புதுப்படைக்கலன் தாங்கி…. ஆல்ஜியேஸ் புனித சிரேபியன்

இவர் ஒரு படைவீரர். ஆனால் கிறிஸ்து இயேசுவின் மீது கொண்ட பக்தியால் மெர்சடேரியன் என்னும் துறவாசிரமத்தில் இணைந்தார். இத்துறவிகள் தங்கள் உயிரை ஈட்டுத்தொகையாக வைத்து சிறைக்கைதிகளைக் காப்பாற்றி வந்தனர். இத்துறவற சமூகம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்டது. ‘மாதாவின் பரிந்த துறவிகள்’ எனவும் இவர்கள் அறியப்படலாயினர்.

இவர் 1179-ல் பிறந்தார். தமது சிறுவயதிலேயே இவர் மன்னர் ரிச்சாட்டு நடத்திய சேனையில் தம்மை இணைத்துக் கொண்டார். அல்போன்சோ எட்டாமன் நடத்திய படையெடுப்பிலும், மூன்றாம் சிலுவைப் போரிலும் இவர் கலந்துக்கொண்டார். பின்னர் ஸ்பெயினுக்குச் சென்ற இவர் கத்தோலிக்க மதவிசுவாசத்தைக் காப்பாற்றும் பொருட்டு அங்குள்ள மன்னரின் சேனையில் ஐக்கியமானார்.

அங்கே மெர்சடேரியன் துறவற இல்லத்தை நிறுவிய பீட்டர் நொளாஸ்கோ என்பவருடன் அறிமுகமானார். இது சிரேபியனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாய் அமைந்தது. அப்போதும் கத்தோலிக்க விசுவாசத்தைக் காப்பாற்றும் போராட்டத்தை விட்டுவிடவில்லை. ஆயினும் ஒரு சிறு மாற்றம் என்ற முறையில் அவர் வாளெடுத்துப் போரிடவில்லை. மாறாக, கடவுளின் வாக்கெடுத்துப் போரிட்டார். ஆதலால் இறை நம்பிக்கையும் இறைவார்த்தையும் அவரது புதிய படைக் கலன்கள் ஆயின. 1222-ல் இவர் மெர்சடேனியன் துறவற சமூகத்தாருடன் இணைந்தார்.

1229-ல் புனித ரேமண்ட் நொணாற்றஸ் என்பவரின் உதவியுடன் 150 கிறிஸ்தவ அடிமைகளை அவர் விடுவித்தார். மெர்சடேனியன் துறவியர் சமூகத்தில் ஏராளம் பேரை இணைப்பதற்காக இவர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால் கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கி தாக்குதலுக்கு உள்ளானார். அக்கொள்ளையர்கள் இவரை இறந்துவிட்டதாகக் கருதி விட்டுச் சென்றனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று இலண்டன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சுற்றித்திரிந்தார். அக்கால கட்டத்திலும்கூட ஆக்கிரமிக்கப்பட்ட சபை சொத்துகளை மீட்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். பிரிட்டன் தீவுகளில் அவர் ஆற்றிய நற்செய்திப்பணி பலரையும் அவரிடம் ஈர்த்தது. இதனால் ஏராளம்பேர் கிறிஸ்தவ விசுவாசம் பூண்டனர்.

கி.பி. 1240-ல் ஆஸ்ஜியேஸ் என்னுமிடத்தில் பிணைக்கைதிகளாய்ப் பிடிக்கப்பட்டிருந்த சுமார் 87 கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக இவர் அரும்பாடுபட்டார். அதற்காகத் தீவிரவாதிகள் கேட்ட தொகை முழுவதையும் இவர் வசூல் செய்து கொடுத்தார். ஆனால் கேட்ட பணத்திற்கு அதிகமாய் அவர்கள் இவரிடம் பணம் கேட்டனர். அத்தொகையைக் கொண்டுவந்து கொடுக்கும்வரைத் தம்மையே ஒரு கைதியாக்கி அவர்களிடம் சரணடையவும் ஒப்புக்கொண்டார். ஆயினும் புரட்சிக்காரர்கள் எதிர்பார்த்த நேரத்தில் பணம் கிடைக்காமற்போகவே அவர்கள் இவரைத் தயவு தாட்சண்யம் ஏதுமின்றி கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.

பின்னர் இவரைச் சிலுவையில் அறைந்தனர். அதற்குப் பின் இவரது உடலைக் கண்டந்துண்டமாய் வெட்டி வானத்துப் பறவைகளுக்கு உணவிட்டனர். 1240 நவம்பர் திங்கள் 14-ஆம் நாள் தேவ சமூகத்திற்கு ஏறிச் சென்ற இப்புண்ணிய ஆன்மாவை, 1728 ஏப்ரல் 14-ஆம் நாள் பெனடிக்ட் 13-ஆம் பாப்பரசர் புனிதராகப் பிரகடனம் செய்தார்.

-இரஞ்சித் லாரன்ஸ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *