அன்பால் நெய்தெடுத்த ஒரு போர்வையை நான் என் சகோதரனுக்குப் போர்த்த முடியும். அதற்காக நான் செய்ய வேண்டியது என்ன?
ஐம்பது ஏக்கர் வீதம் சொந்த நிலம் உடைய இரண்டு பணக்காரர்கள் அருகருகே தங்கியிருந்தனர். அவர்களுக்கிடையே ஒரு வழித்தகராறு. இருவரும் தனித்தனியே வழக்குத் தொடுத்தனர். நீதிமன்றங்களில் ஏறி இறங்கினர். இருவரும் ஓர் அங்குலம் கூட விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. பல ஆண்டுகள் வாதிட்டனர். கடைசியில் ஐம்பது ஏக்கர் என்பது குறுகிக் குறுகி ஐந்து ஏக்கர் ஆனது. அப்படியிருக்க, அவர்களின் பங்குக் கோயிலில் ஒரு தியானம் நடைபெற்றது. தியான குருவின் பரிந்துரையால் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வழி வேண்டும் என வழக்குத் தொடுத்தவர் இனி வழியே வேண்டாம் என்றார். தகராறு தீர்ந்ததே என தியான குருவும் ஆறுதலடைந்தார். உடனே வழி கொடுக்காமல் பிடிவாதம் பிடித்தவர், வழிகொடுக்க நான் தயார் என்றார். கீரியும் பாம்பும் போல் பகைமை கொண்டவர்கள் கட்டிப்பிடித்து உச்சிமோந்தனர். மன்னிப்புக் கேட்டு நல்ல அயலார்கள் ஆயினர். இவர்களை நல்வழிப்படுத்திய ஆயுதம் எது? இறைவார்த்தை. இறைவார்த்தையைக் கேட்ட போது பகைமை என்ற பிசாசின் கட்டுகள் நெகிழ்ந்தன. கடவுள் தமது அன்பென்ற அங்கியால் அவர்களைப் போர்த்தினார்.
இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடக்கையில் மீன்பிடிக்கும் இருவரைக் கண்டார். அவர்கள்தான் பேதுரு மற்றும் அந்திரேயா. “இயேசு அவர்களைப் பார்த்து, “என்பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்போராக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்” (மத். 4:19-20). இயேசு தமது அன்பின் வார்த்தையால் அவர்களைப் போர்த்தினார். அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு புதிய மனிதர்களாய் மாறினர்.
இறையனுபவங்கள் பெற்ற பின்…
தந்தை எமிலின் எழுதிய ‘அற்புதங்களே சாட்சி’ என்னும் நூலில் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். ஒரு சிறு பட்டணத்தில் கிட்டத்தட்ட ஐந்நூற்றுக்கும் அதிகமான விபசார விடுதிகள் இருந்தன. அதில் தங்கியிருந்த ஒரு பெண்ணின் வயிற்றில் புற்றுநோய். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் மரணம் அவளுக்காகக் காத்திருந்தது. சவப்பெட்டியில் பயன்படுத்த வேண்டிய துணிமணிகளுடன் அவளும் ஆயத்தமாக இருந்தாள். அப்போது பக்கத்திலுள்ள ஓர் ஆலயத்தில் தியானம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அவள் ஆலய மதிற்சுவரின் வெளியே நின்று தியான உரையைக் காதில் வாங்கிக்கொண்டிருந்தாள். ஆலயத்திற்குள்ளே நுழைவதற்கான தகுதி தன்னிடம் இல்லை என்பதை அவள் ஒப்புக்கொண்டாள். தியானத்தின் மத்தியில், “இதோ! ஒரு பெண்ணின் புற்றுநோயை ஆண்டவர் முற்றிலும் அகற்றுகின்றார்” என்று தியானகுரு ஒலிப்பெருக்கியில் முழங்கினார். மறுநாள் அப்பெண் ஆலயத்திற்குள் ஏறிச் சென்று சாட்சியாகச் சொன்னாள்: நான் ஓர் கணிகையான அயலைப் பெண். அதனால் ஆலயத்திற்குள் ஏறிவர அஞ்சினேன். ஆனால் வெளியிலே நின்றுகொண்டிருந்த என்னை ஆண்டவர் கண்ணோக்கினார். அவர் தம் கையை நீட்டி என்னைக் குணப்படுத்தினார். அவளுடைய சாட்சியத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பட்டணத்துப் பாவிகள் அனைவரும் மனந்திரும்பினர். கணிகையர் விடுதிகள் கடவுளின் கோவில்களாக உருமாற்றம் பெற்றன.
நமக்கும் எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இருந்தாலும் இதுவரை இறைவனுக்காக மனிதர்களைப் பிடிக்க முடிந்திருக்கிறதா? ஓர் ஆன்மாவையேனும் கிறிஸ்துவுக்காகத் திருப்ப முடிந்தால் நாம் அவருக்குப் புதையலை அல்லவா பரிசளிக்கிறோம்! ஆகவே, நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் இறையன்பு என்ற நெருப்பின் போர்வையால் பொதியுங்கள். அப்போது நீங்கள் இயேசுவைப் பின்பற்றுகின்றவர்களும், அவருக்கு வழி ஆயத்தம் செய்பவர்களும், அவருக்காக மனிதர்களைப் பிடிப்பவர்களாகவும் மாறுவீர்கள்.
– குந்நேல் அப்பச்சன்