இப்ப வளனுக்கு ரொம்ப சந்தோஷம்

வளனும் கிரணும் இணைபிரியா நண்பர்கள். இருவரும் இணைந்தே பள்ளிக்கூடம் செல்வர், வருவர். வளன் முதலில் வீட்டிலிருந்து கிளம்புவான். அவன் வருகிற வழியில்தான் கிரணின் வீடு இருக்கிறது. வளன் தனது வீட்டுக்கு முன் வந்ததும் கிரண் அவனுடன் இணைந்துகொள்வான். இருவரும் சேர்ந்து பள்ளிக்குச் செல்வார்கள்.

இப்படியிருக்க, வளனின் பிறந்தநாள் வந்தது. அவன் அன்று மிட்டாய்களுடன் வந்து கிரணுக்கும் அவன் அம்மாவுக்கும் கொடுத்தான். மிட்டாசியைப் பெற்றுக்கொண்ட கிரணின் தாய் வளனைக் கட்டிப்பிடித்து ‘ஹேப்பி பர்த்டே’ என வாழ்த்தி அவனது நெற்றித்தடத்தில் அழுத்தி முத்தமிட்டாள். வளனுக்கு அவளுடைய முத்தம் தன்னை தூக்கி வாரிபோட்டது போல் இருந்தது.

அன்று பள்ளிக்குப் போகிற வழியில் வளன் கிரணிடம் கேட்டான் : கிரண், உங்க வீட்டில உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?
அவன் மறுமொழியாக, ‘எனக்கு அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். எதுவா இருந்தாலும் நான் அம்மாக்கிட்ட தான் சொல்வேன்’ என்றான்.
அப்போ, என்கிட்ட சொன்ன மாதிரியே தான் உன்கிட்டயும் ‘ஹாப்பி பர்த் டே’ சொல்வாங்களா?
ஆமாடா; ஏன் நீ அப்படிக் கேக்கிற? இல்லடா; என் வீட்ல யாருமே இப்படி ஹேப்பி பர்த் டே சொல்றதில்லை. அதனால்தான் கேட்டேன். எனக்கு அம்மா கிடையாதே………..

வளனின் கவலை கிரணையும் ஆட்கொண்டது. ஆயினும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வளன் பிறந்த ஆறாம் மாதத்திலேயே அவன் தாய் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக கிரணிடம் அவன் தாய் சொல்லியிருக்கிறாள்.
மறுநாள் பள்ளிக்கூடத்தில் வைத்து வளனை அவனது வகுப்பாசிரியைத் திட்டினார். கணக்கு ஒன்றைத் தப்பாகச் செய்ததே அதற்குக் காரணம். வளன் மிகவும் வருந்தினான். எனினும் வீட்டுக்குச் செல்லும் வழியில் கிரண் வளனைத் தேற்றினான். இருப்பினும் வளனுடைய வருத்தம் நீங்கவே இல்லை.

அப்போது அன்னை மாதாவின் படம் ஒன்று வளனின் கண்ணில் பட்டது. இயேசுவின் கவலைகளிலெல்லாம் அன்னை மரியா கூடவே இருந்ததாக மறைக்கல்வி ஆசிரியை சொல்லக் கேட்டிருக்கிறான். ஆகவே அன்னை மாதாவிடம் வளன் தனது கவலைகளை ஒன்றுவிடாமல் சொல்லத் தொடங்கினான். ‘தாயே, நான் கணக்கு தப்பாகச் செய்துவிட்டேன்; அதற்காக டீச்சர் என்னை ரொம்பத் திட்டினாங்க…’ விம்மி விம்மி அவன் மாதாவிடம் சொன்னான்.

அன்று முதல் அவனது கவலைகளைக் காதாரக் கேட்பது போல் முகம் சாய்த்து நின்றாள் அன்னை மரியா. அதுமுதல் அவனுடைய கவலைகள் ஒவ்வொன்றாய்க் கலையத் தொடங்கின. யாரிடமும் அவன் வெறுப்புக் கொள்ளவில்லை. கஷ்டமான பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெறத் தொடங்கினான்.

நாட்கள் பல கடந்தபோதுதான் தாயில்லாக் கவலை தீர்ந்ததென்று வளனுக்குப் புரிந்தது. அந்தப் பரலோக இராக்கினியின் உதவியுடன் இயேசுவை அன்பு செய்யும் ஒரு பாலனாய் அவன் மாறினான். கிரணுடன் தனது துக்கங்களைப் பங்கிட்டான். கிரணும் மரிய பக்தனாய் மாறினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *