தூய ஆவி நமக்கு யாராக இருக்கிறார்?

வாழ்க்கையின் அர்த்தத்தையோ அவசியத்தையோ அறிந்துகொள்வதில்லை என்பதே நவீன உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் !

நான் உங்களுக்குத் தூய ஆவியைக் குறித்துக் கூற விளைகிறேன். என்னைக் கேட்டுக்கொண்டிருக்கும் நீங்கள் அனைவருமே தூய ஆவியைக் குறித்து நிறையவே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், ஏராளமான கிறிஸ்தவர்களுக்குத் தூய ஆவி யாரென்றோ என்னவென்றோ தெரியாது. அவர் நம்முடைய விசுவாசத்தின் பிடிபடாத ஒருவராகவே பலரால் கருதப்படுகிறார். எனினும் நமக்குள்ளே சதா செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடவுள்தான் தூய ஆவியார். நம் ஆண்டவராகிய கிறிஸ்து நம்மை நம்முடைய பாவங்களில் இருந்தும் அழிவார்ந்த நிலையிலிருந்தும் எங்ஙனம் மீட்டெடுத்தார் என்பதைத் தூய ஆவி நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார். அந்த நினைவு இல்லாமல் ஒரு கிறிஸ்தவன் உண்மையான கிறிஸ்தவனாய் இருக்க முடியாது. அப்படிப்பட்டவன் ஒரு சிலைவழிபாட்டுக்காரன், சூழ்நிலைக் கைதி, வரலாறு இல்லாதவன் போன்ற நிலைகளில் தரந்தாழ்ந்துவிடுவான்.

விசுவாசத்தின் வரலாற்றையும் கடவுள் நமக்களித்த மாபெரும் பரிசையும் தூய ஆவி நம்முடைய எண்ணங்களில் உணர்த்திக் கொண்டிருக்கிறார். அவரது அருளில்லாமற்போனால் இறைமக்கள் மிகச் சடுதியில் விக்கிரகங்களை ஆராதிக்கத் தலைப்படுவர். ஆனால் அதே நேரத்தில் கடவுளின் அருளையும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டும். ஏனெனில் ஒருவன் புண்ணியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவன் என்ற நினைப்பில் மதிமறப்பானாயின்அகந்தை என்னும் செருக்கு அவனுக்குள்ளே மெல்ல நுழைந்துவிடும். ஆகவே, நம்பிக்கை கொண்ட அனைவரும் தூய ஆவியால் தரப்படும் அந்த நினைவுக்காக ஜெபிக்க வேண்டும். அதன்மூலம், ஒருகாலத்தில் நாம் அடிமைகளாய் இருந்தோமென்றும் ஆனால் இப்போது கிறிஸ்துவால் விடுதலை பெற்றோம் என்றும் நினைவில் வைத்துக்கொள்வோம்.

யூதாசும் நாமும்

தன்னலமே உருவான யூதாசைப் பற்றி நினைத்துப்பார்ப்போம். இவனைப் போன்ற சுயநலவாதிகள் ‘கொடுத்து——வக்கும் இன்பம்’ என்னவென்று அறியாதவர்கள். அன்பின் ஆனந்தத்தை எள்முனை அளவும் உணராதவர்கள். அப்படிப்பட்டவர்கள் தனிமைப்பட்டு நயவஞ்சகர்களாய் மாறிவிடுகின்றனர். நாம் உண்மையாகவே கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறோமென்றால், நம்முடைய வாழ்க்கை பிறருக்காகக் கொடுக்கப்படவேண்டிய ஒரு கொடையென்றே எண்ணுதல் வேண்டும். நமக்காக நாமே காத்துக்கொள்ளும் புதையல் என நாம் அதனைக் கருதக் கூடாது. கொடை என்பது எதைக் குறிப்பிடுகிறது என யூதாசுக்குத் தெரியாது. இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலை உயர்ந்த தைலத்தைக் கொண்டுவந்து மரியா இயேசுவின் பாதங்களில் அபிஷேகம் செய்ததைக் கண்ணுற்ற யூதாஸ், இந்தத் தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா எனக்கேட்டு விமர்சனம் செய்கிறான். ஏழ்மையை ஒரு பொதுவுடைமைக் கொள்கையாய்க் காட்டும் பகுதியை முதலில் நான் பைபிளில் இங்குதான் பார்க்கிறேன்.

தன்னலக் காரனாகிய ஒருவன் எப்போதும் தனிமையில் இருக்கிறான். ஆனால் அன்புக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் ஒருபோதும் தனிமையாய் இல்லை. அவர்கள் எப்போதும் சமூகத்தில்தான் இருக்கிறார்கள் ; ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். ஒருவர் தமது வாழ்வை அளிப்பாரானால் அவர் அதனை மீண்டும் கண்டடைவார் ; அதனுடைய முழுமையில் கண்டடைவார். ஆனால் யூதாசைப் போல இவ்வாழ்க்கை எனக்கே உரியது எனத் தன்னலம் நாடுவோர், இறுதியில் அதனை இழந்துவிடுவர். ஆகவே நயமாகவும் சாந்தத்தோடும் பிறரை அன்புசெய்யக்கூடிய பரந்த உள்ளமும், அதற்கான திறந்த இதயமும் தரவேண்டும் எனவும், தன்னல உணர்வுகளில் இருந்து எங்களை விடுவித்துக் காப்பாற்ற வேண்டுமென்றும் தூய ஆவியை நோக்கி மனப்பூர்வமாய் ஜெபிப்போம்.

பணத்திற்காகவும் ஆடம்பரங்களுக்காவும் ஆலாய்ப் பறக்கும் மனப்பான்மையிலிருந்து குருக்களையும் ஆயர்களையும் காப்பாற்ற வேண்டுமென்றும் நாம் இறைவனை மன்றாட வேண்டும். மேய்ப்பர்களாய் இருப்பவர்கள் ஓநாய்களைக் குறித்து எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் எப்போதும் மந்தையைக் காக்கிறவர்களாகவும் அதன்மீது அக்கறை கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கடவுளுக்கும் ஆன்மீகத் தந்தைக்கும், ஆன்மீகத்தந்தைக்கும் இறைமக்களுக்கும் இடையில் காணப்படும் அன்பும் அரவணைப்பும் உறவுகளின் மூலமே பலப்படுகின்றது. நம்மைப் போலவே குருக்களும் ஆயர்களும் பாவிகள்தான். சொத்துக்கும் அதிகாரத்திற்குமான ஆசை அவர்களுக்கும் ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நாம் எப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள்?

நாங்கள் எங்கள் விசுவாச வாழ்வில் சுகமாக முன்னோக்கிச் செல்கிறோம் என்பவர்களை அதட்டவும், அவர்களின் சொகுசுகளிலிருந்து அவர்களை வழிமாற்றி, திருச்சபையை வழிநடத்தும் அப்போஸ்தல ஆர்வத்தால் நிறைக்கவும் புனித பவுலால் முடிந்தது. அந்த ஆர்வத்திற்கு எப்போதும் ஒரு ‘பைத்தியத்தின்’ சாயல் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இது ஒரு வகையான ஆன்மீகப் பைத்தியம் ஆகும். இது ஆரோக்கியமானதும் கூட. இருப்பினும் இது நம்மைத் தண்டனைக்கு இட்டுச் செல்லலாம். அப்படித் தண்டிக்கப்பட்டால்கூட நாம் மிக்க பாதுகாப்புடன் அமரும் ‘பின்னிருக்கைக் கிறிஸ்தவர்களாய்’ மாறக்கூடாது. அப்படிப்பட்டவர்கள் ‘ரொம்ப மரியாதைக் காரர்களாய்’ இருப்பார்கள் ; நன்றாகச் செயல்படுவார்கள். ஆனால் அவர்களுடைய செயல்பாடுகள் எதுவும் பிறரைத் திருச்சபைக்குக் கொண்டு வருவதாய் இருக்கவே இருக்காது.

நாம் எப்போதும் முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்றே ஆண்டவர் விரும்புகிறார். சுகசொகுசான ஒரு வாழ்க்கையில் நிறைவு கண்டு தேக்க நிலை அடைய இறைவன் ஒருபோதும் விரும்புவதில்லை. அதே நேரத்தில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கோ, எதையாவது சொந்தமாக்கிக் கொள்வதற்கோ ஒருவர் தமது அப்போஸ்தல ஆர்வத்தைப் பயன்படுத்தக்கூடாது. அது கிறிஸ்துவை அறிவதன்மூலமும், குறிப்பாக தனக்குள்ளே அவரை அறிவதன் மூலமும் இதயங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலமும் அடையக்கூடிய ஒன்றாகும்.

சபை வாழ்வில் எல்லாமே தங்குதடையின்றி முன்னோக்கிச் செல்லும் போதும், நம்மைத் தூண்டி உணர்த்துகின்ற, நற்செய்திக்காக வேட்கை கொள்கின்ற, எனது வாழ்க்கையின் புறப்பகுதிகளுக்கு இட்டுச் செல்லும் அருள் தருகின்ற அப்போஸ்தல ஆர்வத்தைத் தரவேண்டுமென தூய ஆவியை நோக்கி உருக்கமாக மன்றாட வேண்டும். நாம் அனைவருமே பாவிகள் என்பது அல்ல பிரச்சனை. கிறிஸ்துவின் அன்பினால் உருமாற்றம் அடைய நாம் நம்மையே கையளிக்கவில்லை என்பதே அடிப்படைப் பிரச்சனை. கிறிஸ்துவோடுள்ள உறவில் புனித பேதுரு எங்ஙனம் அன்பில் பண்பட்டவர் என நாம் கவனிக்க வேண்டும்.

மாமனிதராகிய பேதுரு ஏராளம் குறைகளை உடையவர். நாமும் குறைகள் உள்ளவர்களே, ஆனால், அதில் அல்ல பிரச்சனை அடங்கியிருக்கிறது. நம்மையே நாம் ஆய்ந்துணர்ந்த பின்னும் அதைப்பற்றி வெட்கப்படவோ, பச்சாத்தபிக்கவோ நாம் முன்வரவில்லை என்பதில் தான் பிரச்சனை. பேதுரு பாவிதான். ஆனால் உண்மையுள்ளவர். அவரைப் போல் எல்லாரும் பாவிகளே. ஆனால் கபடற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

ஆயர் நிலைக்கு உயர்த்தப்பட்டபோது, தாம் அதற்குத் தகுந்தவர் அல்ல என ஆன்மீகமாய்த் துன்புற்ற ஒரு குருவானவரை நான் எண்ணிப் பார்க்கிறேன். பாவசங்கீர்த்தனம் கொடுத்த குருவானவர் அவரைத் தேற்றி இங்ஙனம் கூறினார் : “பேதுரு இதெல்லாம் செய்த பிறகும் பாப்பரசர் ஆனாரென்றால் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ? துணிச்சலுடன் முன்னோக்கிச் செல்லுங்கள்”. நாம் அடிக்கடி கடவுளுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர் நம்மைப் பண்பட்டவர்களாய் மாற்றுவார் என்பது தேற்றம்.

– திருத்தந்தை பிரான்சீஸ் பாப்பரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *