கண்ணீரில் தோய்ந்த திருப்பாடல்

கடவுளின் ஊழியனாக மாறுவதற்கான தகுதி எதுவும் எனக்கில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் நீங்கள் அவருக்குத் தேவை. நற்செய்தி யாருடைய புத்தியிலும் உதித்தது அல்ல. எனவே தூய ஆவியின் அபிஷேக அக்கினி யாருக்குக் கிடைக்கிறதோ அவர் அதை வெற்றிக்கனியாக மாற்ற முடியும்.

 

சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து தேசத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் உரையாற்றவந்தார் ஒரு பழம் பெரும் பாடகர். அவர் உரையாற்றி முடிந்ததும், ‘நான் இந்த அவையில் ஏதேனும் செய்யவேண்டியிருக்கிறதா?’ எனக்கேட்டார். அப்போது முதியவர் ஒருவர் எழுந்து 23-ம் திருப்பாடலை இசையுடன் பாடலாமா? எனக்கேட்டார். இதனால் மனமகிழ்ந்த அந்த இசைப்புயல் பாடுவதற்கு ஒப்புக்கொண்டார். நான் பாடிமுடிந்தபின் நீங்களும் அதைப்பாட வேண்டுமென அம்முதியவரைக் கேட்டுக்கொள்ளவும் செய்தார். பிறகு நல்லதோர் இசையில் 23-ம் திருப்பாடலாகிய இடையகீதத்தைப் பாடினார்.

பாடலைக் கேட்ட அவையார் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். அதற்குப்பின் அம்முதியவர் எழுந்து தாரை, தப்பட்டைஏதுமின்றி அத்திருப்பாடலைத் தமது குரலில் சன்னமாகப் பாடினார். பாடல் முடிந்தது. யாரும் கைதட்டவில்லை. ஆனால் யாருடைய முகத்திலும் எந்தச் சலனமும் இல்லை. எனினும் எல்லாருடைய கன்னங்களிலும் கண்ணீர் வழிந்துகொண்டிருக்கிறது. பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த இசைப்புயல் எழுந்து, “எனக்கு இடையகீதம் தான் தெரியும்; ஆனால் இவருக்கோ இடையனை நன்றாகத் தெரியும்” என்றார்.

அபிஷேகமுள்ள ஒருவர் அருகிருந்தால் கூட அநேகருடைய உள்ளங்கள் அதிரும். அனுபவத்தினால் வரும் சொற்பொழிவுகள் பலருடைய இதயங்களை விரைவில் சென்று தொடும். இயேசுவின் சீடர்கள் பட்டறிந்த உண்மைகளைத்தான் உலகிற்குச் சொன்னார்கள். சமாரியப் பெண் தன்னுடைய அனுபவத்தை அறிவித்தபோது அந்தப் பட்டணத்தார் அனைவருமே அவரிடம் வந்தனர்.

“பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும் அரும் அடையாளங்கள் அருஞ்செயல்களின் வல்லமையாலும் செய்துமுடித்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேச நான் துணியமாட்டேன். இவ்வாறு எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன். கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என் நோக்கமாய் இருந்தது” (உரோ. 15:18-20). நாம் எவ்வளவுதான் பெரிய சொற்பொழிவாளர்களாக இருந்தாலும், மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்தாலும் புத்திக்கூர்மையோடு மிளிர்ந்தாலும் கடவுள் நம்மை ஏற்றுக்கொண்டாலன்றி வெற்றி கிடைக்காது.

நம்முடைய திறமைகளின் அடிப்படையிலோ, கடந்தகால அனுபவங்களின் வெளிச்சத்திலோ அல்லது அறிவுகளின் பக்கபலத்திலோ வெற்றிகரமான ஆன்மீக ஊழியங்கள் சாத்தியப்படுவதில்லை. அவற்றிற்கும் மேலாகக் கடவுளின் கையொப்பம் அவசியம். சொந்த முயற்சியால் பரலோக வெளிச்சத்திலிருந்து ஒரு சிறு பொறியைக்கூட நாம் பெற்றுவிட முடியாது.

நற்செய்தி மனித குல மீட்புக்காகவே வழங்கப்பட்டுள்ளது. அதன் ஏடுகளில் விரசமான வரிகள் ஏதுமில்லை. எனவே நற்செய்தி ஊழியர்களாகிய நாம் அலுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நாமும் நம்மைச் சுற்றிய உலகமும் அழிந்துபோகாதவாறு அருளப்பட்ட அருமருந்தே இந்நற்செய்தி. நோய் வாய்த்தவர்களுக்கு மருந்து மறுப்பது எப்படியோ அப்படியே நற்செய்தியை அறிவிக்காமல் இருப்பதும். “நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்பட மாட்டேன். ஏனெனில் அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும் அடுத்து கிரேக்கருக்கும் அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் அந்த மீட்பு உண்டு” (உரோ. 1:16).

அபிஷேக அக்கினியின் விளைவு

நெருப்பின் இயல்பை உடையதே நற்செய்தி. “என் சொல் தீயைப் போன்றது அல்லவா? பாறையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது அல்லவா? என்கிறார் ஆண்டவர்” (எரே. 23:20). ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அவர்கள் இப்படிப் பேசியதால் நான் உன் வாயில் வைக்கும் என் சொற்கள் நெருப்பாகும். உன் வாயில் வைத்த அவை மரக்கட்டைகளாகிய இம்மக்களை எரித்துவிடும்” (எரே. 5:14). நற்செய்தியின் நெருப்பால் எரியும் ஓர் ஊழியர் அபிஷேகத்தின் தீப்பொறி பெற்றவராவார். அக்கினிக் குஞ்சாகிய தீப்பொறி ஒரு காட்டையே அழிக்க வல்லது. ஆகவே நெருப்பால் எரியும் ஊழியக்காரர்களால் நற்செய்தியின் அக்கினி அவனியெங்கும் பரந்தெரியும் போது உலகம் மீட்புப்பெறும்.

எம்மாவுக்குச் செல்லும் வழியில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட இரண்டு சீடர்களின் உள்ளம் பற்றி எரிந்தது. எரிந்த உள்ளத்தோடு அவர்கள் தங்கள் வீடுகளுக்கு ஏகினர். பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு நிகழ்த்திய நெருப்புச் சொற்பொழிவினால் ஆயிரக்கணக்கானவர்களின் உள்ளங்கள் பற்றி எரிந்தன. இவ்வபிஷேக அக்கினியால் ஆன்மீக விழிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. ஆன்மீக விழிப்பினால் ஆன்மீக எழுச்சி ஏற்படும் என்பது திண்ணம்.

ஆட்ஸ் நகரத்துப் பங்குத்தந்தையாய் இருந்த தந்தை மரியவியானியின் சொற்பொழிவு சொல்வன்மை படைத்ததாக இருக்கவில்லை. நயமான இலக்கிய இனிமைகளும் அதில் வெளிப்படவில்லை. இருந்தாலும், ‘மக்களே, கடவுள் அன்பாக இருக்கிறார்’ எனப் பீடத்தின் முன்னின்று அவர் முழங்கிய போது அங்கிருந்தவர்கள் தேம்பி அழுதனர். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு என்றார் இயேசு (யோவா. 5:35). எலியா நெருப்புச் சுவாலையாய்ப் பற்றி எரிந்தார். அவருடைய வார்த்தைகளில் அனல் பறந்தது. ஆகவே, ஊழியக்காரர்கள் ஒவ்வொருவரும் உறைந்து போன வீதிகளில் பந்தமாகப் பற்றி எரிய வேண்டும்.

திருத்தூதர்கள் தூய ஆவியின் வல்லமையால் செயலாற்றிய போது கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. அதே ஆவியால் நாமும் செயல்பட்டால் அவருடைய வல்லமையை உணர முடியும். தூய ஆவியார் நமக்குள்ளே பற்றி எரியும்போது நம் உள்ளுயிர் ஒளிபெறும். அப்போது தூய நெருப்பின் சோபையால் நாம் இறைவனின் சாயலாக மாறி ஆர்வத்தால் எரிவோம். அப்போதுதான் நமது ஊழியத்திலும் அதிசயங்கள் வெளிப்படும். கடவுளுக்குப் பயனுள்ளவர்களாக மாறுவதும் அப்போதுதான். கடவுளின் அக்கினி சீனாய் மலையில் இறங்கியபோது மோசேவின் முகம் மிளிர்ந்தது!

சில முன் மாதிரிகள்

பைபிளில் காணப்படும் மிகச் சிறிதானதும், ஆனால் அதிக பலனை ஏற்படுத்தியதுமான சொற்பொழிவு யோனாவினுடையது. மனந் திரும்பாவிடில் நினிவே அழிக்கப்படும் என இறைவாக்கினர் முழங்கிய போது அம்மக்கள் அவருடைய வார்த்தைகளை நம்பி உபவாசத்திற்கு அழைப்பு விடுத்தனர். விலங்குகள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் உபவாசமிருக்க வேண்டுமென்பது அரச கட்டளை ஆயிற்று (யோனா. 3:4-10).

புனித வின்சென்ட் உரையாற்றச் செல்லுமுன் பலமணி நேரங்கள் சிலுவைக்கு முன்னால் ஜெபிப்பது வழக்கம். ஒரு தடவை பேரறிஞர் ஒருவர் இவரது உரையைக் கேட்க வருகிறார் என அறிந்து, வின்சென்ட் விஷயங்களை நன்றாக மனப்பாடம் பண்ணித் தகுந்த ஆயத்தத்துடன் சென்றார். ஆனால் கடவுளிடம் ஜெபிக்காமல் சென்று விட்டார். அன்று அவருடைய உரை கிஞ்சித்தும் ஜொலிக்கவில்லை. யாரது உள்ளத்தையும் ஈர்க்கவில்லை. இறைஞானத்தால் நிறையாமல் தனது அறிவு ஞானத்தை மட்டும் நம்பிய வின்சென்ட் வெட்கப்பட்டார். கடவுளிடம் மன்னிப்பு கேட்டார். மறுநாளும் அந்த அறிஞர் அவரது உரையைக் கேட்க வந்திருந்தார். அன்றைய உரையைக் கேட்ட அறிஞர், “நேற்று, தந்தை வின்சென்ட் பேசினார்; ஆனால் இன்று வின்சென்டின் வாயிலாக இயேசு பேசினார்” எனக் கருத்துத் தெரிவித்தார்.

இயேசு அவர்களை நோக்கி, ‘உலகெங்கும் சென்று படைப்புக்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்’ என்றார் (மாற். 16:15). இவ்வார்த்தைகளை அப்படியே பின்பற்றிய புனித பிரான்சிஸ் ஆகாயப் பறவைகளிடமும் வயல் வெளிப் பூக்களிடமும் காட்டு விலங்குகளிடமும் கடலில் வாழும் மீன்களிடமும் சென்று இயேசுவின் நற்செய்தியைப் போதித்தார். புனித பிரான்சிஸ் சேவியர், ‘எனக்கு ஆன்மாக்களைத் தாருங்கள்; மீதமெல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற விண்ணப்பத்துடன் நாடுகள் பல சுற்றிநடந்தார். இவர்தான் மறைபரப்பாளர்களின் பாதுகாவலராக அறியப்படுகிறார். இறைவார்த்தையை அறிவித்து அற்புதங்களை நிகழ்த்திய புனித அந்தோணியாரின் நாக்கு இப்போதும் அழுகாமல் இருக்கிறது.

நற்செய்தியை அறிவிக்கும் போது…

நமது சொற்பொழிவுகள் இலட்சக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தாலும், ஆவேசத் திமிர்ப்புடன் நமது பணிகள் இருந்தாலும் அதைத் தூய ஆவியார் ஏற்கவில்லையென்றால் எப்பயனும் இல்லை. நம்முடைய முயற்சிகளுடன் கடவுளின் வல்லமையும் அவசியம் இருக்க வேண்டும். போதகர்கள் தூய ஆவியின் கட்டுப்பாட்டில் வந்தால் மட்டுமே அவர்களுடைய போதனைகளில் தூய ஆவியின் வல்லமை வெளிப்படும். ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால் அவருடைய பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும்” (1 பேது 4:11).

ஒவ்வொரு நற்செய்திக் கூட்டத்தின் முடிவிலும் மக்கள் கண்ணீர் விட்டு அழ வேண்டும். நம்முடைய திருநாட்கள், நவநாட்கள் போன்ற அனைத்திலும் கிறிஸ்தனுபவம் நிரம்பி வழியட்டும். இயேசுவை அனுபவிக்கும் தருணங்களை இறைமக்கள் பாழாக்கி விடாதவாறு தியானகுருக்கள் கவனமாக இருக்கட்டும். புனித பவுலின் அனுபவம் இங்கே கருதத்தக்கது: “நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது” (1 கொரி 2:4).

உதடுகள் கூராக வேண்டுமென்றால் அவை புனிதமாக்கப்பட வேண்டும். ‘நான் அசுத்த உதடுகளைக் கொண்டவன்’ எனக்கூறி அழுத எசாயா இறைவாக்கினரின் நாவில் தீத்தழல் வைத்து அவரது நாவைத் தூய்மையாக்கிய இறைவன், நம்மையும் பலிபீடத்தழலோடு நற்செய்திக்குச் சான்று பகர அனுப்பி வைக்கிறார். தூய ஆவி என்னும் நெருப்பு நமக்குள் பற்றி எரியும் போது நம்மில் எஞ்சியிருக்கும் பதர் அனைத்தும் அந்நெருப்பிலே பொசுங்கிவிடும். எல்லா மந்திர சக்திகளையும் அது அழித்துவிடும். “இஸ்ரயேலின் ஒளியானவர் நெருப்பாக மாறுவார். அதன் தூயவர் தீக்கொழுந்தாய் உருவெடுப்பார். அது அவனுடைய முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும் ஒரே நாளில் சுட்டெரித்து சாம்பலாக்கிவிடும்” (எசா. 10:17).

ஊழியக்காரனுக்குண்டான எந்ததகுதியும் எனக்கு இல்லை என உங்களுக்குத் தோன்றலாம். இருப்பினும் இறைவனுக்கு நீங்கள் தேவையாய் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வு, வாக்கு, செயல்கள் அனைத்தின் மூலமாகவும் கடவுள் அரிய பெரிய காரியங்களைச் செய்வார் என்பது உறுதி.

– ஷாஜன் ஜே. அறய்க்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *