அழுமோர் இதயம் அருளாய் இறைவா…

அழுதுகொண்டிருப்போர் பேறுபெற்றோர். ஆனால் சொந்த கவலைகளை எண்ணியோ பிறர் தரும் வருத்தங்களை எண்ணியோ அழுபவர்கள் அல்ல. அப்படியென்றால் யார் அவர்கள்?

அன்று அந்த வீடு அல்லோல கல்லோலப் பட்டிருந்தது. ஏழு வருடங்களுக்கு முன் வீட்டை விட்டுச் சென்ற அவர்களின் ஆருயிர் மகன் திரும்பி வந்திருக்கிறான். பெற்றோர்களாகிய ஐப்பச்சனும் கிரேசியும் அக்கா லாலியும் வழிமேல் விழிவைத்து அவனுடைய வருகைக்காகக் காத்திருந்தனர். இதோ இப்போது அவன் வந்துவிட்டான். அவர்களுடைய கண்ணீரின் ஈரம் தோய்ந்த ஜெபங்களைக் கடவுள் கேட்டிருக்கிறார். அவர்கள் மகிழ்ச்சியில் பங்குபெற அக்கம்பக்கத்தாரையும் அழைத்தனர்.

அந்த மகனின் பெயர் அலக்ஸ். அவன் ஒரு பள்ளி மாணவனாய் இருந்தபோது மிகவும் நன்றாகப் படிப்பான். ஒழுக்கம் தவறவும் மாட்டான். ஆனால் அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் அவனுக்குள் சில மாற்றங்கள் ஏற்பட்டன. கெட்ட நண்பர்கள் சிலர் உற்ற துணை ஆயினர். சும்மா நேரம் போகட்டுமே என்றெண்ணி ஆரம்பிக்கப்பட்ட சீட்டாட்டம், தன்னிடமிருந்த பணத்தை மொத்தமாகப் பறித்துச் செல்லும் நிலைக்கு எகிறியது. அதைத் தொடர்ந்து, அலக்ஸ் குடிபோதையிலும் விழுந்துவிட்டான். மூக்களவு குடித்த அலக்ஸ் இரவின் இரண்டாம் சாமத்தில்தான் வீடு வந்து சேர்வான். ஐப்பச்சனின் எதிரிகளுக்கு இது ஒரு கொண்டாட்டம். அவர்கள் இச்செய்தியை ஊரெங்கும் பறைகொட்டி அறிவித்தார்கள்.

அலக்ஸின் பெற்றோர் ஆரம்ப நாட்களில் அலக்சை அன்புடன் கண்டித்தனர். ஆனால் அலக்ஸ் அவர்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அப்புறம் அதட்டிப்பார்த்தனர். அதனாலும் பலனேதும் இல்லை. அக்காள் லாலியின் கல்லியாணம் அலக்சினுடைய கெட்ட நடத்தையால் முடங்கிப் போனது. அது அக்குடும்பத்திற்கு ஒரு பெரும் அவமானம் ஆயிற்று. மனம் நொந்த ஐப்பச்சன் தன் மகனைக் கூப்பிட்டு, “ஒன்று நீ திருந்தணும், அல்லது இந்த வீட்டை விட்டுப் போயிரணும். இரண்டுங் கெட்டான் மாதிரி இந்த வீட்டில் வாழமுடியாது. என்ன பண்ணணும் ஏது பண்ணணும்ணு நீயே தீர்மானிச்சுக்கோ” என்றார் கடுப்பாக!

மறுநாள் வேலைக்குச் சென்ற அலக்ஸ் திரும்பிவரவே இல்லை. அவன் எங்கே சென்றானென்றும் அறிய முடியவில்லை. தமது மகன் வீட்டை விட்டுச் செல்வதற்காக ஐப்பச்சன் இப்படிக் கூறவில்லை. அவன் திருந்துவதற்காக அவர் எடுத்த ஒரு சிறு உபாயம். அவ்வளவுதான். ஆனால் தாய்தந்தை மற்றும் தங்கையின் பிடியிலிருந்து தப்பிக்கத் தவியாய்த் தவித்திருந்த அவனுக்கு இது அகலக்கால் விரித்து விட்டது. அலக்ஸ் தங்களை விட்டுச் சென்று விட்டான் என்ற உண்மையை முதலில் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவ்வுண்மையை உள்ளம் ஒத்துக்கொண்டதும் அவர்களின் காத்திருப்புக் காலம் தொடங்கிவிட்டது. நீண்ட நெடிய ஏழாண்டுகள் அவர்கள் கண்ணீரைக் காணிக்கையாக்கி நம்பிக்கையுடன் காத்திருந்தனர். கடைசியில் கடவுள் அவர்களின் கண்ணீரை மகிழ்ச்சியாக மாற்றினார். “அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன். அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன். துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன்” (எரே. 31:13) என்னும் இறைவார்த்தை இவர்களின் வாழ்க்கையில் இனிதே நிறைவேறியது.

உலகத் தொடக்கம் முதல்

நம்மை எதிர்பார்த்து தந்தைக் கடவுளும் காத்திருக்கத் தொடங்கிப் பலகாலம் ஆயிற்று. அந்த நல்ல தந்தையின் மனவேதனை இறைவாக்கினரின் நாவுகளில் வெளிப்படுகிறது. “உன்னை என் மக்களின் வரிசையிலே எவ்விதம் சேர்த்துக்கொள்வேனென்றும் திரளான மக்களினங்களுக்கிடையே அழகான உரிமைச் சொத்தாகிய இனிய நாட்டை உனக்கு எவ்விதம் தருவேனென்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். என் தந்தை என என்னை அழைப்பாய் என்றும் என்னிடமிருந்து விலகிச்செல்ல மாட்டாய் என்றும் எண்ணியிருந்தேன்”. (எரே. 3:19) “என்னை விட்டு விலகிய மக்களே திரும்பி வாருங்கள். உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து உங்களைக் குணமாக்குவேன்” (எரே. 3:22). ஆனால் தந்தைக் கடவுளின் ஆவலான காத்திருப்பைப் புறக்கணித்துவிட்டு, ஒரு தவற்றிலிருந்து இன்னொரு தவற்றிற்குத் தாவிச் செல்லும் சறுக்காலின் சரித்திரம் அன்றுபோல் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது!

வலி மிகுந்த தந்தையின் ஆதங்கமான வருத்தங்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. “விழுந்தவன் எழுவதில்லையா? பிரிந்து சென்றவன் திரும்பிவருவதில்லையா? ஏன் இந்த எருசலேமின் மக்கள் என்றென்றைக்கும் என்னை விட்டு விலகி பொய்யைப் பற்றிக்கொண்டு நிற்கின்றார்கள்? போர்க்களத்தில் பாய்ந்தோடும் குதிரைப்போல யாவருமே தம் வழியில் விரைகின்றார்கள். வானத்துக்கொக்கு தன் காலங்களை அறிந்துள்ளது. புறாவும் தகைவிலானும் நாரையும் தாம் இடம் பெயரும் காலத்தை அறிந்துள்ளன. என் மக்களோ ஆண்டவரின் நீதியை உணரவில்லையே” (எரே. 8:4-7)

ஆண்டவரை விட்டுவிலகி, தவற்றிலிருந்து தவற்றை நோக்கி விரைவாக ஓடும்போதும், தப்பான வழிகளில் தவறான பயணங்களை மேற்கொள்ளும் போதும் இம்மக்கள் நினைக்கின்றார்கள், நாங்கள் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று! கடவுளைத் தேடியே திரிகிறோம் என்று சப்புக்கொட்டுகிறார்கள். இப்படிக் கூறியே அதல பாதாளத்தில் தவறிவிடும் மக்களை நோக்கி ஆண்டவர் கூறுவது: “சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்; தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள். அதில் செல்லுங்கள் அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும்” (எரே. 6:16).

நான் இங்ஙனம் தவறான பாதையில் வழிநடப்பதே கடவுளின் விருப்பம் போலும்! என தங்கள் தவற்றை நியாயப்படுத்துவோரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இறைவார்த்தை இப்படிப் பதில் கூறுகிறது: “ஆண்டவரே என் வீழ்ச்சிக்குக் காரணம் எனச் சொல்லாதே; தாம் வெறுப்பதை அவர் செய்வதில்லை. அவரே என்னை நெறிபிறழச் செய்தார் எனக்கூறாதே. பாவிகள் அவருக்குத் தேவையில்லை” (சீரா. 15:11-12)

அருவருப்புகளுடன் கூடிய திரும்பி வரல்

உண்மையாகவே நான் செய்வது தவறுதான் என்று சிலருக்குத் தெரியும். அவர்களிடம் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் சில விருப்புகளை மட்டும் விட்டுவிடமாட்டார்கள். அவற்றையும் அரவணைத்தவாறே அவர்கள் கடவுளிடம் வரப்பார்ப்பார்கள். ஆனால் இது நடக்காது. இப்படிப்பட்டவர்களிடம் கடவுள் கூறுவது: “இஸ்ரயேலே நீ திரும்பி வருவதாக இருந்தால் என்னிடம் திரும்பிவா என்கிறார் ஆண்டவர். அருவருப்பானவற்றை அகற்றிவிட்டால் என் திருமுன்னிலிருந்து அலைந்து திரிய மாட்டாய். வாழும் ஆண்டவர் மேல் ஆணை என்று சொல்லி உண்மையோடும் நீதியோடும் நேர்மையோடும் ஆணையிட்டால் மக்களினத்தார் அவர் வழியாகத் தங்களுக்கு ஆசிகூறிக் கொள்வர். அவரில் பெருமை பாராட்டுவர்” (எரே. 4:1-2).

எனக்குத் தெரிந்த ஒரு வாலிபன் இருந்தான். அவன் செய்யாத அருவருப்பு என்று எதுவுமில்லை. அவனுடைய மனைவி அவனுக்காகக் கண்ணீரோடு ஜெபித்தாள். உபவாசம் இருந்தாள். பிராயச்சித்தங்களும் செய்தாள். அவளுடைய புண்ணியங்களால் அவன் திருந்தி வாழ, முடிவெடுத்தான். புத்தாக்கத் தியானத்திற்குப் பின் வீட்டுக்கு வந்த அவன் முதல் வேலையாக என்ன செய்தான் தெரியுமா? இதற்கு முன் தகாத உறவுக்கும் தவறான செயல்களுக்குமாய்ப் பயன்படுத்தி வந்த சிம் கார்டுகளையெல்லாம் தீயிலிட்டுக் கொளுத்தினான். பிறகு, சமரசம் செய்துகொள்ள வேண்டியவர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். இதனால் கடவுள் அவனை புதிய அபிஷேகத்தின் அக்கினியாய் நிரப்பினார்.

ஆனால் இன்னொரு வீட்டுக்காரரின் நிலைப்பாடு வித்தியாசமாய் இருந்தது. இன்று முதல் குடிக்கமாட்டேன் என்ற சபதத்தை எடுத்துக்கொண்டு தியான மையத்திலிருந்து வெளியேறினார். நேராக தமது வீட்டிற்கு வந்தார். தமது வீட்டின் குளிர்பதனி (ஃபிரிட்ஜ்) யைத் திறந்த போது அயல்நாட்டு மதுவகைகள் அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு நாவு உச்சுக்கொட்டியது. உடனே அவரது சபதம் சபலமாகி மீண்டுமொரு முறை கடைசியாகக் குடிப்பது என்ற முடிவுக்கு வந்தார். இந்தக் குடியுடன் குடியை ஒட்டுமொத்தமாய் விட்டுவிடுவது என்றும் உறுதிபூண்டார். ஆகவே நண்பர்களை அழைத்து, உபசரித்து, தாமும் சுவைத்தார். அவ்வளவுதான். ஆசை யாரை விட்டது? அவர் ஒரு முழு குடிகாரராகவே மாறி எஞ்சிய நாட்களையும் போதையில் கழித்தார். ஆகவே, அருவருப்பானவற்றையும் பாவச் சூழல்களையும் விட்டுவிடாமல் நல்ல வாழ்க்கை வாழ நினைக்கும் அன்பர்களுக்கு ஆண்டவர் கூறுவது: “பாம்பாட்டியைப் பாம்பு கடித்துவிட்டால் யாரே அவருக்கு இரங்குவர்? காட்டு விலங்குகளின் அருகில் செல்வோர் மீதும் யாரே பரிவு காட்டுவர்? அவ்வாறே பாவிகளோடு சேர்ந்து பழகி அவர்களுடைய பாவங்களிலும் ஈடுபாடு காட்டுவோர் மீது யாரே இரக்கம் காட்டுவர்?

அது இன்றே செய்க!

ஆண்டவரிடம் திரும்பிச் செல்ல வேண்டியது கட்டாயம் என அறிந்தும், அது நாளையாகட்டும் என நாட்களை நீட்டுவது அறியாமை. ஏனெனில் மரணம் என்ற காலன் எப்போது வந்து நம் காலத்தை முடிப்பான் என நமக்குத் தெரியாது. இறைவார்த்தையின் எச்சரிக்கை இதோ: “ஆண்டவரிடம் திரும்பிச் செல்லக் காலம் தாழ்த்தாதே. நாட்களை தள்ளிப்போடாதே. ஆண்டவரின் சினம் தீடீரென்று பொங்கி எழும். அவர் தண்டிக்கும் காலத்தில் நீ அழிந்து போவாய்” (சீரா. 5:7).

ஆதலால் இன்றே ஆண்டவரிடம் திரும்ப வேண்டுமென்று இறைவாக்கினர்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள். “ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள். அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும் தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக. அவர்கள் ஆண்டவரிடம் திரும்பிவரட்டும். அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்” (எசா. 55:6-7).

பாவத்தின் சுவை

பாவம் பாவமெனத் தெரிந்தும் அதை விட்டுவிடாமல் அதையே உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கும் பலர் உண்டு. இது ஏனென்றால் அவர்களுக்கு அந்தப் பாவத்தின் நெடி பிடித்துப்போயிருக்கிறது. எனவே அதிலிருந்து விடுபடுவது என்பது இயலாத காரியம். ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு வகையான சுவையும் போதையும் உண்டு. அதை விட்டு வெளியேற மனித உள்ளங்கள் தயங்குகின்றன. விளைவோ நித்திய மரணம். இறைவார்த்தை இப்படிச் சொல்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால் கடவுளின் கொடையோ நம் ஆண்டவர் இயேசுவின் வாயிலாக வரும் நிலைவாழ்வு பாவத்தின் மீதான அலாதிப்பிரியம் ஒருவரை அதிலேயே பிணைத்துக்கொள்ளும். வெளியேற விடாது. பாவத்தை விட்டுவிடவேண்டியது அவசியம் என அவரது உள்ளம் தொடர்ந்து வலியுறுத்தினாலும் விட முடியாது. இறுதியில் தண்டனைத் தீர்ப்பு அடைவது உறுதி. “ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியை விட இருளையே விரும்பினர். இதில் தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது” (யோவா. 3:19)

அறியாமையால் ஏற்படும் பாவம்

பாவம் பல வகை. அறியாமையால் ஏற்படும் பாவம் அவற்றில் ஒரு வகை. எனவேதான் திருப்பாடகர் இங்ஙனம் வேண்டுகிறார்: “தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும்” (திபா. 19:12-13). மீண்டும் 139-ம் திருப்பாடல் இப்படிச் சொல்கிறது. “இறைவா நீர் என் உள்ளத்தை ஆய்ந்தறியும். என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப்பாரும்”. உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனா என்று பாரும். என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்” (திபா. 139:23-24) அறியாமல் வந்துபோகிற பிழைகளை ஆண்டவர் மன்னிப்பார். நாம் அதற்காக ஜெபித்தாலே போதுமானது. ஆனால் நமது பாவநிலையைப் பற்றி இறைவன் நம்மை உணர்த்திய பின்னும் நாம் அதிலேயே நிலைத்திருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். “ஏனெனில் மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாறவேண்டுமென்று அவர் கட்டளையிடுகிறார்” (திபா. 17:30).

ஒப்புக்கொண்டால் விடுதலை

நம் பாவங்கள் மன்னிக்கப்பட நாம் அவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார் கடவுள். “நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து குற்றமனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்” (1 யோவா. 12:9). ஒப்புக்கொள்ள விரும்பாமல் நமக்குள்ளே அடக்கி வைக்கும் பாவம் நம்மை கடித்துக் குதறும். “என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள் முழுவதும் நான் கதறி அழுததால் என் எலும்புகள் கழன்றுபோயின. ஏனெனில் இரவும் பகலும் உம் கை எனக்கெதிராக ஓங்கிநின்றது. கோடையின் வறட்சி போல என் வலிமை வறண்டு போயிற்று. என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன். என் தீச்செயலை நான் மறைத்ததில்லை. ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன் என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்” (திபா. 32:3-5).

மிகுந்த பரிவிரக்கத்துடன், பாவம் செய்த இஸ்ரயேல் மக்களை மனந்திரும்பும்படி அழைப்புவிடுக்கும் ஆண்டவரை விவிலியத்தின் பக்கங்களில் நாம் சந்திக்கிறோம். “நம்பிக்கையற்ற இஸ்ராயேலே என்னிடம் திரும்பிவா என்கிறார் ஆண்டவர். நான் உன்மீது சினம் கொள்ள மாட்டேன். ஏனெனில் நான் பேரன்பு கொண்டவன் என்கிறார் ஆண்டவர். நான் என்றென்றும் சினம் கொள்ளேன். உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டால் போதும் என்கிறார் ஆண்டவர் (எரே. 3:12-13).

ஆண்டவரே, அனுதாபமுள்ள ஓர் இதயத்தைத் தாரும் என ஜெபிப்போம். அப்போது, நம்முடைய வாழ்க்கையில் பெரிய புண்ணியங்கள் என எண்ணிக் கொண்டிருந்தவை புண்ணியங்களல்ல; பாவங்கள் என அறியமுடியும். இதுவரை நாம் பாவமல்ல என நினைத்து அனுதபிக்காத ஏராளம் காரியங்கள் பாவம்தான் என்பதை ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்துவார். அடிக்கடி இறைவார்த்தையின் உபாசகர்களாய் நாம் மாறுவோம். ஏனெனில் ஆவியானவர் நம்மைக் கண்டித்துத் திருத்துவது இறைவார்த்தைகளின் மூலமாய் அல்லாமல் வேறொன்றின் மூலமாய் அல்ல.

– ஸ்டெல்லா பென்னி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *