தாயின் கரிசனம்

தமிழ்நாடு வீட்டுவசதித் துறையின் ஒரு கட்டிடம் அது. அவ்வீட்டைக் கண்டுபிடிக்க ஆட்டோக்காரர் நிறையவே பாடுபடவேண்டியிருந்தது. வாசலைத் தட்டவே, உள்ளிருந்து சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாசலைத் திறந்தாள். ஒரு முகவரியை ஆட்டோக்காரரிடம் கொடுத்துவிட்டு அம்மூதாட்டி அதில் சிரமத்துடன் ஏறி உட்கார்ந்தாள். அம்முகவரி சற்று தூரத்தில் இருந்த ஒரு முதியோர் இல்லத்தினுடையது என்பதை ஆட்டோக்காரர் புரிந்து கொண்டார். புறப்படுமுன் அவ்வீட்டுத் தாழ்வாரத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை நோக்கினாள். நோக்கவும் கண்ணீர் அரும்பியது. துடைத்துக் கொண்டாள். இறந்துபோன கணவனின் படமாக இருக்கலாம் என ஊகித்தார் ஆட்டோக்காரர். ஆகவே மேற்கொண்டு கேள்விகள் எதுவும் கேட்கவில்லை.

போகிற வழியில் நகரத்தின் நடுவில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தின் முன்னால் வண்டியை நிறுத்தச் சொன்னாள். கொஞ்சம் சிரமப்பட்டு இறங்கிய அவள் சொன்னாள்: “இதுதான் நான் முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்த நிறுவனம்”. மீண்டும் வண்டி முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஓரிடத்தில் வைத்துச் சற்று வழியை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டாள். அவ்வழி சென்று சேர்ந்ததோ இன்னொரு வீட்டுவசதிக் கட்டிடத்தில். அங்கேயும் ஒரு கட்டிடத்தைக் காட்டியவாறு, “நாங்கள் திருமணமான புதிதில் இதில்தான் முதன்முதலாகக் குடி புகுந்தோம்” என்றாள். அவ்வீட்டைப் பிரியும்போது அவளுடைய கண்கள் குளமாவதை ஆட்டோக்காரர் கண்டார்.

இறுதியாக அப்பயணம் அந்தக் குறிப்பிட்ட முதியோர் இல்லத்தின் முன்னால் சென்று முடிந்தது. எவ்வளவு ஆயிடுச்சி? எனக் கேட்டுக்கொண்டே கைப்பையைத் திறந்தாள். “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று மறுத்தார் ஆட்டோக்காரர். “மக்களும் மனைவியும் உண்டுதானே? அவர்களுக்கு வாயும் வயிறும் இல்லையா? வாங்கிக் கொள்” என்றார். அவர் மீண்டும் மறுத்துவிட்டார். “ஒரு நிமிடம் நிற்கலாமா?” எனக் கேட்டுக்கொண்டவள் ஒரு பெட்டியைத் திறந்து யாருக்காகவோ செய்துவைத்த ஒரு பொதி பலகாரத்தை எடுத்துவந்து “இதை உன் பிள்ளைகளுக்குக் கொடு” எனச் சொல்லி ஆட்டோக்காரரின் கையில் திணித்தாள். அதை வாங்கும் போது அவரது கை நடுங்குவதை அவர் உணர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *