உள்ளத்தைத் தேற்றும் ஒரு பச்சிலை!

நமது உள்ளங்களில் ஆனந்தத்தையும் நிம்மதியையும் விதைக்கக்கூடிய ஒரு பச்சிலை இருக்கிறது. அம்மருந்தைப் பயன்படுத்தும் விதம் குறித்து இக்கட்டுரையாளர் விவரிக்கிறார்.

 

விண்ணுலகம் செல்வதென்பது அவ்வளவு சுலபமல்ல என்பது நம் கணிப்பு. மனிதரால் இது இயலாதது தான். ஆனால் கடவுளால் எல்லாம் இயலும் (மத். 19:26). விண்ணுக்கு ஏறிவர கடவுள் நமக்குக் குறித்த காலம் எதுவென்று நாம் அறியோம். ஆனால் அன்பும் மனமாற்றமும் இருந்தால் விண்ணை நாம் சொந்தமாக்குவது சுலபம்.

லூக்கா நற்செய்தி 19-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படும் பெரும் செல்வந்தனாகிய சக்கேயு இயேசுவைப் பார்க்க விரும்பி அதற்காக வழியைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால் இயேசு அவர் வீட்டுக்கே வந்துவிடுகிறார். இயேசுவின் வலமாகவும் இடமாகவும் இரு கள்வர்கள் தொங்கிக் கிடக்கின்றனர். (லூக். 23:42-43). வலப்பக்கக் கள்வன், ‘இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும் போது என்னை நினைவிற்கொள்ளும்’ என்றான். உடனே இயேசு அவனுடைய பாவங்களை மன்னித்து, “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்கிறார். பாருங்கள்! அன்போடு அகங்குழைவோர்க்கு அவர் அருகிலே இருக்கிறார். அன்புக்கு அகப்படும் இயேசு, நம் அருகில் வந்து நம்மைக் கட்டி அணைத்து முத்தமிடுவார் என்பதை ஊதாரி மைந்தனின் உவமையால் உணர்ந்துகொள்ளுங்கள் (லூக். 15:21).

இயேசு என்பது மந்திரச் சொல். அதை இடையறாது உச்சரிக்கத் தெரிந்தால் அவன் ஞானி. அது எப்படி சாத்தியம்? ஓரிடத்தில் அமைதியாய் அமருங்கள். உங்கள் நுரையீரலின் நுண்ணறைகளை அவருக்கே அர்ப்பணியுங்கள். உதடுகள் அசையாமல் ‘இயேசுவே’ என அழையுங்கள். அன்பும் மனமாற்றமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். சுவாசத்தை உள்ளே இழுக்கும் போது இயேசுவே என்றும், வெளிவிடும்போது இயேசுவே என்பதை இரட்டிப்பான நீட்டமுடனும் உச்சரித்துக்கொள்ளுங்கள்.

இயேசு நமக்காக ஏற்றுக்கொண்ட துன்பங்களையும் அவர் நமக்குச் செய்யும் அருளுபகாரங்களையும் அமைதியாக தியானியுங்கள். பாவிகளைத் தேடி இப்பாருலகம் புகுந்த அப்பரமனை உள்ளூர எண்ணி இறும்பூது அடையுங்கள். இதுவே ஒரு சாதாரண மனிதனின் தியானம்.

இயேசு நாம மகிமை

‘ஆண்டவருக்கு நன்றி உரைப்பது நன்று; உன்னதரே உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று’ (திபா. 92:1). நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இறைவனின் திருப்பெயர் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது. இதை நம் உள்ளத்தில் இருந்துகொண்டே இடையறாது உச்சரிப்பவர் தூய ஆவியே. தந்தையிடமிருந்து புறப்படுகின்ற மிகவும் சுத்தமான அவ்வுயிர் மூச்சை நாமும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் ஒரு மென்மையான தியானம் அவசியமாகிறது.

“அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்… நாம் அவருடைய பிள்ளைகள்” (திப. 17:28). இந்நிலையைத்தான் நாம் தியானத்தில் அனுபவிக்கிறோம். மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகிற அதே தாளகதியில் இயேசு நாமத்தையும் உச்சரித்து இதயத்தில் பதித்துக் கொள்வோம்.

சில நாட்கள் தொடர்ச்சியாகப் பயின்றால் இத்தியானம் எளிதாகிவிடும். நடக்கும்போதும் உண்ணும்போதும் உறங்கும்போதும் விழிக்கும்போதும் இயேசு நாமத்தையே நம் உள்ளம் சொல்லிக் கொண்டிருக்கும். அப்போது ஆன்மீகமான ஒரு விழிப்புநிலை நமக்கு உண்டாகும். பிறகு நாம் செய்யும் செயலெல்லாம் அன்புடன் துலங்கும். மாணவர்கள் இதை பயின்றால் மனஓர்மை ஏற்பட்டு படிப்பும் நன்றாக வரும். நாம் நம்மை மறந்து அவர் தாளையே நினைக்கும்போது அன்றாடக் கஷ்டங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். நம்மைப் பீடித்த கெட்ட பழக்கங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் அகலும். நெஞ்சின் படபடப்பு குறையும். பதற்றம் நீங்கும். அன்றாடக் கடமைகளை ஆனந்தமாய் நிறைவேற்ற முடியும். ஏனென்றால், நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் இயேசு குடியிருக்கிறார்தானே!

இயேசுவை எப்போதும் அழைப்பவர்கள் உயர்ந்த பதவியில் அமர்ந்தாலும் தருக்கித்திரிய மாட்டார்கள். ஏனெனில் இந்தப்பதவி சொந்தமுயற்சியல்ல; இயேசுவின் அருளால்தான் கிடைத்தது என்பதை அவர்கள் அறிவர். வாழ்க்கையில் என்ன நேர்ந்தாலும் இது கடவுளின் அருளால் நிகழ்ந்தது; எல்லாப் புகழும் அவருக்கே எனச் சொல்ல முடியும். இயேசு நம்மில் இருந்தால் பயம் நம்மை அணுகாது. நமது ஆன்மா உடலை விட்டு வெளியேறும்போது ‘தந்தையே இதோ நான்’ எனக்கூறி இயேசுவோடும், அன்னை மரியாவோடும், வானதூதர்களோடும் விண்ணில் நுழைய கடவுள் அனுமதிப்பார்.

– டாக்டர் ஜே. காட்டுகாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *