ஜெபமாலையுடன் விண்வீட்டை நோக்கி… அருளாளர் ஸ்ஃபறினோ கிமனஸ் மாலா

அந்தக் கோரக் காட்சியைக் காணும் மனத் துணிச்சல் கிமனசுக்கு இல்லாமற்போனது. எனினும் பார்பஸ்ட்றோ தெருவினூடே குருவானவர் ஒருவரை இழுத்துச் செல்லும் காட்சியைக் கண்டு அவர் வாளாவிருக்கவில்லை. அப்போது ஸ்பெயினில் உள்நாட்டுப்போர் மூண்ட காலம். அரசாங்கம் நடத்திய அழிச்சாட்டியத்தின் ஒரு பகுதியாகக் குருக்கள் துன்புறுத்தப்பட்டனர். விளைவு என்னவாக இருக்கும் என சற்றும் நினைக்காமல் கிமனஸ் அந்தப் போர் வீரர்களை வழிமறித்தார். ஜிப்ஸி இன மக்களிடமிருந்து முதன்முதலாக அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஸ்ஃபறினோ கிமனஸ் மாலா தாம் ஏற்ற இரத்தசாட்சி மகுடத்தின் முதற்படியாக இருந்தது அவ்வழிமறித்தல்.

தங்களின் பணியில் இடையூறு செய்த குற்றத்திற்காக இராணுவம் கிமனசைக் கைதுசெய்தது. கையில் ஏதேனும் ஆயுதங்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கு இருக்கிறது என்று பதிலளித்தார் கிமனஸ். ஆச்சரியம் பொங்க என்ன ஆயுதம் இருக்கிறது என்றறிய ஆர்வம் கொண்டனர் இராணுவ வீரர்கள். அப்போது அவர் தம்மிடமிருந்த ஜெபமாலையைக் காட்டி, இதுதான் என் ஆயுதம் என்றார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் ஜெபமாலையே அவருக்கு உயிர் மூச்சாய் இருந்தது. இதைக்கண்ட இராணுவ வீரர்கள் ஜெபமாலையைத் தூக்கியெறிந்துவிட்டு தப்பிப்போகுமாறு அறிவுரை கூறினார். ஆனால் கிமனஸ், ஜெபமாலையை எறிந்துவிட்டு தப்பிப் போவதிலும் இந்தச் சிறைச் சாலையே தேவலை என்றார். இறுதியில் 1936 ஆகஸ்டு 8-ஆம் நாள் கெர்பஸ்ட்றோ என்னுமிடத்திலுள்ள கல்லறைத்தோட்டத்தில் வைத்து கிமனஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். ‘கிறிஸ்து அரசர் வாழ்க’ என்ற முழக்கத்துடன் வீரமரணம் தழுவித் தரையில் சாய்ந்தார் கிமனஸ். அப்போதும் அவரது கையில் ஜெபமாலை இருந்தது.

1861 ஆகஸ்டு 26-ம் நாள் ஸ்பானிஷ் ஜிப்சி இனப் பெற்றோரிடமிருந்து ஸ்ஃபறினோ கிமனஸ் மாலா பிறந்தார். ‘எல்பெலே’ என்பது அவரது செல்லப்பெயர். சிறுவயதில் தாமே முடைந்த கூடைகளை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். லெறிடா என்ற ஜிப்சி இன மங்கையை முறைப்படி மணந்தார். பிறகு கத்தோலிக்கத் திருச்சபையின் அருளடையாள ஒப்புதலையும் பெற்றுக்கொண்டார். அன்று முதல் கிமனஸ் தேவாலயத்தின் தீவிர பக்தராக மாறினார். வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதியை கால்நடை வளர்ப்புக்காகவே செலவிட்டார். அவற்றை வியாபாரம் செய்து பொருளீட்டவும் செய்தார். குதிரை வளர்ப்பின் நுணுக்குகளையும் அறிந்து வைத்திருந்தார். தம்முடைய செல்வங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதில் அதிக விருப்பம் செலுத்தினார் கிமனஸ்.

மனைவி மரித்த பின் ஒரு குருவானவருடன் மதபோதகராகப் பணியாற்றினார். சிறுகதைகள் மூலம் பெருங்காரியங்களைப் புரியவைப்பதில் சிறந்து விளங்கினார். பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையிலும் வின்சென்ட் – தே – பவுல் சங்கத்திலும் உறுப்பினரானார். எல்லா வியாழக்கிழமைகளிலும் இரவு ஆராதனையில் தவறாமல் பங்கெடுப்பார்.

ஒரு தடவை அவர் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர், ‘எல்பெலே ஒரு கள்வன் அல்ல; மாறாக அவர் ஒரு புனிதர். புனித ஸ்ஃபறினோ எல்லா ஜிப்சி இன மக்களுக்கும் அவர் ஒரு முன்மாதிரி’ என்றார். 1997 மே 4-ம் நாள் புனித ஜாண் பால் பாப்பரசர் அவரை அருளாளர் என்றழைத்தார். அதன்மூலம் அந்த வழக்கறிஞரின் முற்கூற்றை மெய்ப்பித்தார்.

– இரஞ்சித் லாரன்ஸ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *