உன் வாழ்க்கை இனிப்பது எப்போது?

நெருக்கடிகளால் கசந்துபோன என் வாழ்க்கை இனி எங்கே
இனிக்கப் போகிறது என நினைக்கிறீர்களா? ஆனால்
எவ்வளவுதான் கசப்புகள் ஏற்பட்டாலும் இனிப்பதற்கு இன்னும்
அவகாசம் இருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்.

அன்னமேரி ரோபர்ட்சண் மோசஸ் என்பவர் ஓர் உலகப்புகழ் பெற்ற ஓவியர். உலகமெங்குமுள்ள அவருடைய ரசிகர்கள் அவரை அன்புடன் “கிரான்ட் மா மோசஸ்’ என்றுதான் அழைத்தனர். நூற்றி ஓராவது வயதில் அவர் இவ்வுலகை நீக்கும்போது, கிட்டத்தட்ட 1500 புகழ்வாய்ந்த ஓவியங்களை அவர் தீட்டி முடித்திருந்தார். ஒவ்வொன்றும் பத்தாயிரத்திற்கும் அதிகமான டாலர் விலைபோனது. “தீ ஷுகறிங் ஆஃப்” என்னும் அவருடைய ஒரே ஓர் ஓவியத்தை மட்டுமே பனிரெண்டு லட்சம் டாலர் விலைகொடுத்து ஒருவர் வாங்கிச் சென்றாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ரம்மியமான கிராமங்களின் இயல்பான அழகினைத் தமது வண்ணங்களில் வசப்படுத்தியதே அவரது தொழில் இரகசியம். இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. வாழ்க்கை முடிந்துவிட்டது; இனி என்னால் என்ன சாதிக்க முடியும் என சலித்துப்போய் நாமெல்லாம் மூலையில் முடங்குகிற (78-ஆவது வயது) காலத்தில்தான் அவர் படம் வரைக்கவே ஆரம்பித்தார். கிரான்ட்மா மோசசின் வாழ்க்கை நமக்குப் பல்லாற்றானும் பயன்படக்கூடிய ஒன்று.

தூண்டிவிட்ட சிறுவெளிச்சம்

வானம் வசப்படும் என்ற எதிர்பார்ப்பு கிஞ்சித்து கருக்கொள்ள முடியாத ஓர் ஏழைக் குடும்பத்தில் இவர் பிறந்தார். வாழ்க்கையின் இரு முனைகளையும் கூட்டிச்சேர்க்க இவரது பெற்றோர் எடுத்துக்கொண்ட முயற்சியைச் சொல்லிமாளாது. வீட்டில் தலைவிரித்தாடிய வறுமையின் காரணத்தால் பனிரெண்டு வயதிலேயே படிப்புக்கு முழுக்குப் போடும் படியாயிற்று. ஓரளவுக்கு எழுதப்படிக்கத் தெரியும் அவ்வளவுதான் அப்புறம், பெற்றோரின் வறுமைக்குக் கைகொடுக்கும் வகையில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் வீட்டுவேலை. இருபத்தேழாவது வயதில் ஒரு நல்ல இளைஞனைக் கரம்பிடித்து மணவாழ்விலும் காலூன்றினார். அந்த இளைஞனின் பெயர் தோமஸ் மோசஸ்.

இவர் பத்து குழந்தைகளை ஈன்றாராயினும் அவர்களில் ஐந்து பேர் இறந்து போயினர். ஒரு பிள்ளையின் மரணத்தையே பெற்ற தாய் எப்படித்தான் தாங்கிக்கொள்வாள்? இதோ இங்கே ஐந்து பிள்ளைகளின் மரணத்தை ஒரு தாய் கண் கூடாகக் காணும் அவலம்! ஆனால் அன்னா என்னும் இவ்வன்னை அதையெல்லாம் தன் மனத்தைக் கல்லாக்கித் தாங்கிக்கொண்டாள். கடவுளின் மீதுகொண்ட அசையாத நம்பிக்கையே அவரது அடிச்சுவடு.

இருவரும் கடின உழைப்பாளிகள். உழைப்பினால் பெற்ற ஊதியத்தைக் கொண்டு சிறிதளவு விவசாய நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்தனர். அதிலிருந்து கிடைத்த லாபத்தைப் பயன்படுத்தி இன்னும் அதிகமான நிலத்தை வாங்கிக்கொண்டனர். இதனால் ஓரளவு வருவாய் பெருக, தங்கள் பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைத்தனர்.

மீண்டும் கவலைகளின் கரியமேகம் அன்னாவின் தலைமீது வட்டமிட்டது. அவரது கணவர் அவரைக் கண்ணீரில் மிதக்கவிட்டு இவ்வுலகை நீத்தார். மாரடைப்பு என்ற அரக்கன் திடீரென வந்து அவரது உயிரைக் கவர்ந்து சென்றான். அன்னா மீளவே முடியாத துக்கத்தில் விழுந்துவிட்டார். இருப்பினும் தமது தன்னம்பிக்கை என்னும் நெஞ்சுரத்தால் அந்தத் துன்பத்தையும் அரிதின் கடந்தார். விவசாயத்தில் முழுகி கவலையை மறந்தார். அங்ஙனமிருக்க தமது ஒரே மகள், அவள் பெயரும் அன்னா, காசநோயினால் அவதிப்படுவதை அறிந்து அவருக்குக் கூடமாட உதவ அவள் வீட்டுக்குச் சென்றார். இது அவரது வாழ்க்கையைத் தூண்டிவிட்ட ஒரு சிறுவெளிச்சமாய் மின்னியது.

வாழ்வை இனிக்கவைத்த ஒரு கேள்வி

அன்னாவின் மகளாகிய அன்னா தன் அன்னையிடம் ஒரு பூந்தையல் கைக்குட்டையைக் காட்டிச் சொன்னாள்: அம்மா உனக்குத் தான் வயதாகிக்கொண்டிருக்கிறது. நீ ஏன் இதுபோன்ற பூந்தையல் வேலைகளில் ஈடுபடக்கூடாது? மகளின் ஆலோசனை கடவுளின் ஓர் அசரீரியாய் அன்னாவின் செவிகளில் முழங்கியது. ஆகவே அன்றிலிருந்து அன்னா பூந்தையல் வேலைகளில் முழுகத் தொடங்கினாள். அவளுடைய தையல் வேலைப்பாடுகள் ஈடு இணையற்றவையாய் ஜொலித்தன.

அப்போதும், துயரங்கள் அவரைத் துரத்திவருவதை விட்டுவிடவில்லை. பூந்தையலில் ஆழங்கால் பட்டுக்கொண்டிருக்கும் அக்காலத்தில் மூட்டு வாதம் அவரை முடக்கிப் போட்டது. பூந்தையல் தைக்கவே முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. ஒரு வாயில் மூடப்பட்டால் மறுவாயில் திறக்கும்தானே! அவரது ஒரு சகோதரி செலஸ்டின் அவருக்கு ஓவியக் கலையை அறிமுகம் செய்தாள். அப்போது அவருக்கு வயது 78. அதிகவயது அவரைத் தளர்த்தவில்லை. முன்வைத்த காலைப் பின்னோக்கி இழுக்கவும் இல்லை. தமது சகோதரியின் தூண்டுதலுக்கு ஏற்ப, முன் பின் அனுபவம் ஏதும் இல்லாத ஓவியக்கலையில் அவர் கால் பதித்தார். மெதுவாக அவருடைய ஓவியங்கள் பொதுமக்களிடம் அறியப்படலாயின.

அவருடைய துணிச்சலான வாழ்க்கை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. ஊடகங்கள்தான் அவருக்கு ‘கிரான்ட் மா மோசஸ்’ என்னும் பட்டத்தை வழங்கின. 1957-ல் ‘டைம்’ மாதஇதழ் அவருடைய ஓவியத்தை அட்டைப்படமாக வெளியிட்டது. அவரது நூறாவது பிறந்தநாளை ‘கிரான்ட் மா மோசஸ் தினம்’ என அறிவித்தார் நியூயார்க்கு ஆளுநர். 1961 டிசம்பர் 13 அன்று தமது நூற்றியோராம் வயதில் அவர் மறைந்தார். அதற்குள் அவரது புகழ் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவியிருந்தது.

இனிப்பான செய்திகள்

கிரான்ட் மா மோசசின் வாழ்க்கை நமக்குக் குறைந்தது மூன்று செய்திகளையாவது சொல்கிறது. நாம் அனைவரும் கடவுளுக்கு விலையேறப் பெற்றவர்கள். அவருக்கு நம்மைப் பற்றிய ஒரு தெளிவான திட்டம் இருக்கிறது. “உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியுமன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல” (எரே. 29:11) என இறைவன் எரேமியாவின் மூலமாய்ச் சொல்லியவை வீணான சொற்கள் அல்ல. இறைவார்த்தையில் நம்பிக்கை கொள்ளும் எவருக்கும் உண்மையாய் நிறைவேறும்.

அன்னா தமது சிறு வயதிலேயே இதை நம்பினார். வெறும் ஒரு வீட்டில் வேலைக்காரியாய் வாழ்ந்து மடிவது கடவுளின் திட்டமாய் இருக்க முடியாது என அவர் உள்ளூர நம்பினார். தமது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒவ்வொரு இடையூறும் இறைவனின் திட்டநிவர்த்திக்கான வழிகள் என அவர் எண்ணினார். கணவனின் மரணம், மகளின் காசம், மூட்டு வாதம் போன்ற அனைத்தும் கடவுளின் அம்புக்குறிகளாகவே அவருக்குத்தோன்றியது. தம்மைக்குறித்த இறைவிருப்பம் நிறைவேறுமளவும் அவர் அந்த அம்புக்குறிகள் சுட்டிய திசை நோக்கி நகர்ந்தார். 78-வது வயதில்தான் அவரது பிறவிப்பயன் ஈடேறியது. இத்தனை ஆண்டுகள் அகன்றனவே என்ற கழிவிரக்கம் அவரை வருத்தவில்லை. எஞ்சிய காலங்கள் நன்றாய்ப் பயன்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தார். நம்மைப் பற்றிய கடவுளின் விருப்பத்தை அறிந்து அதை நிறைவேற்றும்போது நமது வாழ்க்கைக்குப் பொருள் கிடைக்கும்.

நமது கவனத்தைச் சுண்டியிழுக்கக் கூடிய இன்னொரு காரியம் என்னவென்றால் அது அவருடைய சகிப்புத்தன்மையாகும். ஒரு சாதாரண மனிதன் நொந்து நூலாகி வதங்கிப்போகும் எத்தனையோ அனுபவங்களை இவர் தனியொருவராய் நின்று துணிச்சலுடன் எதிர்கொண்டார்! தொடர்ச்சியான மரணங்கள், கணவனின் எதிர்பாராத மரணம், மகளின் வியாதி, மூட்டுவாதம்… ஒன்றன்பின்னொன்றாக வந்த எல்லாவற்றையும் வென்றார். வென்று வீழ்த்தினார். தம்மை உருவாக்கவும் கடவுளின் பாதையில் திருப்பவும் இவற்றையெல்லாம் ஓர் உபாதியாய் அவர் வரித்துக்கொண்டார்.

ஒரு சிறு விபத்தைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத சாதாரண மனிதர்கள் நாம். அப்படிப்பட்ட நமக்கு ஒரு நம்பிக்கையின் தீபகோபுரமாய் உயர்ந்து நிற்கிறார் இந்த ‘கிரான்ட் மா மோசஸ்’ அவருடைய இத்தகைய சகிப்புத்தன்மையை அவர் தாமாகப் பெற்றுக்கொண்ட ஒன்றாக நாம் நினைக்கக்கூடாது. ஏனெனில் கடவுள் மீது உறுதியான நம்பிக்கை கொள்ளாத எவராலும் இப்படியான கடினசோதனைகளை எதிர்கொள்ள முடியாது என்பது திண்ணம். கடவுளை உறுதியாக பற்றிக்கொள்ளும் எவருக்கும் இது கடவுள் தரும் கொடை. எசாயா இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இவ்வுண்மையை நமக்கு வெளிப்படுத்துகின்றார்: “இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர். வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர் களைப்படையார்; நடந்துசெல்வர்; சோர்வடையார்” (எசா. 40:30-31)

வலிகள் தரும் வலிமை

கடவுள்மேல் நம்பிக்கை வைப்பவர்கள் எப்போதும் தளர்ந்து போகமாட்டார்கள். வருத்தமான சூழல்களிலும் அவர்கள் வருந்தாமல் நடந்து செல்வர். மிக உயரத்திலே பறக்கும் கழுகுகளுடன் இவர்களை ஒப்பிடலாம். கழுகுகள் உயரமாகப் பறப்பதைப் பார்க்கும் ஏனைய பறவைகளுக்குப் பொறாமை ஏற்படுவது இயல்பு. ஆனால் கழுகுகள் அங்ஙனம் பறப்பதற்காக அவற்றின் தாய்க்கழுகுகள் அவற்றிற்கு அளித்துள்ள பயிற்சி வலிமிகுந்தது. அந்த வலியினால் பெற்ற வலிமையே அவை உயரமாகப் பறப்பதற்கான உந்துசக்தி. ஆனால் இதை யாரும் உணர்ந்துகொள்வதில்லை. உயரத்தில் வீற்றிருக்கும் எல்லாருமே இத்தகைய வலிகளைப் பொறுத்துக்கொண்டவர்கள்தான். வலிகள் இல்லாமல் நிலையான வெற்றி என்பது வெறும் முயற்கொம்பே என அறிக.

அவர் தரும் இன்னொரு செய்தி அகால வயோதிகர்களுக்கானது. இன்று பலரும் உள்ளத்தில் சீக்கிரமே முதுமை அடைந்துவிடுகின்றனர். நான் உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்றேன்; இனி என்னால் ஆவது என்ன? எனக்கு எழுபது வயது; வாழ்க்கை முடிந்ததுப் போலதான்… இன்ன பிற எண்ணங்களால் பலரும் முதுமை அடையாமலேயே முதுமைகளைத் தாவிப் பிடிக்கின்றனர். ஆனால் கிரான்ட் மா மோசஸ், நமது வாலிபக் காலம் இப்போதும் தீர்ந்துவிடவில்லை என்பதை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார். கடவுள் நம்மைத் திரும்ப அழைக்கும் வரை நாம் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர் நமக்குத் தரும் படிப்பினை.

கடவுள் நமக்குத் தருகின்ற ஒவ்வொரு நிமிடமும் விலைமிக்கது. அவற்றை நாம் ஒருபோதும் வீணாக்கக்கூடாது. கடவுளுக்காகவும் கடவுளின் பிள்ளைகளுக்காகவும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னும் ஏராளம். படுக்கையில் கிடக்கும் ஒருவரால்கூட இதைச் செய்ய முடியும். எத்தனையோ மனிதர்களுக்காக ஜெபிக்கலாம். அதன்மூலம் எத்தனையோபேர் ஆசிபெறக் கூடும்! ஏனெனில் நாம் பிறருக்காகச் செய்யும் எந்த நன்மையையும் கடவுள் கண்ணோக்குகிறார். இறைவனின் அன்பை முன்னிட்டு நாம் உதிர்க்கும் ஒரு புன்னகை, ஒரு துளிக் கண்ணீர், ஒரு நெட்டுயிர்ப்பு.. என எதுவுமே மறக்கடிக்கப்படுவதில்லை.

எனவே, எனது காலம் முடிந்தது என ஒருபோதும் நினைக்காதீர்கள். கடைசி மூச்சு வரைச் செயல்பட்டுக் கொண்டே இருங்கள். கிரான்ட் மா மோசஸ் நமக்குத் தரும் மிகப்பெரிய செய்தி இதுவாகும். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் பிறந்த ஓர் ஏழைப்பெண்மணி இவ்வாறு உலகம் முழுவதும் அறியப்பட்டாளாயின் நாமும் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும். கடவுள் நம்மை உற்றுப்பார்க்கிறார். நாம் பெற்ற இவ்வொரே ஓர் வாழ்க்கையை நாம் எப்படி வாழ்ந்து முடிக்கிறோம் என அவர் ஆர்வமுடன் பார்க்கிறார். சோர்ந்து போனோமென்றால் அவரிடம் கேட்குமாறு அவர் நம்மை உசுப்புகிறார். “நீர் விரும்புவதை என்னிடம் கேளும். பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன். பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்” (திபா. 2:8). பூவுலகை நமக்கு உடைமையாக்கவும், பிற நாடுகளை நமக்கு உரிமைச் சொத்தாய் வழங்கவும் காத்துக்கொண்டிருக்கும் கடவுளின் சன்னதியில் நாம் மண்டியிட்டு ஜெபிப்போமா?

கருணைக் கடலாகிய அன்பின் அப்பனே, நான் உம்மை பணிந்து ஆராதிக்கின்றேன். என்னைக் குறித்து நீர் ஓர் அற்புதமான திட்டத்தை வகுத்து வைத்திருப்பதால் நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். இறைவா எனது வாழ்க்கையில் எவ்வளவுதான் கசப்பான அனுபவங்கள் வந்தாலும் நான் எனது குறிக்கோளை விட்டகலாமல் வாழ நீர் எனக்கு அருள்தாரும். நான் எப்போதும் உம்மீது நம்பிக்கை வைக்க நீர் என்னை ஆசீர்வதித்தருளும். எனது வாழ்க்கையின் இலட்சியத்தை உமது ஆவியானவரின் அருளால் நான் அடையும்படிச் செய்தருளும். அதற்குத் தேவையான மனப்பான்மையை எனக்குள்ளே வளரச் செய்தருளும். தூய மாதாவே, புனித சூசையப்பரே, இறைவனின் விருப்பத்தை நான் நிறைவேற்ற நீங்கள் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஆமேன்.

– கே. ஜே. மாத்யூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *