கொடுக்கத் தவறிய ஒன்று

இந்த அந்நிய நாட்டில, எம் புள்ளைகளை வளக்கிறதுக்கு எத்தனூண்டு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ஊட்டுக்காரருக்கு வீட்டுமேல எந்த அக்கறையோ அங்கலாய்ப்போ இல்ல. இராப்பகலுண்ணு பாக்காம, கண்ணில வெண்ணைய வச்சிண்டு மாடா உழச்சு ஓடா தேஞ்சேன். புள்ளைங்க நன்னா படிக்கட்டுமேண்ணு நல்ல பள்ளிக்கூடமாப் பாத்து அனுப்பி வச்சேன். அதுங்க சொந்தக் கால்ல நிக்கலாம்ணு வந்தப்போ வீட்ட விட்டே வெளியேறிடிச்சு. எந்தப் பயலுமே இப்ப வீட்டுப் பக்கமா திரும்பிப் பாக்கிறதில்ல. நானா கூப்பிட்டாலும், இப்ப வையி அப்புறம் பேசிக்கிறேண்ணு ஃபோணை வச்சிண்டு போயிடறானுக. இப்ப நான் என்னத்த செய்யட்டும். வயசாயிப்போச்சு. செலவுக்கும் கைக்காசு தரமாட்டேங்கிறானுக… இவ்வளவும் ஈனக் குரலில் குமுறியபோதே அவ்வன்னையின் கண்களின் கடையோரம் நிறைவதை என்னால் காணமுடிந்தது. அவளுடைய நா தழுதழுத்தது. வார்த்தைகள் இடறின. சற்றே மனம் தேறிய அவள் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

“சொல்லப்போனால் என் பிள்ளைகள் வீட்டைவிட்டு ஓடுவதற்கு நானேதான் காரணம்”. அதுகேட்டதும் எனக்குள் ஓர் ஆச்சரியம். பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகத் தன் வாழ்வையே இழந்துவிடத் தயாராகிய ஒரு தாய் எப்படித் தன் பிள்ளைகளை வீட்டை விட்டுத் துரத்துவாள்?

அவள் சொன்னாள்: “நான் அவர்களுக்கு சத்தான உணவையும் கவர்ச்சியான ஆடைகளையும் கொடுத்தேன். ஆனால் மகிழ்ச்சியைக் கிஞ்சித்தும் கொடுக்கவில்லை. என் பிள்ளைகளைப் பார்த்தாலே நான் சிடுமூஞ்சியாகிவிடுவேன். எனது மூக்கிஞ்சி சுபாவத்தினால் வீட்டில் ஒருவகை மப்பும் மந்தாரமுமே எப்போதும் நிலவிவந்தது. அதனால் என் பிள்ளைகள் என் வீட்டை விரும்பவில்லை. ஒருவர் ஒருவராக வீட்டிலிருந்து ஓடியே விட்டனர்”. சற்று தாமதமாகவேனும் உண்மையை உணர்ந்துகொண்டதற்கான அறிகுறிகள் அவளது கண்களில் தென்படுவதைக் கண்டேன்.

மனிதர்களின் உள்ளம் எப்போதும் ஒருவிதமான மகிழ்ச்சியைத் தான் விரும்புகிறது. துக்கச்சூழல்களை விட்டு அகன்றிருக்கவே அது எப்போதும் விழைகிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒத்த பிறனுக்கு மகிழ்ச்சியை வழங்கக்கூடியவனாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

குடும்பத்திற்காக இரவும் பகலும் ஓயாது உழைத்து நாய்படாப் பாட்டைப் பட்டாலும் மகிழ்ச்சியை மட்டும் கொடுக்கத் தவறினால் அது ஒரு பெருத்த தோல்வியில்தான் சென்று முடியும். நாம் அன்றாடம் புழங்குகின்ற அலுவலகங்கள், சமூகங்கள், குடும்பங்கள் போன்றவற்றில் நாம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறோமா இல்லைக் கெடுக்கிறோமா என சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். முணுமுணுத்தல், முறைத்தல், குற்றங்காணுதல், குத்திக்காட்டுதல் போன்றவை எந்தச்சூழலையும் கிட்டத்தட்ட நரகமாகவே மாற்றிவிடும். ஒருவரது சிடுமூஞ்சித்தனம் சுற்றிலும் இருப்பவர்களுடைய உள்ளங்களை நோகடிப்பதால் அவர்களின் ஆனந்தம் சூறையாடப்படும்.

எப்போது பார்த்தாலும் தனது வலிகள், துக்கங்கள், குறைகளைப் பற்றி மட்டுமே புலம்பிக் கொண்டிருப்பவர் எவராயினும் அவர் பிறரது உள்ளத்திற்கு நெருடலாக மாறுகின்றார். அதுபோலவே எவனொருவன் தனது வெற்றிப் புராணத்தை மட்டும் சதாநேரமும் கதைத்துக் கொண்டிருக்கிறானோ அவனும் பிறருக்குச் சுமையாக மாறுகின்றான். இத்தகையவர்கள் ‘தன்னை’ மையப்படுத்திய துக்கப் புள்ளிகள். பிறருக்குச் சலிப்பையும் அலுப்பையும் ஏற்படுத்துகின்ற இதுபோன்ற வகையறாக்களிடமிருந்து அகன்றிருப்பதே நல்லது. அப்போதுதான் உண்மையான மகிழ்ச்சியை நம்மால் சுவைக்க முடியும்.

பிறரது மகிழ்ச்சியைத் தட்டி உணர்த்தக்கூடிய நெகிழ்ச்சியான பேச்சு மிகவும் விரும்பத்தக்கதாகும். தட்டிக்கொடுத்தல், விட்டுக்கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல், அங்கீகரித்தல் போன்றவை எப்போதுமே பிறருக்கு மகிழ்ச்சியூட்டக்கூடியவை ஆகும். மட்டுமல்ல, பிறருடைய பேச்சுக்குச் செவிசாய்ப்பதும்கூட அவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டக்கூடியதாகும்.

நம்முடைய துக்கங்களுக்கு மத்தியிலும் பிறருக்கு ஆனந்தத்தை அளிக்க நம்மால் முடியும். அது எப்படி? நமக்குள்ளே கடவுள் இருந்தால் போதும். ஏனெனில் அவரே மகிழ்ச்சியின் உறைவிடம். 16 வது திருப்பாடல் 11 வது வசனத்தில் நாம் இங்ஙனம் வாசிக்கிறோம்: ” வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு”.

தூய ஆவியார் வழங்கும் கனிகளில் மகிழ்ச்சியும் ஒன்றாகும். அதிகமாய் ஜெபிப்பவர்களாலும் கடவுளோடு நெருங்கி இருப்பவர்களாலும் பிறருக்கு மகிழ்ச்சியை மனதாரப் பகிர்ந்தளிக்க முடியும். அல்லது பகிர்ந்தளிப்பவர்களாக மாற வேண்டும். ஆனால் நம்மால் இதற்கு முடிகிறதா? இல்லையேல் இதற்காக ஜெபிப்போம்:

“ஆண்டவரே, உமது மகிழ்ச்சியால் என்னை நிறைத்தருளும். என்னோடு தொடர்பு கொள்ளக்கூடியவர்களின் மகிழ்ச்சியை மழுங்கடிக்கக்கூடிய எனது சுபாவத்தை நீர் என்னிடமிருந்து எடுத்துமாற்றியருளும். நான் வாழும் என் சமூகத்திலும் என் குடும்பத்திலும் மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிக்க நீர் எனக்குக் கற்றுத்தாரும். ஆமேன்..

 

– ஷெவலியார் பென்னி புன்னத்தறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *