என்னைப் பிணித்திருக்கும் இச்சங்கிலிகளை மனதார நேசிக்கிறேன். தம்மைச் சங்கிலிகளால் கட்டி சாலையின் மருங்குகளில் இழுத்துச் சென்று இழிவுபடுத்த விரும்பிய கொடுங்கோல் மன்னனிடம் அந்தியோக்கியாவின் ஆயராக இருந்த பாபிலாஸ் நம்பிக்கையுடன் கூறிய கூற்றுகளே மேற்படி கூற்றுகள்!
உண்மைக் கடவுளை நம்பாத மன்னன், இறைவனின் கோவிலில் வேற்றுத் தெய்வங்களை வைத்து வழிபடும் பொருட்டு ஆண்டவருடைய ஆலயத்திற்குள்ளே நுழைய முயன்றான். ஆனால் இதைக் காண சகியாத ஆயர் பாபிலாஸ் சர்வ வலிமையும் பயன்படுத்தி அவனைத் தடுத்தார். தமது கடமையை செய்த ஆயரை மன்னன் சிறையிலடைத்துத் தண்டித்தான். பிறகு அவன் தனது வழிபடு மூர்த்திகளைக் கைதொழுமாறு கட்டளையிட்டான். ஆனால், ஆயரை அவரது நம்பிக்கையிலிருந்து கிஞ்சித்தும் வேறுபடுத்த முடியாது என்பதை அறிந்த மன்னன், அவரைச் சங்கிலியால் கட்டி ஊர்ஊராக இழுத்துச் சென்று இழிவுபடுத்த ஆணையிட்டான்.
ஆயரோடு தங்கியிருந்த வேறு மூன்று இளைஞர்களையும் அவர்களுடைய அன்னையரையும் படைவீரர்கள் கைது செய்து மன்னனிடம் ஒப்படைத்தனர். அவர்களுடைய விசுவாசத்தையும் சோதித்துவிடுமாறு ஆயர் அரசனுக்கு சவால் விடுத்தார். ஏனெனில் அவர்களும் தங்கள் விசுவாசத்தைக் கைவிடமாட்டார்கள் என்பதை ஆயர் நன்றாக அறிந்துவைத்திருந்தார். எனவே, எவருடைய விசுவாசத்திற்கும் ஊறு விளைவிக்க முடியாது என்பதை உறுதி செய்த மன்னன் ஆயர் உள்ளிட்ட அனைவரையும் வாளுக்கு இரையாக்கினான்.
கி.பி. 237 முதல் 253 வரை அந்தியோக்கியாவின் ஆயராக இருந்த பாபிலாசின் திருநாளை ஜனவரி 24-ஆம் நாள் திருச்சபை கொண்டாடிவருகிறது.
– இரஞ்சித் லாரன்ஸ்