துன்பங்களை எளிதாக்கும் எளியவழி!

துன்பமே இல்லாத வாழ்க்கை எதுவுமில்லை. ஆனால் அத்துன்பங்களின் தீவிரத்தை எளிதாக்க சில வழிமுறைகள் இருக்கின்றன.

 

வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களை நாம் அற்புத கண்களோடு ஏறிட்டுப் பார்ப்பதுண்டு. இவர்களால் இது எப்படி சாத்தியமாயிற்று என வியப்பதும் உண்டு. ஆனால் நம்மாலும் அத்தகைய சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதே அவர்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம். அவர்களுக்கு ஆகுமென்றால் எனக்கேன் ஆகாது என்னும் ஒரு சவாலை எதிர்கொள்வதே இங்கு முக்கியமானதாக இருக்கிறது. சவாலை எதிர்கொள்வது எப்படியென்றால் அவர்கள் நடந்த பாதையில் நாமும் நடக்க வேண்டும்; அவர்கள் பட்ட கஷ்டங்களை நாமும் பட வேண்டும். நம்முடைய ஊராம்புறங்களிலிருந்து புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட சாவறை அச்சனுடைய வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நம்முடைய மண்ணிலிருந்தும் புனிதர்களாக விண்ணில் விளங்க முடியும் என்பதற்கு இவர் ஒரு பதச்சோறு. எனவே, இப்புனிதரின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இக்கட்டுரையின் நுவல்பொருளாக்குவோம்.

வெற்றியின் சில இரகசியங்கள்

ஒருவர், தம்மைக் குறித்து கடவுள் வைத்திருக்கும் திட்டங்கள் என்னென்ன என்பதை முதலில் அறியவேண்டும். பிறகு அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையைக் கட்டமைக்க வேண்டும் அதைத் தான் கடவுள் விரும்புகிறார். சாவறை அச்சன் தமது வாழ்க்கையின் அழைத்தலை அறிந்தார். இதுவே அவரது வெற்றியின் முதற்படி ஆயிற்று. அவ்வழைத்தல் என்பது, தமக்கு உயிரும் உடலும் தந்த இறைவனுக்கு தமது வாழ்க்கையை அர்ப்பணித்து விடுதலே ஆகும். இவ்வர்ப்பணித்தல் கிறிஸ்துவுக்காக ஒரு குருவாக மாறிவிடுவதன்மூலம் நிறைவேற்ற முடியும் என்பதையும் அவர் உள்ளூர உணர்ந்தார்.

இலட்சியம் எதுவென அடையாளம் தெரிந்தால் அதை அடைவதற்காக முழு மனத்துடன் போராட வேண்டும். நமக்கிருக்கும் எல்லா ஆற்றல்களையும் அதற்காகச் செலவிட வேண்டும். Concentrate என்னும் சொல் இதை நுட்பமாக விளக்குகிறது. அதாவது ஒரு மையப்புள்ளியில் எல்லாத் திறமைகளையும் ஒருங்கிணைப்பது.

புனித பவுல் தமக்குக் கிடைத்த அழைப்பைப் பற்றியும் அதை அடைய அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றியும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். “பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன் கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்” (பிலி 3:14). இலட்சியத்தைப் பற்றிய நினைப்பு பிறவற்றை மறக்கச் செய்யும். அதனால் தான், “கடந்ததை மறந்து விட்டு முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு ஓடுவதாக புனித பவுல் குறிப்பிடுகிறார்.

இலட்சிய ஓட்டத்தில் தடைகள் குறுக்கிடுவது இயல்பு. ஆனால் தடைகளையும் தாண்டி ஓடவேண்டும் என்பதே முக்கியம். சாவறையச்சன் தமது ஆவலைப் பூர்த்தி செய்வதற்காகக் குருமடத்தில் சேர்ந்தார். ஆரம்பத்திலேயே அவரது இலட்சியப்பாதையில் ஒரு சில தடைகள் குறுக்கிட்டன. அதில் கடுமையானது அவரது பெற்றோர் மற்றும் சகோதரனின் பிரிவு. ஆம். அவ்வூரில் ஏற்பட்ட ஒரு தொற்றுநோய் அவரது பெற்றோரையும் மூத்த சகோதரனையும் காவுகொண்டு போனது.

ஏன் அவர் பதறவில்லை?

எத்தகைய கரம்யோக சாதகரும் கலங்கிப்போகிற தருணம் இது. அவரது மனமும் ஆடிப்போய் இருந்தது. நான் கடவுளின் ஊழியத்திற்காகத்தானே வந்தேன்? இருப்பினும் எனக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது? இப்படிப்பட்ட சிந்தனைகளால் அவரது உள்ளம் உடைந்தது. கடவுளின் அன்பும் அவரது அழைப்பும் ஒரு கேள்விக்குறியாய் மாறிற்று. நெருங்கிய உறவினர்களோவெனில் அவரிடம் வந்து, குருமடத்தை விட்டுவிடும்படி ஆலோசனை கூறினர். ஏனெனில் சாவறை அச்சனுக்கு இறையழைத்தல் இருக்க வாய்ப்பில்லை என அவர்கள் முடிவு செய்தனர். ஆகவேதான் வீட்டுக்கு வந்து வீட்டின் பொறுப்புகளை ஏற்கும்படி அறிவுரை கூறினர். ஒருவகையில் இது சரியான முடிவுதானே?

இடையூறுகள், ஐயப்பாடுகள், துன்பதுயரங்கள் போன்றவை எல்லா மனித வாழ்விலும் சகஜம்தான். ஆனால் சிலர் அதிலே துவண்டுபோய் வாடி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தோல்வியைத் தழுவுவது தவிர்க்க முடியாதது. ஆனால் வெற்றியாளர்கள் எத்தகைய இக்கட்டான சூழலையும் கடந்துபோய் விடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் கடவுள்பால் தங்கள் முகத்தைத் திருப்புகின்றனர். கடவுளிடமே ஆலோசனை கேட்கின்றனர். மணிக்கணக்காகவும் மாதக்கணக்காகவும் கடவுளிடம் முறையிட்டு மன்றாடுகின்றனர்.

பயணத்தின் போதான அலுப்பை ஆற்ற இது வழிவகுக்கும். பின்னர் கழுகுகளைப் போல் புத்துயிர் பெற்று புதுப்புலரியின் சிவந்தவானில் சிறகடித்துப் பறக்க முடியும். மன்னன் தாவீது இவ்வுண்மையை நன்றாக உணர்ந்திருந்தார். ஆகவேதான் அவர், “உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன். என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்” (திபா 18:29) என உறுதியாகக் கூறுகிறார்.
தமது வாழ்க்கையில் ஏற்பட்ட அல்லல்களிலிருந்து கரையேறுவதற்காக சாவறை அச்சனும் இதைத்தான் செய்தார்.

அவர் கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்தார். உறவினர்கள் வந்து அவரது இலட்சியத்தைத் திசைதிருப்ப நினைத்தபோதும் அவர் கடவுளின் பதிலுக்காகக் காத்திருந்தார். பல நாட்கள் ஜெபத்திலேயே நிலைத்திருந்தார். இறுதியில் கடவுளின் திருவுளம் வெளிப்பட்டபோது ஆனந்த கண்ணீர் வடித்தார். அப்போது புதிய அபிஷேகத்தால் நிறைந்தார். வலிமை பெற்றார். உள்ளத்தை வாட்டி வதைத்த ஐயப்பாடுகளை அகற்றி, மீண்டும் கர்ம உலகில் களம்புகுந்தார். தமது வீட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றி முடித்தார். அதற்குப்பின் தமது இலட்சியத்தை எட்டிப் பிடிப்பதற்காகக் குருமடப் படிப்பைத் தொடர்ந்தார்.

எளிதாய் மாறிய சூழல்கள்

துன்பங்கள் மனித வாழ்வோடு ஒட்டிப் பிறந்தவை. ஆனால் சிலர் தங்களோடு ஒட்டிக் கொண்டிருந்த இடும்பைக்கே இடும்பை செய்து அவற்றைத் தோற்கடித்தனர். இது கடவுளின் அருளாலேயே சாத்தியமானது. அவர்கள் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை இறைவனின் கண்களாலேயே நோக்கிக் கண்டனர். மனிதக் கண்களுக்குத் துன்பங்கள் பொருளற்றவையும் உபத்திரவம் செய்வனவுமாய் மட்டுமே தென்படும். அதனால் ஏற்படுவது முணுமுணுப்பும் ஆவலாதிகளும்தான். எவ்வளவுதான் அங்கலாய்த்துக்கொண்டாலும் துன்பங்களைத் தவிர்க்க முடிகிறதா? துன்பங்களைத் தீரமுடன் எதிர்கொள்ளாமல் அங்கலாய்த்துக்கொண்டே சகிக்க நேர்ந்தால் மனஅமைதி பறிபோய்விடும்.

ஆனால் அவற்றைப் பற்றிய இறைவனின் திட்டத்தைப் புரிந்துவிட்டால் எல்லாமே எளிதாகத் தோன்றும். அதனால் வரும் துன்பங்களும் லேசாகத் தெரியும். உள்ளத்தில் அமைதி பிறக்கும். இதனால் கடவுளின் திருவுளமும் நிறைவேறும். சாவறைக் குறியாக்கோஸ் அச்சனை இங்ஙனமான துன்பத்தின் தீச்சூளையில் நடத்திய கடவுள், அவரை ஒரு கர்ம வீரராக மாற்றினார்.

பிற்காலத்தில், கேரளத் திருச்சபையில் புரையோடிக்கிடந்த சீர்கேடுகளைக் களையவும், அத்திருச்சபைக்கு தம்மாலான சிறந்த பங்களிப்பை ஆற்றவும் கடவுள் சாவறை அச்சனை ஏற்கனவே வலுப்படுத்தியிருந்தார். தீயில் முளைத்தது வெயிலில் வாடாது என்பது பழமொழி. அதற்கேற்ப, உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களின் தீச்சூளைகள் வருங்கால வாழ்வுக்கான சிறந்த உத்திரவாதம் என்பதை நம்புங்கள்.

சாவறை அச்சனின் அன்புப் பெற்றோரை அவரது இளவயதிலேயே கடவுள் தம்பால் எடுத்துக்கொண்டதன் மூலம் இப்பூமியில் அவர் சார்ந்திருக்க தம்மையன்றி வேறொரு கொழுகொம்பு இல்லை என்பதை வலுவாக உணர்த்தினார். பரமபிதாவையே அப்பா எனக் கூப்பிடுமாறு தம்மையே கடவுள் அவருக்கு உவந்தளித்தார். இங்ஙனம் கடவுளில் தஞ்சம் கொள்ளுமாறு அவருக்குக் கற்பித்தார். துன்பங்களில் துவளாமல் ஆலோசனை கேட்க இம்மண்ணில் வேறொரு தகப்பனைத் தேடவேண்டாம் என்பதைத் தெரிவித்தார்.

எல்லாவற்றையும் இறைவனின் திருமுகத்தை நோக்கியே விவாதித்திருந்த காரணத்தால் மலைபோன்ற பிரச்சனைகளையும் ஒரு மடுபோல் அணுக அவருக்குத் தைரியம் தந்தது. அப்படித்தான் அவர் அன்புக்குரிய சாவறை அச்சனாய்க் கேரள தீரத்தில் பரிமளித்தார்.
அம்மாவையும் முன்கூட்டியே கடவுள் அவரிடமிருந்து எடுத்துக்கொண்ட படியால் சாவறையச்சன் ஒரு மரிய பத்தனாகவும் பாரினில் வலம்வந்தார். புனித ஜாண் பால் பாப்பரசரின் தாயார் வையுலகை விட்டு எடுக்கப்பட்டபோது அவரும் மாதாவையே சொந்த அன்னையாய் வரித்துக்கொண்டார். ‘அம்மா, நான் முழுதும் உமக்கே சொந்தம்’ என்று சாவறை அச்சனும் அன்னை மரியாவிடம் சொன்னார். அவர் நிறுவிவைத்த இரண்டு மடாலயங்களும் மாதாவின் பெயரிலேயே அமைந்திருக்கிறது என்றால் இவ்வச்சனின் மரிய பக்தியே காரணம்.

விண்ணில் மிளிரும் சாவறை அச்சன்

புண்ணிய பாதையை எட்டிப் பிடிக்க வேண்டுமானால் அன்னையின் கரங்களைப் பற்றி நடக்க வேண் டும். மாதாவை மறுதலிப்போர் கடவுளையே மறுதலிக்கிறார்கள். ஏனெனில், ‘இவரே உன் தாய்’ என்பதே அவருடைய இறுதி வாக்குகள். இறைவன் தமது அரும்பரிசாய் அன்னையைத் தந்திருந்தும் அதை ஏற்காமல் ஆண்டவரை மட்டும் அறைகூவி அழைப்பது முரண்நகை அல்லவா?

கேரளத் திருச்சபையிலிருந்து பலபேரைக் கடவுள் புனிதப் பதவிக்கு உயர்த்துவதன் மூலம் அவர் நம்மிடம் உறவாடுகின்றார் என்பது தெளிவு. ஒரு காலத்தில் புனிதர்கள் என்னும் பரமநிலை ஐரோப்பிய தேசத்தார்க்கே உரித்தது என எண்ணியிருந்தோம். ஆனால் இன்று அவ்வுயர்நிலை வெறும் கைக்கெட்டும் தூரத்தில் என்பதை அல்போன்சம்மாளும் சாவறையச்சனும் நிரூபித்துவிட்டனர். அவர்களைப்போல் நாமும் நமது வாழ்க்கையை மங்கலப் பொருளாக்க வேண்டும். அதற்காக மனமுருகி ஜெபிப்போமாக?

ஓ என் இயேசுவே, நீர் என்னை அன்பு செய்கிறீர். நான் உம்மை வந்தடைய வேண்டுமென்பதை நீர் மிகவும் விரும்புகின்றீர். என் வாழ்க்கையில் குறுக்கிட்டு நிற்கும் குறைகளையெல்லாம் நீர் எடுத்துமாற்றும். விண்ணை மட்டுமே இலக்காகக் கொள்ள நீர் எனக்குக் கற்பியும். நீர் உம் தூய ஆவியை அனுப்பி உம்மை மட்டுமே எண்ணுமாறு செய்யும். நான் எப்போதும் உம்மை அறியுமாறு நீர் எனக்கு அருளும். அன்னை மரியே, சூசையப்பரே, காவல் தூதரே எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். ஆமேன்.

– கே.ஜே. மாத்யூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *