புதிய நண்பர்கள்!

களித்தோழர் எல்லாரும் வந்தாயினர். அவர்கள் இளங்கோவின் வீட்டு முற்றத்திலே நின்று, “இளங்கோ வா விளையாடப் போகலாம்” என்றனர். ‘நான் வரலை’ இது எதிர்பாராத குட்டிக்கூட்டாளிகள் சற்றே அதிர்ந்தனர். காரணம் இளங்கோவின் வழக்கம் அப்படி அல்லவே.

இளங்கோ ஒவ்வொரு நாளும் அதிகாலைத் துயிலெழுவான். தன் அறையிலே இருக்கும் இயேசுவின் படத்தைப் பார்த்து ‘காலை வணக்கம்’ சொல்வான். பிறகு பல் கில் தேச்சு முகம் அலம்பி மறுபடியும் இயேசுவிடமே வருவான். கண்களை மூடி கொஞ்சம் நேரம் இயேசுவிடம் வாய்விட்டுப் பேசுவான். நேற்று ராத்திரி கனவிலே கண்ட காட்சிகளோ அல்லது இன்றைய பகலில் பக்கத்து வயலிலே விளையாடப் போவது பற்றியோ இயேசுவிடம் பேசுவான். இவற்றை புட்டுப்புட்டு வைப்பதில் இளங்கோவுக்கு அலாதிப் பிரியம்.

அப்புறம் அப்பா, அம்மா, அக்கா, பாட்டி, தாத்தா எல்லாரிடமும் போய் வணக்கம் சொல்வான்; குதூகலிப்பான்; கிச்சு கிச்சு மூட்டுவான்… வீடே அவனால் அமர்க்களமாகும். விடுமுறைக் காலமாகையால் பள்ளிக்கும் போக வேண்டாம். அதனால் காப்பி பருகி ஏப்பம் விடுவதற்குள் குட்டிக்கூட்டாளிகள் எல்லாரும் முற்றத்தில் வந்து எட்டி விளிப்பர். ‘வாடா இளங்கோ விளையாடப் போகலாம்’. அதற்குள் இளங்கோ சொக்கா அணிந்து குட்டிப்பயல்களுடன் கலந்திருப்பான். ‘வாறேம்மா’ என்று அம்மாவுக்கு சமிக்ஞை செய்யுமுன் குட்டிப்பட்டாளம் முற்றம் தாண்டிச் சென்றிருக்கும்!

அப்படிப்பட்ட இளங்கோவுக்கு இன்று என்ன ஆனது? எல்லாரும் அவனை ஏற இறங்க பார்த்தனர். அப்போதுதான் இளங்கோ சொன்னான்: “நேற்றைக்கு நான் அப்பாக்கூட ரோஜாவனம் பார்க்கப் போனேனே (ரோஜாவனம் = முதியோர் இல்லம்); அங்கே போய் அவங்க கூட ரொம்ப நேரம் விளையாடினேனா? அவங்களுக்கு என்னைய ரொம்பப் புடிச்சுப் போச்சு; இன்றைக்கும் மறக்காம வந்துடுப்பா எனக் கூறியிருந்தாங்க. அதனால நான் காலையிலேயே எங்க அப்பாவோட அங்கப் போக இருக்கிறேன். வேண்டாம்டா இளங்கோ; அங்கே மத்தியானத்துக்கு மேலக் கிளம்பலாம். இப்ப எங்கக் கூடவே வந்திடு”. குட்டிப்பட்டாளம் கெஞ்சியது.

‘ஐயகோ அது முடியாதே; இயேசப்பாவிட்டயும் சொல்லிட்டேன். இனி மாத்திட முடியாது’.
இளங்கோவின் அப்பாவும் அவனது ஆசையை மெச்சினார். ரோஜாவனம் போகவிருப்பதை அவரும் உறுதிப்படுத்தினார்.
இளங்கோவின் உறுதியான முடிவைக் கண்ட களித்தோழர் எல்லாரும் வருத்தப்பட்டனர். எனவே அவர்களும் அவனோடு செல்லத் தீர்மானித்தனர். இதனால், ‘நாங்களும் உன்னோட வர்ரோம்’ என்றனர்.

வீட்டில போய் சொல்லிட்டு இதா வந்திடறோம்’ என்று கூறிச் சிட்டுகள் கலைந்தன. சிறுதுநேரத்தில் கையில் ஒரு கட்டுச்சோறுடன் எல்லாரும் வந்துவிட்டனர். ஒருங்கே ரோஜாவனம் இல்லத்திற்குச் சென்ற அச்சிறுசுகள் அன்று மாலை வரை அங்குள்ளவர்களிடம் ஓடியாடி விளையாடினர். அங்கிருந்த முதியவர்களை ஆனந்தப்படுத்தினர். சின்னப் பிள்ளைகளின் சிட்டுப்பறத்தலில் மதிமறந்த முதியவர்கள் மீண்டும் ஒருமுறை பிள்ளைகளின் உள்ளம் பெற்று உவகை பூண்டனர்!

அன்றிரவு இளங்கோ ஒரு கனவு கண்டான். ரோஜாவனத்து முதியவர்களுடன் இயேசுவும் ஓடியாடி விளையாடுகிறார். கூடவே அவனது நண்பர் படையும் விளையாட, புதிய நண்பர்களுடன் எல்லாரும் கைகோர்க்கின்றனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *