அற்புதமான ஒரு பெயர்

மனந்திறந்து உச்சரித்தால் அற்புதங்களை நிகழ்த்தவல்ல ஆச்சரியமான இப்பெயரை அறிந்து அனுபவிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டம் தானே?

 

இயேசு தமது முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்றார். அப்போது சோதிப்பவனான சாத்தான் அவரை அணுகி ‘உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, இவற்றின் மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்’ என்றது. ஆனால் இயேசு அவனை அதட்டினார். உன்னை வணங்காமலேயே இவற்றின் மீதான அதிகாரம் பெற எனக்குத் தெரியும் என்றவாறு அலகையைத் துரத்தினார்.

“விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத் 28:18). “பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும் பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன் உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது” (லூக் 10:19). இயேசுவின் பெயருக்கு முன்னால் சாத்தான் பூரணமாகவே அடிபணிந்து விடுகிறான். இதுவே இயேசுவின் பெயருக்கான சிறப்பு.

எல்லா முழங்காலும் மண்டியிடும் நாமம்

“ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்” (பிலி 2:10). இதுவே இயேசு நமக்கருளும் ஒரு தீர்க்கதரிசன செய்தி. இயேசுவை அறியாதவர்கள், அவரை எள்ளி நகைப்பவர்கள், அவரைப் புறக்கணிப்பவர்கள், அவரை நம்பாதவர்கள், இறைமறுப்பாளர்கள் என எல்லாரும் ஒருநாள் அவருக்கு முன் மண்டியிடத்தான் போகிறார்கள். இதுவே இறைவனின் திருவுளம்.

இயேசுவின் பெயரைக் கடவுள் இவ்வளவாய் மெச்சிப்பேசும் பின்னணி என்ன என்பதை விளக்குகிறேன். முதலில் இயேசு என்னும் பெயர் விண்ணுலகிலிருந்தே தரப்பட்டுள்ளது”. “அவர் ஒரு மகனைப் பெறுவார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்…” (மத் 1:21).

கடவுளின் தூதர் மரியாவுக்கு உரைப்பதும் இதுவே. “இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்” (லூக் 1:31). ‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே’ எனக் கேட்கும் மரியாவின் கேள்விக்கும் விடைகூறப் படுகிறது. இப்பூவுலகில் உள்ள எவரும் இயேசுவுக்குத் தந்தையாக முடியாது. விண்ணகத் தந்தையே இயேசுவின் ஒரே தந்தை. இதனால்தான் விண்ணுலகமே இயேசுவுக்குப் பெயரிடுகிறது. இயேசுவின் பிறப்பை உலகத்தவர் எவரும் உரிமை கோர முடியாத வகையில் இயேசு விண்ணுக்கு உரியவராய் இருக்கிறார். ஆகவேதான் எல்லாரது கால்களும் அவர்முன்னே மண்டியிடும் என்கிறார் கடவுள்.

விடுதலை தரும் நாமம்

இயேசுவின் திருப்பெயர் பாவங்களைப் போக்க வல்லது. யோசேப்பு கண்ட காட்சியில் இதை வானவர் மிகவும் செப்பமுற விளக்குகின்றார். “அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களினின்று மீட்பார்’ (மத் 1:21). இங்கே மூன்று காரியங்களை நினைவுகூர வேண்டும். ஒன்று பாவத்தின் தண்டனை; இன்னொன்று பாவத்தின் தாக்கம்; வேறொன்று பாவத்தின் வலிமை. இம்மூன்றிலிருந்தும் ஆண்டவர் நம்மை இரட்சித்தார். அங்ஙனம் விடுதலை அளிக்கும் கடவுள் ஆனார். நமது பாவங்களை அவர் சுமந்து கொண்டதினிமித்தம் நாம் நமது தண்டனைத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோம்.

எண்ணாகமத்தில் காணப்படும் இந்நிகழ்ச்சி இக்கருத்தை மேலும் அரண்செய்வதாய் உள்ளது. கடவுளின் கடுங்கோபத்திற்கு ஆளான மக்கள் கொத்துக் கொத்தாய் வீழ்ந்து மடிவதைக் காணப்பொறாத மக்கள் அவர்முன் கதறி அழுதனர். இதனால் நெஞ்சம் நொந்த மோசே கடவுளுக்கு முன்னால் சரணாகதியடைந்தார். ஆகவே, அவர் மண்டியிட்டு மன்றாடினார். ஆகவே, கடவுள் மோசேயிடம் வெண்கலப் பாம்பொன்றைச் செய்யுமாறு பணித்தார். அப்பாம்பின் வடிவத்தைப் பார்ப்போர் அனைவரும் உயிர்பெற்றெழுவர் எனத் திருவாய் மலர்ந்தருளினார். இது தம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி நம்மை மீட்டுக் கொண்டதற்கான முன்னடையாளமே ஆகும். இயேசு மனிதகுலத்தின் பாவங்களைத் தமது உடலில் சுமந்தார். அப்படிப்பட்ட ஒருவரிடம் வந்து பாவமன்னிப்புக் கோரும் ஒரு பாவியை அவர் இரட்சிக்காமல் இருப்பாரா?

பாவத்தின் வலிமையிலிருந்தும் அவர் நம்மை மீட்டுக்கொண்டார். பாவம் வலிமை மிகுந்தது. ஒருவர் மனந்திரும்பி இயேசுவைப் பின்பற்றத் தொடங்கிய சில வாரத்திலேயே பாவத்தின் வலிமை அவரைத் தாக்கக்கூடும். முன்னைய நம்முடைய பாவங்கள் இன்னும் வலிமை பெற்று மிகவும் பலமாக நம்மீது மோதும். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரயேலைப் பார்வோன் துரத்திச் செல்லவில்லையா? அம்மக்கள் தங்களுடைய சொந்த வல்லமையால் பார்வோனிடமிருந்து கண்டிப்பாகத் தப்பிக்க முடியாது. ஆனால் கடவுள் அவர்களுடைய வாழ்க்கையில் தலையிடுகிறார்.

செங்கடலைப் பிளந்து ஆழக்கடலின் நடுவிலூடே அவர்களை வெகு வேகமாய் நடத்திச் செல்கின்றார். தேவாலயங்களில் உள்ள நற்கருணைப் பேழைகளில் அடைக்கப்படுவதற்காக இயேசு அப்பமாகி விடவில்லை. மாறாக, நாம் சோதனையில் அகப்பட்டு வேதனைப்படும்போது நமக்குத் துணை புரிவதற்காக நம் இதயங்களில் இருக்கவே அவர் விரும்புகின்றார்.

இனி “அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு வராது. துயரம் இராது. அழுகை இராது, துன்பம் இராது. முன்பு இருந்தவை எல்லாம் மறைந்து விட்டன” (திவெ 21:4) ஆம் பாவத்தின் தாக்கங்கள் என்றென்றைக்குமாய் நமது வாழ்க்கையிலிருந்து எடுத்து மாற்றப்படும் ஒரு நாள் வரும் அவ்வாறு நாம் மீட்கப்படுவதும் உறுதி.

வான்வீடு செல்லும் ஒரே வழி

இயேசு என்னும் பெயர் நம்மை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ஒரே வழியாய் இருக்கிறது. அவரே கூறுகின்றார் : வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” (யோவா 14:6). மேலும், “நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல, மாறாக இது கடவுளின் கொடை” (எபே 2:8). நாம் நமது நம்பிக்கையால் அவரது ஆணித் தழும்புகள் பதிந்த கைகளைப் பற்றினால் அவர் நம்மைப் பாவத்தின் வழிகளிலிருந்து மேலெழுப்புவார்.

வான்வீடு செல்லும் புனிதர்களுக்கு வழங்கப்படும் மகுடங்களை அவர்களாகவே சூட்டிக் கொள்வதில்லை. மாறாக அவர்கள் அம்மகுடங்களை ஆட்டுக்குட்டியின் பாதத்தில் வைத்துச் சொல்கின்றனர்: “எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கே உரியவை” ஆம். நாங்களாகத் தப்பித்து விடவில்லை. மாறாக நாங்கள் தப்பிக்கப்பட்டோம்.

எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் தூய ஆவி இங்ஙனம் கூறுகிறார் : அவர் நம்மைக் கிறிஸ்துவோடு உயிர்த்தெழச் செய்து அவருடன் நம்மையும் அரியணையில் அமர்த்துவார். கடவுளே அனைத்தையும் செய்கிறார். நாமோ அதற்கு ‘ஆமேன்’ எனச் சொல்லுகிறோம். கடவுள் செங்கடலைப் பிழந்த போது மக்கள் செய்யவேண்டியிருந்ததெல்லாம் ஒன்றே ஒன்று மட்டுமே. அக்கடலினூடே நடந்து செல்ல வேண்டும் அவ்வளவுதான்.

பெருங்கடலைப் பிளக்கும் பிரம்மாண்டமான வேலையை அவரே செய்கிறார். அவர் காட்டும் வழியினூடே நடந்துசெல்லும் ஒரு எளிதான பொறுப்பை மட்டுமே அவர் நம்மீது சுமத்துகின்றார். சிலுவையில் இறந்து அவனியை மீட்கும் அரிதான பணியை அவர் நிறைவேற்றிவிட்டார். ஆனால் அச்சிலுவையின் துயரார்ந்த நெறியைக் கடந்து மேலுலகை அடையவேண்டிய வேலை நமக்குரியது.

ஆன்மாவில் அபிஷேகம் செய்யும் நாமம்

இயேசு என்னும் நாமத்தின் மூலமாகவே தூய ஆவி நமக்கு அருளப்பட்டுள்ளார். இயேசு சிலுவையில் இறந்த போது இரண்டு காரியங்கள் நிகழ்ந்தன. அவரது அன்பான இதயம் குத்தித் திறக்கப்பட்டது; அதிலிருந்து இரத்தமும் நீரும் வெளிவந்தன.
நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் உலகத்தை அழித்தது. ஆனால் கடவுள், இனிமேல் வெள்ளத்தால் உலகத்தை அழிக்கமாட்டேன்’ எனச் சூளுரைத்தார். அவரது திருமகன் சிலுவையில் மரித்தபோது அவரது இதயம் ஈட்டியால் குத்தப்பட்டது. அதிலிருந்து முதலில் இரத்தமும் பிறகு நீரும் வெளிவந்தன. அதுவே தூய ஆவியின் அபிஷேக நீர்வீழ்ச்சி. அது எந்தப் பாவியையும் கடவுளின் மக்களாய் மாற்றவல்ல அளப்பெரும் நீர்வீழ்ச்சியாகும்.

இயேசுவின் பெயரை எடுத்துரைத்த சீடர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் (திப. 4). அப்போது அச்சீடர்களுக்கு ஏற்பட்ட வருத்தங்களை அவர்கள் சபையில் உள்ள ஏனையோரிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் அஞ்சி ஓடவில்லை. சபையார் ஒட்டுமொத்தமாய் ஜெபித்து அவர்களைத் தைரியப்படுத்துகிறார்கள். “உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும். அடையாளங்களும் அருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும். (திப. 4:30).

ஆம். கடவுளே இல்லை எனச் சொல்லித்திரியும் இவ்வுலகத்தவர்க்குக் கடவுளைக் காட்டித் தரும் மகத்தான பணியைத் திருச்சபை செய்தது. ஆகவே நாமும் இறைவேண்டல் செய்யும் போது திருத்தூதர்களின் காலத்தில் நடந்த அற்புதங்களெல்லாம் இன்றும் நடந்து கொண்டே இருக்கும். இயேசுவின் தகுதிகளே நம் தகுதி நமக்கென எத்தகுதியும் இல்லையென்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது நம்முடைய ஜெபத்திற்கும் வெற்றி நிச்சயம்.

இயேசுவே நீர் என் ஆண்டவரும் கடவுளுமாயிருந்து என் வாழ்க்கையை ஆண்டு நடத்தியருளும். உமது தூய ஆவியை என்மீது ஊற்றியருளும்.

– டாக்டர் ஜாண் டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *