ஒரு கார் வந்த வழி!

‘ஷாலோம் டைம்ஸ்’ என்ற இவ்வான்மீக இதழைப் பாரெங்கும் பரப்ப விரும்பி, மக்களின் பிறந்த நாள் கேளிக்கைகளைத் தவிர்க்கத் துணிந்த இக்கட்டுரையாளர் கண்ணாரக் கண்ட அற்புதங்கள்!

 

நாட்டையும் வீட்டையும் விட்டுவிட்டு, பெருங்கடலைத் தாண்டி ஆஸ்திரேலியாவின் கரையோரத்தை அடைந்த போது அடைக்கலமாய் இருந்தது கடவுளின் பாதங்கள் மட்டுமே. அவர் என்னைக் கண்மணிபோல் பேணி வளர்த்த அனுபவங்கள் பலவற்றை நானங்கே கண்கூடாகக் கண்டேன். அப்படிப்பட்ட ஓரனுபவத்திற்கு 2012 ஏப்பிரல் 30 சாட்சியாயிற்று.

அன்று என் மூத்த மகளுக்குப் பிறந்த நாள். விழாவின் கேளிக்கைகள் அனைத்தையும் வேண்டாமென வைத்து விட்டு, கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாலோம் டைம்ஸ் இதழ்களை அங்குள்ள குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காகச் சென்றோம். “ஒரு பப்பாளியும் கொஞ்சம் ஆசீர்வாதங்களும்” என்ற ஒரு கட்டுரை தான் என்னை இத்தகைய ஒரு கைங்கரியம் செய்யுமாறு தூண்டியது.

அதை ஒரு பெரிய நிகழ்ச்சியாகவே நடத்தினோம். அவ்வூரின் பங்குத்தந்தையை வரவழைத்து அவருடைய ஆசீர்வாதத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. இதன் செலவுகளுக்காக எங்கள் வருவாயின் பத்திலொன்றை ஒதுக்கியிருந்தோம். முதல் காசோலை (Cheque) எழுதி ஷாலோம் அலுவலகத்திற்கு அனுப்ப ஒரு கடிதத்துடன் இணைத்து மேசையில் வைத்தேன். அதற்குள் சற்றே கண்ணயரலாம் என்றெண்ணி கட்டிலில் சாய்ந்தேன். கைப்பேசி சிணுங்கியது…! பக்கத்திலுள்ள Traning Institute -லிருந்து அழைப்பு வந்திருக்கிறது. பயிற்சியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வுக்கு வருமாறு வந்த அழைப்பு அது.

சமீப காலத்தில் நான் எந்த அலுவலகத்திற்கும் வேலைக்காக விண்ணப்பித்திருக்கவில்லை. ஆனால் பல மாதங்களுக்கு முன் சில பயிற்சி நிறுவனங்களுக்கு மனு போட்டிருந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது. அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நேர்காணல். நேர்காணல் முடிந்த கையோடு பணிநியமன ஆணையும் கிடைத்தது. ஒரு வார அவகாசத்தில் நான் பணியில் சேர்ந்தேன். முதல் நாளிலேயே ஒரு காரின் சாவியும் பெட்ரோல் போடுவதற்கான அட்டை (Card) யும் எடுத்து மேலாளர் எனக்கு நீட்டிய போது உண்மையில் நான் நெகிழ்ந்து போனேன்.

ஆஸ்திரேலியா போன்ற ஒரு நாட்டில் சொந்த வாகனம் இல்லாமல் வாழ்வது கடினம். சில மாதங்களுக்கு முன்தான் என் மனைவி ஒரு கார் வாங்குவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள். அப்போது நான் அவளிடம் சொன்னது இதுதான்: “இவ்வாண்டில் நமக்கிருக்கும் பட் ஜெட்டின்படி எதாவது ஒரு காரியத்தைத்தான் செய்ய முடியும். ஒன்று கார் வாங்குவது; அல்லது ஊருக்குச் சென்று வயதான நம் பெற்றோரைப் பார்ப்பது. எது வேண்டுமென நீயே தீர்மானித்துக்கொள்”. அவள் மறுமொழியாக, “நமது தேவைகளை விட்டுவிடுவோம். நடக்க வேண்டியதை அவரே பார்த்துக் கொள்ளட்டும்” என்றாள்.

பொதுவாகவே ஒரு பயிற்சியாளரின் தனிப்பட்ட தேவைகளுக்காக கார் வழங்கப்படுவது கிடையாது. ஆனால் இந்த நிறுவனத்தில் மட்டும் இப்படி ஒரு சலுகை. மேலாளர் என்னிடம் சாவியைத் தந்து சொன்னார்: “விக்டோறியா மாநிலத்திற்கு வெளியே செல்ல வேண்டுமென்றால் மட்டும் என்னிடம் அனுமதி பெற வேண்டும்” நாங்கள் விக்டோறியா மாநிலத்தில் தான் தங்கியிருந்தோம். அப்போது நான் என் மனைவி சொல்லியிருந்ததை நினைத்துப்பார்த்தேன்.

பொருளாதார மந்த நிலையின் காரணத்தால் பலரும் வேலையை இழந்து கொண்டிருந்த சூழ்நிலையில் நான் எனக்குக் கிடைத்த துச்சமான வருவாயில் ஒரு பகுதியை ‘ஷாலோம் டைம்ஸ்’ இதழைப் பரப்புவதற்குச் செலவிட்டேன். இதனால் கடவுளின் பராமரிப்பை ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல என்னால் உணர முடிந்தது. சமூக ஊடகத் துறையில் மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் செயலாற்றுவதற்கான வாசல்களைக் கடவுள் எனக்காகத் திறந்தார். ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தகுந்த நேரத்தில் கடவுள் தலையிடுகிறார். ‘அஞ்சாதே நான் உன்னோடு இருக்கிறேன்’ எனக் கூறியவரின் கரங்களை இறுகப் பற்றி நடந்தால் ஆகாதது எதுவும் இல்லை. என்றும் வாழும் நம் கடவுள் நம் மீட்பை முன்னிட்டு நம் அழைப்புக்காகக் காத்திருக்கிறார்.

நாம் அவரது அன்பை உணர்ந்தோமானால் அவரது நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். “தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” (யோவா 20:21) என்றார் நம் ஆண்டவர். அவர் நம்மையும் அனுப்புகிறார். அவரது அன்பின் செய்தியைச் சுமந்துசெல்ல நாமும் ஆயத்தமாவோம்.

என்னுடைய அனுபவம் அன்பான வாசகர்களின் வழியில் ஒரு சிறு வெளிச்சமாகட்டும். “என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ தாயையோ தந்தையையோ பிள்ளைகளையோ நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும் இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்” (மாற். 10:29-30). ஆம். நற்செய்திக்காக நாம் செய்யும் சிறு தியாகத்தைக்கூட ஆண்டவர் தம் கணக்கில் வைப்பார் என்பது உறுதி.

– ஜோணி சி. மற்றம், ஆஸ்திரேலியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *