அவசரப்படும் தூயஆவியார்

இயேசுவை அறியாதவர்கள் பெருகி வருகிறார்கள். அறிந்தவர்கள் சுருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவைப் பகிர்ந்துகொடுப்பவர்களும் அருகிக்கொண்டிருக்கிறார்கள். உலகினர்க்கெல்லாம் இயேசுவைப் பகிர்ந்து கொடுப்பது எப்படி? விக்கித்து நிற்போர்க்குப் பதில் இதோ….

திருத்தந்தையும் கர்தினால்மார்களும் அமர்ந்திருந்த அறையில் பதுவை அந்தோணியார் சொற்பொழிவாற்ற எழுந்தார். அங்கே கிரேக்கம், இலத்தீன், பிரஞ்சு, ஜெர்மன், சிலாவ், ஆங்கிலம் முதலிய பன்மொழி பேசுவோர் திரண்டிருந்தார்கள்.

தூய ஆவியால் தூண்டப்பட்ட அந்தோணியார் அதிகாரப்பூர்வமாகவும், ஆற்றொழுக்கு நடையோடும் உரையாற்றத் தொடங்கினார். அப்போது, முதலாவது பெந்தக்கோஸ்தின் அனுபவம் அங்கே ஏற்பட்டது. ஆம் அங்கிருந்த அத்தனைபேரும் தத்தம் மொழிகளில் அந்தோணியாரின் சொற்பொழிவைப் புரிந்து ஆச்சரியமடைந்தனர். அவர்கள் அனைவரும் கடவுளின் அன்புக் கடலில் ஆனந்த நீராடினர். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, ”இவர் போர்ச்சுக்கீசியன் அல்லவா? பின் எப்படி இவர் பேசுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது? கிரேக்கம், இலத்தீன், பிரஞ்சு, ஜெர்மன் முதலான மொழிகளைப் பேசும் நாம் அனைவரும் நம்முடைய மொழிகளிலேயே எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோமே” என்றனர்.

புனித அந்தோணியாரின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அனுபவம் ஒரு தடவை அல்ல; பல தடவை நிகழ்ந்துள்ளது. இத்தாலியிலும், பிரான்சு நாட்டில் தூய பிரஞ்சிலும் உரையாற்றிய இவர் மேற்படி மொழிகளில் அட்சர ஞானம் இல்லாதவர் என்றால் நம்ப முடிகிறதோ? இவருடைய சொற்பொழிவுகளைப் பண்டிதனும் பாமரனும் ஒருங்கே புரிந்து கொள்வதும் கூடுதல் சிறப்பாகும். வெகு தொலையில் நின்று பேசினாலும் அருகிலென்றாற்போல் எல்லாச் செவிகளுக்கும் கேட்பதென்பது வேறொரு அற்புதம்.

முதலாவது பெந்தக்கோஸ்துவுக்குப் பின் இப்படியொன்றை கேட்டிருக்கிறோமா? ஆனால் அது அந்தோணியாரின் வாழ்க்கையில் முற்றிலுமாக நடந்தேறியது. மேலும் புனித சிலுவைப் பவுல், தொமினிக் பிராஞ்சீஸ் சொளானாஸ் போன்றவர்களின் வாழ்க்கையிலும் இது போன்ற அற்புதங்கள் நடைபெற்றதாக அறிகிறோம். கடவுள் இனியும் இப்படிப்பட்ட அற்புதத்தை அருள்வாரா?

இயேசுவை அறியாதோர் அதிகம்… அறிந்தவர்களோ குறைவு அவரை எடுத்துரைப்போர் இன்னும் குறைவு. ஏறத்தாழ எழுநூறு கோடி மக்கள் வாழும் இப்பரந்த பாருலகில் எல்லாருக்கும் நற்செய்தியைக் கொண்டு செல்வது எப்படி? எத்தனையோ மொழிகள், இனங்கள், வம்சங்கள் தேசங்கள் … சிந்திக்கவே அச்சமாய் இருக்கிறது. இத்தனை மொழிகளையும் கற்றுத் தேர்ந்து கிறிஸ்துவின் நற்செய்தியைக் கொடுக்க முடியுமா? அதற்கான கால அவகாசம் நமக்கு எங்கே? ஆன்மாக்களும் மடிகின்றன. அதர்மங்களும் அவநெறிகளும் பலுகிப் பெருகுகின்றன. போர்களும் கலாபனைகளும் மூள்கின்றன. இவற்றைப் பார்த்துக் கைகளைப் பிசைந்து கொள்வதும் வானத்தை நோக்கி நெட்டுயிர்ப்பிடுவதுமல்லாமல் வேறென்ன செய்ய முடியும்?

ஆனால் அப்படி வாளாவிருக்க நம்மால் முடியாது ”மனிதர்களால் கூடாதது கடவுளால் கூடும்” (லூக் 18:27) புனித அந்தோணியாரைப் போன்றவர்களுக்குக் கடவுள் இப்படிப்பட்ட நாவன்மையைக் கொடுத்தாரென்றால் நமக்கும் அருளத்தான் செய்வார். ஆனால் கேட்டு வாங்கும் சொரணை நமக்கு வேண்டும். கிடைக்காமல் விடமாட்டேன் எனப் பிடித்துக் கொள்ள வேண்டும். தூய ஆவியானவர் சீடர்களுக்கும் புனிதர்களுக்குமான ஒரு குத்தகைப் பொருள் அல்ல, ”தம்மிடம் கேட்போருக்கு அவர் எத்துணை அதிகமாய் தூய ஆவியை அளிப்பார்” எனக் கூறிய ஆண்டவர் நாம் கேட்பதற்காகவே காத்திருக்கிறார். ஏனெனில் தூய ஆவிக்கு இது மிகவும் எளிது. அதைவிட, நற்செய்தியை அறிவிக்க வேண்டிய அவசரமும் அவரிடம் இருக்கிறது.

புனித பிரான்சிஸ் சொளானஸ் (1549-1610)

ஸ்பெயின் நாட்டவராகிய அமெரிக்க மிஷனறி இவர். இவருக்கும் இத்தகைய நாவன்மை அருளப்பட்டிருந்தது. இதனால் பலமொழி பேசும் செவ்விந்திய குலத்தவர்க்கு ஒரே நேரத்தில் நற்செய்தியைப் பகிர்ந்தளிக்க இவரால் முடிந்தது. கிறிஸ்தவ மிஷனறிகளின் தொண்டுகளை விரும்பாத ஆயிரக்கணக்கான செவ்விந்தியர்கள் ஐரோப்பிய கிறிஸ்தவர்களையும் செவ்விந்தியக் கிறிஸ்தவர்களையும் தீர்த்துக்கட்டத் திட்டம் போட்டனர். ஒரு பாஸ்கா வியாழனன்று இவர்கள் கூரான ஆயுதங்களுடன் கிறிஸ்தவர்களை வளைந்தனர்.

ஆனால் புனித பிரான்சீஸ் சொளானஸ் தமது அற்புத வல்லமையால் அவர்களின் ஆயுதங்களை மழுங்கடித்து கிறிஸ்துவின் வல்லமையை அவர்களுக்கு எடுத்துரைத்தார். அப்புனிதரின் மொழியை அறிந்திராத எண்ணற்ற செவ்விந்தியர்கள் தத்தம் மொழிகளில் கிறிஸ்துவின் நற்செய்தியைப் புரிந்து கொண்டனர். அவர்களில் 9000 பேருக்கு அவர் ஞானஸ்நானம் அளித்து ஆசீர்வதித்தார்.

ஒரே ஒரு சொற்பொழிவினால் 9000 பேரை ஒரு புனிதர் கிறிஸ்துவுக்காகச் சம்பாதித்தார். இவர்கள் அனைவரும் தங்களின் மொழி பேசுவோரிடம் இயேசுவைக் கொண்டு செல்லாமல் இருப்பார்களா? இனியும் யாரேனும் எஞ்சியிருந்தால் அவர்களுக்கும் அது கிடைக்கும் வழியை ஆண்டவர் ஏற்படுத்துவார். தூய ஆவிக்கு எந்த மொழியும் ஒரு தடை அல்ல. ஆனால் அவர் எத்தடையுமின்றிச் செயலாற்ற நல்ல அர்ப்பண உள்ளம் கொண்ட சில மனிதர்கள்தான் அவருக்குத் தேவை. இதற்கு நாம் தயார் என்றால் மொழியின் எல்லைகளை அவரே உடைத்துவிடுவார். நாம் பேசினால் மட்டும் போதும்.

புனித சிலுவைப் பவுல் (1694-1775)

Passionist Fathers என்னும் துறவற சபையின் நிறுவனர் இவர் இத்தாலி மொழியில் உரையாற்றிய போது பலர் தத்தம் மொழிகளில் அனைத்தையும் உணர்ந்தனர். இது ஒரு முறை அல்ல; பல முறை நடந்திருக்கிறது. இவருடைய அசாதாரணமான புண்ணிய வாழ்வினால் ஈர்க்கப்பட்ட பலர் தொலைதூரங்களில் இருந்தும் இவரைத் தேடி வந்தனர்.

இவர் மூலமாய் கடவுள் பேசுவதைக் கேட்கவும், அபூர்வமான அற்புதங்களுக்குச் சான்று பகரவும் தீராத வியாதிகள் தீரவும் தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் இவரைத் தேடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இப்படி, இவர் மூலமாய்த் தூய ஆவியார் செயல்பட்டு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரவச் செய்தார்.

புனித தொமினிக் (1170-1221)

புனித தொமினிக் தமது சீடர்களுடன் பாரீசு பட்டணத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். பயணத்தின் மத்தியில் ரோகா மேடார் கிராமத்தில் உள்ள ஓர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருந்த மாதாவின் அற்புத சொரூபத்திற்கு முன்னால் மண்டியிட்டு மன்றாடினார். அவர்களுடைய பயணம் முடியும் வரை ஜெபமாலைகளும் புகழ்மாலைகளும் சொல்லிக் கொண்டே இருந்தனர். இதைக் கண்டு பெரிதும் கவரப்பட்ட இரண்டு ஜெர்மானிய நண்பர்கள் இவர்களைப் பின் தொடர்ந்தனர். அந்நண்பர்கள் இவர்களைத் தங்கள் வீட்டில் விருந்துண்ண வருமாறு அழைத்தனர். ஆனால் அவர்களுக்கிடையே தொடர்பு கொள்ள முடியால் மொழி ஒரு தடையாய் நின்றது. இரு சாரார்க்கும் கருத்துகளைப் பரிமாற முடியவில்லை. அங்ஙனம் ஐந்து நாட்கள் நகர்ந்தன.

அப்போது புனித தோமினிக் தமது சீடராகிய பெர்ட்ரான்டினிடம் கூறினார். ”நாம் இவர்களிடமிருந்து அறியாமையின் பலனை அறுவடை செய்யாமல் வேறு தாற்காலிக பலனை மட்டும் பெறுவது எனக்கு என்னவோ கவலையாகத்தான் இருக்கிறது. எனவே நாம் இவர்களின் மொழியைப் புரிந்து கொள்ளவும் கிறிஸ்துவை வழங்கும் வரம் கிடைக்கவும் வேண்டி நாம் மனமுருகி மன்றாட வேண்டும்”. இங்ஙனம் கூறி, அவர்கள் இருவரும் ஜெபிப்பதற்காக மண்டியிட்டனர். ஜெபம் முடிந்து எழுந்ததும் அவர்கள் ஜெர்மானிய மொழியில் பேசும் ஆற்றலைப் பெற்றனர். அங்ஙனம் இயேசுவைப் பகிர்ந்தளிக்கும் பாக்கியமும் பெற்றனர்.

பாரீஸ் பட்டணத்தை அடைந்ததும் அந்த ஜெர்மானியர் இருவரும் இறையன்பின் அனுபவத்தால் நிறைவோராயினர். ஆனால் இந்த உண்மையை யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாமென தோமினிக் தமது சீடரிடம் கண்டிப்பாகக் கூறினார். அப்படியே வெளிப்படுத்தினால் பாவிகளாகிய நம்மைப் புனிதர்கள் எனத் தவறாக மக்கள் எண்ணக் கூடும் எனவும் தெளிவுபடுத்தினார்.
பரிசுத்த பைபிள் எழுதப்பட்ட அதிபுராதன மொழிப்புலமையை தூய ஆவியார் பல்வேறு மனிதர்களுக்கும் அளித்துள்ளார். குறிப்பாக புனிதர்கள், துறவிகள், தபசிகள், ஐங்காயதாரிகள் போன்றோர் அத்தகைய மொழியறிவைப் பெற்ற சிலராவர். ஐங்காயதாரியாகிய தெரைசா நியூமான் இயேசுவின் தாய் மொழியாகிய அரமாயா மொழியையும் இலத்தீன், எபிரேயம், கிரேக்கம் போன்ற அக்கால மொழிகளையும் நன்றாக எழுதப்படிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். ஆனால் உண்மையில் இவர் வெறும் ஏழாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பயின்றவர். ஒரு கிராமச் சூழலில் வளர்ந்தவர்.

வெறும் ஏழாம் வகுப்பை முடித்த தெரைசாவின் வாழ்க்கையில் கடவுள் அற்புதங்களை நிகழ்த்தினார். நம்முடைய அறிவீனங்களுக்கும் அப்புறமாய்ச் செயல்பட கடவுள் வல்லவர். இயேசுவின் நற்செய்தியைச் சுமந்து செல்லும் பேரார்வம் நம் இதயங்களில் இருந்தாலே போதும் கடவுள் செயல்படுவார். அபக்கூக் இறைவாக்கினரின் முடியைப் பிடித்து, பாபிலோனியாவிலுள்ள சிங்கத்தின் குகையில் அடைபட்டுக் கிடந்த தானியேலிடம் கூட்டிச் சென்ற கடவுள் நம்மையும் கூட்டிச் செல்ல மாட்டாரா?

அந்தோணியார், பிராஞ்சீஸ் பவோலா, சிலுவைப் பவுல் போன்ற புனிதர்கள் நற்செய்தியை ஏந்திப் பல்காதம் நடக்க முனைந்தனராயினும், தூய ஆவியார் அவர்களின் பாதங்கள் நோகாமலே அடைய வேண்டிய இடத்தை அடைவித்தார் என அறிக. ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் அதிகமான இடத்தில் நற்செய்தியைப் பறைசாற்றும் அற்புதகரமான பாக்கியமும் இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

ஆதலால் தொலைவுகள் ஒரு விஷயமே அல்ல; மொழிகளும் அவருக்கு ஒரு பொருட்டல்ல. நம்முடைய மனப்பான்மையை மட்டுமே அவர் சோதிக்கிறார். இயேசுவைப் பல்லோக்கும் சொல்லாமல் தூங்கவே முடியாத நிலையை எப்போது நாம் அடைகிறோமோ அப்போதே தூய ஆவியார் செயல்படுவார் என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிட வேண்டாம்.

தூய ஆவியின் வருகைக்காக உருக்கமாய் ஜெபிப்போம். ஒரு புதிய பெந்தக்கோஸ்தின் அனுபவத்திற்குள் நாமும் கடந்துவருவோம். தூய ஆவியைப் பெறாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என ஆண்டவரிடம் பிடிவாதம் செய்து அவரையே சிக்கெனப் பிடித்தால் அவர் நமக்கு அருளப்படுவது உறுதி. இதற்கு உறுதுணையும் உற்ற துணையுமாய் இருப்பவர் அன்னை மரியா மட்டுமே. ஆகவே அவ்வன்னையின் அமல பாதங்களையும் முற்றாகப் பற்றிப் பிரியாமல் நிற்போம்.

உலகத்தின் கடைசி எல்லை வரை நற்செய்தியை எடுத்துச் செல்லும் தூதுவர்களாய் நாமும் மாறிவிடலாம். இட, கால, தேச, மொழி பேதம் ஏதுமின்றி மக்கள் கூட்டம் ஒருசேர இயேசுவைப் போற்றும். இதைக் கனவு காண்போம்.

அன்னையே உலகனைத்திலும் உயிர் வாழும் அனைவருக்கும் நற்செய்தியின் தீபத்தை ஏற்றிவைக்க பலவகையான மொழிகளைப் பேசும் அற்றலை நீர் உம் திருக்குமாரனிடமிருந்து பெற்றுத்தாரும். ஆமேன்.

– ஆன்சிமோள் ஜோசப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *