இறைவார்த்தை வழங்கிய வீடு

எங்களுடைய திருமண வாழ்க்கையின் பனிரெண்டாவது ஆண்டில் நாங்கள் வசித்துவந்த வீட்டை இழந்துவிட வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது. சுமார் ஈராண்டு காலங்கள் சொந்தவீடு இல்லாமல் வாழவேண்டிவந்தது. அந்த ஈராண்டுகளும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டைப் போல் இருந்தது எனக்கு. அஃதுடன் நான் பார்த்துவந்த வேலையும் இல்லாமற்போகவே அடியற்ற மரம்போலாயிற்று எங்கள் வாழ்க்கை. தப்பிக்க வழிதேடி பல இடத்திலும் அலைந்தோம். தோல்விகளே மிஞ்சின.

இடையீடு இல்லாமல் வந்த இடையூறுகளால் என் குடும்பம் உடைந்தது. உறவுக்காரர்களும் பாராமுகங்களாயினர். இந்நிலையில் மன அழுத்தத்திற்கு உள்ளான என் கணவனை நான் தேற்றிக்கொண்டே இருந்தேன். என் மனத்திற்குள் கனன்ற நெருப்பை அடக்கி அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் அப்போதெல்லாம் நாளைய நாட்களை எண்ணி என் உள்ளம் அஞ்சியது. மனிதர்களைப் பார்ப்பதற்கே எனக்கு பயம். ஏனெனில் யாரிடமும் முகம்கொடுக்கும் துணிச்சலை அதற்குள் நான் இழந்திருந்தேன். வாடகைக்கு ஒரு வீடு கிடைத்தது. ஆனால் வாடகைப் பணத்திற்குத் திண்டாடவேண்டியிருந்தது. எனக்கான வழிகள் அத்தனையும் மூடப்பட்ட நிலையில் நான் பைபிளைத் திறந்து வாசிக்கலானேன். அவ்வாறு மனத்துணிச்சலை வரவழைத்துக்கொண்டேன்.

ஒரு நாள் நான் ஆண்டவரிடம் முறையிட்டது என்னவென்றால், ஆண்டவரே, இத்தனையும் காலத்தில் நான் செய்த ஏதேனும் ஒரு சிறு புண்ணியத்தையாவது நினைத்து நீர் என்னைகாப்பாற்ற முன்வராமற் போனது ஏன்? என் பிராயத்து நண்பர்கள் சுகமாக நடமாடும் போது நான் மட்டும் இந்தச் சிறுவயதிலேயே ஏன் சோகமாய் அலைய வேண்டும்? இப்படியே நான் அவரிடம் என் ஆவலாதிகளைச் சொல்லிக்கொண்டிருந்தேன். பிறகு பைபிளை எடுத்து வாசித்தேன். புலம்பல் ஆகமம் 3:27 வசனத்தை அவர் எனக்கு வாசிக்கும்படித் தந்தார். “இளமையில் நுகம் சுமப்பது மனிதருக்கு நலமானது”.

அன்றிலிருந்து கடவுளிடம் கேள்வி கேட்பதையும் ஆவலாதி சொல்வதையும் நான் நிறுத்திக் கொண்டேன். ஏனெனில் அவர் அறியாமல் எனக்கு எதுவும் நிகழ்வதில்லை என்ற நம்பிக்கை என்னைத் திடப்படுத்தியது. அன்றிலிருந்து பைபிள் வசனங்களைப் படிப்பது எனக்கு ஒரு தேனான அனுபவம். எனது பிள்ளைகளிடமும் அந்தப் பழக்கத்தைப் புகட்டினேன். வசனங்களை வாசிப்பதும் எழுதுவதுமாக என் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன். அக்காலத்தில், எங்களுக்குச் சொந்தவீடு இல்லை என்ற உண்மையை என் பிஞ்சு மக்கள்கூட உணரலாயினர். வாடகை வீட்டு வாசம் மனரஞ்சிதமாய் இருக்கவில்லை. மட்டுமல்ல; எங்களை யாரும் மனித ஜென்மங்கள் என மதிக்கவும் இல்லை. ஆகவே வாடகை வீட்டுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, என் பிறந்தகம் சென்று தங்கத் தொடங்கினோம். என் பெற்றோருக்கு என்னால் ஏற்பட்ட மன உளைச்சலைச் சொல்லிமாளாது. அங்கேயும் மனம் ஆறுதலாய் இருக்கவில்லை.

அப்படியிருக்க ஒரு சொற்பொழிவில் நான் கேட்க நேர்ந்த வசனத்தின் செய்தி என்னைத் தொட்டது: “நீங்கள் ஒருவேளை தகர்ந்த உள்ளத்தினராக இருக்கலாம். இனி என்ன இருக்கிறது என அங்கலாய்க்கிறவராகக்கூட இருக்கலாம். ஆயினும் இறைவார்த்தைகளில் ஊன்றி நம்பிக்கையோடு இருங்கள். இன்மையிலும்கூட கனவுகாண மறக்காதீர்கள்…” நாங்கள் கனவுகாணத் தொடங்கினோம். ஒரு சொந்த வீட்டைக் கனவுகண்டோம். வண்ணமயமான கனவுகள் இறக்கை கட்டிப்பறப்பதைக் கண்டுகொண்டிருந்தோம். மகனும் ஓர் அழகிய வீட்டின் படத்தை வரைந்தான். அதை பைபிளில் வைக்கும்படிச் சொன்னேன். பைபிள் பாராயணம் தொடர்ந்தது. துன்பங்களும் பின்தொடர்ந்தது.

2011 அக்டோபர் மாதம் 14-ம் நாள் இரவு, எங்கள் அறையில் வைத்திருந்த ரோசா மிஸ்டிக்கா மாதாவின் முன்னால் நாங்கள் வடித்த கண்ணீருக்கு அளவில்லை. அன்றிரவு பைபிளைத் திறந்தபோது ஆகாய் 1:2 வசனம் கண்ணில் பட்டது. இதனால் வீட்டிற்கான வேலைகளைத் தொடங்கலாமெனத் தீர்மானம் செய்தேன். அப்போது என் கணவர், ஒரு ரூபாய் கூட கையில் இல்லாதிருக்க எப்படி வீடு கட்டப் போகிறாய்? எனக்கேட்டார். இருப்பினும் ஆண்டவருடைய வார்த்தையை நம்பி, என் கணவருக்கு பாத்தியப்பட்ட நாலரை சென்ட் நிலத்தில் மறுநாள் அளந்து கல்லிட்டோம்.

எங்களுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியவர் ஒரு சகோதரி. அவர் தமது கணவன்கூட அறியாமல் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவினார். இது என்னுடைய அவசரத் தேவைக்கான பணம்; கிடைத்தவுடனே திருப்பித் தர வேண்டும் எனச் சொன்னார். நான் அந்தப் பணத்திலிருந்து ‘ஷாலோம்’ ஊழியங்களுக்காக ஒரு தசமகாணிக்கையை முதலில் அனுப்பி வைத்தேன். அன்றிலிருந்து என் வீடுகட்டும் படலமும் சடுதியில் நடைபெறலாயிற்று. அந்தச் சகோதரிக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய பணத்தை ஆண்டவரே எனக்காக ஏற்பாடு செய்தார். இதற்கிடையே ஒருநாள் பக்கத்து மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. எனக்குத் தெரிந்த ஒரு கன்னியாஸ்திரீ என்னைக் குறித்துக் கேட்டறிந்தார். பிறகு அவர் என்னை அந்த மருத்துவமனையின் பொறுப்பில் இருந்த கன்னியாஸ்திரீயிடம் அனுப்பிவைத்தார். நான் படித்த நர்சிங்ஙில் வேலைக்குச் சேரும்படித்தான் அவர் என்னை அனுப்பினார். இதனால் நான் இழந்த வேலையும் எனக்குத் திரும்பக் கிடைத்தது.

அன்று இரவில் வீட்டுக்கு வந்ததும் பைபிளைத் திறந்தேன். அப்போது திருப்பாடல் 37:4-7 வரையிலான பகுதியைக் கண்டேன்: “ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள். உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு. அவரையே நம்பியிரு. அவரே உன் சார்பில் செயலாற்றுவார். உன் நேர்மையைக் கதிரொளி போலும் உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். ஆண்டவர் முன் அமைதியுடன் காத்திரு. தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே” கடவுள் எனக்காகச் செயல்படத் தொடங்கினார் என்பதை நான் உணர்ந்தேன்.

செயலில் இறங்கிய இறைவன்

நான் பணிபுரியும் துறைத்தலைவியாகிய கன்னியாஸ்திரீ என்னைக் குறித்துக் கேட்டறிய விருப்பம் தெரிவித்தார். ஆகவே நான் அவரிடம் என் கவலைகளை ஒன்று விடாமல் எல்லாம் எடுத்துரைத்தேன். அந்நாள் முதல் அந்த சிஸ்டர் எனக்காகப் பலரிடமும் போய் உதவி கேட்டார். அவர் சார்ந்திருந்த மடத்துக் கன்னியாஸ்திரீகள் எனக்காக இறைவேண்டல் செய்தனர். இதை நான் பின்னாளில் அறிந்தேன். அவர் எனக்குச் செய்த பொருளுதவியிலிருந்து நான் ஒரு தசம காணிக்கையை ஷாலோமுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன்.

வீட்டு வேலை முன்னோக்கி மெல்ல நகர்ந்தது. வீட்டு வேலைக்கான மரம் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனாலும் நனையாதபடிக் கூரை அமைக்க முடிந்ததே பெரும் பாக்கியம். இனியுள்ள வேலைகளைப் பின்னர் பார்த்துக்கொள்வோம் என விட்டுவிட்டேன். ஆனால் அன்றிரவு 2 குறிப்பேடு 9:10 எனக்கு தேவசெய்தியாகத் தரப்பட்டது. சேபா நாட்டு அரசி சாலமோனுக்காகக் கொண்டு வந்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் அப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தன. நான் ஆண்டவரை நோக்கி, இறைவனே இவ்வுலகில் எனக்கிருக்கும் ஒரே ஓர் சகாயகர் நீர்தான். நீர் விரும்பினால் தடிவேலைக்கான பணத்தை நீர் எனக்குத் தரவேண்டும் எனக்கூறி ஜெபித்தேன். இப்படி ஜெபித்துவிட்டுப் படுத்தேன்.

மறுநாள் எனக்குத் தெரிந்த கன்னியாஸ்திரீ ஒருவர் எனக்கு ஃபோண்போட்டு, “ஒரு பழைய மடத்தைப் பிரித்துப் போட்டிருக்கிறோம். உனக்குத் தேவையான மரத்தை எடுத்துச் செல்” எனக்கூறினார். அவ்வாறு என் வீட்டுத் தேவையை மிஞ்சின தடி உருப்படிகள் எனக்குக் கிடைத்தன. வீட்டு வேலைகளும் ஏறக்குறைய முடிவுக்கு வந்தன. ஆகாய் இறைவாக்கினர் கூறுவது போல் (2:18) கல்லிட்ட நாளிலிருந்து 9-ம் மாதம் 24-ம் நாள் நாங்கள் புதுவீட்டுக்குப் புகுவிழா கண்டோம். என் பிள்ளைகள் முன்கூட்டியே வரைத்து வைத்திருந்த கனவு இல்லத்திலிருந்து புதிய வீட்டில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. பாருங்கள் கடவுள் செய்த அற்புதத்தை…

ஒரு வழியாகப் புதிய வீட்டில் குடியேறிவிட்டோம். ஆனால் வீட்டில் இப்போதும் மின்சார இணைப்பு இல்லை. மின் இணைப்புக்காக குறைந்தது, நான்கு மின்கம்பங்களாவது நாட்டப்பட வேண்டும். செலவு கிட்டத்தட்ட ரூ. 85000. என்னால் இது நடக்குமா என்ன? எனவே ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் ஜெபித்தேன். மறுநாள் காலையில் எங்கள் பகுதி எம்.எல்.ஏ அவர்களுக்கு ஓர் விண்ணப்பம் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரே ஆறுதல், கன்னியாஸ்திரீகளின் மனமுருகிய பிரார்த்தனை. என் மனக்கவலையை அறிந்த ஒரு தோழி தனது கணவனிடம் என் நிலைமையை எடுத்துக் கூறினாள். அவளுடைய கணவர் எம்.எல்.ஏவுக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர். எனவே அவர் மூலமாய் என் காரியம் சடுதியில் நடந்து விட்டது. ஆம். ஒரே நாளில் மின்கம்பங்கள் நாட்டப்பட்டு, அன்றே வி.ஐ.பி ஒதுக்கீட்டில் மின் இணைப்பும் தரப்பட்டது. சல்லிக்காசு செலவாகவும் இல்லை.

என் கடவுள் யாரினும், யாரினும் பெரியவர். மின் இணைப்புப் பெற உதவிய பல நல்ல உள்ளங்களுக்கு ஓர் அன்பின் விருந்தளிக்கவும் மின் பல்புகள் வாங்கவும் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் எனக்குப் பண உதவி செய்தார். இதையும் நான் கடவுளின் கரிசனையாகவே கருதுகிறேன். நான் அறியாமலேயே, என்னை அறியாதவர்கள் எனக்கு உதவிசெய்தார்கள் என்பதை நன்றியுணர்வோடல்லாமல் என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.

உள்ளம் உடைந்தவர்களே….

வாழ்க்கையில் சந்திக்க நேரும் கிண்டல் கேலிகள், நிந்தனங்கள், தனிமைப்படுதல் போன்றவற்றால் உள்ளம் உடைந்தவர்களிடம் நான் சொல்ல விரும்புவது இதுவே. கலங்க வேண்டாம்! “என் தலைவர் என்றுமே கைவிடமாட்டார். அவர் வருத்தினாலும் தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார். மனமார அவர் மானிடரை வருத்துவதுமில்லை; துன்புறுத்துவதுமில்லை” (புல 3:31-33). ஏனென்றால் என் கடவுள் என்னை அந்த அளவுக்கு அன்பு செய்தார். “எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே. அதனால் உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்” (திபா 119:71). ஜெப வாழ்வில் என்னை ஊக்கப்படுத்திய என் வாழ்க்கைத் துணையாளரையும் அவருடைய சகோதரரையும் நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். இன்று, ஷாலோம் இதழ்களை விநியோகித்து நான் கிறிஸ்து ஊழியம் செய்யும் போதும் ஒரே இலட்சியம் தான் என் கண்முன் இருக்கிறது. ‘நான் அறிந்த கிறிஸ்துவை எல்லாரும் அறிய வேண்டும்’ அதுவே அந்த இலட்சியம். வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்பட நான் விரும்பவில்லை.

இவ்வளவுதூரம் என்னை வழி நடத்தியவர் இனியுள்ள தூரமும் என்னை நடத்துவார். அப்போதெல்லாம் சின்னக் காரியத்திற்கே நான் தேம்பி அழுவேன். ஆனால் இப்போது எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஆண்டவர் எனக்குத் தந்தார். துயரம் துவண்ட வழிகளை நான் தாண்டும் போதெல்லாம் எனக்கு உதவ கடவுள் யாரையாவது என் துணைக்காக அனுப்பி வைக்கிறார். “இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிட தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன்” (உரோ 8:18). இந்த வசனத்தின் உட்பொருளை நான் நன்றாகவே உணர்ந்து கொண்டேன்.

எனது சாட்சியத்தை வாசிக்கும் வாசக அன்பர்களுக்கு ஒரே ஓர் வேண்டுகோள். இறைவார்த்தையை வாசியுங்கள். அதை நம்புங்கள். கடவுள் அற்புதங்கள் செய்வார். “உங்கள் வாழ்நாளில் நான் செயல் ஒன்றைச் செய்திடுவேன். விளக்கிச் சொன்னாலும் அதை நீங்கள் நம்பமாட்டீர்கள்” (அபக் 1:5). “நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” (1 கொரி 9:18).

– ஷீஜா ஜிஜூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *