சாற்றோவின் இளவரசரும் சமாதானத்தின் இளவரசரும்

சாற்றோவின் இளவரசர் புனித பதுவை அந்தோணியாரை அணுகி அவரிடம், “சுவாமி, நான் ஒரு தேவ பக்தன்; நன்றாக ஜெபம் செய்பவன், முறை தவறாமல் உபவாசமிருப்பவன்; தானதர்மங்களைத் தாராளமாய்ச் செய்பவன்; ஒழுக்கம் தவறாமல் வாழ்பவன். இருப்பினும் ஏன் சுவாமி என் மனம் எப்போதும் கவலையாய் இருக்கிறது? இனந்தெரியாத மனக்கலக்கமும் பதற்றமும் என்னை சதா பீடித்துள்ளனவே. இவற்றிலிருந்து விடுபட்டு மன அமைதியோடிருக்க நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார்.

பதுவைக்காரர் அவருக்குப் பதில் மொழியாக நவின்றது இப்படி : “மோவாபின் குடிமக்களே, நகர்களை விட்டு வெளியேறுங்கள். பாறைப் பகுதியில் குடியேறுங்கள், பாறையின் இடுக்குகளில் கூடுகட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள்” (எரே 48:28). மோவாபு இவ்வுலக மேட்டிமையின் ஒரு காணப்படும் அடையாளம். கடவுளின் திருவுள்ளத்திற்குக் கட்டுப்படக்கூடிய எளிமையோ தாழ்மையோ எதுவும் இவ்வுலகிற்கு இல்லாதபடியால் அது செருக்குடன் இறுமாந்து திரிகிறது. நகரங்கள் என்னும் சொல் கடவுளைப் பற்றிய எண்ணங்களை இழந்து பாவ வாழ்க்கையில் அவதிப்படும் கவலைகளைக் குறிக்கிறது. இத்தகைய கவலைகளையும் மனத்துயர்களையும் விட்டுவிட்டு உயரமான பாறை இடுக்குகளில் கூடு கட்டுங்கள். கிறிஸ்துவே அப்பாறை. அப்பாறையின் மீதே நாம் நம் கூடுகளை உருவாக்க வேண்டும். நாம் நமது உள்ளங்களைக் கிறிஸ்துவின் மீது குவிக்காவிட்டால் நமது ஜெபங்களோ தியானங்களோ எதுவும் நமக்கு நன்மை பயக்க முடியாதவையாய் மாறிவிடும். இதனால் மோவாபையும் அதன் நகரங்களையும் விட்டு விட்டது வெறும் வீணானதாக போய்விடும்”. இவ்வாறு அவ்விளவரசரின் உள்ளத்தில் உண்மையின் கட்டளைக்கல் ஒன்றை வைத்தார் அப்பதுவை அந்தோணியார்.

இளவரசர் தனது தற்போதைய நிலையை அக்கட்டளைக் கல்லில் உரைத்துப் பார்த்தார். அவரது உள்ளம் கணக்குப் புத்தகங்களில் புதைந்து போய் கிடக்கின்றது. குத்தகைக்காரர்கள் தமக்கான பாக்கியைத் தவறாமல் தருகிறார்களா என்றறிய அடிக்கடி அக்கணக்குப் புத்தகங்களைத் துழாவ வேண்டிய நிலை அவருக்கு. வேலையாட்களையும் மக்களையும் பற்றிய பதற்றம் அவரது உள்ளத்தை சதா மிதித்துக்கொண்டே இருக்கின்றது. ஜெப அறைகளில் அவரது உள்ளம் கிறிஸ்துவோடு ஒன்றியிருந்தாலும் அவ்வறையை விட்டு வெளியே வரும்போதே கிறிஸ்து அவருக்குள் இல்லாமலாகி விடுகிறார். ஏனெனில் அவர் கிறிஸ்துவைக் கோவிலுக்குள் விட்டுவிட்டு தன்னந்தனியாளாய் வெளியே வருகிறார். அவனுடைய மனக்கவலைகளுக்கு இதுவே ஆதிகாரணம்.

உண்மையில் நம்முடைய கவலைகளுக்கும் இதுவல்லவோ காரணம்? தேவாலயங்களில், தியான மையங்களில், கன்வென்ஷன் பந்தல்களில்… நாம் கிறிஸ்துவை விசாரிக்கிறோம். அங்கெல்லாம் கிறிஸ்துவின் உடனிருப்பை உள்ளூர உணர்கிறோம். ஆனால் அதற்கு அப்புறமாய் நம்மோடு உலாவரும் ஒரு கிறிஸ்துவை நாம் கிஞ்சித்தும் எண்ணிப் பார்ப்பதில்லையே. “நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார்”       (1 தெச 5:10).

நாம் நம் மனத்தைக் கடவுள் மீது வைக்க முடியாமல் இருப்பதே நமது ஆன்மீக மந்த நிலைக்கு மூலகாரணம். நம் உள்ளம் எங்கே மையங் கொண்டுள்ளதோ அங்கே தான் நம் வாழ்க்கை முற்றாகச் சுற்றிச்சுழலும். மதலாவின் உள்ளம் ஒட்டுமொத்தமாகக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் மீதே இருந்தது. ஆகவேதான் அவள் புலருமுன்னே எழுந்து கல்லறைக்கு ஓடினாள். ஆதலால் உயிர்த்த கிறிஸ்துவின் அரிய காட்சியைக் காணலுற்றாள். மற்றச் சீடர்களோ தங்கள் உள்ளத்தைத் தங்கள் மீதே வைத்துவிட்ட காரணத்தால் பயந்து நடுங்கி அறைகளுக்குள் அடைக்கலம் தேடினர்.

ஒரு விமான நிலையத்தில் இருந்த விளம்பரம் இப்படி : “நீ அடிக்கடி உன்னை எங்கே சந்திக்கிறாயோ அங்கேதான் உனது புனித இடம் இருக்கிறது” ஆம். உனது மனமும் சிந்தனைகளும் கற்பனைகளும் உன்னை எவ்விடத்திற்கு இழுக்கின்றனவோ அதுவே உன் தேவாலயம். அதுவே உனது புண்ணிய தீர்த்தம். ஆனால் எப்போதும் நான் கிறிஸ்துவில் வாழ வேண்டும் என உன் இதயம் துடிக்கிறதா? அப்படியானால் சமாதானத்தின் இளவரசராகிய கிறிஸ்து உன் உள்ளத்தில் சமாதானமாய் வந்து நிறைவார்.

ஜெபிப்போமா? ஆண்டவரே நான் எப்போதும் உம்மோடு கூடவே இருக்க நீர் எனக்குக் கற்பியும். என் உழைப்பிலும் களைப்பிலும் ஓய்விலும் உறக்கத்திலும் தனிமையிலும் வெறுமையிலும் இரவிலும் பகலிலும் என் இதயம் உம்மையே தேடட்டும். நீரைத்தேடும் மானின் உள்ளம் வேறெதையும் தேடாது இருப்பதுபோல் உயிரின் ஊற்றாகிய உம்மையே நான் அல்லும் பகலும் தேடுமாறு செய்யும். அதன்மூலம் நீர் என் உள்ளத்தில் ஆனந்தமான பேரமைதியை அருளி என்னை உமது சமாதானத்தால் நிரப்பியருளும். ஆமேன்.

– ஷெவலியார் பென்னி புன்னத்தறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *