புனித ஜாண் ஹவுட்டன்

இங்கிலாந்து தேசத்தில் எக்செஸ் பட்டணத்தில் 1487 ஆம் ஆண்டு ஜாண் ஹவுட்டன் பிறந்தார். திருச்சபைச் சட்டத்திலும் உள்நாட்டுச் சட்டத்திலும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றார். பட்டதாரியாகிய அவருக்கு மணம்முடித்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர். ஆனால் ஜாண் ஹவுட்டன் மணம்செய்து மணவாழ்வில் நுழைய விரும்பவில்லை. ஒரு குருவாக மாறி கிறிஸ்துவுக்காக வாழவே அவர் விரும்பினார்.

ஆனால் அவரது பெற்றோர் அதை விரும்பவில்லை. எனவே ஜாண் ஹவுட்டன் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு குருவானவருடன் மறைந்தவாசம் மேற்கொண்டார். மறைவிடத்தில் தங்கிக்கொண்டே குருத்துவப் பயிற்சியையும் ஆரம்பிக்கலானார். பின்னர் அவர் குருப்பட்டாபிஷேகம் பெற்றுக்கொண்டு, 1515 -ல் லண்டன் ‘சார்ட்டர் ஹவுஸ்’ உறுப்பினராகவும் மாறினார். 1531 -ல் லண்டன் சார்ட்டர் ஹவுஸின் முன்னவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்காலத்தில் இங்கிலாந்து மன்னர் ஹென்ட்றி எட்டாமன் திருச்சபையின் திருச்சட்டத்திற்கு எதிராக ஆனி போளின் என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டார். முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் மனைவியை அனுமதிக்க முடியாது. ஆனால் இத்திருமணத்திற்கு இசைவுதரும் விதமாக ‘வாரிசுரிமை’ என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை ஏற்க ஜாண் ஹவுட்டன் மறுத்து விட்டார். எனவே 1534 -ல் ஜாண் ஹவுட்டன் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் பின்னர் அச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, சபைச்சட்டத்தின் போக்குக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது. அதனை ஜாண் ஹவுட்டன் ஏற்பதாக பிரதிக்கனை செய்த காரணத்தினால் சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் அவர் முழுமையான சுதந்திரம் அடையவில்லை. இனிதான் பாடுகளின் நெடுநிலை ஆரம்பமாக இருந்தது. அடுத்த ஆண்டே இங்கிலாந்து மன்னர் தம்மைத் திருச்சபையின் உச்சபட்ச அதிகாரியாகப் பிரகடனம் செய்து ஆணை பிறப்பித்தார். அவ்வாணையை மீறுவது தேசத்துரோகமாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால் அவ்வாணையை ஜாண் ஹவுட்டன் மட்டுமல்ல ; கார்த்தூசியன் சபையைச் சார்ந்த மற்றிரு சபா முன்னவர்களும் ஒருசேர எதிர்த்துச் சிறைசெல்லத் தயாராகினர்.

நீதிமன்றத்தில் இக்குருக்கள் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் தீர்ப்புக்குக் காத்திருந்தனர். ஆனால் அவர்களைக் குற்றவாளிகள் எனத்தீர்ப்பிட விரும்பாத நீதிபதி சற்றே பொறுமை காத்தார். எனினும் மன்னனின் பிரதிநிதி நீதிபதியை அச்சுறுத்தி, நீதிபதி சங்கத்தின் மீதான நடவடிக்கையை முடுக்கிவிடுவதாக அறிவித்தான்.

உயிருக்குப் பயந்த அந்நீதிபதி நமக்கேன் வம்பு என நினைத்து ஜாண் ஹவுட்டன் உள்ளிட்ட ஐந்து குருவானவர்களைத் தூக்கிலிட்டுக் கொல்லுமாறு தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பின் பயங்கரம் இன்னும் கொடூரமானது. அதாவது தூக்கிலிடப்பட்ட அவர்கள் இறக்குமுன்பே நான்கு துண்டுகளாக வெட்டி அதற்கப்புறம்தான் உயிரை மாய்க்க வேண்டும். அதுவே தேசத்துரோகத்திற்கான தண்டனை.

1935 மேய் நான்காம் நாள் அத்தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. முதலாவது ஜாண் ஹவுட்டனும் பின்னர் மற்றவர்களுமாகத் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிட வந்த ஊழியன் ஜாண்ஹவுட்டனிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது ஜாண் அவனைத் தழுவி முத்தமிட்டார்.

பொழுது சாயுமுன் மன்னரின் மனத்திற்குக் கட்டுப்படுமாறு மீண்டும் ஒருமுறை ஜாண் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆயினும் ஜாண் அதற்கு உடன்படவில்லை. அவர் கூறிய பதிலுரை நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது : “நான் பிடிவாதத்தினாலோ வெறுப்புணர்வினாலோ அல்லது முரட்டு சுபாவத்தினாலோ மன்னரின் கட்டளையை மீறவில்லை மாறாக, இதன்மூலம் கடவுளின் மகிமைக்குக் குந்தகம் நேருமோ என்ற அச்சத்தினால்தான் அரச உத்தரவை மீறநேர்ந்தது. ஆகவே திருச்சபையின் ஏதேனும் ஒரு சட்டத்தை மீறுவதைவிட துன்பப்பாடுகளை மனமுவந்து ஏற்பதுதான் சிறந்தது.”

இறுதியில் ஜாண் ஹவுட்டன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். தூக்கிலிடப்பட்ட அவர் இறக்குமுன்பே கீழிறக்கப்பட்டு, உள்ளுறுப்புகள் வெளியேற்றப்பட்டன. பின்னர் அவரது உடல் நான்கு துண்டுகளாக்கப்பட்டு லண்டன் நகரவீதிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டன. லண்டன் மாநகரில் அரங்கேறப் போகும் கொடிய கலாபனைகளின் ஆரம்பமாய் மாறியது. ஜாண் ஹவுட்டனின் இக்கோர மரணம்.

ஜாணின் புண்ணிய வாழ்வும் அவ்வாழ்வுக்காகவே காவு கொள்ளப்பட்ட அவரது உயிரும் அநேக மனிதர்களுக்கு சாட்சியமாய் மாறின.

-இரஞ்சித் லாரன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *