வெள்ளை மாளிகையும் விளக்கு மாடங்களும்…

வாஷிங்டன் மாநகரம் ! அங்கே ஷாலோம் திருவிழா நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. விழாவுக்கு முன்தினம் ‘வெள்ளை மாளிகை’ (வைட் ஹவுஸ்) என்ற அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான கட்டிடத்தின் முன்பாக நடந்துசென்றுகொண்டிருந்தேன். அந்த மாளிகையின் கம்பீரப் பின்னணியில் பலரும் புகைப்படம் எடுத்துக்கொள்வதைப் பெருமையாகக் கருதி அதிலே முழுகியிருந்தனர். வேறு பலர் அம்மாளிகையின் அழகை வியந்த வண்ணம் இருந்தனர். இந்தியாவில் ஜனாதிபதி மாளிகை (ராஷ்ட்ரபதி பவன்) கிட்டத்தட்ட 500 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டதும், சுமார் 1,000 விசாலமான அறைகள் உடையதுமான ஒரு பிரம்மாண்ட கட்டிடமாகும்.

உலக நாடுகளின் பல தலைவர்களுக்கும் இப்படிப்பட்ட மாடமாளிகைகள் உண்டு. ஆனால் அமெரிக்க அதிபர் குடியிருக்கும் இம்மாளிகை வெறும் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருப்பதும் பெரிய அளவிலான வசதிவாய்ப்புகள் எதுவும் இல்லாததுமான ஒரு கட்டிடமாகும். இம்மாளிகையை மிஞ்சும் கம்பீரமும் கனகச்சிதமும் கொண்ட வேறு பல மாளிகைகள் வாஷிங்டன் நகரத்திலேயே உள்ளன. ஏன், நம்முடைய காரைக்குடிப் பகுதியில் கூட ஆயிரம் ஜன்னல்கள் உள்ள வீடுகள் இப்போதும் இருக்கின்றன. எனினும் இவற்றிற்கு முன் உட்கார்ந்திருப்பதையோ, அல்லது இவற்றிற்கு முன்னால் நின்று புகைப்படங்களை எடுத்துக்கொள்வதையோ யாரும் கிடைத்தற்கரிய பாக்கியமாகக் கருதுவதில்லை. நாடோறும் மக்கள் கூட்டம் இக்கட்டிடங்களுக்கு முன்னால் முண்டியடிப்பதுமில்லை. வெள்ளை மாளிகையை ஒரு தடவையாவது பார்த்துவிட வேண்டும் என உலக மக்கள் பலருமே மிகவும் ஆர்வமாய் உள்ளனர். நாள்தோறும் அநேகாயிரம் பேர் அந்த மாளிகையைச் சுற்றிப் பார்க்கின்றனர். இதற்குக் காரணம் என்ன ?

உலக நாடுகளில் மிகவும் வலிமை படைத்த ஒரு வல்லரசு நாட்டின் செல்வாக்கு மிகுந்த அதிபர் அதற்குள் குடியிருக்கிறார் என்பதே வெள்ளை மாளிகையின் இத்துணைச் சிறப்புக்குக் காரணம். கட்டிடத்தின் பிரம்மாண்டமோ பெருவனப்போ எதுவும் அல்ல; அதற்குள் வசிக்கும் மனிதரால் தான் ஒரு கட்டிடம் சிறப்புறுகிறது; அல்லது பெருமையிழக்கிறது. அப்படியானால் ஒரு மனிதரின் மகத்துவம் எதிலே அடங்கியிருக்கிறது? தூய ஆவியாகிய கடவுள் நமக்குள்ளே குடிகொண்டிருக்கிறார். அதுவே மனித மாண்பின் மறைபொருள்.

ஒருவர் தாம் அணிந்துள்ள ஆடை ஆபரணங்களாலோ, கற்ற கல்வியாலோ சிறப்புப் பெறுவதில்லை. அந்தவகையில் அவரது மாண்பும் உயரப் போவதில்லை. ஐக்கிய நாடுகளின் (யு.எஸ்.எ) அதிபர் தமது அதிகாரப் பூர்வமான மாளிகையை இன்னொரு கட்டிடத்திற்கு மாற்றிக் கொள்வாரேயானால் வெள்ளைமாளிகை களையிழக்கும், புதிய கட்டிடம் தான் பொலிவுபெறும். பழையது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

தூய ஆவியை இழந்துவிட்ட ஒருவரின் நிலைமையும் இத்தகையதே. கடவுளின் பிரசன்னம் நம்மூலமாய் வெளிப்படும்போது, அதாவது தூய ஆவியின் நிறைவில் நாம் உயிர்வாழும்போது நமது வாழ்க்கை மாண்புமிக்கதாய் மலர்ந்துவிடுகிறது. ஆவியின் உளப்பாங்கு இல்லாத மனிதர்களும் அவர்களின் சேவைகளும் அவர்களால் நடத்தப்படும் கல்வி/தொழில் நிறுவனங்களும் சிறுகச் சிறுகக் களையிழப்பது உறுதி. பலவண்ணப் பொலிவினால் அழகுபடுத்தினாலும் பலவகையான விளம்பர உத்திகளைக் கையாண்டாலும் ‘அதிபர் தங்காத’ மாளிகையை யாரும் காமுறப் போவதில்லை. ஆகவே உலகின் அதிபதியாகிய இறைவனை இழந்துவிடாமல் இருப்பதே மகத்தான வாழ்வுக்கு அடியாதாரம்.

“மாட்சி பெறுவோம் என்ற எதிர்நோக்கை அளிக்கவல்ல கிறிஸ்து நம்மிடம் இருக்கிறார்.” (கொலோ. 1:27) என்னும் புரிந்துணர்வினால் மட்டுமே நம்முடைய பலவீன மனப்பான்மையை மாற்றிக்கொள்ள முடியும். நிறம் குன்றட்டும், பணம் அருகட்டும், முதுமை ஏறட்டும், பிறர் ஒதுக்கட்டும். உயருன்னதராகிய கடவுள் நமக்குள்ளே தங்கியிருக்கும் வரை நமது மாண்புக்குப் பங்கம் வரப்போவதில்லை.

ஒருநாள், மருத்துவமனை நோயாளிகளை நலம்விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் புனித காமில்லஸ். அப்போது மனநலம் குன்றிய ஒருவர் அம்மணக்கோலத்தில் அருவருப்பான சிலவற்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அம்மருத்துவமனைத் தாதிப்பெண்கள் வாய்பொத்திச் சிரித்தனர். ஆனால், காமில்லஸ் ஓடிச்சென்று தமது போர்வையால் அம்மனிதனைப் போர்த்தி, படுக்கையில் கொண்டுபோய்க் கிடத்தினார். பின்னர் அத்தாதியரிடம் வந்து, “அவரும் கடவுளின் ஆவியைக் கொண்டுள்ள ஒரு மனிதர்தான். மனநலம் குன்றியிருந்தாலும் அவரை நகைக்கக்கூடாது. ஏனெனில் அவருக்குள் இருக்கும் ஆவி அணைந்துவிடவில்லை” எனச் சற்று அதட்டலுடன் கூறினார்.

நம்முடைய வாழ்க்கைப் பங்காளி, பிள்ளைகள், தாய்தந்தையர்கள், உடன்பிறப்புகள் நண்பர்கள் ஆகிய அனைவருமே கடவுள் குடிகொள்ளும் தூய கோவில்களாகும். ஆகவே ஒவ்வொருவரையும் உரிய மரியாதையுடன் மட்டுமே நாம் அணுகிச் செல்லவேண்டும். கடவுளின் இந்த நடமாடும் கோவில்களைப் பழித்துவிட்டு, படமாடும் கோவில்களில் சென்று குனிந்தும் பணிந்தும் வணங்குவதில் என்ன மேன்மை இருக்கிறது ? அத்தகையவர்களைக் காணும் போது கடவுளின் உள்ளம் கவலை கொள்ளாதோ ?

ஜெபம் :- ஆண்டவரே, என்னுடைய உடல் நீர் குடிகொள்ளும் கோவில் என்பதை நான் உணரச் செய்தருளும். இவ்வுணர்வு என் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் உயர்ந்தவையாய் மாற்றட்டும். என் வாழ்க்கைப் பயணத்தில் உம்மை நான் ஒருபோதும் இழந்துவிடா வண்ணம் எச்சரிக்கையோடு முன்னோக்கிச் செல்ல நீர் எனக்கு ஒத்தாசை புரிந்தருளும். ஆமென்.

– ஷெவலியார் பென்னி புன்னத்தறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *