தேவ காருண்ணியத்தின் வேதபோதகி என அறியப்படும் புனித பவுஸ்தீனா ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். குடும்பத்தில் நிலவிய கொடிய வறுமையின் காரணத்தால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை. இதனால் தமது பதினான்காம் வயதிலேயே பெற்றோருடன் இவரும் அலக்சாண்ட்றோ என்னுமிடத்திற்கு வேலைதேடிச் சென்றார்.
அங்ஙனமிருக்க, ஒரு நாள் இவருக்கு ஆண்டவர் இயேசுவின் திவ்விய தரிசனம் கிடைத்தது. இதனால் அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு கன்னியாஸ்திரீ ஆவதற்கு விரும்பினார். அதற்காக பற்பல மடங்களின் வாயிலை தட்டிப்பார்த்தார். எந்தப் பயனும் இல்லை. யாருமே இவரைத் தங்கள் மடத்தில் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இறுதியில் ‘காருண்ணிய மாதா சகோதரிகள்’ என்னும் மடத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். பரலோக வாழ்வின் பேருவகையில் புகுந்ததுபோன்ற ஒரு பூரிப்பு அவருக்குள் ஏற்பட்டது. நெஞ்சம் நிறைந்த நன்றியும் உள்ளம் நெகிழ்ந்த போற்றுதலும் அவருக்குள் பொங்கிப் பொலிந்தன.
சில மாதங்களில் அவரது உள்ளம் அலைபாயத் தொடங்கியது. தாம் தற்போது அங்கம் வகிக்கும் மடத்தைவிட்டு வெளியேறி வேறொரு மடத்தில் இணையவேண்டுமென்ற அவா அவரை மிகவும் அவாவியது. ஏனெனில் புதிய மடத்திற்குச் சென்றுவிட்டால் தமது ஜெபவாழ்வை இன்னும் ஆழப்படுத்திக்கொள்ளலாம் என அவர் நினைத்திருந்தார். இப்படிக் கலவரப்பட்ட உள்ளத்துடன் இருந்த பவுஸ்தீனாவுக்கு ஆண்டவர் இயேசு காயமுற்றுச் சிதைந்த முகத்துடன் மறுபடியும் காணப்பட்டார்.
அவர் பவுஸ்தீனாவிடம் பின்வருமாறு கூறினார்: “இந்த மடத்தைவிட்டு நீ விலகினால் நீ காணும் இவ்வகோர பாடுகளுக்கு நீயே காரணமாவாய். ஏனெனில் உன்னை நான் அழைத்தது இந்த மடத்தில் வசிக்கதான், பல்வேறு அருங்கொடைகளை நான் உனக்கு இங்கே தான் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன்” (நாட்குறிப்பு-19). எனவே ஆண்டவரின் விருப்பத்திற்குப் பவுஸ்தீனா அடிபணிந்தார். ஆண்டவரும் அவரைத் தற்கால உலகின் மிகப்பெரும் ‘சித்தர்’ (Mystic) நிலைக்கு உயர்த்தினார்.
மனித வாழ்வின் பல்வகை விபத்துகளில் இதுவும் ஒன்று. பல காலம் காத்திருந்து கடைசியில் கல்லியாணம் நடக்கும். சிலகாலம் சென்றபின் வேறொரு சிந்தனை உதிக்கும். இன்னொரு பங்காளியைக் கிடைத்திருந்தால் மனம் இன்னும் குதூகலித்திருக்கும் என்ற எண்ணம் வரும். அதனால் தற்போதைய பங்காளியிடம் ஒரு வகையான விரசம் ஏற்படத்தொடங்கும். இதுபோலவே, பகீரத முயற்சிகள் செய்து ஒரு வேலை வாங்குவோம். கொஞ்சம் நாட்களில் அதுவும் சலிக்கத் தொடங்கும். இன்னொரு வேலையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மனம் சப்புக்கொட்டும். ஆசைஆசையாய் ஒரு துறையைத் தேர்வுசெய்து கல்லூரிக்குள் நுழைவோம். நுழைந்த சில வாரங்களிலேயே முகத்தின் களை காணாமல்போகும். வேறொரு பாடத்தை எடுத்திருக்க மாட்டேனா என மனம் அங்கலாய்க்கும். அல்லது இன்னொரு கல்லூரியாக இருந்திருந்தால் படிப்பு நன்றாக வந்திருக்கும் என நெஞ்சு குறுகுறுக்கும்.
இப்படிப்பட்ட, அலைபாயும் உள்ளங்கள் இப்போதைய நிலையை வெறிச்சோட்டமாக்கும். உழைப்பதற்கான உந்துசக்தியை ஊதித்தள்ளிவிடும். அது ஒரு போலித்தனமான மனநிலையை உண்டாக்கிவிடும். நாளாவட்டத்தில் இப்போதைய நன்மைகளை அறிந்து கொள்ளமுடியாத அவலநிலைக்கு அது நம்மை இட்டுச்செல்லும். எங்கும்தான் பிரச்சனை உண்டு. ஆரம்ப காலத்து ஆனந்தம் போகப்போக இருக்காதுதான். இருப்பினும் அது ஒரு தப்பித்தலுக்கான முகாந்திரமாய் மாறிவிடக்கூடாது. நிஜமாகவே நம்மை வளரவைப்பவரும் உயரவைப்பவரும் இறைவனாக இருந்தால் அவர் அழைத்த இடத்தில் நிலைத்திருப்பதுதான் உகந்தவழி. இதுவே நம் வளர்ச்சிக்கு இன்றியமையாததும்கூட. இதைவிட சிறந்த வளர்ச்சி நமக்கொரு சோதனையாக மாறும்போது, கடவுள் அழைத்த இடத்தில் காணப்படும் குறைபாடுகளுடன் ஒன்றி வாழ்வதே ஏற்புடையது. ஆயினும் பாருங்கள், சிலர் உடலால் ஓரிடத்தில் இருந்தாலும் உள்ளத்தால் வேறெங்கோ உலவிக்கொண்டிருப்பர். இப்படிப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி ஒரு முயற்கொம்பாவதில் வியப்பேதும் இல்லை. ஏனென்றால் கடவுளின் திருவுள்ளத்திற்கு நம் உள்ளம் எப்போது இயைந்து போகிறதோ அப்போது தான் உண்மையான மகிழ்ச்சி உண்டாகும்.
மனக்குறைகளை நம்பிக்கையால் ஆட்படுத்த முடியாதவர்கள் தப்பியோடுவதைத் தடுக்கமுடியாது. புதுப்புதுத்துறைகள் இவர்களுக்கு அக்கரைப் பச்சையாகத் தெரிவதே இதற்குக் காரணம். அக்கரையை அடைந்ததும் அங்கும் மனக்குறைகள் தலைகாட்டும். ஒவ்வொரு தப்பித்தலும் நம்முடைய தன்னம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கும் என்பதை நாம் ஏன் அறியாமல் இருக்கிறோம்? கடைசியில் தோற்றுப்போன ஒரு வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களாய் நாம் மாறவேண்டுமா என்ன? எனவே கடவுள் எந்த இடத்தில் இருக்கும்படி நம்மை அழைத்தாரோ அந்த இடத்தில் உடலும் மனமும் ஒத்து நிலைத்திருப்பதே மிகவும் சிறந்தது. ஆதலால் மனக்குறைகளை விடுத்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டிய வரத்திற்காக ஜெபிப்போம்:
ஆண்டவரே தேவரீர் என்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறீரோ அந்த இடத்தில் உறுதியாய் நிலைத்திருக்க நீர் எனக்கு அருள்தாரும். உமது சித்தத்தை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் சிறப்பு என்பதை நான் சதாகாலமும் நினைவில் கொண்டிருப்பேனாக. அதற்காக நீர் என்னைத் துணிவூட்டி ஆசீர்வதித்தருளும். ஆமேன்.
– ஷெவலியார் பென்னி புன்னத்தறா