அவர்களைத் திருப்பியது என்ன?

ஒரு குருவானவரும் அவரோடிருந்த சிலருமாக அக்கிராமத்திற்குச்சென்றனர். அதுவோ நாகரீகத்தின் சுவடேதும் பதியாத ஒரு சிற்றூர். அவர்கள் அங்கே இயேசுவை எடுத்துரைத்தனர். ஆனால் இதை விரும்பாத சிலர் அவ்வூரில் இருந்தனர். அவர்கள் கண்களில் தீ பறக்க, அவ்வூரில் வாழும் ஒருவரது வீட்டை முற்றுகையிட்டனர். அம்மனிதர் சமீபத்தில் தான் இயேசுவை ஏற்றுக்கொண்டிருந்தார். அவர் ஓர் ஏழையும் கூட. கோபம் கொண்ட அக்கும்பல் அவ்வேழை மனிதரின் வீட்டைச் சூறையாடியது. அங்கிருந்த பைபிள், கிறிஸ்துவின் ஓவியம் போன்றவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

ஆயினும் அந்த ஏழை மனிதர் நெஞ்சில் வீரத்தைத் தாங்கி அசராமல் நின்றார். எது நேர்ந்தாலும் இயேசுவை மறுதலிக்க மாட்டேன் என உறுதியுடன் கூறினார். கோபத்தின் உச்சிக்கே போன அக்கொலைகாரக் கும்பல் அம்மனிதனையும் அடித்துச் சித்திரவதை செய்தனர். ஆனால் அவ்வேழையோ எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஒவ்வொரு அடியையும் வாங்கிக்கொண்டே நின்றார். “என் உடல் அழிந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனால் என் ஆன்மாவை உங்களால் எதுவும் செய்ய முடியாது” என உறுதிபடக் கூறினார். அப்போது அவர்கள், “ஆன்மாவா, அது என்ன?” என்று விழிகள் விரிய விதந்து கேட்டனர். பின்னர் கலக்கம் மேலிட தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.

ஆன்மாவில் கிறிஸ்துவை மனதார ஏற்றுக்கொண்ட அந்த ஏழை மனிதர் இந்நிகழ்ச்சியை விவரித்தபோது கிறிஸ்துவை அவருக்குப் பழக்கப்படுத்திய குருவானவரின் கண்களில் நீர் வடிந்தது. அவர் தம் நெஞ்சோடு வினவினார்: “இத்துணை அலாதிக் கிறிஸ்து பாசம் உனக்குண்டோ என் நெஞ்சே?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *