பிறந்த நாளில் உயிர்த்தியாகம் செய்த அருளாளர் ஜூசப்பே புக்சி

அன்று ஜூசப்பே புக்சியின் 56-வது பிறந்த நாள். அவர் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்த அம்மனிதர்களை ஆரத்தழுவி அவர் வரவேற்றபோது அவர்கள் நெக்கு விட்டுப்போயினர். ஏனெனில் அவர்கள் அவரை வாழ்த்த வரவில்லை. மாறாக, சுட்டு வீழ்த்தவே வந்தனர். இத்தாலி தேசத்தைத் தங்கள் தீவிரவாதச் செயல்களால் கட்டுக்குள் வைத்திருந்த பயங்கரவாதக் கும்பலே ‘சிசிலியன் மாபியா’. இக்கும்பலுக்கு எதிராகக் கருத்துக்கூறிய புக்சியைக் கொன்று அவரது உயிரைக் கவர்ந்து செல்வதற்காகவே கூலிப்படை அவரது இல்லத்திற்குள் நுழைந்தது. அன்று 1994 செப்டம்பர் 15. அன்றுதான் அவருக்குப் பிறந்தநாள். அந்தக் கூலிப்படை தயவுத்தாட்சண்யம் ஏதுமின்றி அவரைச் சரமாரியாகச் சுட்டு விட்டு ஓடிப்போனது. துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான அக்கத்தோலிக்கப் பாதிரியாரின் உயிர் விண்ணை நோக்கிப் பறந்தது.

இத்தாலி தேசமெங்கும் அழிச்சாட்டியம் பண்ணி, அந்நாட்டைத் தங்கள் தீவிரவாதக் கட்டுக்குள் அடக்கிவைத்திருந்த இந்த சிசிலியன் மாபியா. இவர்களுடைய ஆதிக்கம் அதிகமாக இருந்த பலேர்மோ என்னும் பகுதியில்தான் ஜூசப்பே புக்சி 1937 செப்டம்பர் 15-ம் நாள் பிறந்தார். 1960-ல் தமது 23-ஆம் அகவையில் அவர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

சொர்க்கத்தின் கையொப்பம் இருந்தது…

இப்பயங்கரவாதிகள் பரவலாகவே எதிர்க்கப்பட்டாலும் இவர்களுக்கு எதிராகப் போரிடும் ஆற்றல் யாருக்கும் இருக்கவில்லை. இந்நிலையில்தான் இவர்களுக்கு எதிராகக் களம்புக புக்சி முன்வந்தார். கோவில்களுக்கு இப்பயங்கரவாதிகள் வாரிவழங்கிய காணிக்கைகளை இவர் தடுத்தார். அவர்களின் உபயங்களை நிராகரித்தார். இதனால் இவர் அவர்களின் கொலைப்பட்டியலில் இடம் பெற்றார். இத்தகையோர் ஆலயங்களில் முன்னுரிமையுடன் திகழ்வதை இவர் கடிந்தார். அவர்களுக்கான சலுகைகளுக்கு முடிவுகட்டினார். அவர்களுடைய செயல்பாடுகளை ஆலயங்களில் விலக்கிவைத்தார். மாபியாக்களின் ஆட்களைக் கொண்டு கோவில் பணிகளை செய்யச் கூடாதென்றும் இவர் தடைவிதித்தார். மாபியாக்களின் செல்வமோ செல்வாக்கோ எதுவும் இவரை அசைக்கப் போதுமானதாக இருக்கவில்லை.

1990-ல் இவர் சான் செய்தோனோ என்ற கோவிலில் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். வறுமையில் வாடும் சிறுவர்களே இவர்களின் கூட்டத்தில் சென்று சேர்வதாக இவர் உணர்ந்தார். எனவே இத்தகைய சிறுவர்களுக்காக இவர் ஒரு தனி அமைப்பையே ஏற்படுத்தினார். கல்வியில் இடைநிற்கும் மாணாக்கர்களைக் கண்டடைந்து அவர்களின் கல்வியைத் தொடரச் செய்யவும், களவு, கொலை, வழிப்பறி, போதைப்பொருள் போன்றவற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றவும் இவர் செய்த அரும்பணிகள் எண்ணற்றவை.

அச்சத்தினாலும் அச்சத்தின் விளைவினாலும் இவர்களுக்கு எதிரே குரல்கொடுக்க முடியாமல் விழிபிதுங்கி நின்றவர்களை இவர் தமது பேருரைகளால் சீறி எழச் செய்தார். எனவே, நூற்றாண்டுகளாகக் கோலோச்சிய குற்றச்செயல்களுக்கு எதிரே எழுந்த கிளர்ச்சிகளை இரும்புக் கரத்தால் அடக்க வேண்டிய கட்டாயத்திற்கு சிசிலியன் மாபியாக்கள் தள்ளப்பட்டனர்.

சுவிசேஷத்தின் நல்ல சுமையாளர்…

தந்தை ஜூசப்பே விளக்கேற்றி வைத்த தீவிரவாத எதிர்ப்புப் போராட்டங்களுக்கு சொர்க்கத்தின் கையொப்பம் இருந்தது. எல்லாம் இழந்து கையறு நிலையில் தவித்த மக்களை இம்மாபியாக்களின் கோரப்பிடியிலிருந்து விடுவிக்க இத்தாலியத் திருச்சபை தீவிரமுடன் களம் புகுந்தது. 1994-ல் பாப்பரசர் யோவான் பவுல் சிசிலிக்கு விஜயம் செய்தார்.

அப்போது அவர், இம்மாபியா தீவிரவாதங்களுக்கு எதிரே வாய்மூடி உட்கார்ந்திருப்பது அவர்களின் குற்றங்களுக்கு உடந்தையாவது போலாகும்’ என எச்சரித்தார். தந்தை ஜூசப்பே புக்சியை அவர் சுவிசேஷத்தின் நல்ல சுமையாளர் என வருணித்தார். இவர் வரித்த இரத்தசாட்சியம் வீண்போகக்கூடாது என்றும் பாப்பரசர் முன்னறிவித்தார். இதற்காக அனைவரும் உருக்கமாக ஜெபிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

2013 மேய் திங்கள் 25-ம் நாள் தந்தை ஜூசப்பே புக்சி திருச்சபையின் அருளாளர் நிலையிலே உயர்த்தப்பட்டார்.ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவாறு சிறிதளவேனும் செயல்பட்டால் மிகப்பெரும் மாற்றத்தை நம்மால் நிகழ்த்த முடியும் என்பதை ஜூசப்பே தமது வாழ்க்கையால் நிரூபித்தார்.

 

– இரஞ்சித் லாரன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *