சியன்னாவிலே ஓர் அன்பின் சங்கீதம்!

புனித சியன்னா கத்திரீனாளுடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி. அந்திரியா என்னும் பெயருடைய ஒரு சகோதரி மார்பகப் புற்றினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானாள். அவளது மார்பகம் கிட்டத்தட்ட அழுகிய நிலையை அடைந்தது. இந்நிலையில் மூக்கைப் பொத்தாமல் யாருக்குமே அவளது அறைக்குச் செல்ல முடியவில்லை. அந்த அளவுக்குத் துர்நாற்றம் வீசிற்று. இதனால் அவளுக்கு சிகிச்சை செய்யவும் யாரும் முன்வரவில்லை. இதை அறிந்த கத்திரீனா அவளுக்கு உதவ மனமுவந்து முன்வந்தார். அவர் தினந்தோறும் வந்து அவளுடைய புண்களை கழுவி மருந்திட்டுக் கட்டுப்போடுவார்.

கொஞ்சம் நேரம் அவளோடுகூடே செலவழிப்பார். கூடமாட உதவுவார். இத்தனைக்கும் பிறகு அவர் தமது அறைக்குப் புறப்புட்டுச் செல்வார். அங்கே ஆண்டவரோடு தனித்திருப்பார். நெடுநேரம் ஜெபத்திலே ஆழ்ந்திருப்பார். சில மாதங்களில் அந்திரியா கத்திரீனாளுடைய பராமரிப்பினால் ஓரளவு உடல்நலத்திற்குத் திரும்பி வந்தாள். எனவே, அவளுக்குள் வேரோடிக் கிடந்த வீம்பும் புறணிப் பேச்சும் மீண்டும் மெல்லத் தலைதூக்கின. அவளுடைய சந்தேக புத்தி கொளுந்துவிட்டு எரியலாயிற்று. அவள் தனது கிடக்கையில் கிடந்து சிந்தித்ததாவது :

ஏன் இந்தக் கத்திரீனா இப்படி அவசர அவசரமாய் இங்கிருந்து ஓடுகிறாள்? வேறெதற்கு; ஆண்களிடம் உல்லாசமாக இருக்கத்தான். அவளும் அழகாகத்தானே இருக்கிறா, அப்ப கண்டிப்பா தகாத உறவுகள் இல்லாமல் இருக்காதே…! எண்ணங்கள் வண்ணம் பெற்று வார்த்தைகளாய் சிறகடித்தன. தன்னைச் சந்திக்க வருவோரிடம் அவளுடைய வார்த்தைகள் தெறித்தன. சிறுகச் சிறுக இது அவ்வூரிலும் கசியலாயிற்று. மடத்திலும் இந்த வதந்தி கிளர்ந்தது. புனிதவதியாகக் கருதப்பட்ட கத்திரீனா ஒழுக்கங்கெட்டவளாய் அறியப்பட்டார். இவையெல்லாவற்றிற்கும் பிறகும் கத்திரீனா அந்திரியாவை பராமரிக்கத் தவறவில்லை. அன்பு செலுத்துவதையும் குறைத்துக்கொள்ளவில்லை.

இச்செய்தியை அறிந்து வருத்தப்பட்ட கத்திரீனாவின் அம்மா, அவரைக் காணவந்தார். அவர், மடத்தில் இருந்த கத்திரீனாளிடம், ‘மகளே, இனியும் நீ அந்தக் கூறுகெட்ட பெண்ணுக்கு உதவ வேண்டாம்’ என உபதேசித்தார். ‘அவள் உனக்கெதிராக இவ்வளவு வீம்பு பேசுகிறாளே; இருப்பினும் நீ நாணமே இல்லாமல் அவளுக்கு உதவப் போகிறாயே. இது வேண்டாம். இனிமேலும் நீ அவளுக்கு உதவி செய்தாய் என நான் அறிய நேர்ந்தால் நீ என் மகளாகவே இருக்கமாட்டாய்’ எனக் கடுமையாய் எச்சரித்தார். ஒரு தாயின் அக்கறையான சீற்றத்தின் முன்னிலும் கத்திரீனா தன் சாந்தத்தைக் கைவிடவில்லை. அவர் தன் தாயை நோக்கி அன்பு மீதூரக் கேட்டார்.

அம்மா, மனிதர்களின் நன்றி கெட்டத்தனத்தை முன்னிட்டு கடவுள் தம் கருணையைத் திருப்பிக்கொள்ள வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா? அவர் தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக மனமுருகி மன்றாடினார். மாறாக, அவர் தமது மீட்புச் செயலை அஃதுடன் முடித்துக்கொள்ளவில்லை. இந்நோய் பிடித்தவளை நானும் கைவிட்டால் வேறு யார் வந்து அவளுக்கு உதவப் போகிறார்கள்? கடைசியில், வேதனையின் அகோரப் பாடுகளால் அவள் உயிர் விட நேர்ந்தால், அதற்கு நாமும் ஒரு காரணமாய் மாறிவிடக் கூடாதே. என்னைத் தவிடுபொடியாய் நொறுக்கிவிட அவள்மூலமாய் சாத்தான் பின்னும் வலைப்பின்னல் என்றே நான் இதனை நினைக்கின்றேன். இதற்காக அந்திரியாவை வெறுக்க வேண்டியதில்லை. ஒருவேளை, ஆண்டவர் அவளுக்கு நல்ல புத்தி கொடுத்து அவளைத் திருத்தினாலும் திருத்துவார்”. கத்திரீனா தமது உதவிகளை மீண்டும் அன்போடு தொடர்ந்தாள். இறுதியில் அந்திரியா திருந்தினாள்.

சில மாமியார்களுக்கு மருமக்களின் பணிவிடைகளால் திருப்தியே வராது. எவ்வளவுதான் நெஞ்சைப் பறித்துப் பரிவுடன் ஈந்தாலும் ஈந்தபாடில்லை தான். அப்போதும் வைதுகொண்டே இருக்கின்ற தங்கப்பட்ட மாமியார்களைப் பற்றி என்ன சொல்ல! இது மாமியார்களின் குற்றம் அல்லவே. மாறாக, சாத்தான் இவர்கள் மூலமாய்ச் செய்யும் குடில தந்திரங்களே இவை. ஏனெனில், கடவுளின் கனிந்த பார்வை இவர்களின் இல்லங்களில் விழுந்துவிடாமலிருக்க சாத்தான் அக்கறையாகச் செயல்படுகிறான். இதற்காக அவன் மாமிமார்களின் குத்தூசிச் சொற்களைப் பதமாகப் பயன்படுத்துகிறான். இங்ஙனம் மருமக்களின் பணிவிடைகளுக்கும் பராமரிப்புகளுக்கும் பலமான முட்டுக்கட்டைகளைப் போட்டுவிடுகிறான்.

ஆண்டவர் மீதான அன்பின் மிகுதியால் உந்தப்பட்டு அருந்தொண்டாற்றி அளப்பரிய நன்மைகளைப் பெறுவதற்கான அரிய சந்தர்ப்பங்களை இப்படிப்பட்ட எதிர்வினைகளால் சாத்தான் மழுங்கடித்து விடுகிறான்.

எனவே அலகையின் வஞ்சிப்புகளை நாம் நெஞ்சிற்கொள்ள வேண்டும். நன்றிகெட்டத்தனங்களும் கூரிய விமர்சனங்களும் நம்மைத் தளர்த்தி விடக்கூடாது. எல்லாவற்றையும் அறிபவர் அனைத்திற்கும் கைமாறளிக்க வரும் இறுதிநாளில் நம்மை ஆதரிப்பார். அதுவரையிலும் ‘நன்மை செய்வதிலிருந்து விலகிவிடாதீர்கள்’ என்னும் இறைவார்த்தையைக் கருத்திற்கொள்வோம்.

ஆண்டவரே, நாங்கள் யாருக்காகவெல்லாம் வாழ்கிறோமோ, யார் யாருக்கெல்லாம் வேண்டி உழைக்கிறோமோ அவர்களிடமிருந்தே இன்னல்களை ஏற்க நேர்ந்தால், மனம் தளராமல் மீண்டும் மீண்டும் அவர்களை அன்பு செய்ய நீர் எங்களை வலுப்படுத்தி ஆசீர்வதித்தருளும் ஆமேன்.

 

– ஷெவலியார் பென்னி புன்னத்தறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *