உயர்ந்த மதிப்பெண் பெறவேண்டுமா?

பொதுவாகவே கதிரேசன் ஆங்கிலத்தில் மக்கு. அன்று, ஆங்கில பாடத்தின் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளியாயின. வெளியான மாத்திரத்திலேயே கதிரேசனின் முகத்தில் சோகம் வந்து தொற்றிக்கொண்டது. மதிப்பெண் குறையலாம் என ஊகித்தது உண்மைதான். ஆனால் அதை எப்படி அம்மாவுக்குச் சொல்வது. அதுதான் அவனது கவலை. ஏனெனில் அந்த அளவுக்கு அம்மா அவனுக்கு வீட்டில் பாடம் நடத்தியிருந்தார்.

ஏன் எனத் தெரியவே இல்லை. கதிரேசன் எப்போதுமே ஆங்கிலப் பாடத்தில் பின்தங்கி விடுகிறான். ஆசிரியையின் திட்டு அதற்குமேலும் அவனைப் பிடுங்கித் தின்னும். கோபம் கொப்பளிக்கும். இப்படியே யோசித்தவாறு பொடிநடையாய்ப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு நடந்துகொண்டிருந்தான் கதிரேசன். மதுமதி பின்னால் வந்துகொண்டேயிருந்தாள். ஆனால் கதிரேசன் அறியவில்லை.
“என்ன கதிரு, ரொம்ப யோசிக்கிற மாதிரி தெரியுது”. மதுமதியின் குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தான் கதிரேசன். “இல்லக்கா, ஒவ்வொண்ணு நினச்சுப் பாக்கறேன்”.

“ஆங்… அது என்னண்ணுதானே கேக்கிறேன்”. மதுமதி விடவே இல்லை. மதுமதி தனக்கு எல்லா வகையிலும் உதவி செய்யக்கூடிய ஒரு அக்காவாக இருந்ததால் கதிரேசன் தன் நெஞ்சத்தைத் திறந்தான். “அக்கா உனக்கு ஆங்கிலத்தில் மதிப்பெண் எப்படி?” என வினவினான்.
பத்தாம் வகுப்பில் படிக்கும் மதுமதியின் முகத்தில் புன்னகை படர்ந்தது. ஆமாடா, எனக்கு எட்டாம் வகுப்புவரை ஆங்கிலம் வரவே வராது. ஒன்பதாவது வகுப்பில் உள்ள ஆசிரியை சொல்லிக்கொடுத்ததுக்கப்புறந்தான் ஆங்கிலம் என்னண்ணே புரிஞ்சுது.

அதெப்படி அக்கா? கதிரேசனுக்கு ஆவல் பொத்துக்கொண்டு வந்தது.
அதுவாடா, அந்த ஆசிரியையை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் அவர் எடுக்கிற பாடமும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
“அது தானா?” முகவாட்டத்தோடு கேட்டான் கதிரு.
“ஆமா, உனக்கு உன் ஆங்கில ஆசிரியையைப் பிடிக்காதா என்ன?”
ஆஹா… என் அடிமனத்தையே வாசித்து விட்டாள் இந்த அக்கா என உணர்ந்த கதிரேசன் உதட்டைப் பிதுக்கியபடி “மதிப்பெண் குறஞ்சிடிச்சிண்ணா ஆசிரியைத் திட்டுவாங்க. அதான் பிடிக்கல…” என்றான்.

“என்னடா கதிரு, அந்த ஆசிரியைக்கு உன் மீது பிரியம். அதனால் தானே திட்டுறாங்க. அதனால நீயும் அவங்க மேல அன்பு வச்சுக்கோ. அதிக மதிப்பெண்ணும் வாங்கிக்கோ என்றாள் மதுமதி.
மதுமதியின் சொல்லில் உறுதியில்லாத கதிரேசன், “உண்மையாகவா சொல்றே” எனக்கேட்டான். “இதுதான்டா உண்மை” என்று உறுதிகூறினாள் மதுமதி.

அன்று கதிரேசன் மகிழ்ச்சியோடு வீட்டுக்குச் சென்றான். இப்போது மதிப்பெண் குறைந்து போனதற்காக மன்னிப்புக்கேட்கவும், இனி அதிக மதிப்பெண் பெறுவதாக வாக்களிக்கவும் அவன் அம்மாவைத் தேடி வீட்டுக்கு வேகமாய் நடந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *