நிலையான மகிழ்ச்சி கிடைக்க ஒரு கதை

மலர்விழி பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு தடாகம் உண்டு. அத்தடாகத்தில் எப்போதும் நீர் நிரம்பியிருக்கும். அதில் மலர்ந்ததும் மலராததுமான எண்ணற்ற ஆம்பல் பூக்கள் நிறைந்திருக்கும். அத்தடாகத்தைத் தன் பள்ளிவாகனம் கடக்கும்போதெல்லாம் மலர்விழி அத்தடாகத்து மலர்களை அலாதிப்பிரியமுடன் பார்த்து ரசிப்பாள். அவற்றில் ஒன்றைப் பறிக்க வேண்டும் என நினைப்பாள். ஆயினும் அவள்தன் ஆசையை நெஞ்சிலே அடக்கிவைத்திருந்தாள்.

ஒருநாள் அவள் அவ்வாகனத்தின் டிரைவர்மாமாவிடம் தனது ஆசையைத்தெரிவித்தாள். ஆனால் டிரைவர் மாமாவோ அவள் சிறுமியாய் இருந்த காரணத்தால் தடாகத்தில் இறங்கவேண்டாம் எனத்தடுத்தார். எனினும் ஒருநாள் தாமே இறங்கி பூக்களைப் பறித்துத்தருவதாக அவர் மலர்விழியிடம் சொன்னார். இதை ஒப்புக்கொண்ட மலர்விழி, ஒவ்வொரு நாளும் பள்ளிவாகனம் அத்தடாகத்தை நெருங்கும்போது டிரைவர்மாமாவிடம் பூப்பறிக்கிற விஷயத்தை ஞாபகப்படுத்துவாள். ஆனால் டிரைவர்மாமா நாளையாகட்டும் எனச்சொல்லியே நாட்களைக் கழித்துவந்தார். இதை மலர்விழியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இருப்பினும் அடக்கிக்கொண்டாள்.

அன்று ஒரு முக்கியமான நாள். ஆம். கோடை விடுமுறை அன்றுதான் தொடங்கவிருந்தது. பேருந்து முழுவதும் பிஞ்சு மழலைகளின் கீச்சொலிகள். ஆரவார களேபரம். ஆனால் மலர்விழியோ மோன மௌனம். காரணம் மற்றொன்றும் அல்ல. வழக்கம்போல் தடாகத்தினருகே வாகனம் வந்ததும் டிரைவர் மாமாவின் தோள்களைத் தட்டி மலர்களைப் பறிக்கச் சொன்னாள். ‘இனி இந்த விடுமுறைக்காலம் முடியட்டுமே’ எனப் பொறுப்பில்லாத முறையில் பதிலளித்துவிட்டு மாமா வண்டியை வேகமாக ஓட்டினார். மலர்விழி மனம் சோர்ந்துபோய் விம்மி அழத்தொடங்கினாள்.

பேருந்து மலர்விழியின் வீட்டை அடைந்தது. ஆனால் மலர்விழி இறங்க மறுத்தாள். பலரும் அவளிடம், ‘மலர்விழி உன் வீடு வந்திடுச்சு; இறங்கலியா’ எனக் கேள்வி கேட்டனர். ஆனால் மலர்விழியோ மாட்டேன் எனப் பிடிவாதமாய் மறுத்துவிட்டாள் இனி என்ன செய்வது? டிரைவர்மாமா நேராக மலர்விழியின் வீட்டுக்குச் சென்று அவளுடைய அப்பா அம்மாவைக் கூட்டிவந்தார். அப்பா அவளைக் கண்டித்தது மட்டுமல்லாமல் அவளை அலாக்காகத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனார். ஆனால் வீடு சென்றபிறகும் மலர்விழியின் எழில்விழிகளில் கண்ணீர் வடிந்துகொண்டுதான் இருந்தது. அவள் அழுகையை நிறுத்தவே இல்லை.

அங்ஙனமிருக்க, இதோ பள்ளிவாகனத்தின் சத்தம் மீண்டும் கேட்கிறது. பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவர் மாமா இறங்கிவந்தார். அவர் வெறுங்கையுடன் வரவில்லை. ஆம். அவரது கையில் ஏராளம் ஆம்பல் பூக்கள் இருந்தன! மலர்விழியின் விழிகள் விசாலமடைந்தன. அவள் மாமாவைப் பார்த்து ஒரு குமிண்சிரிப்பை உதிர்த்தாள். ஆனால் மாமாவின் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.

மலர்விழி மகிழ்ச்சி மேலிட, தன் அப்பாவையும் அம்மாவையும் அண்ணனையும் கூப்பிட்டாள். தன்னிடமிருந்த ஆம்பல் பூக்களை அவர்களுக்குக் காட்டிக் குதூகலித்தாள். ஆனால் அவர்களுடைய முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அப்போதுதான் மலர்விழிக்கு உண்மை புரிந்தது. அவளுடைய பிடிவாத குணத்தை அங்குள்ள யாரும் விரும்பவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அந்த உணர்வு அவளது மகிழ்ச்சியையும் சூறையாடியது.

முற்றத்தை விட்டு வண்டியில் ஏறுவதற்காகச் சென்ற டிரைவர்மாமாவின் பின்னாலே ஓடிச்சென்றாள் மலர்விழி. ‘மன்னிச்சிடுங்க மாமா’ என்று அவரது கரங்களைப் பற்றினாள். அதுகேட்ட டிரைவர் மாமாவும் சிரித்துக்கொண்டார். ‘ஆகட்டும் டி’ என்று சொல்லிக்கொண்டே போய் வண்டியில் ஏறினார். பிறகு அவள் தனது அப்பாவிடமும் அம்மாவிடமும் வந்து மன்னிப்பு வேண்டினாள். இனி இப்படி எதற்கும் பிடிவாதம் பிடிக்க மாட்டேன் என இயேசுவிடமும் சொன்னாள். அப்போதுதான் அவளுக்கு நிம்மதி மலர்ந்தது. பிடிவாதத்தினால் எதையேனும் பெற்றுக்கொண்டால் அது நம்மை ஒருபோதும் மகிழ்விக்காது என்ற உண்மையையும் மலர்விழி உணர்ந்துகொண்டாள்.

– அனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *