மகுடம் சூடியோர்- கொளோண் நகரத்துப் புனித ஜாணும் சக இரத்த சாட்சிகளும்

1572 ஜூலைத் திங்கள் ஆறாம் நாள் கால்வனிசத் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பத்தொன்பது குருவானவர்களை ஹாலந்து நாட்டிலுள்ள தார்க்கம் சிறையிலிருந்து தாஸ்திரா பட்டணத்தில் உள்ள இன்னொரு சிறைக்குக் கொண்டுசென்று கொண்டிருந்தனர். தேவநற்கருணையில் உள்ள இயேசுவின் பிரசன்னத்தை மறுத்துரைக்கவில்லை என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இயேசுவின் கல்வாரிப் பயணத்தை நினைவூட்டும் அத்துயரப் பயணத்தில், உண்மையில் 18 குருக்களே இடம்பெற்றிருந்தனர். ஆனால் தம்முடைய சககுருக்கள் களபலிகளாகக் கைதுசெய்யப்பட்டதை அறிந்த குருவாகிய ஜாண் அக்குருக்களுக்குத் தேவையான அருளடையாள உதவிகளை செய்ய விரும்பி தாமும் வெகு இரகசியமாக அக்குழுவினில் இணைந்து விட்டார். தமது பங்கின் பாதுகாப்பான சூழலை உதறிவிட்டு சக குருக்களை தேடி வந்த ஜாணின் ஆன்மீக ஊழியத்திற்கு அற்ப ஆயுள் தான் இருந்தது. ஜாண் கண்டுபிடிக்கப்பட்டார். தேவநற்கருணையை மறுத்துரைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். அதைச் செய்வதற்கு உடன்படாத காரணத்தால் அவரும் 19வது கைதியாகச் சேர்க்கப்பட்டார் கொடூரமாக வதைக்கப்பட்டார், உதைக்கப்பட்டார். கொடுமைகளின் உச்சமாக அமைந்தது அக்கல்வாரிப் பயணம்.

குருக்கள் வதைக்கப்படுவதைப் பார்த்து ரசிக்க அங்கே பெருங்கூட்டம் கூடியது. அது அவர்களுக்கு ஒரு திருவிழாவின் உணர்வையே வழங்கியது. நற்கருணை நாதரையும் பாப்பரசரின் பரமாதிக்கத்தையும் மறுத்துரைக்கும்படி அவர்கள் இறுதி வரை கட்டாயப்படுத்தப்பட்ட பின்னும் மசியவேயில்லை. எனவே தங்களின் ஆணைகளுக்குக் கட்டுப்படாத அக்குருக்களை இன்னும் அடித்து துவைத்து துவம்சம் செய்தனர். அவர்களோ எல்லாவற்றையும் பொறுமையாக சகித்ததைக் கண்ட படையாளிகள் தங்கள் தண்டனையை இன்னும் தீவிரப்படுத்தினர்.

ஆண்டவர் தங்களுக்காக உருவாக்கிய மகுடங்களைப் பெறுவதற்கான ஜாண் மற்றும் சக குருக்களின் சடுதியோட்டம் ஜூலை திங்கள்     9-ம் நாள் முடிவுற்றது. கோரமான முறையில் அக்குருவானவர்களின் உறுப்புகளைச் சிதைத்து சித்திரவதை செய்த பின் எல்லாரையும் தூக்கிலிட்டனர். இரத்தசாட்சிகளாய் மாறிய அவ்வருட்தந்தையர்களை 1865-ம் ஆண்டில் பாப்பரசர் 9-ம் பத்திநாதர் புனித நிலைக்கு உயர்த்தி முரசறைந்தார்.

புனித ஜாணின் பூர்வீகம் அறியக் கூடவில்லை. அவர் கொளோண் பட்டணத்தில் படித்தார் என்பதல்லாமல் வேறொன்றும் ஆவணப்படுத்தப் படவில்லை. ஆனால் அவர் அறிவை சம்பாதித்தது மட்டுமல்லாமல் இயேசுவையும் சொந்தமாக்கினார் என்பது தெளிவு. கடவுள்மீது அவர் கொண்டிருந்த பிரமாணிக்கம் அவரது இறுதிமூச்சுவரைத் தொடர்ந்தது. ஆனால் அவர் ஜூலை 9-ம் நாள் இரத்தசாட்சியாக மகுடம் சூடி மகிமைக்குள் பிரவேசித்தார்.

புனித நிலையில் ஒழுகாத இரண்டு குருக்களும் அக்கூட்டத்தில் இருந்தனர். அவர்களும் சேர்ந்தே இரத்தசாட்சி மகுடத்தைச் சூட்டிக்கொண்டனர். பாவவாழ்வில் ஒழுகும் சாதாரணக் கிறிஸ்தவர்களுக்கு இது ஓர் ஆறுதல் தரும் செய்தி.

– இரஞ்சித் லாரன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *