சிறுவனாகிய பீற்றர் தயக்கமும் மகிழ்ச்சியும் மேலிட தன் அப்பாவிடம் சென்றான். “அப்பா நான் ஒன்றைக் கேட்டால் மறுக்கமாட்டீர்கள்” என பீடிகை போட்டான். ‘மகனே, என்னசொல்’. “அப்பா நான் ஒரு குருவாக வேண்டும்” மகனுடைய வேண்டுகோளில் ஓர் யாசகம் தொனித்தது.
“மகனே நீ இப்போது சின்னப் பையன்! கொஞ்சம் கூட வளரட்டும் அப்போது பார்க்கலாம்” என்றார் தந்தை. தனது வேண்டுகோளை தன் தந்தை இப்படி உதறித் தள்ளுவார் என பீட்டர் நினைக்கவே இல்லை. இருப்பினும் தந்தை சொல் மிக்க மந்திரத்தை அவன் வேறெங்கும் தேடிச் செல்லவும் இல்லை.
‘பாப்புவா நியூ கினியா’ இதுதான் அந்த தீவின் பெயர். அத்தீவில் உள்ள இராகுணை என்னும் சிற்றூரில் 1912 ல் பீட்டர் பிறந்தான். அவ்வூரின் பழங்குடி இனத்தலைவராக இருந்தார் அவனது தந்தை. மனித உடலைத் தின்று வாழும் கிராதகர்களின் ஊராகிய அவ்வூரில் கிறிஸ்தவப் பாதிரிமார்களின் வருகையால்தான் கிறிஸ்து நெறி தழைத்தது. பீற்றரின் குடும்பம் பாதிரிமார்களால் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது.
கிறிஸ்துவின் சுவிசேஷ வெளிச்சத்தால் இருளில் தவித்த அக்கிராதக தீவு மெல்லச் சுடர்ந்தது. மிஷனறி குருக்கள் விதைத்த நற்செய்தியின் விதைகள் நாளாவட்டத்தில் நல்ல பலனை விளைவித்தன. தூய்மையின் நறுமலர்கள் ஏராளமாய் விரிந்து அத்தீவின் பகுதிகளில் மணம் வீசின. அங்ஙனம் சுவிசேஷ நீரால் புனிதத்தை மலர்வித்த கற்பகத் தருவாக விளங்கினார், ‘பீற்றர் டோ ரோட்’ என்னும் பொதுநிலை மத போதகர். எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்பட்ட பீற்றர் பிறருக்கு உதவி செய்வதில் பெருவிருப்பம் உடையவர். மிஷன் பள்ளியில் தமது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தாகாப்பில் உள்ள புனித பவுல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே சமயப் பேராசிரியர் பட்டம் பெற்று சமயப் போதகராக மாறினார்.
தூய்மைக்குச் செல்லும் பாதை
குருவாக வேண்டும் என்ற தமது வேண்டுகோளைத் தம் தந்தை ஏற்காமற் போனதால் பீற்றர் அவ்வாசையைத் துறந்தார். எனினும் கடவுளின் அன்பு வெள்ளத்தால் நிறைந்த ஒருவர் அதைத் தமக்குள்ளே அடக்க முடியாததாகையால், பீற்றர் சுவிசேஷப் போதகராகத் தமது சொந்த கிராமத்திலேயே சுற்றி நடந்தார். சிறுவர்களுக்கு மறைக்கல்வி, நோயாளிகளுக்கு ஆறுதல் போன்றவற்றில் மும்முரமானார். தமது 22-ம் வயதில் பவ்ளா லா வார்பிட் என்னும் நங்கையைக் கரம்பிடித்தார். அவர்களின் தாம்பத்திய வாழ்வே ஒரு வேதபோதனையாய் மாறியது. காலையிலும் மாலையிலும் கூடி ஜெபித்த அத்தம்பதிகள் மூன்று மக்களைப் பெற்றெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
இது இங்ஙனமிருக்க, இவர்கள் வசித்துவந்த தீவின் மீது ஜப்பான் படையெடுத்து அத்தீவைத் தன்வயப்படுத்தியது. ஜப்பானின் படையெடுப்பு பீற்றரின் மதவாழ்வை வழிதிருப்பியது. கிறிஸ்தவ சமயத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஜப்பான் கிறிஸ்தவ பாதிரிமார்களைச் சிறையில் அடைத்தது. இதனால்தான் ஒரு குருவானவர் ஆக வேண்டுமென்ற தமது எண்ணத்தைக் கடவுள் தடுத்திருக்கலாம் என பீற்றர் கருதினார்.
குருக்கள் இல்லாத தேசத்தில் ஒரு பொதுநிலை சகோதரனால் கிறிஸ்துவின் திருச்சபைக்கு எத்தகைய பணியைச் செய்ய முடியுமோ அப்பணிகளையெல்லாம் பீற்றர் தனியொருவராகச் செய்தார். இறைமக்கள் சமுதாயத்தை ஒன்றாகக் கூட்டி அவர்கள் சிதறிப் போகாத வண்ணம் கட்டிக் காத்தார். சிறையில் வாடிய பாதிரியார்களுக்குத் தேவையான உதவிகளை இறைமக்களின் ஒத்தாசையோடு செய்தார். 1943 ஆம் ஆண்டில் பீற்றரின் அயராத உழைப்புக்கு ஜப்பான் தடைவிதித்தது. 1944-ல் கிறிஸ்தவச் சடங்குமுறைகள் அனைத்திற்கும் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
இராணுவ அடக்குமுறைகளை எதிர்ப்பவர்கள் பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதைப் பீற்றர் அறியாதவர் அல்ல. மரணத்தைக் கண்டு அஞ்சாத அவர், தாவோகொயில் என்னும் பாதாள அறையில் இறைமக்களை ஒன்றுகூட்டி மறைமுகமாக ஜெபிக்கவும் ஆராதிக்கவும் தொடங்கினார். அப்போது பொது மக்களின் நன்மதிப்பைப் பெறும்வகையில் பலதார மணத்திற்கு ஜப்பான் அனுமதி வழங்கியது.
கத்தோலிக்கத் திருச்சபை ஒருபோதும் அனுமதிக்காத இவ்வழக்கத்திற்கு எதிராக பீற்றர் வன்மையாகக் குரல்கொடுத்தார். எனவே அவர் ஆட்சியாளர்களின் கண்டனத்திற்குப் பெரிதும் ஆளானார். 1945-ல் இராணுவம் இவரைக் கைது செய்து இருமாதச் சிறைத் தண்டனை வழங்கியது. விடுதலையாகும் நாட்கள் நெருங்கியவுடன் அவரைச் சிறையிலேயே கொல்ல வேண்டுமென இராணுவம் இரகசியமாகச் சிந்தித்தது. இதனால் ஒரு இராணுவ மருத்துவரின் உதவியுடன் விஷ ஊசியால் பீற்றர் சாகடிக்கப்பட்டார். குருவானவர்கள் இல்லாத சூழல்களிலும் இறையாட்சியை அறிவிப்பதற்கான அழைப்பை ஆனந்தமுடன் ஏற்றுக்கொண்ட பீற்றர் அதைப் பிரமாணிக்கமுடன் நிறைவேற்றினார். குருவாக விரும்பியும் இயலாமற் போன அவர் இன்று தாய்த் திருச்சபையில் அருளாளராய் அரசாட்சி புரிகின்றார். 1995 ஜனவரி 17ஆம் நாள் போட்மொரிஸ்பி என்னுமிடத்தில் வைத்து ஜாண்பால் பாப்பரசர் இவரை அருளாளர் என அழைத்தார்.
– இரஞ்சித் லாரன்ஸ்