நாமும் நினிவேயிலிருந்து வெகு தூரத்தில் இல்லை

மிகவும் பழமையான அசீரியப் பேரரசின் தலைநகரம் நினிவே. திருவிவிலியத்தில் சுட்டப்படும் யோனா இறைவாக்கினரின் வாழ்க்கையோடும் வாக்கோடும் நெருங்கிய தொடர்புடைய பட்டணம் இது. இந்நகரம் ‘நினிவே மாநகரம்’ என்ற சொல்லாட்சியால் குறிக்கப்படுகிறது. இந்நகரத்தைக் கடந்துசெல்ல மூன்று தினங்கள் வழிநடக்க வேண்டும். இந்நகரின் அரண்கள் சுமார் நூறு அடி உயரமானவை. அவற்றின் மேற்பரப்பில் மூன்று பெருந்தேர்கள் ஒருசேர ஊர்ந்துசெல்ல முடியும்!

நினிவே நகர மக்கள் யோனாவின் அறிவிப்பைக் கேட்டு மனம்மாறிக் கடவுளின் மன்னிப்பைப் பெற்றனர். ஆகவே கடவுளும் அவர்கள் மேல் அனுப்பவிருந்த கொடுந்தண்டனைகளைக் கைவிட்டார். இதையெல்லாம் நாம் வேதாகமத்திலே வாசிக்கிறோம். யோனாவின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு என அனுமானிக்கப்படுகிறது. ஆனால் கி.மு. 7-ம் நூற்றாண்டின் இறுதிகாலத்தில் நினிவே மாநகரம் முழுமையாய் அழிக்கப்படுகிறது. மேதியா நாட்டின் படைத்தளபதியாகிய அர்பேசு என்பவன் நினிவே மாநகரின் கோட்டையை மூன்றாண்டு காலங்களாகவே முற்றுகையிட்டிருந்தானாயினும், அவனால் அதற்குள் நுழைய முடியவில்லை. ஆனால் திகிரிஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளம் கோட்டையின் மதிற்சுவரை உடைத்து நகருக்குள் புகுந்தது. அவ்வுடைப்பின் மூலமாய் உட்புகுந்த எதிரிகள் அந்நகரைத் தீக்கிரையாக்கி அங்கிருந்த பொருட்களையெல்லாம் கொள்ளையடித்து சென்றனர்.

நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் என்ற கடவுளின் எச்சரிக்கையை செவிக்கொண்ட மக்கள் சாக்குடுத்து சாம்பலில் உட்கார்ந்து மனம்வருந்தினர். எனவே அந்நகரம் தப்பியது. ஆனால் ஒரு நூற்றாண்டு இடைவெளியில் அந்நகரம் மீண்டும் அழிக்கப்பட்டது. இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன? நினிவேயின் மனமாற்றம் அதிகநாள் நீடிக்கவில்லை. சில வருடங்களிலேயே மீண்டும் அவர்களுக்கு கடவுள் மீதான அச்சம் இல்லாமற்போனது. மக்கள் மீண்டும் பாவவாழ்க்கையில் ஈடுபட்டனர். ஆகவே கி.மு. எட்டாம் நூற்றாண்டில் கடவுள் விலக்கிக்கொண்ட தீர்ப்பை (அழித்தொழிக்க வேண்டும் என்பதை) மீண்டும் அந்நகருக்கு வரும்படி விட்டுவிட்டார்.

நாமும் மனந்திரும்புகிறோம். புதுப்புது பிரதிக்கனைகளை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அந்த மனமாற்றம், பிரதிக்கனை எத்தனை காலங்களுக்குத்தான் நீடிக்கிறது? பலவும் அற்ப ஆயுளுடன் முடிந்துபோவதில்லையா? நோன்புகாலங்களில் மனம் வருந்தி பாவவாழ்க்கையை விட்டு விலகிய நாம் அந்நோன்புகாலம் முடிந்ததும் மீண்டும் பழைய வாழ்க்கையைச் சப்புக்கொட்டுவதில்லையா? தியானங்களில் கலந்துகொள்ளும்போது நாம் நமது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனால் சில காலம் சென்றதும் அவையெல்லாம் வெறும் நினைப்புகளாகவே மருவிவிடுவதில்லையா? வாழ்க்கையில் இன்னல்களும் இடர்பாடுகளும் ஏற்படும் தருணங்களில் கடவுள் முன்னால் எளிமையுடன் இறைவேண்டல் செய்பவர்கள் பிரச்சனைகளின் முடிவில் மறுபடியும் வழிமாறிவிடுகின்றனர்.

தேர்வுகளில் வெற்றிபெற, திருமணம் நடக்க, கடன் தீர, நோய்நீங்க… இவற்றிக்காகத்தான் மனம் மாறுகிறீர்களா?
இதனால்தான் ஆண்டவர் எசாயா இறைவாக்கினர் வாயிலாகக் கேட்கிறார். “ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணா நோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது?. ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்துகொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்தநாளென்றும் அழைக்கின்றீர்கள்?” (எசா. 58:5). ஒரு காற்று வீசும் போது நாணலின் கொண்டை குனியும். ஆனால் காற்று நீங்கியதும் கொண்டை மறுபடியும் பழைய நிலையை அடையும்.

உண்மையில்லாத, ஆழமில்லாத மனமாற்றங்களும் இப்படியே. நாளடைவில் அவை தங்கள் இதயத்தைக் கடினப்படுத்தும். தீமையை நியாயப்படுத்துகின்ற அல்லது அதனுடைய தீவிரத்தைக் குன்றச் செய்கின்ற மனநிலையை உருவாக்கும். ஆண்டுகள் பல கடந்தாலும் உண்மையான ஆன்மீக வாழ்க்கை வாழமுடியாததன் பின்னணியில் மெய்யான மனமாற்றம் இல்லாமற் போனதே காரணம். கடவுளின் ஆவியானவர் நமது புத்தியை ஒளிர்விக்காவிடில் நம்முடைய உள்ளத்தின் மந்தநிலையை நாம் புரிந்துகொள்ள முடியாத சூழல் நமக்கு ஏற்பட்டுவிடும். ஆகவே நாம் ஜெபிப்போமா?

தூய ஆவியே நீர் எங்கள் உள்ளங்களை ஒளிர்விக்க எழுந்தருளி வாரும். எங்கள் கல்லான இதயத்தை எடுத்து மாற்றி மென்மையான இதயத்தை எங்களுக்குத் தாரும். அங்ஙனம் கடவுளை மெய்யாகவே அன்புசெய்யவும் அவரது கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் நீர் எங்களுக்கு அருள்தாரும். ஆமேன்.

– ஷெவலியார் பென்னி புன்னத்தறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *