நான் சிறைக்குச் செல்ல வேண்டும்

தானாகச் சிறைசெல்ல விழையும் யாரேனும் உளரோ? சுயமாகச் சிந்நிக்கும் நேரம் இது.

பெல்ஜியம் தேசத்தில் உள்ள பிரிஸ்தாம் சிற்றூரில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கிறிஸ்தீனா தனது 15-வது அகவையில் அநாதையானாள். பின்னர் அவளுக்கு நேர்ந்த கொடிய துன்பங்களால் அவள் தனது 32-வது அகவையில் இறந்து போனாள். அவளுடைய இறுதிச் சடங்குகள் ஆலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, திறந்து வைத்திருந்த அவளுடைய சவப்பெட்டியிலிருந்து அவள் உயிருடன் எழுந்தாள். அப்போது அவளுடைய உடல் பூரண ஆரோக்கியத்துடன் இருந்தது. அக்கிராம மக்கள் அனைவருமே இந்த அற்புதத்திற்கு சாட்சிகள். அங்கே நடுங்கிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி அவள் கூறிய சுடுசொற்களைக் கேட்டு அவர்கள் மேலும் திகில் பூண்டனர். அவள் சொன்னது:

“என் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்ததும் தேவதூதர்கள் வந்து என்னை ஓர் இருட்டான இடத்திற்குக் கூட்டிச் சென்றனர். அங்கே எண்ணற்ற ஆன்மாக்கள் கிடந்து நரக வேதனை அனுபவிப்பதைக் கண்டு பதைபதைத்தேன். அவர்கள் படும் பாட்டை வருணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர்களில் சிலர் எனக்குத் தெரிந்தவர்கள். அவர்களின் அகோரப் பாடுகள் என்னைப் பாடாய்ப் படுத்தியது. நான் தேவதூதர்களை நோக்கி, இதுதான் நரகமோ? எனக் கேட்டேன்.

இல்லை; இதுதான் உத்தரிப்புத்தலம் என்றார் ஒரு தூதர். மனிதர்கள் செய்த பாவங்களைக் குறித்து அவர்கள் மனம் வருந்தினாலும் அதற்கான பரிகாரம் செய்யாமலிருந்தால் அது செய்வதற்கான இடம்தான் இது எனத் தெளிவுப்படுத்தினார் தூதர். பிறகு நான் சாட்சால் நரகத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டேன். அங்கும் எனக்குத் தெரிந்த பலர் அவஸ்தைப் படுவதைக் கண்டேன். பிறகு அந்த தூதர் என்னைச் சொர்க்கத்திற்குக் கூட்டிச் சென்றார்.

சொர்க்கத்தின் பூரணக் காட்சி எனக்கு மறுக்கப்பட்டது. இருப்பினும் அரியணையில் கொலுகொண்டிருந்த இறைவனை ஓரளவு காணமுடிந்தது. அங்கே நான் ஆனந்த பரவசமானேன். உடனே ஓர் அசரீரியும் கேட்டது: என் பிரியமான மகளே, நீ என்னிடம் ஒருநாள் முழுமையாக வரப்போகிறாய். இருப்பினும் உனக்கு நான் ஒரு வாய்ப்பைத் தருகிறேன். ஒன்று, இன்றிலிருந்தே நீ என்னோடு இங்கே நித்தியமாய் வசிக்கலாம்; அல்லது, பூமிக்குத் திரும்பிச் சென்று ஆன்மாக்களை உத்தரிப்புத் தலத்துக்கோ அல்லது நித்திய நரகத்துக்கோ அனுப்பாமல் தடுக்கலாம்.

அதற்கு நீ நிறைய சகிக்க வேண்டும்; உபவாசமிருக்க வேண்டும். உத்தரிப்புத் தலத்தில் கஷ்டப்படுவதாக நீ இப்போது கண்ட ஆன்மாக்களை இரட்சிக்க நீ சில துன்பங்களைச் சகித்தாக வேண்டும். அதற்காக நீ எத்தகைய துன்பங்களை ஏற்றாலும் மரிக்க மாட்டாய். இறந்தோரை மட்டுமல்ல; உயிர்வாழ்வோரையும் நீ உன் கடின துன்பங்களால் காப்பாற்று. அநேக பாவிகளை அவர்களின் துன்மார்க்கத்திலிருந்து அகற்று. அதன்மூலம் அவர்களை நரகத்தில் விழாமல் காத்து நித்திய பேரின்பத்திற்குக் கூட்டிவர உன்னால் முடியும். இம்மறுவாழ்வுக்குப் பின் நான் உன்னை மீண்டும் என்னுடன் சேர்த்துக் கொள்வேன். இறுதியில் நீ எதிர்பார்க்காத அளவுக்குப் பேறுபலன்களையும் உனக்குத் தருவேன்”. அசரீரி முடிந்ததும் நான் இதோ மறுபடியும் மண்ணுக்கே வந்திருக்கிறேன்”.

விண்ணுலக தரிசனம் மனிதர்களுக்கு ஏகபோகமாக வழங்கப்படுவதில்லை. ஆனால் ஏகதேச தரிசனம் என்பது அவ்வப்போது அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய ஓர் ஏகதேச தரிசனத்தையே கிறிஸ்தீனாளும் பெற்றாள். ஆனால் அதுவே கண்கொளாக் காட்சியாக இருந்ததால், பூரண சொர்க்கத்தின் இன்ப மாட்சியை எல்லாரும் அடைய விரும்பினாள். இயன்றமட்டும் ஆன்மாக்களை மீட்டெடுக்க வேண்டுமென்று முடிவெடுத்தாள். ஆன்மாக்களை மீட்கும் தாகம் மேலிட்டதால் அவள் மீண்டும் பூமிக்கே திரும்பினாள். அவள் எப்போது இதற்காக விரும்பினாளோ அப்போதே அவள் உயிர் மீண்டும் உடலுடன் இணைந்தது.

அறிஞர், இறையியலாளர், கர்தினாள், பாப்பரசரின் ஆலோசகர் போன்ற நிலைகளில் சிறந்து விளங்கிய புனித ரோபர்ட் பெல்லார்மின் என்பவரும் புகழ்பெற்ற எழுத்தாளர் கர்தினாள் ஜேம்ஸ் தே-விட்ரி என்பவரும் கிறிஸ்தீனா கண்ட இக்காட்சியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். உத்தரிப்புத் தலங்களில் துன்புறும் ஆன்மாக்களை மீட்பது, மனிதர்களின் உள்ளங்களில் மனமாற்றத்தை ஏற்படுத்துவது, எல்லா மனிதர்களையும் வான்வீட்டுக்கு ஏற்புடையோராக்குவது போன்ற கடவுளின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றவே மீண்டும் இம்மண்ணுக்குத் திரும்பியதாக கிறிஸ்தீனா மக்களிடம் கூறினாள். அதற்காகவே அவள் எஞ்சிய வாழ்க்கையைக் கழித்தாள். கடினமான தனது துன்பப்பாடுகளைக் கண்டு யாரும் ஆச்சரியப்படவேண்டாமென அவள் மக்களைக் கேட்டுக் கொண்டாள்.

தீக்குண்டத்தில் கிறிஸ்தீனா

ஆன்மாக்களின் மீட்புக்காகக் கிறிஸ்தீனா சுகசொகுசுகளைத் துறந்தாள். கடுங்குளிரிலும் வெப்பத்தை வெறுத்தாள். இரத்தத்தை உறைய வைக்கும் மியூஸ் ஆற்றில் இறங்கி பலமணிநேரம் ஆன்ம ஈடேற்றத்திற்காக ஜெபித்தாள். இது பல வாரங்கள் நீடித்ததாகச் சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றுக்கு மேலாகப் பல கஷ்டங்களை அவள் யாரும் அறியாமல் தாங்கிக் கொண்டாள். ஆவலாதி எதுவும் இல்லாமல் எல்லாவற்றையும் சகித்தாள். அவளுடைய சகிப்புகள் அனைத்தையும் பாவிகளின் மனமாற்றத்திற்காக ஒப்புக்கொடுத்தாள்.

இதுமட்டுமல்லாமல், கிறிஸ்தீனா தீக்குண்டம் இறங்கியதைப் பல வரலாற்றாசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர். அழலும் தீக்குண்டத்தில் இறங்கி பலமணி நேரங்கள் புரண்டுபுரண்டு படுப்பாளாம். அப்போது அவள் தீயில் கருகி அலறியதை ஜேம்ஸ் விட்ரி என்னும் எழுத்தாளர் கண்கூடாகக் கண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆயினும் அவள் வெளியே வந்தபோது அவளது உடலில் தீக்காயத்தின் சுவடுகள் எதுவும் தென்படவில்லை.

புனித பெல்லார்மின் தனது நூலில் குறிப்பிடுவது பின்வருமாறு: தீப்பிழம்பின் நடுவில் தீக்காயங்களுடன் அவள் எரியாமல் நிற்பதை எல்லாரும் பார்க்க முடியும். ஆனால் தீப்பிழம்பை விட்டு வெளியே வரும்போது தீக்காயம் எதுவும் வெளியே தெரிவதில்லை. உத்தரிப்புத் தலத்தில் பற்றியெரியும் அக்கினியை அணைக்க கிறிஸ்தீனாளின் இச்செயல் பெரிதும் உதவியது.

கற்றுணை பூட்டி நீர்ச்சுழல் பாய்ச்சி…

சில நேரங்களில் கிறிஸ்தீனா கழுத்தில் அம்மிக்கல் கட்டி ஒழுகும் நீரில் எறியப்பட்டாள். ஆழமான நீர்ச்சுழலில் பாரமான அம்மிக்கல்லுடன் அவள் வட்டமடிப்பதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. ஆயினும் அவளுடைய எலும்புகள் உடைந்து நொறுங்கவோ, அங்கங்கள் முறிந்துவிடவோ இல்லை. ஒரு தடவை தெருநாய்கள் அவளை விரட்டிக் கடித்தன. நாய்களின் கடியேற்ற உடம்புடன் இரத்தம் சொட்டச்சொட்ட அவள் ஒரு முள்படர்ப்பில் போய் விழுந்து அதில் புரண்டாள். அனால் முள்படர்ப்பை விட்டு வெளியே வரும்போது அவளுடைய உடலில் காயங்களின் வடு ஏதும் இருக்கவில்லை. கிறிஸ்தீனாளின் அதிகோரமான பாடுகளைக் கண்ட மக்கள் நித்திய வாழ்வைக் குறித்து சிந்திக்கத் தொடங்கினர். பலர் மனந்திரும்பி புதியதோர் வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.

மரணத்திலிருந்து மீண்டுவந்த கிறிஸ்தீனா மீண்டும் 42 ஆண்டுகள் இம்மண்ணில் உயிர்தரித்திருந்தாள். புனித காதறைன் தொமினிக்கன் ஆசிரமத்தில் தனது 72-வது வயதில் இயற்கை எய்திய கிறிஸ்தீனாளைக் குறித்து சான்று பகர்கின்றார். “அவள் மரணம் வரை எளிமையும் கீழ்ப்படிதலும் உள்ளவளாகத் திகழ்ந்தாள்”. அவளுடைய பூதுடல் ட்ரூடனில் உள்ள ரிடம்ரிஸ்ட் குருக்களின் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நாம் என்ன கூலிப்படைகளா?

உத்தரிப்புத் தலத்துக்குப் போன பிறகே சொர்க்கத்துக்குப் போவேன் எனப் பலரும் பிடிவாதமாக இருக்கிறார்கள். இது, நேரடியாகச் செல்வதற்கு ஏதுவான புண்ணியம் இல்லை எனசொல்லும் அடக்கக்குணம் எனத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அடக்கக் குணமல்ல; அன்பின் வெறிச்சோட்டமும் சோம்பலின் நிறைவும், கவனக்குறைவும், அவநம்பிக்கையுமே இதற்குக் காரணம். “கடவுள் நம்மை ஒழுக்கக் கேட்டுக்கு அல்ல; தூய வாழ்வுக்கே அழைத்தார்”. (1 தெச. 4:7).

“நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம். கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்து கொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை” (1 யோவா. 3:1). தந்தையைப் போல் நிறைவுள்ளவர்களாய் மாறவும் (லூக். 6:36) கடவுளைப் போல் ஆகவும் (1 யோவா. 3:1) அழைக்கப்பட்ட நாம் வேறொன்றைத் தேர்வு செய்ய நம்மை அனுமதித்தது யார்? கடவுளின் திட்டத்தை உடைப்பதே பிறழ்தேர்வின் அடிப்படை. கடவுளின் திட்டங்களை உடைத்தெறிவது சாத்தானின் கைவந்த கலை. நாம் நமது தேர்வின் பிறழ்ச்சியால் அவனுடைய கூலிப்படைகளாய் மாறுவது ஏன்?

பூமியின் மடியிலிருந்து விடுபட்டால் பரமபிதாவின் மடிதனில் சென்று சேர்வதே அறிவுடைமை. அல்லாமல் உத்தரிப்புத்தலத்திலோ நரகக் குழியிலோ சென்று விழுவதை அன்பான பரமதந்தை விரும்புவரா? விண்ணை அடைவதில் தாமதம் ஏற்பட்டால் அன்புள்ள அப்பாவின் நெஞ்சு பொறுக்குமா? அதுவும், நாம் நமது தவறுகளினிமித்தம் தண்டிக்கப்பட்டுள்ளோம் என்ற செய்தி அப்பாசத்தந்தையின் காதில் தேனாய் ஒலிக்குமோ? என் ஆருயிர் மைந்தன் என்னை வந்தடைய நான் இனி எத்துணைக் காலம் பொறுத்திருக்க வேண்டுமோ என ஆற்றாது அரற்றும் அன்பு அப்பனின் விசும்பல் வானவர் காதுகளில் எட்டாது. ஆனால் உங்கள் காதுகளிலுமா எட்டவில்லை?

அன்பு வற்றிய நமது முடிவுகளால் அப்பனின் நெஞ்சம் வலிக்கிறது. நமக்காகத் துடிக்கும் அந்நெஞ்சின் வாஞ்சையை நாம் அலட்சியம் செய்கிறோம். அவரது ஆவல் மிகுந்த எதிர்பார்ப்பை அவமதிக்கிறோம். வெளிநாட்டிலிருந்து ஊருக்குள் கிளம்பும் வழியில் கடவுச்சீட்டை இழந்தோ, அல்லது வேறேதும் சிக்கலில் மாட்டியோ சிறை செல்ல நேர்ந்தால் ஊரில் ஆவலோடு எதிர்நோக்கும் உறவினர்கள் எத்துணை வேதனைப்படுவார்கள் என எண்ணிப்பாருங்கள். உத்தரிப்புத் தலம் போய்விட்டுத்தான் வருவேன் என அடம்பிடிப்பது சிறை சென்று மீள்வேன் எனச்சொல்லும் மாந்தரைப் போன்றது.

கடவுள் ஒவ்வொருவரையும் மிகுந்த கவனமுடன், அதேவேளையில் மிகுந்த கவலையுடன் உற்றுநோக்குகிறார். “திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள் வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகிறது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர் (மத். 11:12) என நம்மை நினைவூட்டுகிறார் நம் ஆண்டவர். ஆகவே நாம் சோம்பித் திரியும் அனந்தல் மனப்பான்மையை விட்டுவிட்டு ஆனந்தமான உள்ளத்துடன் அன்புத் தந்தையின் அருகிலே ஆவலுடன் செல்லப் பார்ப்போம். இதில் சமரசம் செய்யும் எந்தப் போக்கிற்கும் இடங்கொடாதிருப்போம்.

பூமியின்பால் சாய்ந்துவரும் சொர்க்கம்

வானகத் தந்தையின் எல்லா மக்களும் சொர்க்கத்தைச் சென்று சேர வேண்டுமென்றே கடவுள் விரும்புகிறார். இல்லாவிட்டால் கடவுள் கிறிஸ்தீனா என்ற பெண்மணியிடம் இவ்வளவு கெஞ்சிக் கூத்தாடியிருக்க மாட்டார். என் பிள்ளைகள் நரக நெருப்பில் வீழாமலும் உத்தரிப்புத் தலத்தில் மாட்டாமலும் இருக்க நீ உதவி செய்வாயா? எனக் கேட்டிருக்க மாட்டார். இதிலிருந்து கடவுளின் அக்கறை எவ்வளவோ பெரிதென்று புலப்படுகிறது. கிறிஸ்தீனாளை மட்டுமல்ல; என்னிடமும் ஆண்டவர் கெஞ்சுகிறார். “ஆண்டவரே இதோ நான்; உமக்கு உதவியாக வருகிறேன் எனச் சொல்ல எத்தனைபேர் முன்வருவர்?

உத்தரிப்புத்தல ஆன்மாக்களுக்காகக் கடின தியாகம் செய்து வந்தவர்தான் புனித ஜெம்மா. அவருக்குச் சில ஆன்மாக்களின் பெயர்கள் விண்ணிலிருந்து வெளிப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் எப்படியாவது விண்ணை வந்து அடைய வேண்டுமென்று இயேசு அதீத ஆர்வமாய் இருந்தாரென்று அப்புனிதை எழுதியுள்ளார். நாம் புனிதர்களென்று கொண்டாடும் சிலர் உத்தரிப்புத்தலத்திலே அவதிப்படுவதையும் அப்புனிதையின் காவல்தூதர் அவரிடம் சொல்லியிருக்கிறார்.

நாம் போய் அருநரகில் விழுந்து அவதிப்படுவதை அன்னை மரியாவும் விரும்புவதில்லை. எனவேதான் அவர் பல இடங்களில் காட்சி கொடுத்து மனம்மாற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறார். அருள் நிறை மந்திரம் சொல்லப்படும்போதெல்லாம் உத்தரிக்கும் ஆன்மாக்கள் மேல் தண்பனி தெளிக்கப்படும் காட்சி புனித ஜெம்மாவுக்குக் கிடைத்திருக்கிறது. நான் உத்தரிக்கிற ஆன்மாக்களின் அன்னை. என்னைசார்வோரின் வலிகள் ஒவ்வொரு மணி நேரத்திலும் குறைந்துக்கொண்டே இருக்கும் என அன்னை புனித அலனுக்கு வெளிப்படுத்தியுள்ளார். அன்னை மரியா உத்தரிப்புத் தலத்தை அடிக்கடி சந்திப்பதாகவும் அங்குள்ள ஆன்மாக்களைத் தேற்றுவதாகவும் புனித பவுஸ்தீனா கூறுகிறாள். நம்மால் காப்பாற்றப்பட்ட ஆன்மாக்கள் நமக்காக ஜெபிக்குமென்றும் அன்னை மரியா வெளிப்படுத்தியுள்ளார். இவ்வான்மாக்களின் பரிந்துரையால் கேட்ட காரியம் கிடைக்காமற் போகா என புனித அவிலா தெரசா சொல்கிறார்.

ஜெபம் ஒன்று ஆன்மாக்கள் பத்து

“நவம்பர் மாதத்தில் அருள் நிறைந்த மரியே என்ற ஜெபத்தை ஒருதடவை சொன்னால் பத்து ஆன்மாக்கள் உத்தரிப்புத் தலத்திலிருந்து சொர்க்கத்திற்குச் செல்கின்றன. என் அன்பின் நெருப்பில் கடின உள்ளத்தினராகிய பாவிகளும் மனம்மாற்றமடைவர். ஓர் ஆன்மா கூட அழிந்துவிடக் கூடாதென்றே நான் விரும்புகிறேன்” என்கிறார் அன்னை மரியா. நமது ஆடோ மாடோ குழியில் விழுந்து விட்டால் நாம் அதனை உடனே காப்பாற்றுவதில்லையா? நமது மக்களோ மனைவியோ பெற்றோரோ யாரேனும் விழுந்து விட நேர்ந்தால் நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா? அப்படியானால் உத்தரிப்புத் தலத்தில் கிடக்கும் நமது உறவினர்களின் கதி என்ன? இன்னும் சிலர் நரகமென்ற தீக்கடலில் விழுந்துவிடப் போகிறார்கள். அவர்களில் பலரும் நமக்கு வேண்டப்பட்டவர்கள் தானே. இவர்களுக்காக நாம் ஏன் திருப்பலிகளும், ஜெபமாலைகளும் பிராயச்சித்தமாக ஒப்புக்கொடுக்கக் கூடாது?

பாத்திமாவில் காட்சி கொடுத்த அன்னை சொன்னது: “ஆன்மாக்களை மீட்டெடுக்க நீங்கள் எனக்கு உதவ வேண்டும்”.
ஆகவே வாருங்கள்! நாம் கடினமாய் முயன்று உத்தரிப்புத் தலத்தை சூறையாடி அழிப்போம்.

– ஆன்சிமோள் ஜோசப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *