மடமையால் நொறுங்கிய வீடுகள்

நமது வாழ்க்கை என்னும் ஓடம் முடங்காமல் இருக்கவும் கடவுள் வழங்கும் வரங்களை இழக்காமல் இருக்கவும் இது ஓர் விண்ணக தூது!

 

எங்கள் மறைமாவட்டத்தில் தாய்மார் சங்கம நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஒரு மூத்த அருட்பணியாளர் இங்ஙனம் குறிப்பிட்டார்: “பெண்கள் கணவனோடு இணைந்துவாழ அவர்களுக்கு ஞானமும் விவேகமும் அவசியம். எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக இருந்தாலும் சமூகத்தைப் புரட்டிப்போடும் புரட்சி பெண்களாகவே இருந்தாலும் ஞானமும் விவேகமும் இல்லையென்றால் கணவன் மட்டுமல்ல, கணவன் வீட்டார் யாருமே அவளை விரும்பமாட்டார்கள். அவள் அள்ளிக் கொடுத்த நகைநட்டுகளோ, வலதுகால் எடுத்துவைத்து வாசற்படி ஏறிவந்த நன்னாளோ ஒன்றும் அவளுக்குக் கைகொடுக்கா. ஆகவே அவள் ஐஸ்வரியவதியாகப் புகுந்த வீட்டில் பரிளமிக்க வேண்டுமென்றால் ஞானமும் அதற்கேற்ற விவேகமும் தேவை. நல்ல பாடங்களைக் கற்கவும் அதற்கேற்ப நிற்கவும் ஞானவிவேகங்களே அவளுக்குத் துணை…!”.

சற்று இடைவெளி விட்டு அவர் மீண்டும் தொடர்ந்தார் : “சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் அது நிகழ்ந்தது. அன்று நான் ஒரு இளங்குரு. மறைமாவட்டத்தின் ஒரு மறைவட்டத் தலைமைக்கோவிலில் உதவிப் பங்குத்தந்தையாக இருந்த காலம். ஒருநாள் பிற்பகல் வேளையில் ஒரு கார் கோவில் முற்றத்திலே அலங்காரமாய் வந்துநின்றது. அதில் ஓட்டுநரும் ஒரு பெண்மணியும் உட்கார்ந்திருந்தனர். அப்பெண் காரைவிட்டிறங்கி மேடையை நோக்கி நடந்து வந்தாள்.

வணக்கம் எனச் சொல்லிய அப்பெண்மணி பங்குத்தந்தை எங்கே எனக்கேட்டாள். அவர் இப்போது இங்கில்லை என்றதும் அவள் துணுக்குற்றாள். எப்போது வருவார் என, நான் நாளைக்கே வருவார் என்றேன். இதைக்கேட்டதும் அவள் விர் என்று அழுதாள். நான் அவளிடம், “அம்மா, நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?” எனக் கேட்டேன். அதற்கு அவள் ‘சுவாமி, நானும் இந்தப் பங்கைச் சார்ந்தவள்தான்’ எனக்கூறி வீட்டுப்பெயரையும் சொன்னாள். உடனே எனக்கு எல்லாம் புரிந்தது! அவள் ஒரு சாதாரணப் பெண் அல்ல. அவ்வூரின் ஒரு பெரிய பணக்காரியும் கேரள மாநிலம் முழுக்க அறியப்படும் ஒரு செல்வச் சீமாட்டியுமாக இருந்தாள்.

ஏன் எதற்காக வந்தீர்கள் எனக் கேட்டேன். ஒரு நொடி மவுனம் சாதித்தவள், ‘பெரிய சாமியாரிடம் கொஞ்சம் மனம்விட்டுப் பேசணும், அப்புறம் அவரிடம் பாவசங்கீர்த்தனம் பண்ணணும்’ என்றாள் விம்மி விம்மி! ‘பெரிய சாமியாரைத் தான் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் நாளைக்குத்தான் வரவேண்டும்’ என்றேன். அதற்கு அவள், ‘நாளைக்குள் நான் நெஞ்சுடைந்து சாகமாட்டேனா?’ எனச் சொல்லி அழத்தொடங்கினாள். எனவே நான் அவளிடம், “அம்மா, உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் உங்கள் பிரச்சனையை என்னிடம் சொல்லிப் பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ளுங்கள்” என்றேன். அரை மனத்தோடு சம்மதித்தாள்.

வலிகளின் தொடக்கம்

“சாமீ, இப்பங்கிலே உள்ளவர்களெல்லாம், நான்தான் பெரிய அதிர்ஷ்டசாலி என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நான் ஒரு சபிக்கப்பட்டவள். என் கணவன் என்னைக் கரம்பிடித்துக் கொண்டுவந்த சில நாட்களிலேயே அவருக்கு என்னிடம் கிஞ்சித்தும் பாசம் இல்லை என்பதை அறிந்துகொண்டேன். அவருக்கு விலைமகளிருடன் தொடர்பு இருப்பதையும் புரிந்து கொண்டேன்.

என் அப்பா, இது ஒரு கெளரவமான குடும்பம் என்பதற்காக என்னை இங்கே தாரை வார்த்துக் கொடுத்தார். அதற்குமேல் அவர் எதுவும் பார்க்கவில்லை. முதலிரவே மூக்குமுட்டக் குடித்துக் கொண்டுதான் அறைக்கு வந்தார். எப்படியோ அந்த மனுஷனுடைய நான்கு மக்களை நான் பெற்றுப் போட்டேன். ஆரம்பத்திலேயே என் வீட்டுப் பணிப் பெண்கள் அந்த ஆளின் துர்நடத்தையைப் பற்றி என்னிடம் எச்சரித்து வந்தனர். எங்கள் தோட்டத்துப் புறம்போக்கில் குடிசை கட்டிக் குடித்தனம் பண்ணும் ஒரு பெண் இந்த ஆளுக்கு வைப்பாட்டியாய் இருப்பதை அப்போதே ஒரு வேலைக்காரி எனக்குச் சொல்லியிருந்தாள்.

இதை நான் என் கண்களால் பார்க்கட்டும், அப்புறம் நடப்பதே வேறு என என் வேலைக்காரியிடம் கூறியிருந்தேன். நேற்று நான் என் வேலைக்காரி ஒருத்தியுடன் எங்கள் தோட்டத்தின் வாழைத் தோப்புக்குள் மறைந்திருந்தேன். மாலை மயங்கியதும் என் வீட்டுக்காரர் அவளுடைய குடிசைக்குள் புகுவதை என் கண்கள் எனக்குக் காட்டின. என் நெஞ்சு திக் திக்கென அடித்துக் கொண்டது. ‘வரட்டும் என் பிணத்தைத் தான் பார்க்கப் போகிறான்’ என சூளுரைத்துக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினேன். அந்த மனுசனுடைய அலுவலகத்தில் தொங்கும் மின்விசிறியில் தூக்கு மாட்டிச் சாவது என்ற முடிவுடன் வீட்டை நோக்கி நடந்தேன்.

ஆனால் என்னால் அந்த முடிவுக்கு வர முடியவில்லை. நான் பெற்றுப்போட்ட அந்த பிஞ்சுகளின் மூஞ்சிகள் என் முன்னே நிழலாடின. ஆகவே நைந்த நெஞ்சுடன் அந்த மனுசனுக்காகக் காத்திருந்தேன். மையிருட்டில் அரக்கப்பரக்க ஏறிவந்த அந்த உருவத்தைப் பார்க்க அருவருப்பாக இருந்தது. வாசற்படியை மிதித்ததும் மறித்து நிறுத்தினேன். என் சர்வ வலிமையைத் திரட்டி அங்கேயே தடுத்துக்கேட்டேன்: இருட்டும்வரை எங்கே போயிருந்தீங்க? ‘நீ யாரடி மோகினி என்னைக் கேட்க?’ என்னும் அலறல் சத்தமே பதிலாக கிடைத்தது. “நான் நீங்க கட்டுன பொண்டாட்டி. பதில் சொல்லிவிட்டு உள்ளே வந்தால் போதும். எங்கே போயிருந்தீங்க? கேட்பதற்கான உரிமை எனக்கு உண்டு”.

“என்னடி உரிமை; வழியை விடடி மூதேவி” எனச் சொல்லி என்னைக் கீழே தள்ளிப் போட்டான். நானும் தரையில் விழுந்தேன். நேராகப் படுக்கையறையில் செல்ல நினைத்தான். நான் மீண்டும் தடுத்தேன். “இதற்குள்ளே நுழைய உமக்கு என்ன அருகதை? நள்ளிரவு வரை விலைமாதுகளுடன் மயங்கிவிட்டு குடிபோதையில் வந்தேறி படுத்துக்கொள்ளும் ஒரு இடமா இது? இங்கிருந்து இறங்கிக் கூத்தியாளிடமே சென்று விடு. இவ்வளவு நேரம் அவளோட மடியில் தானே படுத்திருந்தாய்? அப்புறம் இங்கே எதற்காக வந்தாய்?

“எனக்கு என்ன விருப்பமோ அதைத்தான் நான் செய்வேனடி. இதற்குமேல் பேசினால் உன்னைக் கண்டந்துண்டமாய் வெட்டி நாய்க்குப் போட்டுருவேன் ஜாக்கிரதை’ அவன் எகிறினான். “அதையும் நான் பார்க்க வேண்டும். இனி ஒரு வாட்டி கூட அவ வீட்டுக்குப் போய்ப்பார். அப்போது தெரியும், நான் யார் என்பது”.

“போனால் நீ என்னடி செய்வ?” எனக் கேட்டுக் கொண்டே அவள் கன்னத்தில் அந்தப் பாவி மனுசன் ஓங்கி அறைந்தான். ‘இரண்டு பேரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிடுவேன்’ என்று தழுதழுத்த குரலில் அவள் கூறினாள். உடனே அவன், ‘அப்படியானால் அதை நான் பார்க்க வேண்டும்’ எனக் கூறிக் கொண்டே இருட்டில் இறங்கிச் சென்றான்.

வலிகளின் உச்சம்

சிறிது நேரத்தில் அவன் அக்குடிசை வீட்டுப் பெண்ணையும் அணைத்துக் கொண்டு மீண்டும் ஏறி வந்தான். அவன் தன் மனைவியை நோக்கி, ‘நீ எனக்குச் செய்வதை நான் பார்த்தாக வேண்டும். உனது மாசற்ற இப்படுக்கையறையில் நான் இவளுடன் படுக்கப்போகிறேன். நீ ஆகக்கூடியதை செய்துவிடு’ எனக்கூறியவாறே அப்பெண்ணுடன் உள்ளே நுழைந்தான்.

மனைவியாக அவனுக்கு வாழ்க்கைப்பட்டவள் செய்வதறியாது தவித்தாள். மண்ணெண்ணெய் ஊற்றி அவனுடைய படுக்கையறையைக் கொளுத்துவதா? இல்லை, இந்த வீட்டின் மாடத்தில் தொங்கிச் சாவதா? அதுவுமல்லாமல் என் உறவினரை அழைத்து இந்த கண்றாவியை அவர்களுக்குக் காட்டுவதா? நான் என்ன செய்ய… அவளுடைய சித்தம் சிதைந்து சித்தப் பிரமை பிடித்தவள் போல் அங்கேயே அமர்ந்தாள். கைகளைத் தலையில் கட்டி அழுதாள். கூடத்தில் வைக்கப்பட்டிருந்த வியாகுல மாதாவின் நொறுங்குண்ட உள்ளத்தைப் பார்த்தவாறே பொழுதைப் புலர்த்தினாள்.

காலையில் படுக்கையறையை விட்டு இருவரும் வெளியே வந்தனர். வாசலிலே அமர்ந்து அழுதுகொண்டிருந்த மனைவியைக் காலால் எற்றிச் சொன்னான்: பெண்ணே பார்த்தாயா? இதைவிட மோசமானது நடக்காமல் இருக்க நீ உன் குடும்பத்தாரிடம் நடந்ததை மறைத்துவிடு. மானம் மரியாதையாக ஜெபமாலையும் சொல்லி இங்கே இருந்துவிடு. பிறகு அவன் அக்கூத்தியாளுடன் எங்கோ சென்றான். பாவம் அந்த மனைவி. அவளுக்குள் பலவகையான விபரீத எண்ணங்கள் ஓடின. ஆயினும் அந்த வியாகுல மாதாவின் குத்துண்ட உள்ளம் அவளுக்குத் தேறுதலாக இருந்தது. பிறகு ஒருவாறு உள்ளத்தை ஆற்றிக்கொண்டு நேராக அவள் கோயிலுக்குச் சென்றாள்.

பட்ட கஷ்டங்கள் பாழாகிப் போவதில்லை

எல்லாம் சொல்லி முடித்ததும் அவள் கேட்டாள்: “சாமீ நான் இனி அந்த வீட்டை மிதிக்கமாட்டேன். ஆகவே, என் அப்பா வீட்டுக்குச் செல்லட்டுமா?” நான் கூடாது எனத் தடுத்தேன். நடந்துவிட்ட இந்த பிரச்சனைகள் சொந்த வீட்டிலும் சரி; சொந்த மக்களிடமும் சரி சொல்லவே கூடாது. ஆனால் உங்களுக்குத் துரோகம் இழைத்த அந்தப் பாவி மனுசனை உருகிய ஜெபத்தாலும் பிராயசித்த பரிகாரங்களாலுமே திருத்த வேண்டும். நீங்கள் இதுவரை சம்பாதித்த சகிப்புத்தன்மை என்னும் பெரும்புண்ணியத்தை ஊர் கூட்டி அழித்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் பிள்ளைகள் இச்செய்தியை அறிந்தால் அவர்களுடைய உள்ளங்களில் அப்பா என்ற பிம்பம் செத்துப் போகும். உங்கள் தாய்வீட்டார் இதைக் கேள்விப்பட்டால் உங்கள் கணவனை கைகழுவி விடுவார்கள். ஒருவேளை கொலை செய்யவும் துணிவார்கள். அதுவும் உங்களுக்கே பேரிழப்பாக முடியும். அதன்மூலம் உங்கள் சகிப்புத் தன்மை என்ற நல்லறம் இல்லாமற்போகும். நீங்களும் கைம்பெண்ணாய் வாழநேரிடும். ஊர் உலகம் அறிந்தால் உங்கள் குடிப்பெருமை காற்றில் பறக்கும்.

அதன்பிறகு உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வீட்டிலிருந்து திருமண ஆலோசனை வருவதும் தள்ளிப்போகும். உங்கள் கணவனின் வைராக்கியம் இரட்டிப்பாகும். உங்கள் துக்கமும் பன்மடங்காய்ப் பலுகும். பிறகு உங்கள் கணவனைத் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஊதாரி மைந்தனின் உவமையில் அவ்வன்புத் தந்தை தமது இளையமகன் விஷயத்தில் காட்டிய பரங்கருணையும் காத்திருப்பும் நீங்கள் உங்கள் கணவன் விஷயத்திலும் காட்டித்தான் ஆகவேண்டும். நாளடைவில் அம்மனிதர் மனந்திரும்பி உங்கள் காலடியிலேயே வந்துவிடுவார்” நான் சொல்லி முடித்தேன்.

சிறிதுநேரம் மெளனமாய் நின்ற அவள் கேட்டாள்: “இது நடக்குமா சாமீ?” நான் அவளிடம் கண்டிப்பாக நடக்கும் என்றேன். மேலும் அவளிடம், “இங்கே உங்களுக்கும் ஒரு தவறு நேர்ந்துள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டினேன். பாவத்தில் விழுந்து சாத்தானின் அடிமையாக மாறிய உங்கள் கணவர் வீட்டுக்கு வந்தபோது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நீங்கள் நடக்கவில்லை. ஞானமோ விவேகமோ நீங்கள் காட்டவில்லை. அதிகாரத் தோரணையோடும் அடக்கமில்லாமலும் நீங்கள் பேசிய பேச்சினால் மறுபடியும் அவனைப் பாவம் செய்ய வைத்தீர்கள். இனி இணைய முடியாத அளவுக்கு உங்கள் உறவை இரு துருவங்களாக்கி விட்டீர்கள்.

முதலில் வேற்றிடத்திலும் பிறகு சொந்த வீட்டிலும், அதுவும் மனைவியின் கண்முன்னாலேயே விபச்சாரம் செய்யும் கடின பாவத்திற்கு அவன் ஆளாகி விட்டான். நீங்கள் நல்லவர்தான். ஆனால் அவன் செய்த இரண்டாவது பாவத்திற்கு உங்கள் ஞானமில்லாத பேச்சும் விவேகமில்லாத நடத்தையுமே காரணம். எந்தவோர் ஆணும் ஒரு பெண்ணுக்கு முன்னால், அதுவும் கட்டின பொண்டாடிக்கு முன்னால் சிறுமைப்பட விரும்பமாட்டான். தவறு செய்யும் கணவன்மார்களை தங்களின் அதிகாரத்தைச் செலுத்தித் திருத்தி விடலாம் என எந்த மனைவியும் தயவுசெய்து நினைத்துவிடக்கூடாது. அப்படி நினைத்தால் அதுவே அவனைத் திரும்பவும் பாவம் செய்யத் தூண்டிவிடும்.

மட்டுமல்ல, மனைவியின் மீதான வெறுப்பும் அதிகரிக்கும். “நாவினால் தவறு செய்யாதோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவங்களுக்கான மன உறுத்தல் இல்லாதவர்கள்” (சீரா 14:1). இங்கே உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு தவறு ஏற்பட்டிருக்கிறது. ஒருவன் தவறுசெய்துவிட்டு சொந்த வீட்டில் ஏறிவரும்போது அது அவனை உறுத்தும். யாரும் காணவில்லையாயினும் கடவுள் கண்டுள்ளார் என்னும் நெருடல் அவனைக் காயப்படுத்தும். அதை மனைவி கண்டுபிடித்துவிட்டாள் என்னும் அறிவு அவனை இன்னும் சொச்சைப்படுத்தும். அதன்பேரில் மனைவி தன்மீது குதிரையேறுகிறாள் எனத் தெரிந்தால் அவளைத் தோற்கடிப்பதற்காக அவன் மீண்டும் தவறு செய்யுமாறு அவனை அது உந்தும். இங்கே நடந்தது அதுதான். அவனது இரண்டாவது பாவத்திற்கு நீங்களே காரணம்.

இதைக்கேட்ட அவள், ‘இனி நான் செய்ய வேண்டியது என்ன?’ என வினவினாள். நான் அவளிடம், “எல்லாமே கைமீறிப் போயின என எண்ண வேண்டாம். பந்து இப்போதும் உங்கள் களத்தில் தான் உள்ளது. உங்கள் கணவன் கடைசியாகச் சொன்னானே; யாரோடும் எதுவும் சொல்லாமல் மானம் மரியாதயா அடங்கி ஒதுங்கி, ஜெபமாலையும் சொல்லி இங்கே இருந்துவிடு என்று. அதையே பிரம்மாஸ்திரமாக எடுத்துக் கொள்ளுங்கள். இனி யாரிடமும் இதைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம். வேலைக்காரிகளிடம், இதுபற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என சத்தியம் பண்ணிக் கேளுங்கள். உங்கள் கணவர் வீட்டுக்கு வரும்போது முன்விரோதம் எதுவும் இல்லாமல் நன்மதிப்போடும் பாச உறவோடும் அவருக்குப் பணிவிடை செய்யுங்கள். அதற்கான ஆற்றலைக் கடவுள்தருவார். ஜெபம், உபவாசம், பிராயச்சித்தம் போன்றவற்றால் உங்கள் கணவனின் ஆன்ம ஈடேற்றத்திற்காக இறைவனிடம் இடையறாது அழுது புலம்புங்கள். தக்ககாலத்தில் அவர் தலையிடுவார் என்பது நிச்சயம்.

விபச்சாரத்தால் அசுத்தமாகிப் பொலிவிழந்த படுக்கையறை இனி புனிதம் பெறுமா சாமீ? அவள் விசும்பலுடன் கேட்டாள். “ஒழுக்கம் தவறிய கணவன் ஒழுக்கமுள்ள மனைவியால் ஏற்புடையவன் ஆக்கப்படுவான்” என்னும் இறை வார்த்தையை நினைத்துக் கொள்ளுங்கள். இங்கே உங்கள் புருஷன் ஒழுக்கம் தவறி நடந்திருந்தாலும் உங்கள் கற்புக்குப் பங்கம் ஏற்படாதபடியால் உங்களுடைய மணவறை இதுவரை அசுத்தமாகிவிடவில்லை. எனவே அதற்காக வருந்த வேண்டாம். ஆனால் கூடுதலான ஞானமும் விவேகமும் பெறுவதற்காக ஜெபிக்க வேண்டும். பிரார்த்தனை, பிராயச்சித்தம், தானதருமம், பலிகள், காணிக்கைகள் போன்றவற்றால் புண்ணியம் சம்பாதிக்கப் பாருங்கள். அவளும் சம்மதித்தாள். நல்ல பாவசங்கீர்த்தனமும் செய்தாள். அகன்ற விழிகளுடன் துணிச்சலாக வீட்டை நோக்கி நடந்தாள்.

நான் ஆறுமாத அவகாசத்தில் அவ்விடத்திலிருந்து வேறொரு ஊருக்கு மாற்றப்பட்டேன். அவளுடைய கணவன் மனம் மாறி ஒரு தியானத்திற்குச் சென்றதாகவும் இன்று அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்வதாகவும் அறிய நேர்ந்தது!

ஞானதீபமே நடத்திடாய்!

நீங்கள் புறாக்களைப்போல் மாசற்றவர்களாகவும் பாம்புகளைப் போல் விவேகமுள்ளவர்களாகவும் இருங்கள் என்றார் நம் ஆண்டவர். கிறிஸ்தவ வாழ்வில் தாம்பத்திய உறவை நிலைநிறுத்த மாசற்றவர்களாக மட்டும் இருந்தால் போதாது. ஞானமும் அதற்கேற்ற விவேகமும் அவசியம். இவ்வறிவுரை மனைவிமார்களுக்கு மட்டுமல்ல; கணவன்மார்களுக்கும் சேர்த்துதான். தாம்பத்திய உறவில் மட்டுமல்ல; வாழ்க்கையின் எந்த நிலையில் இருப்பவருக்கும் அவசியம் வேண்டப்படுவது ஞானமும் விவேகமும் என்பதை நாம் அறிய வேண்டும். அதனால்தான் மன்னன் சாலமோனும் இம்மக்களை வழிநடத்த ஞானத்தையும் விவேகத்தையும் தமக்களிக்குமாறு மன்றாடினார்.

ஞானத்தையும் விவேகத்தையும் அள்ளித் தருபவர் கடவுளே. ஏனெனில் அவரே அதைத் தருவதாக வாக்களித்துள்ளார். “உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும். அப்பொழுது அவரும் ஞானத்தை கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்” (யாக் 1:5). ஞானம் கடவுளின் கொடை. உலகப் படிப்புகளால் அதை யாரும் பெற்றுவிட முடியாது.

“கடவுள் எனக்கு ஞானத்தை ஈந்தாலொழிய அதை அடைய முடியாதென்று நான் உணர்ந்து கொண்டேன். அது யாருடைய கொடை என அறிவது அறிவுத்திறனின் அடையாளம். எனவே நான் ஆண்டவரை வேண்டினேன். கெஞ்சி மன்றாடினேன்” (சாஞா 8:21). “ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்தே வருகிறது. அது என்றும் அவரோடு இருக்கின்றது” (சீரா 1:1). “கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார்” (சஉ 2:26).

ஞானம் ஒருபோதும் தனித்திருப்பதில்லை. அது விவேகத்தோடு இணைந்தே இருக்கிறது. “எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்பு காட்டுவேன். என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்” (நீமொ 8:17) ஞானம் தேடுவோர் முதலில் தங்களையே தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். “வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை. பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை” (சாஞா 1:4). ஞானத்தை நீ அடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி.

ஞானத்தின் ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார் : “நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. ஞானத்தோடு ஒப்பிடுகையில் செல்வம் ஒன்றுமே இல்லை என உணர்ந்தேன். உடல்நலத்திற்கும் அழகுக்கும் மேலாக அதன்மீது அன்பு கொண்டேன். ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்திவந்தது. அவற்றிலெல்லாம் நான் மகிழ்ந்தேன். ஏனெனில் ஞானமே அவற்றை வழிநடத்துகிறது. அதுவே அவற்றையெல்லாம் ஈன்றெடுத்தது என்பதை அறியாதிருந்தேன்” (சாஞா 7:7-12).

செபிப்போம் : ஞானதீபமே எங்களில் வந்து ஒளிர்ந்தருளும்.

– ஸ்டெல்லா பென்னி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *