நித்திய மீட்புக்கு இன்றியமையாதது

நவீன உலகில் தாக்கம் செலுத்தும் தீமைகளின் ஆதிக்கங்களைப் பற்றி அறிய வேண்டியதும், அவற்றிலிருந்து தப்பிப்பிழைக்கும் வழிகள் குறித்து ஆராய வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

“சாந்தி வாகினி” என்ற பெயரில் ஒரு யாத்திரை அதற்காக ஒரு வாகனமும் இருந்தது. தியானம், வீடு சந்திப்பு, புத்தகக்கண்காட்சி இத்தியாதி காரியங்களைப் பங்குக்கோவில்கள் தோறும் தொடர்ச்சியாகச் செய்வதே சாந்தி வாகினியின் குறிக்கோள். ஒரு பங்கில் எங்கள் ஊழியத்தை முடித்துக் கொண்டு இன்னொரு பங்கிற்குச் செல்லத் தயாரானோம். எங்கள் சங்க ஓட்டுநர் வண்டியை “ஸ்டார்ட்” செய்தார். ஊஹூம். அது ஸ்டார்ட் ஆகவே இல்லை எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. வண்டியில் அப்படி எந்த கோளாறும் ஏற்படவில்லை. ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால் எந்த மெக்கானிக்கையும் கிடைக்கவும் இல்லை அங்ஙனம் அங்கலாய்ப்பில் இருக்கும் போது சங்கத் தலைவருக்குள் ஒரு யோசனை பிறந்தது. ஆவியானவரின் தூண்டுதல் அது. இதன் பின்னணியில் மறைவான சதித்திட்டம் இருக்கிறது என்பதே அத்தூண்டுதல்.

அவர் வழங்கிய வழிகாட்டுதலின் படி நாங்கள் மண்டியிட்டு விடுவிப்பு – பாதுகாப்பு ஜெபங்களை ஏறெடுக்கலானோம். உடனே வண்டி ஸ்டார்ட் ஆனது. அப்புறம் நடைபெற்ற தியான வழிபாட்டில் வழக்கத்திற்கு மாறான மனமாற்றங்களும் விடுவித்தல்களும் நடைபெற்றன. எப்படியாவது இந்தச் சங்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கவும் உறுப்பினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் தான் எதிரியானவன் பாடுபட்டான். அதை முன் கூட்டியே உணர்ந்து எதிர்வினையாற்றியபோது எதிராளியின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

ஏன் அறிய வேண்டும்?

இந்நவீன உலகில் தீமைகளைப்பற்றி ஏன் கூடுதலாக அறிய வேண்டும்? பிசாசு, அலகை போன்றவையெல்லாம் வெறும் கற்பிதங்கள் அல்லவா? இப்படிப்பட்ட எண்ணங்கள் ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒரு கிறிஸ்தவனைப் பொறுத்தமட்டில் வெறும் அடிப்படையில்லாதவை. ஏனெனில் இவையெல்லாம் நமது நித்திய மீட்பு தொடர்பான முக்கிய காரணிகள் ஆகும். யாருமே அழிந்து போகாமல் நிலைவாழ்வைப் பெறவேண்டுமென்று இறைவன் விரும்புகிறார். ஆனால் அதே வேளையில் எல்லாருமே அழிந்து நரகத்தை அடைய வேண்டுமென்பதே பகைவனின் பேரவா.

பெருவாரியான கிறிஸ்தவர்களும் அலகை என்னும் எதார்த்தத்தை வெறும் ஒரு கட்டுக்கதை என்றே கருதுகின்றனர். அவன் ஒரு கோழை அவனால் எதுவும் செய்யக்கூடிய ஆற்றல் இல்லை என்றும் கூட சிலர் நினைக்கின்றனர். ஆனால் வேறு சிலரோ இதற்கு முரணாக, சாத்தானின் வலிமையை மலையளவு பெரிதுபடுத்தி அச்சத்தில் உறைந்துகிடக்கின்றனர். ஆனால் இந்த இருவகை எண்ணங்களும் ஏற்புடையது அல்ல. இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்தவமான எண்ணங்களும் அல்ல.

ஆனால் திருச்சபை என்ன போதிக்கிறது பார்ப்போம். அவன் (அலகை) முதலில் ஒரு நல்ல வானதூதராகத்தான் இருந்தான். சாத்தானும் ஏனைய அசுத்த ஆவிகளும் எல்லாமே ஆரம்பத்தில் நல்ல இயல்பினை உடைய கடவுளின் படைப்புகள் ஆகும். இருப்பினும் அவை தாங்களாகவே வழி பிறழ்ந்து போயின (இ.இ.இ.391-ம் பத்தி) இதன் காரணத்தால் அலகையின் செயல்களின் மிகவும் முதன்மையாய் இருப்பது, கடவுளையும் தெய்வீக ஒழுங்கமைவுகளையும் பேருண்மைகளையுமெல்லாம் எதிர்ப்பதற்கான சூழ்ச்சிநிறைந்த தூண்டுதல்களே ஆகும். (இ.இ.இ.394-ம் பத்தி) அலகை என்னும் சொல்லுக்கு அலைக்கழிப்பவன் என்பதே சொற்பொருள். கடவுள் இவ்வுலகத்தில் ஆற்றிவரும் ஆன்ம ஈடேற்றத்திற்கு எதிரான செயலைச் செய்வதே அலகையின் நோக்கம்.

கடவுளின் படைத்தளபதிகள் ஆகும்போது…

கடவுளின் மீட்புச் செயல்களோடு நெருங்கியிருப்பவர்களையே கடவுள் விரும்புகிறார். இதனால்தான் ஒருவர் தியானமிருந்த பின் முன்பை விட கடினமான பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. ஆன்மீகமான முறையில் கடவுளின் படைவீரர்களாய் மாறும்போது, அலகையின் கொலை வெறிப்பட்டியலில் நாம் இயல்பாகவே இடம் பெற்றுவிடுகிறோம்.

இறையாட்சியைக் கட்டி எழுப்புவதில் நாம் எவ்வளவு தீவிரமாகப் பணியாற்ற விரும்புகிறோமோ அந்த அளவுக்கு நாம் அவனுடைய லிஸ்டிலும் முன்னுரிமை பெறுகிறோம். அதற்குப்பின் அலகையின் தாக்குதல் நமது வாழ்க்கையில் அதி கம்பீரமாக நடைபெறும் இதுதான் உண்மை. இவ்வுண்மையை நாம் ஒருபோதும் மறுப்பதற்கில்லை. ஆதலால் அவன் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லாவகையான தீமைகளையும் அவன் நம்மீது ஏவுவதற்குக் காத்திருப்பான் என்பது திண்ணம். இதனால் நாம் அவனைத் தொந்தரவு செய்யாதிருந்தால் அவனும் நம்மைத் தொந்தரவு செய்யமாட்டான் என்ற அபத்த சிந்தனைகூட சிலரிடம் வேர்விட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இது இறைவனுக்கான நம் போராட்டத்தில், ஆன்மாக்களை அவருக்காகச் சேர்க்கும் கைங்கரியத்தில் தளர்ச்சி அடைவது போலவே தோன்றுகிறது.

இங்கே நம்முடைய முழுமுதல் நோக்கம் என்பது சாத்தானுடன் போரிட்டு அவனைத் தோற்கடிப்பதாகும். இதைத்தான் இயேசுவின் போதனைகள் வலியுறுத்திச் சொல்கின்றன. “அப்போது இயேசு அதனைப் பார்த்து அகன்று போ சாத்தானே; உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணிசெய் என்றும் மறைநூலில் எழுதியுள்ளது என்றார்” (மத் 4:10) யாக்கோபின் திருமுகம் 4-ம் அதிகாரம் 7-ம் வாக்கியத்தில், “அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்” என எழுதப்பட்டுள்ளது. இயேசு நமக்களித்த ஆன்மீக அதிகாரத்தைப் பயன்படுத்தி நாம் அலகையுடன் தீவிரமாகப் போராட வேண்டும். இயேசுவின் பெயரால் கட்டளையிட்டு, கட்டிப்போட்டு, விரட்டிவிட வேண்டும். ஏனெனில் இதையே இயேசு செய்தார். அவர் மீது நம்பிக்கை கொள்ளும் எல்லாருக்குமே இத்தகைய அதிகாரம் தரப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும் (காண். மாற் 16:17)

அலகையின் செயல்பாட்டு முறைகள்

கடவுளின் ஆவியானவர் ஓர் ஆற்றல் மட்டுமல்ல, அவர் ஓர் ஆள் என்பதையும் நாம் நம்புகிறோமல்லவா? அதுபோலவே அசுத்த ஆவியாகிய அலகையும் ஓர் ஆள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவனிடம் எல்லா வகையான நயதந்திரங்களும் அடங்கியிருக்கின்றன. அலகை என்னும் சொல் பொதுவாக அசுத்த ஆவிகளின் தலைவனைக் குறிப்பிடும் ஒரு சொல்லாகும். பேய்கள் என்பன அவனுடைய ஏவலர்களும் கூட்டாளிகளுமே ஆகும்.

அலகையானவன் இருவகைகளில் செயல்படுவதாக அறியலாம். ஒன்று மிகச் சாதாரணமானது. மனிதகுலத்தைப் பலவகையான சோதனைகளில் வீழத்தாட்டி பாவத்தில் ஆழ்த்துவதுடன் கடவுளிடமிருந்தும் அகற்றிவிடுவதுதான் அது. இதைப்பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பிறிதொன்றோ மிகவும் அசாதாரணமானது. இதன் தாக்கத்தில் மனிதகுலம் எப்படி அகப்படுகிறது என்பதை சிற்சில சான்றுகள் மூலம் பார்ப்போம். ‘சோஃபியா புக்ஸ்’ வெளியிட்ட ‘ஒருபேய்விரட்டியின் அனுபவங்கள்’ என்னும் நூலில் அரு.தந். கபரியேல் அமோத்து என்பவர் இதுபற்றி விளக்கமாகக் கூறுகிறார்.
1. மந்திரவாதம், பில்லி சூனியம், குறிகேட்டல் போன்ற மறைவானதோ வெளிப்படையானதோ ஆன செயல்களின் மூலம்.
2. ஒரே பாவத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம்
3. தீமையைத் தூண்டுகின்ற மனிதர்கள் ஆகட்டும் அல்லது அப்படிப்பட்ட சில சூழல்கள் ஆகட்டும். அவற்றுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பன மூலம்.
(எ.டு) பரத்தையர் வீதி, மதுகுடிப்பவர்கள், சாத்தான் பூசைகள், மலினப் புத்தகங்கள், பலான கேசட்டுகள் இன்ன பிற….
4. அபூர்வமான சில நிகழ்வுகளில் கடவுளின் அனுமதியோடு நடைபெறும் நோய்கள், நோய்க்காடுகள், இன்னல்கள். (எ.டு) யோபு, புனி. பாதிரி பியோ, புனி. ஜாண் மரிய வியானி)
இவ்வாறான பேய்ச் செயல்களால் தனிநபர்களிலும் சமூகத்திலும் ஏற்படக் கூறிய எதிர்மறையான தாக்கங்களைக் குறித்தும் நாம் அறிந்திருக்க வேண்டும். அவற்றுள் சில வருமாறு.
1. சிகிச்சைக்கு மேல் சிகிச்சை எடுத்தாலும் குணமாகாத சில நோய்கள்.
2. எந்தக் காரணமும் இல்லாமல் ஏற்படும் கலகங்கள், வாக்குவாதங்கள், முன் விரோதங்கள் பகைமை உணர்வுகள் போராட்டங்கள்.
3. புனித வஸ்துக்கள், தெய்வீக காரியங்கள் போன்றவற்றுடன் ஒருவகையான வெறுப்புக் கொண்டிருத்தல்.
4. ஜெபவாழ்வைத் திடீரென ஒருநாள் விட்டு விலகுதல்.
5. மாணவர்களுக்குத் தங்கள் படிப்பிலும் ஆன்மீகத்திலும் நாட்டம் குறைதல்
6. திருச்சபையின் மேலதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்ற எவரோடும் கோபம் கொள்ளுதல்
7. தேவநிந்தை, சந்தேகப்பிணி, குற்றஞ்சாட்டுதல்.
8. காரணமே இல்லாமல் உறக்கம் குறைதல் அல்லது உறங்கவே முடியாதிருத்தல்.
9. உற்ற அன்பர்களுக்கிடையே பிணக்கம் ஏற்படுதல் (எ.டு) தாம்பத்திய கலகம்.
10. வாழ்வே மாயம் எனத்தோன்றுதல், தற்கொலை எண்ணம் மேலோங்குதல். (இவற்றுக்கான மூலம் தீதாக இருக்க வேண்டுமென்றில்லை).

விடுதலை

கடவுளின் பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவால் இவற்றிலிருந்து விடுதலை பெற முடியும். பகைவனின் எல்லா வல்லமைகளையும் வென்று வீழ்த்தும்படியான அதிகாரத்தை நாம் பெற்றிருக்கிறோம் (லூக் 10:19). ஆண்டவரின் மீட்புச் செயல்களை இந்த பூமியில் தொடர்ந்து கொண்டு செல்வதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் எத்தகைய வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறோமோ அத்துறையைச் சுத்திகரிப்பு செய்வதற்கான அதிகாரம் நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டுள்ளது. மாற்கு நற்செய்தி 6:7 வசனத்தைக் கவனியுங்கள். “அப்பொழுது அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்”. அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்”. நம் இறைவன் இன்றும் நம்மை இத்தகைய அதிகாரத்தைக் கொடுத்தே அனுப்புகிறார்.

அவர் அளித்த அதிகாரத்தோடும் அபிஷேகத்தோடுமே நாம் இந்த பூமியில் உயிர்வாழ வேண்டும். இயேசு தமது சிலுவை மரணம், பரிகாரபலி, உயிர்த்தெழுதல் முதலியவற்றால் பகைவனின் கொற்றத்தைக் கொன்றார். அவனுடைய படைக்கலன்களைத் தகர்த்தெறிந்தார். கூண்டில் அடைபட்ட சிங்கத்தைப் போலும், விடப்பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போலும் வலுவிழந்தவன் ஆகிவிட்டான் அலகை. அவன் நம்மை அச்சுறுத்தலாம்; சிறிது காலம் அலைக்கழிக்கலாம். ஆனால் நமது உயிரைக் கவரவோ நம்மை அழித்து ஒழிக்கவோ அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இயேசுவின் ஜெயமுள்ள இரத்தமும், தோற்காத இறைவாக்கின் ஆற்றலும் அரக்கப் பாம்பின் தலையை நசுக்கிய அன்னை மரியாவின் மத்தியஸ்தங்களும் நம்மைப் புடைசூழ்ந்திருக்க நாம் ஏன் அஞ்சிக்கதற வேண்டும்? பலவகையான அருளடையாளங்களும், உபவாச உபாசனைகளும் தீமையை வெல்லும் தோற்காத ஆயுதங்கள் ஆகும்.

நாம் நமது பாவவழிகளை விட்டு விலகினாலே தீமை நம்மை ஒருபோதும் மேற்கொள்ளாது. முதல் பாப்பரசராகிய பேருதுவின் சொற்கள் இவ்வுண்மையை மேலும் அரண்செய்ய உதவும். “உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார் (1 பேதுரு 5:7). இதனால் தூய ஆவியார் நம்மிடம் சொல்ல விழைவது என்ன? எல்லாரையும் ஒருபோல் அழிக்கவோ விழுங்கிவிடவோ அலகையால் இயலாது என்றல்லவா. ஜெபவாழ்வு தொய்ந்து, ஒழுக்கம் தவறி, ஆன்மீக படைக்கலன் ஏதும் அணியாத இறைமக்கள் யாரேனும் உளரோ என்ற நோக்கத்துடன் அல்லவா அவன் சுற்றிநடக்கிறான்? ஆனால் அரசும் வல்லமையும் மாட்சியும் இயேசுவுக்கே சொந்தம்.

-மாத்யூ ஜோசப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *