மூடராவோரும் மூடராக்குவோரும்

நான் ஒரு வங்கியில் கிளை மேலாளராக வேலை பார்த்தவன். ஆனால் அந்த வேலையை உதறிவிட்டு ஒரு முழுநேர சுவிசேஷ ஊழியனாய் மாறி, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. வங்கி வேலையை இராஜினாமா செய்து கொண்ட நாள் ஒரு ஏப்ரல் ஒன்று, முட்டாள் தினம். ஆம்; உலகத்தின் கண்களில் நான் செய்தது ஒரு முட்டாள்தனமான செயல்தான். வேலையை விட்டு விட்ட என்னுடன் பலரும் தங்கள் உறவை முறித்துக் கொண்டனர். பார்க்கும்போதெல்லாம் முகம் மலர கைகுலுக்கியவர்கள் காணாதவர்களைப் போலக் கலைந்து சென்றனர். ‘ஐயா’ என அன்போடு அழைத்தவர்கள் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு முன்னேறினர்.

ஒரு தெப்பம் போல் என்னைத் தாங்கிவந்த அந்த நல்ல வேலையை உதறியெறிந்த மூடனாகிய என்னைப் பலரும் பலமாதிரியாகப் பார்க்கத் தொடங்கியதால், நான் வெளியே தலைகாட்டவும் முடியாமல் வீட்டுக்குள் முடங்கிப்போனேன். சில காலங்களுக்குப் பின் ‘ஷாலோம் தொலைக்காட்சி’ என்னும் எனது கனவு மெய்ப்படத் தொடங்கவே, சிலராவது என் தேவ அழைப்பை அடையாளம் கண்டு கொண்டனர். என் கடவுளுக்காக ஒரு முட்டாளாய் மாறிய மகிழ்ச்சியில் ஒவ்வொரு ஏப்பிரல் ஒன்றும் எனக்கு நன்றியறிதலின் தினமாகவே இருக்கிறது!

‘சர்க்கஸ்’ போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில்தான் சிலர் தாமாகவே விரும்பி கோமாளிகளாய் மாறுவர். ஆனால் உண்மையில் யாருமே மூடர்களாய் அல்லது முட்டாள்களாய்த் தங்களைக் காட்டிக்கொள்ள விரும்புவதே இல்லை. அப்படிக் காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு நாம் அதீத அக்கறையும் எடுத்துக் கொள்கிறோம். எனினும் எங்கெல்லாம் நாம் நமது புத்தியைக் காட்ட முனைகிறோமோ அங்கெல்லாம் மூடர்களாய் மாறிவிடுகிறோம் என்பதே உண்மை! வாக்குவாதங்கள் உறவின் முறிவுக்குக் காரணமாகி விடுகின்றன.

சில தம்பதிகளுக்கிடையில் ஓயாத சண்டை மூள்கிறது என்றால் வாக்குவாதமே காரணம். வாதிட்டு வெல்லாவிடில் மூடனாகி விடுவேனோ என்ற பயம் எல்லாருக்கும் உண்டு. ஆனால் வாழ்க்கைப் பங்காளி ஜெயிக்கட்டுமே எனக் கருதி ஒருவர் முட்டாள்தனமாகத் தோற்பதில்தான் உண்மையான புத்தி அடங்கியிருக்கிறது என்பதைப் பலரும் அறிந்து கொள்வதில்லை. ஓயாமல் வாயாடி பங்காளியைத் தோற்கடித்து வெற்றியைத் தக்கவைப்போர் சுத்த முட்டாள்கள் அல்லவா? இன்று இப்படிப்பட்ட மடையர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.

சின்னக் குழந்தைகள் நம்முன்னே வந்து தங்கள் மேதமையைச் சொல்லிக் காட்டினால் நாம் அவர்கள் முன்னே அறிவில்லாதவர்கள் போல் பாசாங்கு செய்வதில்லையா? அப்படித்தான் அக்குழந்தைகளைக் குதூகலப்படுத்துகிறோம். ஆனால், “இதெல்லாம் எனக்குத் தெரியாதா?… நான் எவ்ளோ பார்த்திருக்கிறேன்… உனக்கு என்ன தெரியும்? நீ சுத்த மக்கு… பேசுறது சுத்தப் புளுகு… என்றெல்லாம் குழந்தைகளிடம் மல்லுக்கட்டினால் அது திமிரல்லவா?

இயேசுவின் மனித அவதாரமும் சிலுவை மரணமும் அவருடைய மூடமைகள் அல்லாமல் வேறென்ன? அவர் வனாந்தரத்திலே சோதிக்கப்பட்ட பொழுது சாத்தான் தனது புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி சிலுவைகள் இல்லாத சில நெறிகளை இயேசுவுக்குச் சுட்டிக் காட்டினான். ஆனால், அறிவுடைமையின் அவ்வகன்ற வழிகளை இயேசு நிராகரிக்கிறார். வான்வீட்டின் அறிவின்மைகள் சாத்தானின் அறிவுடைமையைக் காட்டிலும் மேலானவை என்பதை ஆண்டவர் எண்பித்துக் காட்டினார்.

யூதாஸ் கைதேர்ந்த மதிநுட்பத்தால் இயேசுவைக் காட்டிக்கொடுத்தான். ஆனால் அவன் வரலாற்றில் மிகப்பெரிய மதிகேடனாய் மாறினான். இயேசு சிலுவையிலே அறையப்பட்ட போது சாத்தான் வெற்றி திமிர்ப்பில் கொக்கரித்தான். ஆனால் மறுகணமே, “நான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன்” என்ற உண்மையை உணர்ந்தான்.

ஏரோது கேட்ட கேள்விக்கு ஆண்டவர் பதில் சொல்லாமல் இருந்தது விடை தெரியாததனால் அல்ல. எனவே சில கேள்விகளுக்கு முன்னால் முட்டாள்களைப் போல் மவுனமாகுங்கள். தெரிந்தாலும் தெரியாதவனைப் போல் இருங்கள். கண்டாலும் காணாதவனைப் போல் நடியுங்கள். ஆம். நமது வாழ்க்கையில் வசந்தமும் வனப்பும் துலங்க வேண்டுமானால் அவ்வப்போது நாம் மடையர்களாக வேண்டியிருக்கிறது. நமது குடும்பங்களுக்காகவும் கடவுளுக்காகவும் அவரது திருச்சபைக்காகவும் முட்டாள்களாய் மாறிய முதுஞானிகளின் வரலாறு நமக்குத் தூண்டுகோலாக மாறட்டும்!

சாரோன் சமவெளியில் பூத்துக் குலுங்கிய காட்டுமலரும், பள்ளத்தாக்குகளில் விரிந்து மணக்கும் லீலி மலருமாகிய கிறிஸ்து, கடவுளின் திரண்ட ஒளிவடிவம் ஆனவர். ஆயினும் காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார் (எசா 53:3). அவர் இழிவுபடுத்தப்பட்டார். அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார் (எசா 53:12). இதனால் கடவுளின் விருப்பம் அவர் வழியாக நிறைவேறியது. அவர் தமது துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைந்தார் (எசா 53:11).

எப்போதும் வெற்றிக்கனி பறிக்க விரும்புவோரும், பிறர் தலையில் ஏறி உட்கார நினைப்போரும் எளிதில் மடையர்களாகி விட முடியாது. ஆனால் கடவுளின் திருவுள்ளம் நிறைவேற்ற விரும்பும்போது, சில நேரங்களுக்கேனும் நாம் மடையர்களாக மாறத்தான் வேண்டும். ஆதலால் சிலுவையின் மடமையை ஏற்காமல் உயிர்ப்பின் மகிமையை எதிர்பார்க்கும் மடமையில் அகப்படாதிருக்க மனமுருகி ஜெபிப்போம்.

ஜெபம் : ஆண்டவரே அன்பை முன்னிட்டு அவமானங்கள் ஏற்கவும், விவேகத்தை முன்னிட்டு மடையர்களாய் மாறவும் உம் திருவுளம் நிறைவேறும் பொருட்டு முட்டாள்தனங்களை ஏற்றுக்கொள்ளவும் நீர் எங்களுக்கு அருள்தாரும் ஆமேன்.

– ஷெவலியார் பென்னி புன்னத்தறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *